தேன் துளிகள் 1

                                                                 புலன் மயக்கம்


1.
சூஃபி இசையின் தனித்துவம் ஆன்மாவோடு தொடர்புடையது.மௌனம் தியானம் ஞானம் என்ற முப்பிரிகையில் மௌனத்தின் தியானித்தலை இசைவழி சாத்தியமாக்குவது  கடின முயல்வுகளைக் கோரும் அரிய தவம். அதற்கென்றே தன்னைத் தயாரித்து ஒப்புக்கொடுத்தாலொழிய அசாத்தியமும் கூட.
*
2
 இசையும் குரலும் பிணைவதன் உள்ளர்த்தம் என்னவாயிருக்கும்..?இசை என்பதை தானொரு முறை நிகழ்த்தும் போது தன்னையும் அதனோடு கலந்து நிகழ்த்திக் கொள்பவனே பாடகன்.ஆக ஒரு பாடலை எப்போது நிகழ்த்துகிறானோ அது அவனைப் படர்க்கையில் நிகழ்த்தித் தருகிறது.இந்தக் கண்ணாடி வித்தையில் குரலால் மட்டும் செய்யக் கூடியதென்று சில மாயங்கள் உண்டு.இசையென்பது முடிவுற்ற நிகழ்தலாக மீண்டுமீண்டும் நிகழவல்லது.அதை முடிவுறாத் தன்மை கொண்டு அணுகுவதே குரலின் பணி.கலைஞன் தன் குரலால் முன்னர் சென்று தொடாத உயரத்தையோ அல்லது தொட்டறியாத ஆழத்தையோ தன் குரல் வழி நிரடும் போது முடிவுறாத் தன்மையின் அதிசயமாக இசை விரிவடைகிறது.கேட்கிற ரசிகனை உள்ளிழுக்கையில் அப்படியான அதிசயத்தின் சதுரபரிமாணத்தின் மூன்றாம் புள்ளியாக ரசிகனும் நான்காவது புள்ளியாகக் காலமும் மாற்றமடைவதோடு எடையற்ற நகர்தலாகப் பெருவெளியில் முடிவுறாப் பயணத்தை நிகழ்த்தத் தொடங்குகிறது
*
3
மிகச்சிறப்பான ஒரு பாடலின் மலர்தல் ஒச்சமற்றதாக நிகழ்ந்தேறும்.அதாவது எந்த அளவுக்கு அந்தப் பாடல் இருக்கிறதோ அதுவே போதுமான முழுமையாக மனதில் நிரம்பும்.அப்படி நிரம்புகிற பாடல் அனேகமாக அதற்கேற்ப சாதாரணங்களைக் கொண்ட தோரணமாய் மலரக் கூடுமே ஒழிய போதாமையோ இல்லாமையோ கொஞ்சமும் தோன்றாது.அதே பாடலைப் அதிகதிகம் கேட்டுக் கொண்டே இருக்கையில் முன்பறியாத இயல்பான அரிய முகடுகளை ஒவ்வொன்றாய் அவிழ்க்கும்.ரகசியத்தின் தொடர்கதை எல்லா அத்தியாயங்களிலும் புதிர்த்தன்மை குன்றாமல் இருக்குமல்லவா அது போலத் தான் அந்தப் பாடலும் ஆகும்.
*
4
என் மொழியினுள்ளே ஒரு திருத்தலமாய் பாரதியின் பாடல்கள்.தாயொருத்தி மருத்துவளாகவும் அமையப்பெறல் எத்துணை கொடுப்பினை..?அப்படி அமைந்தவை தான் பாரதியின் பாடல்கள்.செல்லங்கொஞ்சிக் கண்டிப்பதற்கு பாரதியை நிகர் செய்த இன்னொரு கவி இல்லவே இல்லை.அப்படி இருந்தால் அவர்கள் யாவரும் பாரதியின் மொழிவழிப் பிள்ளை
*

