பன்புரோட்டாவும் தயிர்சாதமும்

பன்புரோட்டாவும் தயிர்சாதமும்


கதா நாயகனுடைய அம்மாவுக்கு ஆப்பரேஷன். இதுதான் சிச்சுவேஷன். இந்த டென்ஷனான நேரத்தில் நகத்தைக் கடித்துக்கொள்ளலாம். யார்? கதாநாயகன். அதுவரை விடாமல் அவரைக் காதலித்துக்கொண்டிருக்கும் அவருடைய காதலி அதாவது ஹீரோயின், அவருக்கு ஆறுதல் சொல்லலாம். எப்படிச் சொல்லலாம்? ஒரு மலைவாசஸ்தல அவுட் டோர் லொகேஷனில், நாலைந்து உடை மாற்றத்துடன், அதிரிபுதிரியாக ஆடிப்பாடும் ஒரு டூயட். இப்படி ஒரு பாடலை நிசமாகவே ‘அதனாலென்ன’ என்று தெலுங்கில் யோசித்தார்கள். விஷயம் அதி காதி. அதைத் தமிழில் டப் செய்தார்கள். இங்கேயும் டப்பிங் படங்களைப் பார்ப்பதற்கென்றே தனிப் பெருங்கூட்டம் இருந்ததுதான் விஷயம்.

1980 முதல் 2000 வரையிலான இந்திய சினிமா வணிகத்திலும் வசீகரிப்பதிலும் உச்சத்தை அடைந்து கொண்டிருந்தது. பன்மொழிக் கலைஞர்களும் கதைகளுமாக மொழியும் நிலமும் ஒத்திசைந்து பல படங்கள் உருவாக்கப் பட்டன. அதிலும் ஆந்திர மாநிலத்துக்கும் நமக்கும் தமிழ் தெலுங்கு ஆகிய இரு மொழிகளுக்கும் இடையிலான பந்தம் பன்முகம் கொண்டது. சினிமா மற்ற எதைவிடவும் எளிய இணைப்பாக எப்போதும் விளங்குவது அதன் இயல்பு.

NANDAMURI TARAKA RAMA RAO (NTR) MOVIE BY DATE AND CATEGORY/GENRE - NTR- MOVIES LIST

இங்கே எப்படி எம்ஜி.ஆரோ அங்கே என்.டி.ஆர். புகழின் உச்சத்தில் இருந்தது அரசியலுக்கு வந்தது வெற்றி கண்டது என இருவருக்கும் பல ஒற்றுமைகள் உண்டு. எம்ஜி.ஆர் 3 படங்களை இயக்கி இருக்கிறார். எண்டி.ஆர் 16 படங்களை இயக்கியவர். அதிலும் விசித்திரமான ஒற்றுமைகள் உண்டு எம்ஜி.ஆர் உலகம் சுற்றும் வாலிபன் படத்தை எடுத்து முடித்து அதை ரிலீஸ் செய்வதற்குள் பல சிரமங்களை அடைந்ததெல்லாம் அறிவோமல்லவா.? என்.டி.ராமராவ் ஒரு சொந்தப் படம் எடுத்தார். ஸ்ரீமத் விராட் வீரபத்ரேந்திர ஸ்வாமி சரித்ரா என்பது அதன் பெயர். எடுத்து முடித்தது 1981 ஆமாண்டு. சென்சாருக்கும் அவருக்கும் முட்டிக் கொண்டது. சென்ஸார் போர்ட் ஆட்சேபித்த சில காட்சிகளை வெட்டிய பிறகு சான்றிதழ் தருவதாக சொல்ல அதை முற்றிலுமாக ஏற்க மறுத்தார் என்.டி.ஆர். விஷயத்தைக் கோர்ட்டுக்குக் கொண்டு சென்றார். அந்த வழக்கு அதற்கடுத்த 3 வருடங்கள் நடந்தது. மேற்படிப் படத்தை வேறு யாராவது தயாரித்திருந்தால் வட்டி கட்டியே செத்திருப்பார். அதன் தயாரிப்பாளரும் என்.டி.ராமராவ் தான். கடைசி வரை உறுதி காட்டினார். படம் தாமதமாக நவம்பர் 1984 ஆமாண்டு வெளியானது. இதை முடித்த பிறகு என்.டி.ஆர் நடிப்பிலேயே 15 படங்கள் வெளிவந்து விட்டன. எல்லா தாமதங்களையும் மறக்கடிக்கும் வண்ணம் அந்தப் படத்தின் வெற்றி அமைந்தது. பொதுவாகவே லேட்டானால் படம் விளங்காது என்று பலத்த சினிமா செண்டிமெண்ட் உண்டு. இங்கே அதெல்லாம் நடக்கவில்லை.தலைவரின் சம்பளம் போக அந்தப் படத்துக்கு ஆன செலவு 15 லட்ச ரூபாய். அந்தக் காலத்தில் அது பெரிய அமவுண்ட். எத்தனை வசூல் செய்திருக்கும் என நினைக்கிறீர்கள்..? அம்பது லட்சம் ஒரு கோடி…? நோ பாபூ முதல் வாரத்தில் மட்டும் ஆறு கோடி ரூபாய் மடங்குகளில் யோசித்துக் கொள்ளலாம். உலக அளவில் பிராந்திய மொழிப் படங்களில் அன்றைய நாளின் அதிக வசூல் படமாயிற்று. நூறு பிரிண்டுகள் போடப்பட்டன.ஐதராபாத்தில் 300 நாட்கள் ஓடியதாகத் தகவல். என்.டி.ஆரை மக்கள் எந்த அளவு கொண்டாடினர் என்பதற்கு இதொரு ஸாம்பிள்.

