நதியிசைந்த நாட்களில்

                                      வெளிநாட்டு மிட்டாய்ப் பெட்டி


                         சத்யா G.P. எழுதிய “நதியிசைந்த நாட்களில்” புத்தகத்துக்கான அணிந்துரை


பதின்மத்தில் சொந்தக்காரர்கள் தெரிந்தவர்கள் வீட்டுக்கு வரும்போது ஊரில் கிடைக்கும் தின்பண்டங்களைத் தான் பெரும்பாலும் வாங்கி வருவார்கள். பழங்களைக் கொண்டுவருபவர்களை உடனே மறப்போம் என்றால் ஃபாரீன் சாக்லேட் எனப்படுகிற வெளிநாட்டு மிட்டாய்களை வாங்கிக் கொண்டு வருபவர்களைத் தான் ப்ரியத்தின் பேரேட்டில் மேலே உச்சியிலே முதற்பெயராக எழுத விரும்புவோம். அப்படியான உறவினர் அல்லது நண்பர்கள் மீதான கூடுதல் ப்ரியத்துக்கும் அவர்கள் வாங்கி வந்த அந்த மிட்டாய்ப்பெட்டியின் மீதான பரவசமே காரணமாக அமையும். சத்யா எழுதியிருக்கும் இந்த நதியிசைந்த நாட்களில் எனும் நூலின் மின்வழிக் கோப்பை வாசித்த போது எனக்குத் தோன்றியது அந்தச்சொற்கூட்டுத் தான். இந்தப் புத்தகம் ஒரு வெளிநாட்டு மிட்டாய்ப் பெட்டி. நெடுநாள் இனிக்கும் ஞாபப் பேழையும் கூட.

சத்யாவின்  கட்டுரைகள் எந்தச் சிடுக்குமின்றி இயல்பான எளிய மொழியில் வழுக்கிக் கொண்டு செல்கின்றன.  ஞாபகத்தை எழுதுவது   உலகளாவிய எழுத்துத் தேட்டங்களில் ஒன்று. மரபு சார்ந்து இசையை நோக்குதலும் திரை இசை குறித்த அவதானங்களும் காணக் கிடைக்கிற அளவுக்கு திரை சாராத இசைத் தொகுப்புக்களைக் குறித்த படைப்புகள் இருப்பதில்லை என்பது நிதர்சனம். திரை இசையின் பரவலுக்குத் தொடர்பற்ற வேறொரு சிறு நிலம் தான் திரை சாராத அக விருப்ப இசைக் கோர்வைகளுக்கு வாய்க்கிறாற் போலத் தோன்றலாம். திரையிசைக்கான பரவல் காலம் மற்றும் முதல் ஒலித்தல் காலத்துக்குச் சற்றும் தொடர்பற்ற நெகிழ்ந்த மற்றும் நெடிய ஒலித்தல் காலத்தைத் தமக்குத் தாமே வழங்கிக் கொள்பவை திரை சாராத இசைப் பேழைகள். மொழி அல்லது திரை சார் ஆளுமை மீதான பற்றுதல் போன்ற வட்டாரப் பிடிமானம் இன்றி உலகம் முழுவதற்குமான விருப்பப் பொதுமை ஒன்றை முன்வைக்கிற இசைவகையாக இஃது விளங்குகிறது. காலம் ஏற்படுத்துகிற ட்ரெண்டிங் ஆட்டங்களில் சரிந்து விடாமல் பேருருக் கொள்ளவல்ல பலமான அடித்தளத்தை இத்தகைய இசைப்பேழைகள் உருவாக்கிக் கொள்வதும் அதனாலே தான்.

