தேன் துளிகள் 2


                                                    புலன் மயக்கம்


21

ஆயிரமாயிரம் பாடல்களின் தன்னை மட்டும் தனிக்கச் செய்கிற வித்தையை ஒரு பாடலுக்குள் நேர்த்துவது எது..?அதன் இசையா வரிகளா பாடிய குரல்களா இல்லை கதையின் சூழலா என்பது விடையற்ற கேள்வி.இல்லையில்லை இந்தக் கேள்விக்கு இவை எல்லாமே விடைகள்
*

22
பாடுதல் வானோர் வரம். இந்த ஜென்மத்துக்கு மேலெழுதப்பட்ட பூர்வபல ஜென்மங்களின் புண்ணிய மொத்தம். ஜாதகத்தில் ஒரு கட்டத்தில் குயில் முகம் தென்படுகிற விசேஷம். கூட்டத்தில் தனிக்கச் செய்யும் வித்தகம். என்னதான் பிறந்ததிலிருந்து சங்கீதம் கற்றுக் கொண்டாலும், குரல் கூடுதல் வைரம்.
நல்வரம்
*

23
குரல் என்பது நுட்பம். கையாளுகையில் தோற்றுவிக்கிற வித்தியாசம். சுருக்கொப்பம் என்று சொல்லுவோமே “counter sign”  எல்லா நோட்டிலும் வாத்தியார் போடுவாரே, வங்கி சலானில் காசாளர் இடுவாரே, அதுதான் counter sign. அது போலத்தான் ஒவ்வொரு பாடகர்களும் பாடுகிற பாடல்களைத் தனதாக்கிக் கொள்ளுகிற சிற்சில நுணுக்கமான இடங்கள். அந்த இடங்களை அவதானிப்பது, பிறகு அதை அப்படியே பிரதிபலிப்பது சாத்தியப்படுவது
*

24
ஒரு பாடலை நூறாயிரம் முறைகள் தொடர்ந்து ஒலிக்கச் செய்து அதனோடு பாடுவதன் மூலமாக, நம்மால் அதில் தேர்ச்சி கொள்ள முடியும். இன்னும் உசித உபாயங்கள் சொல்வதானால், ஒரு பாடலை முழுவதுமாகப் பயிலவேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை. என் வழக்கப் பழக்கப்படி, ஒரு பாடலை மூன்று துண்டங்களாக நம்மால் உடைக்க முடியும். ஒன்று அதன் முகம், அதாவது அதன் பல்லவி. இரண்டு அதன் புறம், அதாவது அதன் கனவரிகள். மூன்று, அதன் உள்ளார்ந்த மென்வரிகள்.
*

25

எந்த வகைமைக்குள்ளும் சிக்காத குரல் அதன் வித்தியாசமே அதைப் போற்றுவதற்கான காரணமாகவும் அமையக் கூடும். புகழ்பெறுதல் வகைமையடங்கல் பற்றியெல்லாம் எந்தக் கவலையும் இல்லாமல், தன் யவ்வனம் குறித்த ஒரு கொடுங்கோலனின் பிடிவாதத்தைப் போலவே ஒரு பாடலை இன்னார் பாடவேண்டும் என ஒரு இசையமைப்பாளரின் தீர்மானம் என்பதும் நிகழ்கிறது
*

26

அறிந்தே உடன்படுகையில் அறியாமையின் இன்னொரு பெயர் அன்பு என்றாகிறது.

27

எந்தப் பாடல் உங்களைக் கதறி அழ வைக்கும்?
எந்தப் பாடல் உங்களை கரைந்து போக வைக்கும்?

இவை வெறும் கேள்விகள் அல்ல.இவை மெல்ல மெல்ல இரண்டு பேர்களை இணக்கமாக்கும் நெருக்கமாக்கும் அன்னியத்தை உடைத்துத் தூளாக்குகிற அத்யந்தத்தின் உளிகள் என்று தான் சொல்லத் தோன்றுகிறது.வெறும் பாடல் என்று எந்தப் பாடலையும் புறந்தள்ளி விட முடியாது.பாடல்கள் ஆயிரம் காலத்துப் பயிர்கள் என்பதில் எள்ளின் உள்ளளவும் சந்தேகம் இல்லை.பாடல்கள் வெறும் பாடல்கள் அல்லவே அவை ஒவ்வொரு காலத்தைப் பற்றிய வாழ்வானுபவங்களாய் அடுத்த காலத்தின் மேலெழுதப்படுகிற ஆன்ம சித்திரங்கள்

*

28
இன்னும் அவரவர் ஞாபகவனங்களுக்குள் அலைந்து கொண்டிருக்கிற எத்தனை பாடல் ப்ரியங்களின் தோரணமாலை இந்த வாழ்தல் என்பது?இசை எனும் ஒரு சொல் லட்சோப லட்சம் ஆன்மாக்க்ளைக் கழுவ வல்லது
*

29
நடிக லட்சணம் என்ன..?

ஒரு கதாபாத்திரத்தின் மெய்மைத் தன்மைக்குள் தான் புகுந்து கொள்வது.ஒரு பாத்திரத்தில் நீர்மத்தை ஊற்றுகிறாற் போலத் தன்னால் அதனை நிரப்புவது.அதில் தன் சுயத்தை தேவையற்ற ஒரு துளியைக் கூடக் கலக்காமல் பார்த்துக் கொள்வது ஒரு தகுதி என்றால் அந்தப் பாத்திரத்தின் குணாம்சங்களை ஒரு சிட்டிகை கூட அதிகரித்து விடாமல் இயல்பின் அதே நளின எல்லைகளுக்குள் நின்றுகொள்வது இன்னொரு தேவை.மேலதிகமாகத் தன்னைப் பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு அதுவரைக்குமான தன் பிம்பத் தொடர்ச்சியை ரத்து செய்து தற்போதைய ஒரே ஒரு ஒற்றையாக ஏற்றிருக்கிற கதாபாத்திரத்தை மட்டும் அவர்களின் நம்பகத்தினுள் செல்வாக்குப் பெறச் செய்வது நடிகமேதமை.இவை எல்லாவற்றையும் சிறப்பாகச் செய்பவர்கள் புகழ் பெற்றார்கள்.இவற்றைத் தாண்டிய இன்னொரு அபூர்வ ஞான முகடு உண்டு.அது தான் அறியாமையை நடிப்பது.
எந்த அறிதலையும் கற்றுக் கொண்டு போலச் செய்வது துருத்திவிடாமல் நடிப்பதென்பது தொழில்முறை நடிகர்களுக்குக் கலையாய்க் கைவரும்.சிக்கல் எதுவெனில் அறியாமையை IGNORANCE மற்றும் வெறுமையை EMPTYNESS காண்பவர் நம்பும் அளவுக்கு பரிமளிப்பது தான்.இதனை ஒரு சவால் போலச் செய்பவர்கள் ஓவர் ஆக்டிங் எனப் படுகிற மிகைபரிமாணத்தின் கிணற்றினுள் விழுந்து விடுகிறார்கள்.அப்படிக் கடக்க வேண்டிய சிற்றாறைத் தவிர்த்துக் கேணியுள் அலைந்தவர்கள் அனேகர்.வெகு சிலரே இந்த அபூர்வமான சின்னஞ்சிறிய முகட்டைத் தன்வயப் படுத்தி வெற்றியடைகிறார்கள்

*
30
தவிர்க்க முடியாத ஆளுமைகள் மறக்க முடியாமலும் பேருருக் கொள்வதென்பது மனித வாழ்வின் சாகசம்