சில வித்யாசங்களும் உண்டு. என்.டி.ஆர் பிற்காலத்தில் அரசியலில் தோல்வியையும் கண்டார். எம்ஜி.ஆர் புகழ் அதிகாரம் பதவி யாவற்றுடனும் இயற்கை எய்துகிற வாய்ப்புக் கிடைத்தது குறிப்பிடத் தக்கது.

அக்கட தேசம் என்றாலே அது அனாயாசம் தான்.

ரஜினி பெங்களூரிலிருந்து வந்து சேர்ந்த இடம் சென்னை. அவரைக் கண்டெடுத்தவர் கே.பாலச்சந்தர். அபூர்வ ராகங்கள் மூன்று முடிச்சு என அவரது ஆரம்பத்தை கட்டமைத்தவரும் அவரே. அதே போல 47 நாட்கள் என்ற படத்தில் சிரஞ்சீவியைத் தன் படமுகமாகத் தமிழிலும் தெலுங்கிலும் முன் நிறுத்தினார்.அது அவருக்கு 27 ஆவது படம். முன்பே தமிழில் விஜயகுமார் நடித்த வேடத்தை தெலுங்கில் காளி படத்தில் சிரஞ்சீவி ஏற்ற போது ரஜினியுடன் இணைந்திருந்தார். தமிழில் ஹிட் ஆன “வாழுமட்டும் நன்மைக்காக…” பாடல் நினைவிருக்கிறதா..?அது அங்கே சிரஞ்சீவி ரஜினியைச் செல்லம் பேணிப் பாடுவதாக “நியாயமைனா தாரி லோனா” என்ற பாடலாக இடம்பெற்றது.ராணுவ வீரன் படத்தில் கூட சிரஞ்சீவி வில்லன் மாதிரி நல்லவன் மாதிரி குழப்பி எடுக்கும் பாத்திரம் அதே ரஜினியுடன் நடித்தார். சிரஞ்சீவியின் உறவினர் தயாரிப்பில் மாப்பிள்ளை படத்தில் ஒரு ஃபைட் சீனுக்கு வந்து செல்வார். இங்கே ரஜினி என்றால் அங்கே சிரஞ்சீவி. ரஜினி படங்களுக்கு அங்கே தொடர்ந்த டப்பிங் மார்க்கெட் இருந்தாற் போலவே இங்கே சிரஞ்சீவிக்கு நிரந்தரமான டப்பிங் பட வருகை இருந்தது.
No description available.

ராஜ்குமார் நடித்த கன்னடப் படம் அனுராக அரலித்து தமிழில் பிவாசு எடுக்க ரஜினியின் சூப்பர் ஹிட் மன்னன் என்று வந்தது. அடுத்த வருடம் தெலுங்கில் சூடாக ரீமேக் செய்யப்பட்டது. அங்கே அதன் பெயர் “கரான மொகுடு” (புத்திசாலிக் கணவன்) 10 கோடி குவித்த முதல் படமானது. இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகரானார் சிரஞ்சீவி. வட நாட்டுப் பத்திரிகைகள் சிரஞ்சீவி படத்தை அட்டையில் இடம்பெறச் செய்து BIGGER THAN BACHCHAN (அமிதாப் பச்சனை விட பெரிய) என்ற புகழாரத்தை சூட்டினார்கள். தமிழ் கன்னடம் இந்தி என பல மொழிகளில் நடித்திருக்கிறார். இன்றளவும் சிதறாத ரசிகக் கூட்டம் சிரஞ்சீவியினுடையது. கைதி கேங் லீடர் மாண்புமிகு மேஸ்திரி எனப் பல படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டு நல்ல வசூலுடன் 50 தினங்களைக் கடந்து ஓடிக் கவனம் ஈர்த்தவை.வருடம் தப்பாமல் எண்பது தொண்ணூறுகளில் மூன்றுக்கு இரண்டு என்கிற விகிதாசாரத்தில் சிரஞ்சீவி படங்கள் தொடர்ந்து தமிழில் மொழிமாறி வெளியாகிக்கொண்டே இருந்தது . அவற்றில் பல படங்கள் முதலுக்கு மோசமளிக்காமலும் சில படங்கள் வாரிக் குவித்ததுமாக அவரது வரலாறு. சிரஞ்சீவி ஆச்சரிய மனிதர். நடனத்தில் அவரது ஈடுபாடு போற்றத்தக்கது. சண்டை மற்றும் நடனம ஆகிய இரண்டையும் எதிர்பார்த்து தமிழ் ரசிகன் அவருடைய டப்பிங் படங்களுக்குள் நம்பி நுழைந்தவன். பண்டிகைக் காலங்களில் தமிழ்ப் படங்களுக்கு ஒப்பாக ஹவுஸ்ஃபுல் காட்சிகளோடு மிரட்டிய அவரது டப்பிங் படங்கள் பல உண்டு.