இசையானது கலைஞர்களிடமிருந்து மக்களை நோக்கி நேரடியாக வருவது தான் உலகின் பெரும்பான்மை முறைமை. இந்தியத் திரை சாராத இசை முயல்வுகள் எல்லாக் காலத்திலுமே ஒரு சுதந்திரவாதச் செயல்பாடாகவே பார்க்கப்படுகிறது. தனி ஆல்பங்களை உருவாக்குவது திரை சார்ந்த கலைஞர்களின் வாழ்வாதார உயிர்த்திருத்தலுக்கு எதிரான விளைவுகளைக் கூடத் தோற்றுவிக்கக் கூடும் என்கிற அச்சம் நிரந்தரமாய் நிலவுகிறது. ஒரு இசைக்கலைஞர் பெரும்புகழ் இசையமைப்பாளரிடம் பணியாற்றிக் கொண்டே மறுபுறம் தனித்த கச்சேரிகளையோ அல்லது ஆல்பங்களையோ உருவாக்கி ஈடுபடுவதற்கான காற்றோட்டம் எக்காலத்திலும் அரியதாகவே காணப்படுகிறது. இப்படியான சிக்கல் பாடகர்களுக்கே உண்டு என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. தனி ஆல்பங்கள் இத்தனை சிக்கல்களைத் தாண்டித் தான் உருவாக முடிகிறது.

தமிழ் போன்ற மொழியின் பிற கலைச்செல்வங்களோடு ஒப்பிடுகையில் தனிப் பாடல் திரள்கள் அரிதாகவே இன்று வரை கேட்க வாய்க்கின்றன. தென் மொழிகள் அனைத்தின் ஆல்பங்கள் எண்ணிக்கையைக் கூட்டினாலும் இந்தியில் உருவாகிற ஆல்பங்களின் எண்ணிக்கையை நெருங்க முடியாதென்றே தோன்றுகிறது.

இன்னுமோர் விலக்கம் இங்கே இருக்கிற திரை இசையமைப்பாளர்கள் பெரும்பாலும் ஆல்பங்களை ஊக்குவிப்பதில்லை. முற்றிலுமாக நிராகரிப்பவர்கள் தான் அதிகம். பக்திப் பாடல் பேழைகளை அதிகம் உருவாக்கி இருப்பதும் அவற்றின் பின்னே இருக்கக் கூடிய சந்தைத் தேவையைப் பூர்த்தி செய்யத் தானே ஒழிய கலையினூடான ஈடுபாடாக அவற்றையும் கொள்ள முடியாது. இளையராஜா நத்திங் பட் விண்ட் ஹவ் டு நேம் இட் இந்தியா 24 அவர்ஸ் திருவாசகம் ரமணமாலை போன்ற தனிப்பேழைகளை இசைத்திருக்கிறார். ரஹ்மானும் சில பேழைகளை உருவாக்கி இருக்கிறார். சுரேஷ் பீட்டர்ஸின் மின்னல் ஓவியம் இரண்டையும் பித்துப்பிடித்துக் கேட்டலைந்திருக்கிறேன். மால்காடி சுபா ஸ்ரீனிவாஸ் பாப் ஷாலினி போன்றோர் சிலபல ஆல்பங்களை வெளியிட்டார்கள். 2000ஆம் ஆண்டுக்கு அப்பால் படர்க்கை இசை நதி பெரும்பாய்ச்சலை நிகழ்த்தாமல் குறுகி விட்டது.

மேற்கத்திய செவ்வியல் இசைப்பேழைகள் எல்லாக் காலத்திலும் செல்வாக்குப் பெற்றவையாகத் திகழ்ந்தன. உலகம் உற்றுக் கேட்கிற இசை மீதான பார்வையும் பரிவும் இந்திய நிலமெங்கிலும் படராமல் இல்லை. தேடி வரும் இசையாகத் திரை இசை திகழ்ந்த அதே காலத்தில் தேடிச் செல்லும் இசையாக உலகளாவிய இசைப்பேழைகள் மீதான நாட்டம் திகழ்ந்தது. செவ்வியல் இசை வாத்திய இசை குணாம்ச இசை மற்றும் பாடல்பேழைகள் எனப் பல வகையிலான உப-கூர்மையோடு திரை சாராத அக இசையின் வகைமை விரிந்து காணப்பட்டது.

