தேன்மழைச் சாரல் 15


      தேன்மழைச் சாரல்
15 தீராக் காதல் மாறுமா?

கு.மா.பா என்ற சுருக்கப் பெயரில் விளிக்கப்பட்ட கு.மா.பாலசுப்ரமணியம் தமிழ்த் திரைப் பாடல் உலகில் மறுக்க முடியாத நற்பெயர். முதல் தலைமுறைப் பாடலாசிரியர்களில் கண்ணதாசனுக்கு முன்பே எல்லாவிதமான பாடல்களையும் புனைந்தவர். சூழல் எதுவாகினும் இலகுவான பாட்டுக்களைச் செறிவான அர்த்தக்கூட்டில் படைத்தளித்தவர். முப்பது வருட காலம் பாடலாசிரியராக இயங்கியவர் கு.மா.பா. சிக்கலான மெட்டுக்களுக்கும் யூகத்திற்கு அப்பாற்பட்ட பாடல்வரிகளைத் தந்து வியக்கவைத்தவர்.இது இவரது நூற்றாண்டு.
13.05.1920 இல் கோவிந்தம்மாள் மாரிமுத்து தம்பதியினரின் செல்வனாக மன்னார்குடிக்கு அருகில் உள்ள வேளுக்குடி எனும் ஊரில் பிறந்தார் கு.மா.பா. தமிழன் வீரகேசரி தமிழ்முரசு செங்கோல் உள்ளிட்ட பத்திரிகைகளில் உதவி ஆசிரியராகப் பணி புரிந்த அனுபவம் இவருக்கு உண்டு. இயல்பாகவே கதை கவிதை ஆகியவற்றைப் புனைவதில் நாட்டம் கொண்டிருந்தார்.