தமிழில் இருந்து டாட்டா காட்டிவிட்டுச் சென்ற ஸ்ரீதேவி, ஹிந்தியிலிருந்து அவ்வப்போது தெலுங்குப் படங்களில் தோன்றிக்கொண்டுதான் இருந்தார். ‘Jegaloga veerudu athiloga sundhari’ திரைப்படத்தில் தேவலோக மங்கையாக சிரஞ்சீவியை மட்டுமல்ல ரசிகர்களையும் கிறங்கடித்தார். நாளை அந்தப் படம் வெளிவருகிறது என்றால், இன்றைக்குக் காலையில் நேரே தியேட்டருக்குச் சென்று ‘டிக்கட் ரிசர்வ் பண்ணுவிங்களா?’ எனக் கேட்ட அப்பாவி ரசிகலு நான். ‘ரெண்டு நாளைக்கு ஃபுல்’ என்றாரே பார்க்கலாம். ‘என்ன்ன?’ என வடிவேலு பாணியில் நம்பாமல் கேட்க, மதுரையில் இருக்கும் ஒரு பெண்கள் கல்லூரிப் பெயரைக் குறிப்பிட்டு, ‘நாளைக்கு மேட்னி ஷோவை மொத்தமா அந்தப் பொண்ணுங்க வாங்கிட்டுப் போயிட்டாங்க’ என்றார். அந்த ஷோவில் ஆண்களுக்கு டிக்கட் இல்லை ஸ்வாமி. வாழ்வில் முதல் முறையாக, சிரஞ்சீவி மீது பொறாமை வந்தது அப்போதுதான். அந்தப் படம் இளையராஜா இசையமைப்பில் இனிய பாடல்களையும் கொண்டிருந்த, ‘காதல் தேவதை’. இரண்டு வாரம் கழித்து அப்படி ஒன்றும் கூட்டம் இல்லை என்றாலும் ஆரம்பத்தில் நடந்தவை நடந்தவைதானே.Jagadeka Veerudu Athiloka Sundari (1990) - IMDb