நேரடியாக ஞாபகத்தை எழுதுவதை விடவும் சினிமா இசை விளையாட்டு என்று எதாவதொரு குறுக்கத்தைப் பெருக்குவதன் மூலமாக நினைவுகளை மீட்டெடுத்தல் மிகுந்த பலிதம் தருகிற எழுத்து வகையாக மிளர்ந்து விடுகிறது. ஞாபகப் பகிர்வென்பது சிக்கலும் பேதமும் இன்றி முழுமையாக நடந்தேறுவதற்கான நுட்பத்தை இசை மீதான ப்ரியம் வழங்குகிறது. எந்தத் தசாப்தத்தைச் சேர்ந்தவர்க்கும் இப்படியான இசையினூடாகத் தான் திரும்பிச் செல்ல முடியாத காலத்துக்குச் சென்று திரும்புதலை எழுத்து சாத்தியப்படுத்தித் தருகிறது. ஜி.பி.சத்யா அப்படியான எழுத்தைத் தான் தனது நூலில் முன்வைக்கிறார். திரை சாராத இசை மீதான ப்ரியத்தைத் தொகுத்தெழுதுதலில் சத்யாவின் கொடையாக நதியிசைந்த நாட்களில் எனும்  நூல் வந்திருக்கிறது.

தான் கடந்து வந்த சுகந்தத்தை இன்னொருவருக்கு அறியத் தருவது போன்ற கடினம் தான் இசையை நுகர்ந்து விட்டு அதைக் குறித்து எழுதுவதும். சத்யா தான் கடந்து பயணித்த இசைப்பேழைகளை வெறுமனே சிபாரிசு மட்டும் செய்வதோடு நிறுத்திக் கொள்ளாமல் தனித்த தருணங்களைக் கத்தரித்து வைக்கிறார். அவற்றை வரிசைப்படுத்தி ஒட்டுகிறார். அப்படி ஆல்பங்களைப் பற்றிய ஆல்பமாகவே இந்தப் புத்தகத்தைப் படைத்திருக்கிறார். எந்தக் கட்டுப்பாடும் இன்றித் தன் மனமும் தானுமாய்க் கலந்து உருவாக்க விழைந்திருப்பது இந்தப் புத்தகத்தை செறிவும் செழுமையுமாய் உருக்கொடுத்திருக்கிறது. ஆழ்ந்த முறைமையும் தீவிரமான சூத்திரங்களுக்கு உட்பட்ட இயங்கியலும் இல்லாமல் தெளிந்த நீரின் சலனமற்ற சலனித்தலைப் போல் ஆற்றொழுக்கான எழுத்து நடையும் நேர் தன்மையும் இந்தக் கட்டுரைகளைச் சுவையுள்ளதாக்கித் தருகிறது.

How To Name It  குறித்த பதிவை இன்னும் விரித்திருக்கலாம் என்று தோன்றுகிறது. காலத்தையும் ஞாபகத் தேடலையும் மட்டுமே குறிக்கோளாய்க் கொள்பவர்களுக்கு இசைப்பேழைகளைப் பற்றிய அவதானங்களும் தரவுகளும் கூடுதல் அனுபவமாய்க் கிடைக்கக் கூடும். இசையினூடாகக் காலமும் ஞாபகமும் அவரவர் கதவுகளைத் திறந்து வைக்கவும் முயலும். Bombay City, Mubarakaan  போன்ற பதிவுகள் என் மனத்துக்கு மிக நெருக்கமான இடத்தில் வந்தமர்ந்து கொண்டன.

திரை சாராத இசை ஆல்பங்களைப் பொறுத்தவரை தமிழில் பெரிய அளவில் ஆய்வுக்கோவைகளோ தொகுப்பு நூல்களோ இல்லை என்கிற குறையை இந்த ஒரே ஒரு நூலைக் கொண்டு பூர்த்தி செய்து விட முடியாது. எனினும் இதனை ஒரு முதல் நூலாக வரவேற்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இராது என்றே தோன்றுகிறது. எந்த இடத்தை எப்படிக் கடக்க வேண்டும் கவனிக்க வேண்டும் என்று குறித்துக் கொடுக்கிறார். தவற விடக் கூடாத தருணங்களை வரிசைப்படுத்துவதில் இன்னும் கொஞ்சம் முனைந்திருக்கலாம். ஒரு பாடலை எப்படி ரசிகமனத்தினால் பெற்றுக் கொள்ள முடியும் என்பதை ஒருவரின் தனி அனுபவத்தைக் கலயமாக்கிக் கொண்டு வரையறுத்து விட இயலாது எனினும் புதிய சஞ்சாரிகளுக்கு ஏற்கனவே சென்று திரும்பியவர்களின் பயணக் குறிப்புகள் நிச்சயம் உதவக் கூடும். அப்படிப் பார்க்கையில்  புதிய சஞ்சாரிகளுக்குப் பழைய பயணியின் அனுபவ விள்ளல்களைப் பங்குபாகம் செய்து தரக் கூடிய அனுபவதானம் என்ற முறையில் சத்யா ஜி.பி எழுதியிருக்கும் இந்த நூல் நிச்சயம் பயனுள்ள திசை காட்டியாக விளங்குகிறது.