கொஞ்சும் சலங்கை மகாகவி காளிதாஸ் ஆகிய படங்களுக்குக் கதை திரைக்கதை எழுதிப் பாடல்கள் புனைந்தார் கவிஞர். மடாதிபதி மகள் பொன்னி ஆகிய படங்களின் பாடல்கள் எழுதி வசனகர்த்தாவாகவும் விளங்கினார் வேலைக்காரன் படத்திற்கு கதை மற்றும் பாடல்களை எழுதினார். தணியாத கலை தாகம் கொண்டவரான இவர் ஓர் இரவு கோமதியின் காதலன் போன்ற படங்களில் துணை இயக்குனராகவும் பாடலாசிரியராகவும் பணியாற்றினார். அவன் அமரன் திருடாதே அரசிளங்குமரி எது நிஜம் கானல் நீர் குழந்தைகள் கண்ட குடியரசு உட்பட நேரடி மற்றும் மொழி மாற்றுப் படங்கள் என 60 படங்கள் வரை பாடல்கள் எழுதியவர் கு.மா.பா. தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றவர் கவிஞர். 04.11.1994 அன்று பொன்னுடல் நீங்கிப் புகழுடல் ஏந்தினார்
பாடலைத் துவக்கும் வரியிலேயே கேட்பவர் கவனத்தை ஈர்ப்பவர் கு.மா.பா. இவரது பாட்டுக்கள் முதல்வரி மின்னலைப் போல் பளீரிடக் கூடியவை. போலவே சரணவரிகளையும் பார்த்துப் பார்த்துச் செதுக்கினார். கொஞ்சும் சலங்கை படத்தில் இடம்பெறுகிற சிங்கார வேலனே தேவா, அம்பிகாபதியில் இடம்பிடிக்கும் மாசிலா நிலவே நம் காதலை மகிழ்வோடு மாநிலம் கொண்டாடுதே, நானும் ஒரு பெண் படத்திலிருக்கிற ஏமாறச் சொன்னது நானா களத்தூர் கண்ணம்மாவின் ஆடாத மனமும் ஆடுதே ஆகியன அவற்றில் சில.
1955 ஆமாண்டில் வெளி வந்த படம் கணவனே கண்கண்ட தெய்வம். இதில் இடம்பெற்ற பாட்டு உன்னைக் கண் தேடுதே.சுசீலா பாடிய இந்தப் பாடல் இன்றளவும் ஒலித்துக் கொண்டிருப்பது. லேசான விக்கலுடன் சுசீலா இதனைப் பாடிய பாங்கினை சிலாகிக்காதவரே இல்லை எனலாம். சந்திரபாபுவின் குரலில் மரகதம் படத்தில் இடம்பெற்ற குங்குமப் பூவே கொஞ்சு புறாவே என்ற பாட்டும் காலத்தால் அழியாதது. 1958 ஆமாண்டு டி.ஜி.லிங்கப்பா இசையமைப்பில் சபாஷ் மீனா படத்தில் டி.எம்.எஸ் பாடிய பாடல் சித்திரம் பேசுதடி என் சிந்தை மயங்குதடி முத்துச்சரங்களைப் போல் மோகனப் புன்னகை மின்னுதடி என்ற பல்லவியுடனான பாடலை எப்படி மறக்க முடியும்?
என் மனம் நீ அறிவாய் உந்தன்
எண்ணமும் நானறிவேன்
இன்னமும் ஊமையைப் போல்
மௌனம் ஏனடி தேன் மொழியே
எளிமையும் அருமையும் உடன்பிறந்தவை என்பதை நிறுவ இவ்வரிகள் போதாதா என்ன.?
கு.மா.பா என்றாலே சவால் தான். உத்தம புத்திரன் படத்தில் இடம்பெற்ற பாடல் யாரடி நீ மோகினி. இதனை மறக்கவா முடியும்? எல்லாக் காலங்களுக்குமான கானமல்லவா இஃது?
சந்தோஷமா கோபமா…
தேன் வேணுமா நான் வேணுமா
தீராக் காதல் மாறுமா
நெடியதோர் இடைவெளிக்கப்பால் சலீல் சவுத்ரி இசையமைப்பில் 1978 ஆமாண்டு உருவான தூரத்து இடிமுழக்கம் படத்தில் பாட்டெழுதினார் கு.மா.பா அவற்றில் ஒன்றான உள்ளமெல்லாம் தள்ளாடுதே காற்றை ஆண்ட காந்தர்வப் பாட்டு. ரேடியோவில் நேயர்விருப்பமாகப் பன்னெடுங்காலம் ஒலித்தவண்ணம் இருப்பது. ஜேசுதாஸூம் ஜானகியும் இணைந்து பாடிய இந்தப் பாடல் தொன்ம இருளில் கசியும் மாயத் தன்மையோடு ஒலிப்பது. கேட்பவர் யாவரையும் கவர்வது. கடற்கரையின் விசாலத்தைப் பின்புலமாக்கி கள்ளமிலா வெள்ளைமனதோடு தலைவனும் தலைவியும் காதலைப் பகிர்ந்து கொள்கிற பாடலாக விரிகிறது இது.கவிஞரின் கவித் திறம் நன்கு புரியத் தருகிறது. பல்லவி நிறுத்த வாக்கியங்களாக அடங்கி ஒலிக்கும் அதே வேளையில் சரணவரிகள் அனைத்துமே பரஸ்பரத்தின் இடைமலர்களாகப் பூத்துவிடுகிற வினாக்களாகவே படர்வது பாடலின் பேரழகு. ஈற்று இரு வரிகள் எல்லாவற்றுக்குமான பதில்களாகி விடுவது நூறழகு.சலீல் சவுத்ரியின் மேதமையில் பூத்த கானமலர் இப்பாடல்.
உள்ளமெல்லாம் தள்ளாடுதே
உள்ளுக்குள்ளே ஏதேதோ எண்ணங்கள் போராடுதே
துள்ளும் அலை தொட்டு என் காலை முத்தமிட்டு
வெள்ளி நிலா ஊஞ்சலிலே தாலாட்டுதே
(உள்ளமெல்லாம் )
வாய் மொழி சொன்னால் வாழ்வும் ஆரம்பமா
வண்டு வந்து தீண்டாமல் பூவாகுமா
கொண்ட ஆசைகள் கைகூடுமா
எல்லையில்லா இன்பங்கள் கொண்டாடுமா
எண்ணும் யோகங்கள் உண்டாகுமா?
(உள்ளமெல்லாம்)
ஆண் மனம் வைத்தால் அஞ்சி பின் வாங்குமா
நம்பி உள்ள நெஞ்சங்கள் ஏமாறுமா
எந்தன் சொந்தங்கள் வீணாகுமா
தாலி என்ற வேலி கட்டி காப்பாற்றுவேன்
தங்கம் போல் உன்னை பாராட்டுவேன்
(உள்ளமெல்லாம்)

கங்கை அமரன் இசையமைப்பில் கனவுகள் கற்பனைகள் எனும் படம் அதிகம் பிரபலமடையவில்லை என்றாலும் அதில் கு.மா.பா எழுதி எஸ்பிபாலசுப்ரமணியம் பாடிய நல்லதோர் கானம் “வெள்ளம் போல் துள்ளும் உள்ளங்களே” இதுவே கவிஞர் எழுதிய கடைசிப்பாடல் என்ற பெருமையும் கொண்டது.
தமிழ்த் திரைப்பாடல் உலகில் என்றும் ஒளிரும் விண்மீன் கு.மா.பா