எனக்குள் எண்ணங்கள் 9

எனக்குள் எண்ணங்கள்
          9 சைக்கிள்


முதன் முதலாகப் புதூரிலிருந்து திருநகருக்கு குடிமாறிச் சென்ற போது நிசமாகவே கலங்கிப் போனேன். பாட்டிக்கு சொந்த வீடென்பது ஆன்ம நிம்மதி. அம்மாவுக்கு நெடுங்காலக் கனவொன்றின் ஈடேறல். அப்பாவுக்கு சொந்த வீடு குறித்துப் பெருமிதமும் குற்றச்சாட்டோ இரண்டும் இல்லை. அக்காவுக்கும் சொந்த வீடு பிடித்திருந்தது. எனக்குத் தான் மன அல்லாட்டம் என்பதை நன்கு புரிந்து கொண்டேன். வீடு என்பதை மனத்தோடு உடலோடு வாழ்வோடு இன்னபிறவற்றோடு செண்டிமெண்ட்டாகப் பற்றிக் கொண்டிருந்தவர்களிடம் சென்று புதிய வீட்டை அதுவும் சொந்த வீட்டைப் பற்றிக் குறை சொன்னால் என்னவாகும்..? எடுத்ததற்கெல்லாம் நானும் அக்காவும் ஒருவரை ஒருவர் துர்ச்சொற்களால் ஏசிக் கொள்வோம். கெட்ட வார்த்தைகள் எனும் வகையில் வராத சாபச்சொற்கள் அவை. அவற்றைச் சொல்லி விட்டுப் பிறகு என்னைப் பார்த்து அப்படிச் சொன்னியே என்று கண் கலங்கி அழுவோம். சொற்கள் எல்லாவற்றுக்கும் நிச்சயப் பலிதம் உண்டென்று ஆழமாய் நம்பி இருந்த காலம் அது. பின்னொரு நாளில் அப்படி ஏசுவதை இருவருமே கைவிட்டு விட்டோம். வளர்ந்து பெரியவர்களாவதன் பலாபலன்களில் அதுவும் ஒன்று.
எனக்கு நானே புதிய வீட்டைக் குறை சொல்லிக் கொள்வேன். முன்பு குடியிருந்த புதூர் வீட்டையும் இந்தப் புதிய குறிஞ்சி நகர் வீட்டையும் சதா சர்வ காலம் ஒப்பிட்டுக் கொண்டே இருந்தது மனம். மாநகராட்சியின் ஆளுகைக்குக் கீழே சுடர் பிரகாசியாய் இருந்த புதூர் எங்கே அப்போது தான் லோ வொல்டேஜூடன் மின்னி மினுங்கிக் கொண்டிருந்த திருநகர் குறிஞ்சி நகர் எங்கே? சாலைகள் நள்ளிரவென்றாலும் ஆள் நடமாட்டம் இருக்கும் புதூரில்,இங்கே ஆறரை மணிக்கே நள்ளிரவு தொடங்கி மறு தினம் காலை ஆறு மணி வரைக்கும் அப்படியே உறைந்து விடுகிறது. என்னவோ மனம் பாதுகாப்பின்மையை உணர்ந்து கொண்டே இருந்தது. எதையாவது வெறுப்பதும் வேறொன்றை நினைத்து உருகுவதும் மனத்தின் சுபாவம் தானே. எனக்குப் புதிய வீடு பிடிக்கவில்லை. பழைய வீட்டைச் சுற்றிக் கொண்டிருந்தேன் மானசீகத்தில். 13 வயதுப் பதின்மனால் எதையும் மாற்றி விட முடியாது. ஒருவேளை நான் கோடிகளின் ஈஸ்வரனாக இருந்திருந்தால் உடனே புதூர் வீட்டை வாங்கிக் கொண்டு நான் மட்டும் தனிக்குடித்தனம் சென்றிருப்பேன்.