5

நான் எப்போதெல்லாம் மனிதனாக இல்லையோ அப்போதெல்லாம் இசையை நாடுவேன்.நான் எப்போதெல்லாம் என்னை விட்டு வெளியேற உத்தேசிக்கிறேனோ அப்போதெல்லாம் இசைவழி ஊடாடுவேன்.நான் என்ற ஒருவன் இல்லாமற் போகையில் என்னைத் தேடாதீர்கள்.கிட்டாப் பொழுதொன்றின் தொடக்கத்தில் ஏதேனுமொரு இசைக்குறிப்பாக என்னை மாற்றிக் கொள்வேன்.நிரந்தரித்தலுக்கான சூட்சுமம் இசை என்பதை ஒருவருக்கும் சொல்லித் தராதீர்கள்.இசை என்பது அபாயத்தின் கடவுள்.
*
6
பாடலை உருவாக்குவதென்பது ஏன் சவாலாகிறது பிறர் முழுவதுமாய்க் கேட்கவுள்ள பாடலொன்றை துண்டு துக்கடாக்களாக தன் மனதின் அடியிலிருந்து சிந்தித்து அதை வெளிக்கொணர்வதென்ன சாதாரணமா..?இன்னது இன்னதாக வரும் என்று தெரிந்தாலே சிரமம்.எதுவும்தெரியாத இருளைப் பெயர்த்தெடுப்பதென்ன சுலபமா..?சூலுள் குழந்தையை வார்த்துத் தருகிற சிற்பகாலம் என்றல்லவா கர்ப்ப காலத்தைக் கொள்ள வேண்டும்..?இசையை கடவுளின் அருகமை எனச் சொன்னால் தகுமன்றோ ?
*
7
உண்மையை நிரூபிக்க வேண்டியதில்லை, பொய்யை நிரூபிக்க முடியாது, பொய்யோ உண்மையோ நிரூபிக்க முடியுமா என முயலுவதன் பேர் சந்தேகம், உண்மையோ பொய்யோ நிரூபித்த உடன் சந்தேகம் செத்துப் போகும். சில விஷயங்களை யாருமே நிரூபிக்க மெனக்கெடாமல் அனுபவிக்க இயலுகிறது. சூரியோதயம், மழை, ஞாயிற்றுக் கிழமை, தெறித்துப் பிச்சுக் கத்திக் கதறித் தன்னைத் துரத்தி  முந்திக் கொண்டோடத் துடிக்கும் ரயில், எதிர்பாராமல் கோயில் வாசலில் கிடைத்துவிடுகிற நெய்யொழுகும் பிரசாதப் பொங்கல், தனியாக சிக்னலில் நிற்கும்போது பக்கத்தில் வந்து நிற்கும் ஒரு “ஹாய் ஸ்கூட்டி”, கைதவறிப் பந்தியில் வைக்கப்பட்டுவிடுகிற கூடுதல் ஸ்வீட் தொடங்கி வாய்தவறிச் சிந்தப் படும் முத்தத்தின் எதிர்பாராத வருகை உட்பட இந்த வாழ்க்கை நினைக்காமல் கிடைப்பவற்றுக்கு என ஒரு தனி ஃபோல்டர் போட்டு வைத்திருக்கிறது. 
*
8
நன்றாகப் பாடுவது என்பது தன் குரலின் சுயத்தை உருவாக்குவதா அல்லது வேறொருவரைப் பிரதிபலிப்பதா? முன்னது சரி, பின்னது பிழை என்றெல்லாம் சொல்லவே முடியாத இரண்டு சரிகள். ஏனென்றால் பாடுவதென்பது பிறவி வரம் மற்றும் வென்றெடுக்கும் ஞானம். இந்த இரண்டுக்குமிடையிலான முரண் இதன் கூடுதல் அழகு. பாடப் பாட ராகம் என்பது சரிதான், ஆனால் இனிமை? எஸ்பிபி தன் குரலில் “பாட்டு” என்று ஒரு தடவை சொன்னால் அது பாட்டை விடச் சிறப்பல்லவா? விடாமல் பழகிப் பாடல்களை வெற்றி கொண்டவர்களும் பலர் உளர். இதில் அவரவர் சமர்த்து, அவரவர் லாவகம்.
*
9
குரலைப் பதிந்து நிரந்தரமாக்கியது மானுட விஸ்தரிப்புகளில் மகத்தானது.இன்றைக்கு நாம் சென்ற நூற்றாண்டின் பலரது குரல்களைக் கேட்க முடியும்.ஆன்மாவுக்கு அழிவில்லை.அவர்களது சென்ற பிறவியின் மிச்சங்களாக குரலும் காணொளியில் ததும்பும் உருவங்களும் இருப்பதாகச் சொன்னால் யாராவது ஆட்சேபிப்பார்களா என்ன
*
10
குரல் என்பது ஒரு பகுதி உயிர். பேச்சு போனால் ஒரு பாதி மூச்சு போனதாக அர்த்தம். குரலென்பது உடல் தருகிற சத்தம் அல்ல, உண்மையில் அது மனம் இடுகிற முத்தம். ஒரு மனிதன் தான் உயிரோடு இருப்பதைத் தனக்குத் தானே சொல்லிக் கொள்வதற்காவது ஒரு மொழியும், குரலும், செவியும் அவசியம்.

