தேன் மழைச்சாரல் 14


தேன் மழைச்சாரல் 14
க ண் ம ணி  சு ப் பு


கவியரசரின் இளவரசர்களில் ஒருவரான கண்மணி சுப்பு எண்ணிக்கை அளவில் குறைவான பாடல்களையே எழுதியிருப்பினும் அழுத்தமும் திருத்தமுமான பாடல்களாக அவற்றைத் தந்தவர். பொருள் கனமும் சொற்சுவையும் கொண்ட பாக்களை யாத்தவர்.மூன்றுமுடிச்சு அவர்கள் பட்டினப் பிரவேசம் நிழல் நிஜமாகிறது நூல்வேலி போன்ற படங்களில் கே.பாலச்சந்தரின் உதவி இயக்குனராகப் பணியாற்றினார் கண்மணி சுப்பு
அதன் பின் தன் சகோதரர் கலைவாணனை நாயகனாக்கி அன்புள்ள அத்தான் படத்தை இயக்கினார்.இதற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்தார். இதில் பாவை இதழ் மொட்டு மற்றும் ஆழக்கடலில் நீந்தி வந்தேன் ஆகிய பாடல்கள் மிக இனிமையானவையாக அமைந்திருந்தன. இரண்டையும் கவியரசரே எழுதியிருந்தார்.
3rd Annual General Body Meeting Of AHA Year 2019/Kannadasan Padalum Acupuncturum... - YouTube

பூவிலங்கு இளங்கன்று புதியவன் நெஞ்சத்தை அள்ளித்தா தர்மபத்தினி புதிர் மிஸ்டர் கார்த்திக் வா அருகில் வா போன்ற படங்களின் வசனம் கண்மணி எழுதியது. கே.எஸ்.சேதுமாதவன் இயக்கத்தில் தேசிய விருது பெற்ற தமிழ்ப் படமான நம்மவர் படத்துக்கும் சுப்பு தான் வசனம் எழுதினார்.

இளையராஜா இசையில் தர்மபத்தினி படத்தில் இடம்பெற்ற நான் தேடும் செவ்வந்திப் பூவிது பாடல் வான் தொட்ட வெற்றிப் படைப்பு. இதில் இளையராஜா திரையில் தோன்றியது பாடலுக்கான கவன ஈர்த்தலாகவே மாறியது. அந்த வருடம் வெளியான பாடல்களில் அத்தனை வெற்றி அடைந்த இன்னோர் பாடலில்லை என்று சொல்லத் தக்க அளவுக்கு வெற்றியின் உச்சியில் சென்று நின்றது இந்தப் பாடல். ராஜா கைய வச்சா படத்தில் மருதாணி அரைச்சேனே பாடல் மனோவுடன் ராஜாவும் சேர்ந்து பாடவும் செய்த பாடல். இதுவும் கண்மணியின் பாமணி தான். புதிய ராகம் படத்தில் வாடுமோ ஓவியம் பாடுமோ காவியம் பாடல் தெளிவான நீரோடை போன்ற பாடல். நல்ல பிரபலம் அடைந்ததும் கூட. மனோ மலேசியா இணைந்து பாடிய மருதாணி வச்ச பொண்ணு என்ற பாடலைக் களத்தூர் கிராமம் படத்துக்காக எழுதினார் சுப்பு.

கண்மணி சுப்பு இயக்கிய சித்திரைப்பூக்கள் படத்தில் எம்.எஸ்.முராரி இசையில் சங்கீதம் கேட்டால் என்ற பாட்டையும் அவரே எழுதினார். காலமெல்லாம் காதல் வாழ்க படத்தை இயக்கிய ஆர்.பாலுவின் அன்பே உன் வாசம் படத்துக்காக தீனா இசையில் உதித் நாராயண் பாப் ஷாலினி பாடிய எங்க போறா எங்க போறா என்ற பாடல் சுப்பு எழுதியது தான். முந்தைய சோலைக்குயில் படத்தில் முராரி இசையில் சுப்பு எழுதிய கண்ணுல நிக்குது நெஞ்சுல சொக்குது மானே பாடல் பலரது கவனத்தையும் ஈர்த்து ஒலித்த ரேடியோ ஹிட் பாடலாக அமைந்தது.மிஸ்டர் கார்த்திக் படத்தில் சொர்க்கம் போக வேண்டுமா என்ற பாட்டு சுப்பு எழுதியது.இதனை எஸ்பிபி பாடினார். தேவா இசையில் மாண்புமிகு மாணவன் படத்தில் டிசம்பர் மாதத்துப் பனித்துளியே உள்ளிட்ட சில பாடல்களை எழுதினார்.