சிரஞ்சீவி என்றால் வேகம். மேலும், பொதுவான ஆந்திரப் படவுலகம் மசாலா படங்களுக்குக் கொடுத்த முக்கியத்துவம், இவற்றின் உத்தம விளைச்சலாக சிரஞ்சீவி படங்கள் உருவாக்கப்பட்டன.அவரது சமகால நடிகர்களைப் பற்றிப் பேசும் முன்பாக விஜயசாந்தியைப் பற்றிச் சொல்லவேண்டும். கல்லுக்குள் ஈரம் நெஞ்சிலே துணிவிருந்தால் சந்தனமலர்கள் பட்டம் பறக்கட்டும் சிவப்பு மல்லி மஞ்சள் நிலா நிழல் தேடும் நெஞ்சங்கள் என இருபதுக்கும் மேற்பட்ட தமிழ்ப் படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு நன்றாக அறிமுகம் ஆனவரான விஜயசாந்தி நெற்றிக்கண் படத்தில் பெரிய ரஜினியின் மகளாக ஹீரோ ரஜினிக்குத் தங்கையாக நடித்திருந்தார். விஜயசாந்தி நடித்த தெலுங்குப் படம் ப்ரதிகடனா அவர் நடிப்பாற்றின் திசையை மாற்றிய படம். தமிழில் பூ ஒன்று புயலானது என்ற பேரில் டப்பி படமாக வெளியான இந்தப் படம் நூற்றைம்பது தினங்களைக் கடந்து வென்றது. விஜயசாந்தியின் புதிய தோற்றத்தை மிகவும் ரசித்தனர் தமிழ் மக்கள் . 1990 ஆமாண்டு வெளியான கர்த்தவ்யம் தமிழில் வைஜயந்தி ஐபி.எஸ் என்ற பேரில் வெளிவந்தது. மொழிமாற்றுப் படங்களின் வரலாற்றில் பல பெருங்கதவுகளைத் திறந்து வைத்தது. சிந்தாமல் சிதறாமல் அந்தப் படம் வாரிக் குவித்த வசூல் அதற்கப்பால் விஜயசாந்தி ஒப்பந்தமாகும் போதே தமிழ் டப்பிங் என்பதற்கான தொகையைத் தனியே கணக்கிட்டு அதிகரித்த பிறகே கையெழுத்திட்டார். தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நடிகைகள் பட்டியலில் விஜயசாந்திக்குத் தனி இடம் உண்டு. துணிச்சல் மிகுந்த தைரியசாலி தப்பைத் தட்டிக் கேட்பவர் சண்டைக் காட்சிகளில் எல்லோரையும் புரட்டி எடுப்பவர் என்று விஜயசாந்தியின் பிம்பக் கட்டமைத்தல் நேரடித் தமிழ்ப் படங்களில் கூட அப்படியான தொடர் சித்திரம் இல்லை என்ற அளவுக்குத் தனித்துத் தோன்றியது.இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட முதல் லேடி சூப்பர்ஸ்டார் என்றே சுட்டும் அளவுக்கு தொடர்ச்சியான மெகா ஹிட்டுகளின் மூலமாக, தமிழிலும் பெரும்பாலும் டப்பிங் செய்யப்பட்ட விஜயசாந்தியின் படங்கள் ‘சத்ரு’, ‘போலீஸ் லாக்கப்’, ‘முதலமைச்சர் ஜெயந்தி’, ‘ ஆகியவற்றின் மெகா மெகா வெற்றி நேரடித் தமிழ்ப்படங்கள் கூட தொட்டடைய முடியாதவை.

ஆங்கிலத்தில் பட்டை கிளப்பிய படம் கமிங் டு அமெரிக்கா அதைத் தமிழில் மை டியர் மார்த்தாண்டன் என்று எடுத்தார்கள்.  தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்க ராஜ விக்ரமார்க்கா என்று எடுத்தார்கள். அங்கே அந்தப் படம் மெகா ஹிட். விடுவார்களா நம்மாட்கள்..? சத்தியமா நான் காவல்காரன் என்ற பேரில் அதே படத்தை தமிழில் டப்பிங் செய்து வெளியிட்ட பிறகே சாந்தமானார்கள்.சிரஞ்சீவி விஜயசாந்தி நடித்த கேங் லீடர் பாட்டு டான்ஸ் சண்டை வசனம் என்று பல வித ஹைலைட்டுக்களுடன் தமிழில் டப் ஆகி வந்து நம்மூரில் 75 நாட்கள் ஓடியது. இந்தக் காலகட்டத்தில் சரத்குமார் அதிகப் படங்களில் வில்லன் மற்றும் கேரக்டர் ரோல்களில் தெலுங்கில் ஒளிர்ந்தார். பல படங்களுக்கு தெலுங்கில் சக்கரவர்த்தியும் தமிழைப் போலவே தெலுங்கிலும் இளையராஜாவும் இசை அமைத்தார்கள்.சிரஞ்சீவி விஜயசாந்தி இணைந்து கொண்டவீட்டி தொங்கா தமிழில் தங்கமலைத் திருடன் என்று வந்தது. விஜயசாந்தி நடிப்பில் கர்த்தவ்யம் வைஜயந்தி ஐபிஎஸ் என்றானது.வெங்கடேஷ் விஜயசாந்தி நடித்த சத்ரு அதே பேரில் வந்து தமிழில் பின்னி எடுத்தது. விஜயசாந்தி நடிப்பில் சூர்யா ஐஏ.எஸ். தமிழில் முதலமைச்சர் ஜெயந்தி என்று வந்தது.
توییتر \ Rajaparvai Ramu Bangalore در توییتر: «Ulaganayagan Kamal haasan in sippikkul muthu releasing paper ad https://t.co/ZLcwO411Xl»