11

ஏன் குரல்களைப் பற்றிப் பேச வேண்டும்? இசை என்பது உண்மையில் என்ன? என்னவாக நிகழ்கிறது? சப்தங்களும், நிசப்தங்களும், காற்றும், விரல்களும், கரங்களும், உதடுகளும் ஏன் கால்களும் கூட பயிற்சிக்குப் பின்னதான இசையை உருவாக்குகின்றன. இசை எங்கிருக்கிறது? அறுதியிடல் சாத்தியமா இசையைப் பொறுத்தவரை? இசை என்பது மனிதனுக்கு உணரவாய்க்கிற கடவுளின் ஆன்மா எனலாம்தானே. இசைக்கும் மனிதனுக்கும் ஒரு மூங்கிற்பாலம் போலத்தானே குரல் திகழ்கிறது? எரியத்தக்க எண்ணெயும் திரியும் விளக்கென்றாகுகையில் க்ஷணநேரம் தன்னை எரித்து அதை ஏற்றித் தருகிற ஒரு தூண்டுதல் போலத்தானே ஒவ்வொரு பாடலையும் அதனைப் பாடும் குரல்கள் ஏற்றி வைக்கின்றன. பெய்யெனப் பெய்தாலும் அத்தகைய மழையின் செய்ந்நன்றி அத்தனையும் பெய்யெனப் பகிர்ந்த அந்த உதடுகளுக்குத்தானே, அதன் பிந்தைய மனத்துக்குத்தானே சென்று சேர்வது தகும். போலவே, தன்னை ஒப்புக் கொடுக்கிற ஒவ்வொரு குரலும் பாடல்களின் சரித்திரத்தில் போற்றத்தக்க பெருமிதம் தானே?ஒரு ஞாபகப் பறவையின் நிரந்தர அலைதல் போன்றதுதான் ஒவ்வொரு குரலின் நீட்சியும்
*

12

 மழை என்பதன் பொதுத் தன்மையிலிருந்து விலகி மழை தன் தனித்த உலகத்தினுள் எங்கே எப்போது ஒருவரை அழைத்துச் செல்லும் என்பது யாராலும் கணிக்க முடியாத சூட்சுமம்.மழை தன்னை உற்றுக் கவனிக்கிறவர்களுக்கு ஒன்றாகவும் மற்றவர்களுக்கெல்லாம் சாதாரணமாகவும் விளங்குகிறது.மழை பிடிக்கும் என்பது வெறும் வாக்கியம் அல்ல.அது ஒரு புதிய வழிபாட்டைப் பின்பற்றத் தொடங்குவதைப் போன்றது.
           மழையைப் படமாக்குவதில் தான் எத்தனை எத்தனை வித்யாசங்கள்..?ஒரு போதும் ஒத்திகை பார்க்காத பெருங்கலைஞனின் நடனம் தானே மழை..?

*

13

கடவுளின் படர்க்கை இருக்கை ஒன்று இருக்குமானால் அதில் இசை சார்ந்த ஒருவர்தான் அமர முடியும். அதுதான் அந்தக் கடவுளுக்கும் அடுக்கும்

*

14

கலைக்கும் மனிதனுக்குமான பந்தம் அபாரமானது. தொழிலிலோ, கல்வியிலோ, திறன் சார்ந்த பிறவற்றிலோ, தன்னால் இயலாத எது குறித்தும் மனிதன் ஒவ்வாமை கொள்ளுகிறான். அது குறித்த நடுக்கம் அவனுக்குள் ஒரு நிரந்தர அச்சத்தை ஏற்படுத்துகிறது. முயன்று பார்த்துக் கைவிடுகிற போதெல்லாம் தனக்குள் இயலாமை, பொறாமை, வெறுப்பு, விரக்தி, இன்ன பிற இன்ன பிறவற்றுடன் கூடிய சுய இரக்கத்தின் பால் விழுகிறான். கலையில் மாத்திரம் தன்னிலிருந்து தனித்துத் தன்னால் இயலாதவற்றைச் செய்கிற யாரையும் தன் உயிருக்கு அருகே இருத்தி நேசிக்கிறான்
*