Euphoria இந்த நூலில் எனக்கு மிகப் பிடித்த கட்டுரைகளில் ஒன்று.  ஏராளமான பெட்டிகளில் மக்களை சுமந்தபடி வரும் ரயில் என்னைப் பொறுத்தவரை ஒரு இயந்திரத் தாய். என்று எழுதுகிற மனத்தை இன்னும் கொஞ்சம் அகழ்ந்திருந்தால் அற்புதமான அனுபவச்சாற்றை சாத்தியம் செய்திருக்கும். இரயில் நிறையப் பாடல்களோடு பவனி வருவது தான் நம் எல்லோர்க்குமான ஞாபகக் காற்றின் ஊர்வலங்கள்.

“நாடி நரம்புகள், திசுக்கள், ஹார்மோன்கள், ரத்தம், வியர்வை, சிந்தனை என சகலத்திலும் உச்ச ரசனை, மெலடி என இரண்டும் இருந்தால் தான் இப்படியொரு ரீமிக்ஸ் பாடலைத் தர முடியும்”  என்று ஒரு கட்டுரையில் சொல்லுகிறார். சத்யாவுக்கு எதையும் லேசான பகடியுடன் எழுத வருகிறது. உலர்ந்த எழுத்தினூடே அங்கதம் எழுதுவது சிரமம். இந்த நூலைத் தாண்டியும் அவர் அந்தத் திசையிலும் பயணித்தால் நல்ல விளைதலை அடையக்கூடும்.

I Love U I‘ll Kill U, El Arbi, போன்ற கட்டுரைகளில் கடும் உழைப்பு ரசிக்க வைக்கிறது. நான் காலேத்தை வழிபடக் கூடியவன். இந்த நூலில் என்னோடு பெரிதும் தொடர்புறக் கூடியதாக காலேத் குறித்து சத்யாவின் மொழிதலைச் சொல்ல விரும்புகிறேன். காலேத் யாவர்க்குமான தேவராக ராஜன். சத்யாவும் நானும் அவரால் இணைகிறோம்.

புழக்க மொழியில் எழுதுவது நினைவைப் பெயர்த்தலில் ஒரு சுதந்திரம் என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனாலும் ஆங்கிலமொழியின் அனேக சொற்களை அப்படியே பயன்படுத்தியிருப்பது சற்றே உறுத்துகிறது. அப்படியான சொற்களைப் பின் தொடர்ந்து பார்க்கையில் அவற்றுக்கு உரித்த அழகுத் தமிழ்ச் சரி நிகர் சொற்களைக் கண்டடைவது ஒன்றும் பெருங்கடினம் அல்லவே.

தொடர்ந்து திரையிசை மற்றும் சார்பற்ற இசை குறித்தெல்லாம் எழுதிக் கொண்டிருப்பவன் என்ற அடிப்படையில், ஒரு இன்னிசை நுகர்தலைப் பற்றிப் பேச விழைகிற நூலொன்றை எழுதுவதன் பின்னே இருக்கும் சிரமங்களை நன்கு உணர்ந்தவன் நான். சத்யா எழுதி இருக்கும் இந்த “நதியிசைந்த நாட்களில்” நூல் பெரும் வெற்றி அடைய வேண்டுமென்று வாழ்த்துகிறேன். இன்னும் இசை ரசனையின் பல அடுக்குகளைப் பற்றிப் பேசுகிற பல நூல்களை அவர் படைக்க வேண்டும் என்பதையும் என் வாழ்த்தோடு மேலதிக எதிர்நோக்குதலாகப் பதிவு செய்ய விழைகிறேன்.

வாழ்தல் இனிது