தேன் சிட்டுக்கள் படம். இதற்கு இசையமைத்தவர் டி.எஸ்.ராகவேந்தர் @ விஜயரமணி. தெளிவான இசையறிவும் தீர்க்கமான பாடல்ஞானமும் கொண்டவர் விஜயரமணி. இவர் இசையமைப்பில் கண்மணி சுப்பு எழுதிய காலைவெய்யில் நேரத்திலே பாடல் ஒரு கிராமத்துத் தீந்தமிழ்ச் சர்க்கரைப் பாகுப் பாடல்.

இதைப் பாடியவர் ஜேசுதாஸ். தாஸேட்டன் பாடிய மொத்தப் பாடல்களிலும் தனித்துவமான பாட்டுக்களை மட்டும் வகைப்படுத்த விழைந்தால் அவற்றுள் இந்தப் பாட்டுக்கொரு நிச்சய இடமிருக்கும். ரசிக்க வைக்கும் பாடலிது

செம்பருத்தி நிறத்தக் கண்டு மின்னுதடி கன்னம் ரெண்டு
அம்பெடுத்து மனசுக்குள்ளே வீசுதடி கண்ணு ரெண்டு
பொட்டு வச்ச அழகக் கண்டு பொங்குதடி ஆண்குருவி

கிட்ட வந்து நெருங்குறப்போ கோபமென்ன பூங்குருவி

கண்மணி சுப்பு எல்லா வகைப்பாடல்களையும் எழுதவல்லவர் என்பதை மெய்ப்பிக்கும் பாடலிது. சங்கர் கணேஷ் இசையில் ராஜ்யம் இல்லாத ராஜாக்கள் என்றோர் படம். வெளிவந்திருந்தால் பல கதைகள் மாறியிருக்குமோ என்னவோ. இந்தப் படத்தில் சுப்பு கண்ணதாசன் என்ற பேரில் கண்மணி சுப்பு பாடல்களை எழுதினார். அவற்றுள் ஒன்று சுகம் தரும் பொன்மாலைக் காற்றே வா என்ற பாடல். ஜேசுதாஸூம் வாணி ஜெயராமும் பாடிய டூயட் பாட்டு இது. இன்றெல்லாம் கேட்கலாம். அப்படி இனிக்கும்.

சுகம் தரும் பொன்மாலைக் காற்றே வா
இவன் மனம் கண்ணோரம் பார்த்தேன் நான்
பூப்போலே ரசித்தேன் காதல் பூபாளம் இசைத்தேன்
பூப்போலே ரசித்தேன் காதல் பூபாளம் இசைத்தேன்

இதுதான் திருநாள் இவள் அதை அறிந்தது

இடையிசைத் தூவல்கள் மனசைப் பிழிந்தெடுத்து ஓவியம் வார்த்தாற் போல் இழைத்திருப்பர் இசையிருவர். வாணியும் தாஸூம் பாடிய பாடல்களில் இது நிச்சயம் இடம் பெறத் தகுந்தது. இசையா பாடிய குரல்களா அல்லது வரிகளா என்று பிரித்தறிய முடியாத வசீகரமாய் பாடல் முழுமையும் விரியும்.

பாஷை தடுமாறும் போது ஜாடை சுகமாக மாறும்

பார்வை சுவைமாறும் நேரம் பூக்கள் இதமாக மோதும்

பண்பட்ட சொற்களால் பண்ணெழுதினார் சுப்பு. ராஜ்யம் இல்லாத ராஜாக்கள் படப் பாடல் அவருடைய பண்ணெழுதும் கவித்திறனுக்குச் சத்தியச் சான்றாக என்றும் திகழும்.