Post Views:
259
பா.ராகவன்
இன்றைக்கு பா.ராகவனுக்குப் பிறந்த நாள்.
நான் ஸ்கூல் படிக்கும் காலத்திலேயே கல்கி இன்ன பிற இதழ்களில் எங்காவது அடிக்கடிப் பார்த்துக் கொண்டே இருக்க வாய்த்த பெயர் ராகவனுடையது. மாபெரும் திமிங்கிலங்களின் காலத்தில் ஒரு குட்டி மீன் நீந்தியும் ஒளிந்து மறைந்தும் தன் வாழ்தலைத் தக்க வைத்துக் கொள்வதே பெரிய சாகசம். அடுத்த காலமென்று ஒன்று வரும். வந்து தானே ஆக வேண்டும்..? ராகவன் தனக்கென்று ஒரு எழுத்து-உலகத்தை உண்டு பண்ணினார். எழுதுவது என்ன என்பதை விடவும் எங்ஙனம் என்பதில் கவனத்தை லயிக்க வைத்தார். ராகவன் எழுதினால் என்ன எழுதினாலும் சுவாரசியமாக இருக்கும் என்கிற திறந்த நம்பிக்கை ஒன்றைச் சிற்பம் போல் செதுக்கி வைத்தார். வாசகர்களின் ஏகோபித்த ப்ரியங்களும் அன்புகளும் அவருக்குக் கிடைப்பதற்கு அடுத்தடுத்து அவர் எழுதிய படைப்புகள் காரணமாயின.
எனக்கு ராகவனிடம் பிடித்த விஷயங்கள் பல. பேசினால் நேரம் போவதே தெரியாது என்பது க்ளிஷே. ராகவன் பேசிக் கொண்டிருக்கும் போது நேரத்துக்கே நேரம் போவது தெரியாது. அவர் பேசுவதை வாய்திறந்து கேட்டுக் கொண்டிருக்கும். க்ரேஸி மோகனுக்கு ஒன்று விட்ட ரெண்டாம் பங்காளியோ என்று எண்ணும் அளவுக்கு அத்தனை நகைச்சுவைத் தெறிப்புகள் அவர் பேச்சில் மின்னி மிளிரும். நம்மைப் பற்றியே நமக்கே வலிக்காமல் சொல்வதில் அவரொரு சீனி மிட்டாய்+ கடுக்கும் இஞ்செக்ஷன் ரெண்டையும் வழங்கும் கறார் டாக்டர். எழுத்தை அவர் ஒரு தொனியாக மாற்றியவர். அவருடைய புனைவோ அ-புனைவோ ஏன் சிறு துணுக்கைக் கூட நீங்கள் ராகவனின் குரல் ஒலிக்காமல் படிக்க முடியாது. அந்த அளவுக்குத் தனது எழுத்தில் தானும் தன்மீது தன் எழுத்துமாய்க் கலந்து பிசைந்து கொண்ட வாழ்வு அவருடையது.
முந்தைய காலத்தின் மீது பெரும் மரியாதை கொண்டவர் ராகவன். அதே போல் முன்னோடிகளின் மீது மாபெரும் லயிப்பு அவருக்கு உண்டு. ஆனால் இந்த இரண்டும் கொண்ட பலருக்கும் நினைவேக்கம் பாடாய்ப் படுத்தி வேலையைக் கெடுக்கும். ராகவனுக்குக் கொஞ்சமும் ஞாபகவாஞ்சை இருந்ததே இல்லை. அவருடைய எண்ணமெல்லாம் நாளை மற்றும் வருங்காலம் குறித்தது தான். தமிழில் அவரொரு இண்டர் நேஷனல் ஸ்டாண்டர்டை பிரதிபலிக்கும் எழுத்து மனிதர். அவரை அடியொற்றி அவருடைய எழுத்துப் பாதையில் முன்னகர்ந்து செல்கிற பலரும் இங்கு உண்டு.அவர்களோடு இன்னமும் தோள் மீது கரம் பொருத்தினபடி தானும் உடன் செல்வது ராகவஸ்பெஷாலிட்டி.
என் ஏந்திழை புத்தக ரிலீசுக்கு வந்த போது தான் அவரை முதல் தடவை பார்த்தேன். இரண்டொரு சந்திப்புகள் தான். அதிகமும் ஃபோன் பேச்சுக்களிலேயே நட்பு பலத்தது. அவரிடம் கற்றுக் கொள்வதற்கு ஏராளம் உண்டு. சொல்லித் தருவதற்கும் வஞ்சனை இல்லாத வாரி வழங்கல் அவருடைய குணாம்சங்களில் ஒன்று. ரைட்ரூம் என்ற பேரில் இளைய தலைமுறையினருக்கு அவர் வழங்கி வருகிற எழுத்துப் பயிற்சி எதுவும் இல்லாத வறட்சிலோகத்தில் பெய்கிற முழுமுதல் மழை போன்றது. அவருடைய மெட்ராஸ் பேப்பர் எல்லா ஊர்களுக்குமானது.
எழுத்தில் அவர் ஒரு அரக்கன். எழுதிக் குவிப்பவர். “இதெல்லாம் அவருக்குப் போதாது” என்று தான் எப்போதும் தோன்றும். அவரால் இன்னும் பல அனாயாசங்கள் இயலும். அசகாயங்கள் நிகழும்.
இனிய பிறந்த தின நல்வாழ்த்துகள் பா.ராகவன் ஸாரே…
வாழ்தல் இனிது