உய்யவும், ஓங்கவும்!

 மானுடம்  உய்யவும், ஓங்கவும்!


மனக்குகைச் சித்திரங்கள்

ஞாபக நதி

ஆத்மார்த்தி
எழுத்து பதிப்பகம்

ஆத்மார்த்தி-க்கு புதிதாக அறிமுகம் ஏதும் தேவையில்லை. தமிழ் பேசும் நல்லுலகின் முக்கிய ஆளுமைகளில் ஒருவரல்லவா….!

இந்த நூலில் இடம் பெற்றுள்ள இரண்டு கட்டுரைத் தொகுப்புகளும் ‘புதிய தலைமுறை’-யி்ல் எல்லாத் தலைமுறைகளுக்காகவும் அவர் எழுதியவை.
‘மனக்குகைச் சித்திரங்களும், ஞாபக நதிகளும்’ கிட்டத்தட்ட ஒரே ஜாடை கொண்ட படைப்புகள்தான். அவற்றுக்கிடையே உள்ள கால மாறுபாட்டை நாம் உணர முடியாது என்பதே ஆத்மார்த்தி-யின் சிந்தனை எப்போதும் ஒரே சீராகவும், கூராகவும் இருப்பதைச் சுட்டுகிறது.
நாமெல்லாம் வாழும் வாழ்க்கை முறையில் தான் அவரும் வாழ்கிறார். அவர் சந்தித்த அதே மனிதர்களைத் தான் ( மதுரை வாசிகளில் சிலரேனும், அல்லது அவர் சந்தித்த மனிதர்களை ஒத்த மனிதர்களை நம்மில் பலரும்) தினமும் சந்தித்துக் கொண்டு தான் இருக்கிறோம். ஆனால் அவர் சந்தித்த, பார்த்த, பழகிய நபர்களிடமிருந்தும், நிகழ்த்திய உரையாடல்களிலிருந்தும் அவருக்குக் கிடைத்த அறங்கொண்ட பார்வை நமக்குக் கிடைக்காமல் போன விதத்தில் ஆத்மார்த்தி நிற்கிறார்.
அதுவும் விஸ்வரூபியாக.
‘ரவியா ‘ என்று அன்பொழுக அழைக்கும் ‘பெருங்கூட்ட மூப்பன்’ ஆறுமுகம் மூலம் நாம் அறிந்து கொள்ளும் தன்னறம் என்பது அதி உன்னதமானது. அதன் நீட்சியை மற்றொரு பழைய புத்தகம் விற்பவர் நீட்டும் போது இந்த உலகம் எவ்வளவு அழகானது, எத்தனை அன்புடை நெஞ்சங்கள் நிறைந்தது என்ற எண்ணமே நம் மனதில் மேலோங்கி நிற்கிறது, உத்தரவாதமாக.
பதின்ம வயதில் நான் சந்தித்திருந்த மனநலன் குன்றிய ஒரு பெண்ணைப் போன்ற எத்தனையோ ‘பெயரற்ற தேவதை’களில் ஒருத்தி அந்த ‘மல்லிகா அக்கா. நாமெல்லாம் நல்ல மன நிலையில் இருப்பதை நம்புவதற்குத் தேவைப்படும் ஒரு கோணல் சான்றிதழாக அவளைப் போன்றவர்கள் வாழ்வதாக ஆத்மார்த்தி எழுதியதைப் படிக்கும் போது நம் மனமண்ணில் இன்னும் கொஞ்சம் ஈரம் தேவையோ என்று ஐயுறுகிறோம்.
‘யாசகம் வாங்கி ஏழைக்குக் கல்யாணம் செஞ்சு வச்ச’ ஒரு முதியவரை அறிமுகம் செய்ததற்காக நாம் ஆத்மார்த்திக்கு அவசியம் நன்றி சொல்லியாக வேண்டும். அவரை அடையாளம் கண்டு கொண்ட வகையில் நாம் மானுடம் இன்னும் உயிர்ப்போடு இருப்பதை நம்மைக் கிள்ளிக் கொண்டாவது நம்பலாம்.
ஆத்மார்த்தியின் அப்பாவின் மரணத்தை ஒட்டி நிகழ்ந்த ஒரு நிகழ்வு நமக்கு நாம் மறந்து கொண்டிருக்கும் சில அறங்களை நினைவுபடுத்துகிறது. அந்தக் கடன் அட்டை என்பது உண்மையில் மனிதாபிமானத்தின் விசிட்டிங் கார்ட்!
யாசகம் கேட்டுப் பிழைக்கும் வடக்கத்திய பெண்மணி வழியாகவும் வேணுகோபால் என்று அறியப்படும் என்றோ தொலைந்து போன மகளுடன் பாதி கப் காஃபியை நிஜத்தில் பகிர்ந்து வாழும் மனிதர் மூலமாகவும் நாம் உணர்ந்து கொள்ள வேண்டியதை அழுந்திச் சொல்கின்றன ஆத்மார்த்தி தனது மனக்குகையினுள்
தீட்டியுள்ள சித்திரங்கள்.
சுரேஷும் பவித்ராவும் அந்தக் குகையின் அஜந்தா ஓவியங்கள் என்பேன். அவர்களை ஈர்த்த பொழுது எது நேர்ந்ததோ அதுவே அவர்களது மகவுக்குச் சூட்டப்பட்ட பெயராக ஆனது ஆனந்தத் திருப்பம்.