கமல்ஹாஸன் நடித்த மரோசரித்ரா தெலுங்குப் படம் நேரடியாகத் தெலுங்கிலேயே வெளியாகி நம் மாநிலத்தில் 200 தினங்களைக் கடந்த வெற்றியைப் பெற்ற படம். அதே கதை ஏக் துஜே கே லியே என்று இந்தியில் மீவுரு செய்யப்பட்ட போதும் ஒரு வருடம் ஓடியது. கே.விஸ்வநாத் இயக்கத்தில் கமல் நடித்த சாகரசங்கமம் சலங்கை ஒலியாகவும் ஸ்வாதி முத்யம் சிப்பிக்குள் முத்தாகவும் தமிழ்நாட்டில் மின்னி மிளிர்ந்தவையே. விஜயசாந்தியுடன் ஜோடி சேர்ந்து கமல் நாயகனாகவும் வில்லனாகவும் இருவேடங்களில் நடித்த படம் இந்த்ருடு சந்த்ருடு தமிழ்ல் இந்திரன் சந்திரனாக வந்து வென்ற படம். கார்த்திக் நடிப்பில் அன்வேஷனா இங்கே பாடும் பறவைகளானது அபிநந்தனா காதல் கீதமென்று வந்தது கோபாலராவ் காரி அப்பாயி நம்மூரில் காதல் ஓய்வதில்லை என்றும் மஹாராயுடு இங்கே மிஸ்டர் மகாராணி எனவும் வந்த படங்கள்.

ராம்கோபால் வர்மா எடுத்த சிவா இங்கே உதயம் என்று வெளுத்துக் கட்டியது. இன்று இந்தியாவின் திரை முகம் வர்மா. அவருக்கென்று பெரும் ரசிகர் கூட்டம் இருக்கிறது. எந்த ஒரு மொழியில் எடுத்தாலும் பேதமின்றி எல்லா ஊர்களிலும் ஜெயிக்கிற குறைந்த உத்திரவாதம் அவருக்கு உள்ளது உண்மை. அக்கினேனி நாகேஸ்வர ராவின் மகனான நாகார்ஜூனா நடிப்பில் தெலுங்கில் மணிரத்னம் எடுத்த படம் கீதாஞ்சலி. இங்கே இதயத்தைத் திருடாதே என்று வந்த போது என்ன அதிகம் போனா முப்பது நாள் ஓடிடுமா என்று தான் பார்த்தார்கள். அது முன்னூறு தினங்களைத் தொட்டு ஓடிய படம். நாகார்ஜூனா ஒரு காய்ச்சல் மாதிரி தமிழ் ரசிகர்களுக்குள் வந்தார். ஐஸ்க்ரீம் மாதிரி மாறிப் போனார்.

The fault in Idhayathai Thirudathe's stars

நாகார்ஜூனா எண்டி.ஆர் மகன் ஹரிகிருஷ்ணாவோடு சேர்ந்து நடித்த படம் சத்ரிய தர்மம் அங்கே சீதாராமராஜூ 350 நாட்கள். கவுதமி நாகார்ஜூனா இணைந்த சைதன்யாவை இயக்கியவர் பிரதாப் போத்தன் தமிழில் மெட்ராஸ் டு கோவா என்று வந்தது. நாகர்ஜூனா தபு நடிப்பில் ஆவிடா மா ஆவிடே தமிழில் போலீஸ் கில்லாடி என்று உதித்தது. நாகார்ஜூனுடன் அமலா நடித்த ப்ரேமயுத்தம் இங்கே இதயகீதம் ஆனது.சவுந்தர்யாவோடு ஜோடி சேர்ந்து நாகார்ஜூனா அசத்திய ஆஸாத் தமிழில் குருஷேத்திரம் என வந்தது. நாகார்ஜூனாவுக்கு சிரஞ்சீவி அளவுக்கு தமிழில் ரசிகர்கள் இருந்தது நிதர்சனம் அவரது அனேக படங்கள் தமிழில் வந்த வண்ணம் இருந்தன கரான புல்லொடு கில்லாடி ராஜாவானார்.க்ரிமினல் என்ற படம் எல்லாமே என் காதலி எனும் பெயரில் வந்தது. நாகார்ஜூனாவோடு மனீஷா கொய்ராலா ஜோடி சேர்ந்த இந்தப் படத்தில் இரண்டு பாடல்கள் மெகா ஹிட் அடித்தன. “உயிரே உயிரே இது தெய்வீக சம்மந்தமோ” என்ற பாடல் அப்போது ஒலிக்காத நாளில்லை என்ற அளவுக்கு ஹிட் அடித்த பாட்டு.