அன்றாடங்களையும் புதுவீடு பெரிதாக பாதிக்கத் தான் செய்தது. புதூரில் ஈ.எம்.ஜி நகர் முதல் தெருவில் நுழைகிற இடத்தில் வீடு இருந்தது. அடுத்த தெருவின் அந்தப் பக்கம் கடைசியில் ஜெயந்தி ஸ்டோர்ஸ் என்ற பேரில் அது தான் எங்களுக்குக் கிடைத்த மாபெரும் ஸ்டோர்ஸ். வீட்டுக்கு மாதாந்திர மளிகைத் தேவைகளை அம்மா கீழவாசல் சென்று மொத்தக் கடைகளில் வாங்கி வந்து சேர்ப்பாள்.அவ்வப்போது நானும் கூடச் சென்று வருவேன். அதுவே அவளுக்குப் பெருமிதமாக இருக்கும். கடைக்குச் செல்லும் போது பீ.ஆர்சி பஸ்ஸில் சென்று கீழவாசலில் இறங்கிக் கொள்வோம். விளக்குத் தூணை வேடிக்கை பார்த்தபடி மொத்தக் கடைகளுக்குச் சென்று பொருட்களை வாங்கியதும் அங்கேயிருந்து ஒரு ரிக்சாவில் ஏறி வீட்டுக்குத் திரும்புவோம். ஓரிரு முறை தான் ரிக்சாவில் அப்படி வந்தோம். அப்புறம் ஆட்டோ தான். வருகிற வழியில் கோரிப்பாளையத்தில் கிங் மெட்ரோ ஓட்டல் இன்றும் இருக்கிறது அங்கே நிறுத்திவிட்டு அம்மா மட்டும் சென்று பார்ஸல் வாங்கித் திரும்புவாள். நான் ஆட்டோவிலேயே அமர்ந்திருப்பேன். எப்போதும் எதைக் கேட்டாலும் பெரும்பாலும் காரணம் சொல்லும் அம்மா அன்றைக்கு எனக்கு எதைக் கேட்டாலும் வாங்கித் தந்து விடுவதை அச்சமும் ஆச்சர்யமும் கலந்து உணர்ந்திருக்கிறேன்.
நான் என்ன பெரிதாகக் கேட்டுவிடப் போகிறேன்? ஸ்போர்ட்ஸ் ஸ்டார் புத்தகம் அல்லது பிக்-ஃபன் சூயிங்கம். அம்மா சூயிங்கம் மெல்லுவதன் தீமைகளைப் பற்றிச் சொல்லியபடியே வாங்கித் தருவாள். 25 பைசாவுக்கு ஒன்று வீதம் நாலு வாங்குவேன். நாலையும் பிரித்து உள்ளே இருக்கும் இணைப்பு அதை பிக் ஃபன் ரன் என்போம் என்னென்ன எனப் பார்க்கும் ஆவல் கழுத்தை நெறிக்கும். ஆனாலும் ஒவ்வொன்றாகப் பிரித்து மறு தினம் சாயந்திரம் வரைக்கும் மாடு அசைபோடுவதைப் போல் மென்று கொண்டிருப்பேன். தீபாவளி சமயத்தில் முந்திரிப் பருப்பு இத்யாதிகளையும் வாங்கும் போது கொஞ்சம் தின்னுவதற்குத் தருவாள். எனக்கு வியப்பாக இருக்கும். இப்படிப்பட்ட வஸ்துவெல்லாம் இருக்கிறதா என்ன..? பாட்டி கிருஷ்ண விக்கிரகம் ஒன்றை வீட்டில் வைத்து வழிபட்டாள். அந்தக் கிருஷ்ணன் எங்கள் வீட்டின் செல்லக் குழந்தை. அவனுக்கு தினமும் எதாவது நைவேத்தியம் படைப்பது பாட்டியின் வழக்கம். அதற்காக கிஸ்மிஸ் பழம், கல்கண்டு,பொட்டுக்கடலையுடன் ஜீனி இல்லாவிட்டால் வாழைப்பழம். முந்திரிப் பருப்பு மனம் கெடுத்த பண்டம். பாயசத்தில் மிதக்கும் ஒன்றிரண்டு முந்திரிகள் உண்மையிலேயே அதிர்ஷ்ட வரவு என்று தான் சிறுவயதில் நம்பினேன்.
திமுகவிலிருந்து எம்ஜிஆர் பிரிந்தது ஏன்? கருணாநிதி விளக்கம்! | Karunanidhi explained: Why MGR left from DMK?
