நாகேஷ்

சலனக் கடல் 
   நாகேஷ்

நாகேஷை யாருக்குத்தான் பிடிக்காது?முதன் முதலாக நாகேஷ் நடிப்பை எந்த படத்தில் உற்றுப் பார்த்தேன் என நிஜமாகவே  நினைவில் இல்லை ஏதோ ஒரு எம்ஜிஆர் அல்லது சிவாஜி படம் ஆனால் நிச்சயமாக அது நாகேஷ் படம் இந்திய அளவில் மட்டுமல்ல உலக அளவில் தன் சுயத்திலிருந்து கிளைத்துக் கொண்டே இருந்த சிறப்பான நடிகர் நாகேஷ் நடிக லட்சணங்கள் அனைத்தும் பொருந்தியவர். முகத்தை விற்பனை செய்த பலருக்கு மத்தியில் மனத்தை குணாம்சங்களை வித்தியாசப்படுத்தி காட்டிய முகபாவ வள்ளல் நாகேஷ். தனக்குக் கிடைத்த பாத்திரங்கள் பலவற்றின் மேல் தன்னைப் பூசியும் பொதிந்தும் கால நதியில் வேடப் படகுகளில் வலம் வந்தவர். உடன் நடிக்கும் எத்தனை பேரையும்  தான் ஒரு சட்டகத்துக்குள் நின்று நடந்து பேசி மௌனத் தோன்றல் மூலமாகக்கூடக் காணாமலடித்துத் தனது ஆளுமையைக் கட்டுமானம் செய்துவிடும் சாதுரியம் மிகுந்தவர் நாகேஷ்.

குரல் முகபாவம் உடல் மொழி இவற்றை மொத்தமாக திரளச் செய்வதன் வழியே தான் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்தை பேருருக் கொள்ளச் செய்தார்.அவர் தோற்றுவித்த  நிழல் பிம்பங்கள் அட்சரம் பிசகாமல் நிஜங்களை நிகர் செய்தன. தன்னை இயக்கிய இயக்குனர்களுடன் எப்போதும் ஒற்றைக்கு ஒற்றை நின்று காண்பித்தார் நாகேஷ். உலக அளவில் கபடம் வினயம் ஏழ்மை தோல்வி அதமம் எனப்பல வினோதங்களை அவற்றுக்கான துல்லியம் தவறாமல்  தோற்றுவிக்கத் தெரிந்த வெகுசில நடிகர்களுள் நாகேஷ் ஒருவர்.

எண்பதுகளுக்குப் பின்னால் தன் முந்தைய பிம்பநிழலைத் தானே அழிக்கலானார். தான் கட்டி எழுப்பிய உருவச்சுவரைத் தன் புதிய வேடங்களை வெடிகளாக்கித் தகர்த்தார்.தன் சமகால நட்சத்திரங்கள் யாரை விடவும் அடுத்த காலத்திற்குள் தன்னைக் கச்சிதமாக உட்புகுத்திக் கொண்ட சமர்த்தர் நாகேஷ். வாழ்வின் இறுதி வரை தனிவலம் வந்த கருடப் பறவை நாகேஷ். அபூர்வ சகோதரர்கள் மைக்கேல் மதன காமராஜன் ராஜா கைய வச்சா அவ்வை சண்முகி போன்ற படங்களில் தோற்றவகைமைகளை விதவிநோதத் தோற்றங்களை சின்னஞ்சிறு நுட்பங்களையெலாம் நாகேஷால் உண்டாக்க முடிந்தது. நாகேஷ் நிஜநாயகன். ஒரு காகிதத்தில் நாகேஷ் என்று எழுதிச் சட்டைப் பைக்குள் மடித்து வைத்தால்  அதனைத் திறந்து பார்க்கும் போது அவர் பெயரெழுதிய எழுத்துக்கள் கூட எதிர்பாராத பரிமளமொன்றை நடித்து வைக்கும். நாகேஷ் நடிப்பின் கரைகளைத் தன் வசம் செய்து பெருக்கெடுத்தோடிய சலனக் கடல்.

 

வாழ்க நாகேஷ் புகழ்