பாலகுமாரன் விருது 1

                                                        பா ல கு மா ர ன் விருது 1


பாலகுமாரன் இலக்கிய விருது வழங்கும் விழா இனிதே நிகழ்ந்தேறியது. விழாவில் கலந்து கொண்ட நண்பர்கள் நேரில் வரவியலாவிடினும் செல்பேசி அழைப்பிலும் குறுஞ்செய்தியிலும் வாழ்த்திய அன்பர்கள் யாவருக்கும் பேரன்பு. நன்றி என்பது நவிலும் போது அத்தனை அழகாகிவிடுகிறது ப்ரபஞ்சம். பாலகுமாரன் குடும்பத்தார் இந்த நிகழ்வைப் பார்த்துப் பார்த்து ஏற்பாடு செய்து நிகழ்த்தி முடித்த பாங்கு மெச்சத்தக்கது. சூர்யாவும் சாந்தாம்மாவும் இந்த நிகழ்வு சிறப்பதற்காகச் செலுத்திய ஈடுபாடும் உழைப்பும் பாராட்டத் தகுந்த ஒன்று. உபசரிப்பு என்பது துளியும் பாசாங்கின்றி உற்ற நண்பனை ஒரு உடன்பிறந்த சகோதரனைப் பேணுகிறாற் போலப் பேணுவது எல்லோருக்கும் கைவராத உயர்குணம். கமலாம்மா என்னிடம் தன்னை அறிமுகம் செய்து கொண்டபோது ஒரே ஒரு சொல்லைத் தான் உச்சரிக்கத் தோன்றியது. நான் உங்கள்ல ஒருத்தன்மா என்றேன். இதை என் மனத்தின் அடிவாரத்திலிருந்து கண்டெடுத்த மலர் ஒற்றை போலத் தான் சொன்னேன்.

பேச்சாளரும் எழுத்தாளருமான சுமதி பாலகுமாரன் விருது விழாவின் பால் காட்டிய அக்கறை மெச்சத் தக்கது. விழா அரங்கத்துக்கு என்னை அழைத்துச் சென்றது தொடங்கித் திரும்ப என்னை அறை வாசலில் இறக்கி விட்டது வரைக்கும் தன் இடையறாப் பணிகளுக்கு ஊடாக இலக்கியத்தின் மேல் அவர் காட்டுகிற வாஞ்சை அளப்பரியது. ஃப்ரான்ஸில் இருந்து நண்பர் சோழன் என்னைப் பார்ப்பதற்கு ஓட்டல் அறைக்கே வந்தார். அன்புப் பரிசொன்றைத் தந்து வாழ்த்தி விட்டுப் பாரம்பரியத் தமிழ்முறைப்படி வேட்டி சட்டையில் விழாவுக்கு வந்து சிறப்பித்தார்.

தேனிசைத் தென்றல் தேவா அன்பு நண்பர் ரத்தினம் ஆகியோர் குறித்த நேரத்துக்கு அரங்கத்திற்கு வந்து வாழ்த்தியவர்களில் முதன்மையானவர்கள். அண்ணன் தேவா மேடையில் எனக்குப் பொன்னாடை ஒன்றை அணிவித்து வாழ்த்தியது உவகை.அன்புத் தோழி ஃபாத்திமா பாபு ஒரு மலர்க்கூடையை அளித்துப் பாராட்டினார். விழாவுக்கு இயக்குனர் ராசி அழகப்பன் குறித்த நேரத்தில் வந்து தனக்கே உரிய சிலேடைக் குரலில் வாழ்த்தியவர் கடைசி வரைக்கும் உடனிருந்து அன்பைப் பகிர்ந்தது வெம்மை. அண்ணன் இயக்குனர் நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி தன் மிரட்டலான குரலில் வாழ்த்தினார். அவருடைய பேரன்பு நட்பைத் தாண்டிய பெருங்கொடை.

கவிஞர் தாமரை பாரதி விழாவுக்கு வந்ததோடு அன்பின் பெரும்பரிசு ஒன்றைத் தந்தார். வானை விட அதிகதிக அரூப கனம் கொண்ட அன்பின் முடிவற்ற இழைதல்களைத் தனதே கொண்டது அந்தப் பரிசு. ஒரு கவிதையாகவே அந்த நிகழ்வின் ஞாபகமாக நாளும் எஞ்சும் வகையில் தாமரை பாரதியின் பேரன்புத் தூறலல்ல பெருமழை. இந்து நாளிதழ் ராம்ஜி அண்ணன் குடும்பத்தோடு வந்திருந்தது சிறப்பு. தமிழினி வசந்தகுமார் அண்ணாச்சி வந்தது மகிழ்ச்சியின் பெருக்கம்.

 நண்பர் பாலமுரளியும் தோழி தென்றல் சிவக்குமாரும் தாயாருடன் வந்திருந்தது நெகிழ்வு. தோழி அகிலா ஸ்ரீதர் தன் மகனார் சுபாங்கருடன் வந்து வாழ்த்தினார். அன்புத் தோழர் மந்திரமூர்த்தி கவிதை உறவு ஏர்வாடி ராதாகிருஷ்ணன் அவர்கள் உதயம் ராம் அவர்கள் அண்ணன் கணேஷ் பாலா எனப் பலரும் வந்து வாழ்த்தியது அந்தத் தினத்தைப் பட்டாம்பூச்சியாக மாற்றியது.

எழுத்தாளர் லதா,கவிஞர் தேவசீமா, சரஸ்வதி காயத்ரி, அன்பு நண்பர் இளம்பரிதி,எனப் பலரும் சிறப்பித்தனர். இயக்குனரும் எழுத்தாளருமான தோழி தமயந்தியின் வருகை அன்பின் சின்னம். அன்பு அண்ணன் பாக்கெட் நாவல் அசோகன் அவர்கள் மின்னலாய் வந்து திரும்பியது அவரது தனி ஸ்டைல்.கவிஞர் இளங்கோ கிருஷ்ணன் விழாவுக்கு நிச்சயம் வருவேன் என்று செல் அழைப்பில் சொன்ன அதே தொனியில் வந்துட்டேன் நண்பா வாழ்த்துகள் என்று வாழ்த்தியது கவிதை. ஸ்ருதி டிவி கபிலன் தன் படவிழிகளால் பதிந்ததும் பகிர்ந்ததும் இலக்கியத்துக்கு அவர் நிகழ்த்துகிற வழிபாடு.

என் உறவினர் பலரும் இதில் கலந்து கொண்டார்கள்.இன்னும் இந்த நிகழ்வில் கலந்து கொண்ட பலரும் என் அன்புக்குரியவர்கள். எல்லோருக்கும் என் அன்பின் நன்றிகள். ஈரம் குன்றாத நெகிழ்தல்கள்.வாழ்தல் இனிது.