அப்படி வருடத்துக்கு இரண்டு முறைகள் அம்மாவோடு பலசரக்கு வாங்கித் திரும்புகிற பயண அனுபவம் வாய்க்கும். அதோடு கூடவே ஆட்டோ பயணமும். கோயிலுக்குச் செல்லும் ஏராள வழிகளில் ஒன்றில் அம்மா வழக்கமாக ஒரு கடையில் ஃப்ரூட் மிக்சர் எனும் தேவாம்ருதத்தை வாங்கித் தருவாள். எனக்கும் அக்காவுக்கும் அது தான் முதன்முதலான சொர்க்கப் பரிச்சயம். நினைவிலிருந்து அகன்றாலும் கனவில் எப்போதும் வழிந்து கொண்டே இருக்கும் மகா பானம் அது. அதன் சுவையை வர்ணிக்க மொழிகளும் மௌனமும் போதாது. அத்தனை சிறப்பும் அதிலே இருந்தது. அதுவும் தளும்புகிற பழக்கூழின் தலை மீது வழியும் ஐஸ்க்ரீமை ஒரு ஸ்கூப் எடுத்து அப்படியே வார்த்துத் தருவார்கள். கூண்டுக்கிளி என்கிற ஒரேயொரு படத்தில் சேர்ந்து நடித்த எம்ஜி.ஆர் சிவாஜி காம்போ போல் வினோத விசித்திர காம்பினேஷன் அது. ஞாபகமெல்லாம் தித்திக்கும். நான் வளர்ந்து பெரியவனானதும் என் வீட்டின் சமையலறையில் தினசரிப் பதார்த்தமாக அந்த ஃப்ரூட் மிச்சரை ஆக்கப் போவதாக அக்காவிடம் சொல்வேன். அவள் சிரிப்பாள். தினமும் சாப்பிட்டால் அலுத்துப் போகும்டா என்பாள் அம்மா. எனக்கு அலுக்காது என்று மறுப்பேன்.
செயிண்ட் மேரீஸ் ஸ்கூலில் சேர்ந்த பிறகு தெற்குவாசலிலிருந்து சப்பாணி கோயில் செல்லும் வழியில் சற்றே பெரிய ஒரு ஜூஸ் செண்டர் தோன்றியது. அங்கேயும் ஃப்ரூட் மிச்சர் புத்தம் புதியதாய்க் கிட்டத் தான் செய்தது. அந்த வழியாகச் செல்கையிலெல்லாம் பெரும்பாலும் அங்கே செல்வேன். ஒரு நாள் அந்த பானம் அலுத்துப் போகத் தான் செய்தது. ஆனாலும் எதொவொரு வாழ்கால வசீகரம் இன்னமும் அதனுள் ஒளிந்திருப்பதாகவே எண்ணுகிறேன்.
திருநகர் வந்த பிறகு ஏற்பட்ட மாற்றங்களில் இந்தப் பலசரக்குப் பயணம் இல்லாமலே போனதும் ஒன்று. அப்பா ஒரு தெளிவான காரியம் செய்தார். சின்னமணி ஸ்டோர்ஸ் என ஐந்தாவது ஸ்டாப்பில் ஒரு கடையைக் கண்டறிந்தார். புதூரின் ஜெயந்தி ஸ்டோர்ஸூக்கு இணையான கடை. அங்கே எல்லாப் பலசரக்கும் கிடைத்தது. அதை நடத்தியவர் பேர் முத்தமிழ். அங்கே அப்பா எங்கள் வீட்டுக்கென்று ஒரு மளிகைக் கணக்கைத் தொடங்கினார். முதல் சில மாதங்கள் அம்மாவின் கேஷ் அண்ட் கேரி மெதடாலஜியைத் தனக்கு சாதகமாக்கிக் கொண்டார். ஒரு கட்டத்தில் அப்பாவின் இந்தத் தில்லாலங்கடி வேலை அம்மாவுக்குத் தெரியவந்தது. கடையில் இருந்த கணக்கை நிரந்தரமாக மூடிவிடுகிற ஆவேசத்தோடு கடைக்குக் கிளம்பிச் சென்றார். அதற்குப்பதிலாக அந்தக் கணக்கைத் தன் பொறுப்பிற்கு மாற்றிக் கொண்டதோடு அந்தப் பிரளயம் சுபம்.