1994 ஆமாண்டு வெளியான படம் ஹலோ ப்ரதர் அதே பேரில் தமிழிலும் வந்தது. வைரமுத்து எழுதிய இன்பராகங்கள் நெஞ்சுக்குள்ளே பொங்குகின்ற பொன்வேளை என்ற பாட்டும் கன்னிப்பொண்ணுடா என்ற பாடலும் தமிழ்ப் பாடல்களுக்கு நிகராக டாப் டென் வரிசைகளில் நெடுங்காலம் ஒலித்தன. நின்னே பெல்லாடுத்தான் அதாவது உன்னையே கல்யாணம் பண்ணிக்குறேன் என்ற பேரில் தபு நாகார்ஜூனா ஜோடி சேர்ந்து நடித்த படம் டப்பிங்கிலேயே ஐம்பது தினங்களைப் பல செண்டர்களில் கடந்து ஓடிய படம். அதன் கதையும் சந்தீப் சவுதா இசையில் கிரேக்க வீரனோ திசைமாறிப் போயாச்சு மனசு உள்படப் பாடல்கள் எல்லாமே தமிழிலும் ஹிட் ஆயின.அன்னமாச்சார்யா தமிழில் வெளிவந்த தெலுங்கு சூப்பர் டூப்பர் ஹிட் படமான அன்னமய்யா.

Rajasekhar, wife Jeevitha test positive for COVID-19 | Entertainment News,The Indian Express

நம்மூரிலிருந்து ப்ரிஸ்க்ரிப்ஷன் பேடோடு ஆந்திரம் புகுந்த டாக்டர். ராஜசேகர் மறுபடி தமிழில் டப் ஆகி வந்தார், வென்றார். ‘எவனா இருந்தா எனக்கென்ன?’ ‘அங்கே அங்குசம் நம்மூரில் இதுதாண்டா போலீஸ்’, ‘போங்கடா நீங்களும் உங்க அரசியலும்’, ‘மீசைக்காரன்’ என அண்ணன் தம்பிகளான சாய்குமார் சாய்ரவி இருவரது பின் குரல் உபயத்தில் தொடர்ந்து ஹிட்டு கொடுத்தார். ‘ஓம்’ என்ற பெயரில் கன்னட இளம் நடிகர் உபேந்திரா இயக்கத்தில் டாக்டர் நடித்த தெலுங்கு ‘ஓம்காரம்’ தமிழிலும் வசூல் வாரியது.டாக்டருக்குத் திடீரென்று லவ் மூடு ஸ்டார்ட் ஆகி, ‘யாருக்கு மாப்பிள்ளை யாரோ’ என்று ஒரு படம். படத்தில் ரம்யா கிருஷ்ணன், மதுபாலா என்று இரண்டு ஜோடி. இருவரோடு தனித்தனியாகவும் சேர்ந்தும் பாட்டு மேல பாட்டு வந்ததே ஒழிய ‘ஏன் டாக்டர் சண்ட போடலை’ என்று படம் பார்க்க வந்தவர்கள் தங்களுக்குள் சண்டை போட்டுக்கொண்டார்கள். ‘அன்னா’ என்று ஒரு படம் (அவ்விடத்தில் ரெண்டு சுழிதான், இங்கேதான் ‘அண்ணா’வானது). ஒரு வாரப் பத்திரிக்கை விமர்சனத்தில் ஃபைனல் பஞ்ச் இப்படி முடிந்தது
“அண்ணா
வேணாண்ணா
விட்ருங்கண்ணா”.

புராண, மாயாஜால, இதிகாச, தொன்ம, சரித்திரப் படங்கள் மற்ற எல்லா மொழிகளைப் போலவே எண்பது, தொண்ணூறுகளில் தமிழிலும் மிக மிகக் குறைந்துவிட்ட யதார்த்தத்துக்குப் பக்கவாட்டு யதார்த்தம் அக்கட தேசத்தினது. ‘நீங்க எடுங்க, நாங்க பாக்கறோம்’ என்று அதை மெய்ண்டெய்ன் செய்தார்கள். விதவிதமாய் ரீல் விடுவதற்கு எப்படி எப்படியெல்லாம் யோசிக்கலாம் என யோசிப்பதற்காகவே தனியாக ஆட்கள் இருந்தார்கள். ஆழ மூழ்கி முத்தெடுப்பதில் வல்லமை மிகுந்த படங்களாக அவை அமைந்தன. மேற்சொன்ன வகைமைகளில் தமிழில் நேரடிப் படங்களில் இல்லாமை போதாமைகளை இப்படியான டப்பிங் படங்கள் தீர்த்துவைத்தன. ‘அன்னமாச்சார்யா’ போன்ற தெலுங்குப் பாரம்பரிய ஆளுமைகளைப் பற்றிய படங்கள் கூட தமிழில் தைரிய டப்பிங் செய்யப்பட்டன. இன்றைய ‘பாகுபலி’ காலம்வரை வந்தவரைக்கும் லாபம் என்றுதான் இப்படியான டப்பிங் படங்களின் வணிகம் ஆட ஆரம்பிக்கப்பட்டாலும், ஆட்டப் பலன் அமைந்தால் அள்ளிக்கொட்டும் என்பதிலும் ஒரு மாறாத லயிப்பு இன்னும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