‘நிரூபணமற்ற சத்தியங்களின்’ மெளன சாட்சியான அகிலாவின் கதை இன்றும் அங்கங்கே அரங்கேறும் கதைதான். ஆனால் ‘தீபக் நாராயணன் என்பவனை நான் எஞ்சினியராக வளர்க்கவில்லை’ மானுடம் எஞ்சி நிற்கும் ‘ஒரு மனிதனாக வளர்த்திருப்பதாக’ச் சொல்லி தன் கதையை எழுதும் படி அகிலா சொன்னது ஒரு அழகிய ஹைக்கூ.
நான் மிகவும் கரைந்து போன ஒரு கட்டுரை ‘தேவாலயத்தில் ஒரு மகாலக்ஷ்மி’. மிட்டாய் பசி புதினத்தில் நல்ல உளவியல் நிபுணராக வெளிப்பட்ட ஆத்மார்த்தி அதற்கு முன்பே அதை இந்தக் கட்டுரையில் மிக நேர்த்தியாக மெய்ப்பித்திருக்கிறார்.
வசதி படைத்தவர்களின் வாழ்வில் படியும் வெளிச்சத்திலும் கரியதொரு நிழல் விழத்தானே செய்யும்! ஒரு மெழுகு வர்த்தியை ஏற்றி அந்த இருளை ஆத்மார்த்தி விரட்டிய கதை அது. அது சரி, வெளிச்சம் இல்லாமற் போவதைத் தவிர இருள் என்று தனியே ஏதும் உண்டா என்ன?
‘ஞாபக நதிகளின்’ பெருக்கும் பிரவாகமும் நிதானமானவை. காட்டாறு போல வேகமில்லாதவை. அதில் மிதந்தும் உருண்டும் சொன்றவர்கள் ஆத்மார்த்தியின் பதின்ம வயதுகளில் அவர் முன்பாக ரத்தமும் சதையுமாக நடமாடியவர்கள். அவர்களின் மூலம் ஆத்மார்த்தி நமக்கு அடையாளம் காண்கிற உலகம் மிக மிக வித்தியாசமானது.
சாஸ்தா என்ற பெயர்க்காரன் ஒரு வினோத விதம் என்றால் லிஸி என்ற யுவதி மற்றொரு சுவாரஸ்ய விதம். ஆனந்த்- மெர்சி தம்பதியர் மூலம் நாம் அறியவரும் டோனி பற்றிய சேதி தாயுள்ளத்தின் உச்சம் காட்டும் ஒன்று. மெர்சி நிழலைப் பிரம்பால் அடிக்கும் டீச்சர் என்று விவரிப்பதெல்லாம் சொற்களின் ரசவாதம்.
டி.எம். செளந்தரராஜன் என்கிற தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத உன்னத தமிழ்க் கலைஞனின் பத்து நிமிட இருப்பில் ஆத்மார்த்தி காட்டிய காட்சி நீத்தாருக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதை மகத்தான ஒரு காரியமாக்கிச் சொல்லியிருக்கிறது. சில வருடங்கள் முன்பாக விக்ரம் சாராபாயின் மகள் மல்லிகா சாராபாயின் வீட்டில் ஒரு ஈமச்சடங்கில் அவரது மகள் பிரேதத்தின் முன்பாக நடனாஞ்சலி செலுத்தியது நினைவிற்கு வருகிறது. செத்தாலும் பிரேதங்களும் மேன் மக்கள்தானே…
‘உறவெனும் கரும்பு’ எனும் கட்டுரை பகர்வது child psychology என்று நினைத்தால் அது முடியும்போது adult psychology ஆக அழகாய் விரிகிறது.
மனதை நொறுங்க வைத்த நிகழ்வு ஒன்று கண்ணாடி மனசு என்ற தலைப்பில் உருக்கமாக எழுதப் பட்டுள்ளது. கல்விச் சுற்றுலா போன இடத்தில் கடல் அலை இழுத்து அழைத்துக் கொண்ட இரண்டு இளைஞர்கள் பற்றிய பதிவு அது. அந்தக் கட்டுரை சொல்லும் சேதியை என்னவென்று விவரிக்க? என்னால் இயலவே இயலாது.
வசீகரம் மட்டும் ஒருவன் எழுதுவதை எல்லாம் அலங்கரித்து விடாது. அரிதாரம் பூசாத உண்மையும், நேர்மையும் நம்மால் இன்னும் பயன்படுத்தப்படாத ஆயிரக் கணக்கான வார்த்தைகளும் அவற்றின் permutation combination களினால் ஆன சொற்கூட்டுகளும் சேர்ந்த எழுத்துக்களே தன் மூலக் கருவையும் உணர்வுகளையும் உடன் இணைந்து வாசிப்பனுக்குக் கடத்த முடியும். அந்த வித்வம் ஆத்மார்த்திக்கு அழகாகக் கை கூடியிருப்பதால் அவரை சொற்கூட்டின் சித்தன் எனலாம்.
இந்தக் கட்டுரையிலும் ‘அன்பெனும் பாஸ்வர்ட்’ கட்டுரையிலும் மற்றும் இந்தப் புத்தகம் முழுவதும் ஆத்மார்த்தியின் பேனாவன்மை ஓங்கி ஒலிக்கிறது. மனதோடு பேசுகிறது. தலை வருடுகிறது. உரிமையோடு காது திருகுகிறது. கரம் கோர்த்து உடன் நடக்கிறது.