எப்போது எது தேவை என்றாலும் சின்னதொரு கணக்கு நோட்டு அதைக் கொண்டு போய்க் கடையில் நின்று பொருட்களை வாங்கிக் கொள்வேன். நோட்டில் கடைக்காரரின் கையெழுத்தில் வரிசையாகப் பொருள்-விலை இரண்டும் எழுதி வருவார். மாதம் ஒரு முறை சம்பளத்துக்கு அப்பால் அந்தக் கணக்கில் வரவு வைக்கப் படும். இப்படிப் பல வருடங்கள் பரிவர்த்தனை நடந்தது. சைக்கிளை எடுத்துக் கொண்டு நாலைந்து பொருட்களுக்காக வீட்டிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் சின்னமணி ஸ்டோர்ஸூக்கு வந்து திரும்புவது சிரமசுகம். அம்மா அவ்வப்போது நோட்டை வரிசையாகத் திருப்பித் திருப்பி கணக்கை சரிபார்ப்பாள். இதென்ன பேட்டரி இதெதுக்கு பல்பு என்றெல்லாம் கேட்கையில் பொறுமையாக பதிலளிக்க வேண்டும். சற்றே நம் குரல் உயர்ந்தால் அவ்வளவு தான். இந்த மாசத்தோட கணக்கை நிப்பாட்டிர்றேன் என்பாள் ஆனால் அது சொல்லளவு மிரட்டல் தான். செயலுக்கு வரவில்லை.
எனக்கு பிக் ஃபன் ரன்களின் மீது ஆர்வம் குறைந்து போயிற்று. நான் விரும்பி உண்ணும் பண்டமாக பரொட்டா மாறியது. வீட்டில் கிடைக்காத மசாலா மணமும் மைதாவின் ரப்பர் நிகர் தன்மையும் முன்னர் அறியாத வசந்தமாக மனத்தில் நிறைந்தது.
ஐந்தாவது ஸ்டாப்பில் ஜெயராஜ் ஸ்டொர்ஸ் என்றொரு கடை உண்டு. அதை நடத்திய பெரியவரின் இரண்டு மகன்கள் மூத்தவர் ரவி அதே கடையின் ஒரு பகுதி டீக்கடையை நிர்வகித்தார். ஜெயராஜ் வசம் ஷாப் கடை இருந்தது. அங்கே தான் நாளிதழ் வாரப் பத்திரிக்கைகள் எல்லாமே வரும். திருநகரில் அனேக புத்தகங்கள் கிடைக்கும் இரண்டொரு தலங்களில் அதுவொன்றாக இருந்தது. அங்கே அப்பாவுக்குக் கணக்கு இருந்தது. அன்றாடப் பண்டமாக அப்பா வாங்குவது சிகரட். அதைத் தவிர ரோஜா பாக்கு, எனக்கு எதாவது மிட்டாய். தவிர நாள் வார மாதப் பத்திரிகைகள். சின்னமணி ஸ்டொர்ஸில் இருந்தாற் போல் இங்கே கணக்கு நோட்டெல்லாம் கிடையாது. சிகரட் பெட்டியைக் குறுக்கில் கிழித்து அதன் முதுகில் சின்னச்சின்ன எழுத்துக்களால் கணக்கு தொடரும். ஒவ்வொரு அட்டையும் தீரும் போது அதன் மொத்தத் தொகையை அப்பாவிடம் காட்டி விட்டு அடுத்ததற்கு மேலெழுதிக் கொண்டு பழைய அட்டையைக் கிழித்துவிடுவார். ரொம்ப நாளைக்கு அப்பாவின் கணக்கு அங்கே இருந்தது.