Aditya 369 - Wikipedia

தெலுங்குக்கும் தமிழுக்குமான அடிப்படை ஒற்றுமை தெலுங்குப் படங்கள் திரும்பத் திரும்பத் தயாரிக்க முனைகிற ரசிக மன விருப்பங்கள் தமிழுக்கு, தமிழ் நிலத்தின் பெருவாரி ரசிகர்களுக்குப் போதுமானதாக இருந்து வந்திருக்கிறது. தமிழ்த் திரையுலகம் பெரும் செல்வாக்குப் பெற்ற பழைய பாணிகளைக் கைவிட்டுக்கொண்டே அடுத்த பாணி திரைப்பட உருவாக்கங்களில் புகுந்துகொள்ளும் இயல்பு கொண்டது. மலையாளம் பாணி என்கிற ஒன்று இல்லாமல் பார்த்துக்கொள்ளும் தன்மை உடையது. கன்னடம் போதாமைகளின் ஊடாக அப்போது எழ முயற்சித்துக்கொண்டிருந்தது. இந்த இடத்தில் தெலுங்குத் திரையுலகின் வணிகம், திரைகளின் எண்ணிக்கை, மேலும் சினிமா மீதான அனைத்துத் தரப்பு மக்களின் ஏகப் பற்று ஆகியவற்றின் விளைவாக தென் இந்தியாவின் சூப்பர் பவர் சினிமா மாநிலமாக ஒருங்கிணைந்த ஆந்திரம் விளங்க முடிந்ததில் வியப்பில்லை.

Exclusive: Balakrishna's Political Drama on Cards

பாடல்கள், விதவிதமான அரங்குகள், வண்ணமிகு உடைகள், நடனங்கள், பாடலின் கூடுதல் கவன ஈர்ப்புகள் போன்ற உபகாரணிகளை டப்பிங் செய்யப்பட்ட, எல்லாப் படங்களிலுமே தமிழ் ரசிகன் கிடைக்கப்பெற்றான்.தமிழில் எழுபதுகளின் பிற்பகுதி தொடங்கி அதிகமும் கிராமம் நகரம் இரண்டும் சார்ந்த யதார்த்தக் கதைகளின் வருகை அதிகமாயிற்று. அடுத்த கால் நூற்றாண்டு காலமும் அவையே செல்வாக்குப் பெற்றிருந்தன. தமிழ் சினிமா வந்தடைந்த இடத்தின் தர்க்க நியாய சார்தல்கள் நிர்ப்பந்த நிபந்தனைகள் எதுவும் தெலுங்கு டப்பிங் படங்களில் இல்லை என்ற மாறுபாட்டை மனம் சார் ஆறுதலாக ஒரு வினோத
மாற்றாக ரசிகனுக்கு அளித்தது.

மொழிமாற்றப் படங்களுக்கான வசனங்கள் பெரும்பாலும் உதட்டசைவு, காட்சித்தன்மை ஆகியவற்றை அனுசரித்து ஒரு பாமர நெருக்கத்தை நிரந்தரமாகப் பராமரித்துத் தந்ததைக் குறிப்பிடவேண்டும். எதுகை, மோனை, ஏற்ற இறக்கம், ஆகியவற்றின் ஊடாக அர்த்தமற்ற, வெறுமனே இடத்தைக் கடக்க மாத்திரமே முன்வைக்கப்பட்ட பல மலின வசனங்கள் ஒரு படத்தின் வெற்றிக்கான காரணமாக உட்கிரகிக்கப்பட்டு, அடுத்தடுத்த பல படங்களில் தொடர் பயன்பாட்டில் வந்தன. ‘டப்பா டான்ஸ் ஆடிடும்’, ‘மீட்டரைக் கழட்டிடுவேன்’ போன்ற பல பிரயோகங்கள் சொல்ல முடியும். கதாபாத்திரத்தின் தனித்துவங்களை ஏற்றிச் சொல்லும் நிமித்தம் பல பிரத்தியேகச் சொல்லாடல்கள் உருவாக்கப்பட்டன. கொலை சம்பவத்தை நிறைவேற்றுவதை ‘ஸ்பாட் வைத்தல்’ எனக் குறிப்பிட்டது தமிழ் வாழ்வுகளிலும் ஒரு நித்தியப் பிரகடனமாக நிரந்தரமான பயன்பாட்டுக்கு வந்தது. சந்திரமோகன், சுபலேக சுதாகர், ராமிரெட்டி, கோட்டா சீனிவாசராவ், தணிகல பரணி, தெலுங்கு ஜெயலலிதா, ஒய்.விஜயா, பிரம்மானந்தம் எனப் பலரும் டப் செய்த படங்களில் தொடர் தோன்றல் மூலமாகத் தமிழ் நில ரசிகர்களின் மத்தியிலும் செல்வாக்குப் பெற்றார்கள்.