நானும் மதுரை வாசி என்பதாலும் எண்பதுகளின் துவக்கத்தில் நானும் திருநகரில் வசித்ததாலும் இந்தக் குகையிலும் நதியிலும் நான் கொஞ்சம் கூடுதலாய் ஈஷிக்கொள்கிறேன்.மானுடம் உய்யவும் ஓங்கவும் இப்படிப்பட்ட எழுத்துக்கள் அவசிய/ அவசரத் தேவை.ஆத்மார்த்தியின் புனை பெயர் கண்டிப்பாக ஒரு காரணப் பெயர் தான் என்பதை நாம் இந்தப் புத்தகத்தைப் பாதி படிக்கும் போதே உணர்ந்துவிடலாம்.


 

No description available.

 

ஸ்ரீநிவாஸராகவன் மதுரையில் வசிக்கிறார்.
உயர்நீதிமன்றத்தில் மூத்த வழக்குரைஞராகப் பணியாற்றுகிறார்.
தீவிரமான புத்தகக் காதலர்.
“கூடவே வரும் நிலா” என்ற பேரில் இவரது கவிதைத் தொகுப்பு
நோஷன் ப்ரஸ் வாயிலாக நூலாக்கம் கண்டுள்ளது. ஸ்ரீநிரா என்ற பேரில் எழுதுகிறார்