15

காலத்தின் அபத்தமே அடுத்த காலத்தில் அற்புதமாக மாறுவது அதன் வினோதம்
*

16

வரிசையிலிருந்து தப்புவது கலைஞனின் முதல் அடையாளம். மேடையும் கூட்டமுமாய் சமான சமத்தில் உய்க்கும் இவ்வுலகம். கலை என்பது சர்வைவல் ஆஃப் த ஃபிட்டெஸ்ட். தனித்தலும், உயர்தலும், அதை நிரந்தரித்தலும் புகழ் என்னும் பெரும்பசி மிருகத்தின் எப்போதும் புசித்துக் கொண்டே இருக்கக் கூடிய தளராத நாவு போன்றவை
*

17

ஒரு வகையில் கோலம் அழிவது என்பது எந்த ஒரு நடிகனுக்கும் வரமும் சாபமும் இரண்டும் ஆகும். ஒரு கதாபாத்திரத்திலிருந்து அவன் திரும்புவதற்கு ஒருமித்த ஒரு கோலம் எப்போதும் அவசியம். அப்படிப் பார்க்கையில் காணவாய்க்கிற அத்தனை வெவ்வேறுகளும் ஒரே என்கிற முரணையும் சதா நிரடிக் கொண்டே இருக்க வேண்டும்.
*

18

காலம் கைவிடும் வரை பாடல்களுக்கு ஒரு தன்மை இருக்கும் அல்லவா? அந்தத் தன்மையை வழக்கமாகப் பாடுகிற அதிகம் புழங்குகிற பாடகரின் பாணி என்பதாகவும் உணர முடியும். பாடலின் தன்மை என்பது பொதுமை. அதுவே பாணியாக மாறுகையில் தனித்துவம். அதை இன்னொருவர் செய்து பார்க்கையில் அதன் பெயர் போலி செய்தல். அப்படி இல்லாத அபூர்வங்கள் பெருமலையின் மேனி பட்டுத் திரும்பி வருகிற எதிரொலிக்கு ஒப்பான வினோதங்கள்

19

ஒரு பாடல் எப்போது மிருதுவான பாடல் ஆகிறது தெரியுமா? அது சன்னதத்தில் இயங்கும்போது, அது நனவிலியில் எங்கோ ஆழத்தில் ஒலிக்கும்போது, அது ஞாபகத்தில் ஆழ்ந்த உறக்கமாகவும் உறக்கத்தின் நடுவே சிறுபொறி ஞாபகமாகவும் எஞ்சும்போது. பலரும் எண்ணுகிறாற்போல் சோகப் பாடல்கள் அத்தனையும் மெலடிப் பாடல்கள் அல்ல, மெலடி என்பது எப்போதும் சோகப் பாடல்கள் அல்ல. சோகமென்பது மெலடியின் ஒரு விள்ளல், மெலடி சோகத்தின் ஒரு முகம். இரண்டுக்குமே மற்ற ஒன்றைத் தாண்டிய பெரும் நீட்சி நிலம் உண்டு. தாழிடாமல் சார்த்தப்படுகிற கதவுகளைப் போல மிருதுவான பாடல்கள் திகழ்கின்றன. அன்பின் நிசப்தத்தில் அவை திறந்து மூடப்படுகின்றன. கண் உறுத்தாத வெளிச்சத்தை அவை நிர்ப்பந்திக்கின்றன. உறக்கம் கலைத்துவிடாத பூனைப் பாத நடைகளை அவை அனுமதிக்கின்றன.
*

20

ஒருவரது உறக்கத்தை அவரைச் சார்ந்தவர்களால் மாத்திரமே பராமரிக்க முடியும். உறக்கங்கள் நம் உலகம் நமக்கு அனுமதிக்கிற ஒரு பண்டம். பாடல் எனும் விளக்கைத் தேய்த்ததும் உறக்கன் எனும் பூதம் நம்மை வந்து தழுவிக் கொள்ளுகிறது. தாலாட்டு உள்ளிட்டப் பாடல் வகைகள் மனிதனைத் தளர்த்துபவை. இறுக்கத்தை நெகிழ்த்துபவை. மறைமுகமாக மென்மை என்பது அன்பின் பிரயோகமாக மாறுகிறது. வருடும் விரல்கள் கடவுளாய்த் தொடவல்லவை. அல்லது கரங்களின் வருடல்கள் கடவுளரின் கருணைப் பார்வை.
*