அரசியல் கதைகளைக் களனாகக் கொண்ட தெலுங்குப் படங்கள் பெரிதும் விரும்பப்பட்டன. பதவி வெறி, செல்வாக்கு, தேர்தல், குழிபறித்தல், ப்ரச்சாரம், அதிகாரம், கொலை, ஊழல், காவல் துறை, சட்டம் நீதி ஆகியவற்றை வில்லன் வளைப்பது, விதவிதமான பதவிகளில் விதவிதமான ஊர்களைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் வில்லனை ஒவ்வொரு படத்திலும் எதிர்த்துப் போராடும் நாயகன் அல்லது நாயகி, அல்லது அவர்களின் நண்பர்கள், மேலும் கொல்லப்படும் நேர்மையான பத்திரிக்கையாளர்கள், அதிகாரிகள், நீதி கேட்டுக் குரல் கொடுப்பவர்கள் எனப் பலரும் பல படங்களில் தொடர்ந்தார்கள்.PONGADA NEENGALUM UNGA ARASIYALUM / PURATCHI THEE ( 2 MOVIES IN 1 DVD ): Amazon.in: NAGARJUN, VIJAYASHANTHI, NARAYANAN, ASHOKAN: Movies & TV Shows

தமிழ்த் திரைப்பட உலகில் செல்வாக்குப் பெற்ற நடிகர்களான ராதாரவி, ஒய்.ஜி.மகேந்திரா, எஸ்.எஸ்.சந்திரன், நிழல்கள் ரவி, எம்.எஸ்.பாஸ்கர் எனப் பலரும் தெலுங்கு வில்லன்களுக்குக் குரலாய் ஒலித்தார்கள். இதில் தொடங்கிய சகவாச தோஷம், நானா படேகர், அமிதாப் பச்சன் வரை குரல்கள் ரவி தமிழ் பேசிக்கொண்டிருக்கிறார். டெல்லிகணேஷ் ஒரு படி மேலே சென்றவர். சிரஞ்சீவியின் பல படங்களில் அவருக்குத் தமிழில் டெல்லிஸார் தான் டப்பிங் தந்தவர்.யூட்யூபின் காலத்திலும் எதாவது ஒரு நினைவு உந்தித் தள்ளவே தேடிச் சென்று பழைய டப்பிங் படங்கள் எங்காவது அகப்படுமா என்று பார்க்கிறவர்களும் எத்தனையோ பேர் இருக்கிறார்கள்.
Baahubali 2: The Conclusion - Wikipedia

தொண்ணூறுகளின் இறுதி வரை இருந்தாற் போல் சினிமா இப்போது இல்லை இந்த இருபது ஆண்டுகளில் எல்லாமே மாற்றமடைந்திருப்பது போலத் தான் சினிமாவும். இரண்டாயிரத்துக்கு அப்புறம் பான் இண்டியா படங்கள் பெருகின. பாகுபலி என்ற படம் இந்தியாவின் திரைப்படங்களில் ஒன்றானது. இன்று கே.ஜி.எஃப் முதல் இரண்டு பாகங்கள் வாரிக் குவித்திருக்கும் பணம் யாரும் நினைத்தே பார்த்திராதது.பன்மொழி என்று யோசித்துப் படமெடுத்து அதனை வியாபாரம் செய்வதற்கென்றே பெரிய வணிக நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. பன்னாட்டு சினிமா வர்த்தகத்தின் ஒரு பகுதியாக எல்லா நிலத்தின் படங்களும் ஆகிவிட்டன. இப்போது சினிமா திரையரங்கம் சாடிலைட் டீவீ டீவீடி என்பதையெல்லாம் தாண்டி ஓடிடீ அதாவது நேரடியாக வீடுகளின் திரைகளுக்கே ரிலீஸ் ஆகத் தொடங்கி உள்ளது. இன்னும் வருங்காலத்தில் சினிமா தன் முகங்களை எப்படியெல்லாம் மாற்றிக் கொள்கிறதோ அப்படியே அதன் மனமுகமும் மாறக் கூடும் ரசிகன் ஞாபகத்தின் முன்பாகக் கையைக் கட்டிக் கொண்டு கனவில் வாழும் உயிரினம் அல்லவா அப்படிப் பார்த்தால் எத்தனை டெக்னாலஜி முன்னேற்றங்கள் வந்தாலும் தெலுங்கு டப்பிங் எனும் போதே அது அன்னியமும் சொந்தமும் நிரம்பித் தளும்புகிற தனித்த சுவையாகவே நிச்சயம் நீடிக்கும்,  பன்புரோட்டாவும் தயிர்சாதமும் ஒரே பஃபே விருந்தில் கிடைக்கிறதில்லையா அப்படித் தான்.