குணச்சித்திரத் துளிகள்


திரை

தமிழ்மகன்

இரண்டாம் பதிப்பு- 2021-144 பக்கங்கள்-140 ரூ-
திரைக்கட்டுரைகள்-
writertamilmagan@gmail.com


இதழியல் துறையில் நீண்டதொரு அனுபவம் கொண்டவர் தமிழ்மகன். பா.வெங்கடேசன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 1964 ஆமாண்டு பிறந்தவர்.தொடர்ச்சியாக எழுத்துத் துறையில் கவனத்திற்குரிய படைப்புக்களின் மூலம் இயங்கி வருபவர். தமிழக அரசின் விருதுகளைத் தனது “எட்டாயிரம் தலைமுறை” சிறுகதைத் தொகுப்புக்காகவும் முன்பு “மானுடப்பண்ணை” நாவலுக்காகவும் பெற்றிருக்கிறார். சுஜாதா விருது, திராவிடர் கழகத்தின் பெரியார் விருது உட்படப் பல்வேறு சிறப்புகளுக்கு உரியவர். மின்னங்காடி பதிப்பகம் மூலம் சிறப்பான நூல்களை ஆக்கம் செய்து வெளியிட்டு வருகிறார்.
தமிழ் மகனின் திரை எனும் தலைப்பிலான நூலைச் சமீபத்தில் வாசித்தேன்.
அளவான செறிவான நூல்முகத்திலேயே வாசிப்பவரை ஈர்த்து விடுகிறது இந்த நூல். “ஒரு சினிமா நிருபரின் டைரியிலிருந்து” என்கிற தலைப்பில் நூற்றுக்குக் குறைவான 
முன் சொற்கள் வியப்பைத் தொடங்கித் தருகின்றன. அதிகம் அறிந்த பெருவெற்றி மனிதர்களுடனான தனது நேர்முக அனுபவங்களிலிருந்து முற்றிலூம் அறியாத தரவுகளையும் அபூர்வமான துளிச்சித்திரங்களையும் நூலெங்கும் நேர்த்தித் தருகிறார். சின்னச்சின்னத் தூவல்களிலெல்லாம் பண்பட்ட எழுத்தினைப் படர்த்தி ரசிக்க வைக்கிறார்.
இசையமைப்பாளர் தேவா பற்றிய அறிமுகப் பத்தி இப்படித் துவங்குகிறது.
பொறுமையாகச் செயல்படுவதில் இசையமைப்பாளர் தேவாவைப் போல இன்னொருத்தரைப் பார்க்க முடியாது.ஆண்டுக்கு 30 படங்கள் இசையமைத்த நேரத்திலும் அவரிடம் ஆர்ப்பாட்டமான அகம்பாவம் ஆன நடவடிக்கை பார்த்ததில்லை செய்து வைத்தது மாதிரி ஒரு பாவனையோடு ஒரு முகம்.
தேவாவுடன் நேரில் பழகிய யார்க்கும் இதன் கச்சிதத்தில் நூறு சத உடன்பாடு இருக்கும்.மேலோட்டமாகப் பார்த்தால் துணுக்குகளின் தோரணம் போல, ஒரு சுவையான சினிமா பத்திரிக்கையின் ஆண்டு மலரைப் புரட்டிக் கொண்டு இருப்பது போலத் தோன்றினாலும் கூட, வாசித்து முடிக்கையில் ஒரு அழுத்தமும் சின்ன வியத்தலும் நிகழ்வது சிறப்பு. பெரு வெற்றி மனிதர்களின் வாழ்க்கைச் சரடுகளை, குணச்சித்திரத் துளிகளைக் காட்சிப்படுத்துவதன் மூலம், வேறு எந்த வழியிலும் யூகிக்கவோ,கண்டு உணரவோ முடியாத அரிய அனுபவச் சாற்றை வாசிப்பவர்களுக்குக் கடத்துகிறார் என்பது புரிபடும். அது நிச்சயமாக சினிமா எனும் பெருங்கலையினூடாக மட்டுமே ஏற்படக்கூடிய நுண்மையான அடைதல்.
இன்னொரு சித்திரம்.
சிவாஜி கணேசனின் அன்னை இல்லத்துக்குத் தான் இருவேறு முறைகள் சென்ற போது கிடைத்த அனுபவ மாற்றங்களை லேசாய் ஒப்பிட்டபடி அந்தப் பகிர்வினைச் செலுத்திய விதம் சிறக்கிறது. அந்தக் கட்டுரைக்கு குடும்பத் தலைவன் என்று எம்ஜி.ஆர் படத்தின் பேரைச் சூட்டீயிருப்பதிலிருந்தே விலக்கமும் வித்யாசமும் தொடங்கி விடுகிறது. இரு வேறு முறைகள் சிவாஜிகணேசனை பேட்டி எடுத்து அனுபவங்களை அடுத்தடுத்து சொல்லிவிட்டு, எல்லாம் முடிந்து கிளம்புகையில் இப்படி முடிக்கிறார் தமிழ்மகன்.அதன் கடைசிப் பத்தியை இங்கே அப்படியே தரலாமென நினைக்கிறேன்.
” பேசிவிட்டு வெளியேறும்போது எங்களை எழுந்து நின்று வழியனுப்பினார் நாங்கள் வெளி வாசலை கடக்கும் வரை அந்த இடத்திலேயே நின்று பார்த்துக் கொண்டிருந்தார் எதற்காக நின்று கொண்டிருக்கிறார் நாங்களும் தயங்கி தயங்கி நகர்ந்து கொண்டிருந்தோம் பிறகு நிதானமாக சாங் ட்யூப் லைட் சுவிட்சை நிறுத்திவிட்டு எல்லாம் அணிந்து விட்டதா என்று அண்ணாந்து பார்த்துவிட்டு உள்ளே போனாள் ஏனோ கண்கள் பனித்தன”
சினிமாவை- அதன் மனிதர்களை- நேசிப்பவர்களுக்கு நிச்சயம் இந்த நூல் தெள்ளமுது.