அப்பா நடத்துனராகப் பணியாற்றும் போது வெவ்வேறு ஊர்களில் ராத்தங்க நேர்ந்தது. உறக்கம் வருவதற்கு அவர் மதுவை நாடினார் அல்லது புத்தகங்களை. இந்த இரண்டு பண்டங்களின் இடை முரணைப் பல முறை வியந்திருக்கிறேன். உலக நியதிப்படி இந்த இரண்டையும் வெகு சமமாகக் கையிலேந்தியபடி பயணிப்பது மகா சிரமம். ஒன்று எப்போதும் புத்தகங்களைத் தாங்கிக் கொண்டு எப்போதாவது மதுவை ஏந்தலாம்.அல்லது வைஸ் வெர்ஸா. அப்பா இரண்டையுமே சமமாகக் காதலித்தார். அனேகமாகத் தினமும் குடித்தார். தினமும் படித்தார். எல்லாமே வாசிப்பார். நாளிதழ்களில் வருகிற வரி விளம்பரத்தைக் கூடத் தொலைத்த பண்டத்தைத் தேடுகிற அதே முனைப்போடு வாசிப்பார். கன்னித் தீவு கதையைக் கூட விடாமல் படித்து விட்டுத் தான் பேப்பரை மூடுவார். மங்கையர் மலரையும் க்ரைம் நாவலையும் ஒரே ரசிப்போடு படித்தார். எத்தனையோ முறை அவரோடு முரண் கொண்டு வாதிட்டிருக்கிறேன்.
அவருக்கு மாத நாவல்கள் மீது பெரும்ப்ரியம் இருந்தது. துப்பறியும் நாவல்கள். பாலகுமாரன் கதைகளில் அப்பாவுக்கு மிகவும் பிடித்தது தாயுமானவன். அப்பாவும் அப்படியான ஒருவர் தான். கை வீசம்மா கை வீசு கதையைப் படித்து விட்டு நிறைய நேரம் எதுவுமே பேசாமல் மௌனித்திருந்தார். சிவசங்கரி எழுதிய அவன் முதலான கதைகளைப் படித்து விட்டுத் தான் கொண்டிருந்த புகை மற்றும் மதுப் பழக்கத்தின் மீது பெருங்கூச்சமும் தாழ்மையும் கொண்டவராகக் காணப்பட்டார். எதுவும் சில காலம் தான். எப்படி வெளியேறுவது என்பதை எத்தனையோ முறை எண்ணினாரே ஒழிய அவரால் அப்போது அதனை நிறைவேற்ற முடியவில்லை. பின்னாளில் மருத்துவக் காரணத்தால் புகையையும் குடியையும் முழுவதுமாக நிறுத்தினார். அதன் பின் வந்த காலத்தில் அவருடைய கிறக்கப் ப்ரியமாக ஆன்மீகம் மாறிற்று. மிகவும் ஆழமாக இறைபக்தியைக் கைக்கொண்டார்.
என் தகப்பன் எனக்கொரு சித்திர முழுமையை எப்போதும் நல்கியவர். சாமான்யர். சாதாரணமான அதே நேரத்தில் நிறைவாழ்வை வாழ்ந்தார். அவருடைய பலவீனங்கள் ஒன்றுக்கொன்று முரண்படாத மலர்களைப் போல ஒருங்கமைந்தன. அவர் வாழ்வு கதம்ப மாலையைப் போல் ஒளிர்ந்து கமழ்ந்தது. நான் கல்லூரியில் இரண்டாமாண்டு படித்துக் கொண்டிருந்தேன். அப்பா மூன்று வார காலங்கள் மருத்துவ மனையில் நோய்மை கொண்டிருந்து விட்டுக் காலமானார்.
அவருடைய சார்புகள் தனித்துவமானவை மட்டுமன்றி உறுதியானவையாகவும் இருந்தன. எம்ஜி.ஆர் மீது முரட்டுப்ரியம் இருந்தது. ஜெயலலிதாவின் தலைமையை மனதார ஏற்ற தொண்டர்களில் ஒருவர் தான் அப்பாவும். ஆனால் கலைஞர் மீது அவருக்கிருந்த வாஞ்சை சொல்லில் தீராதது. எதாவது வேகமாகப் பேசிக் கொண்டே செல்கையில் கலைஞரைத் தலைவர் என்று குறிப்பிட்டு விட்டு அதைத் திரும்பப் பெறாமல் அப்படியே மௌனிப்பார். எம்ஜி.ஆர் ரசிகர்களில் சிவாஜியைத் திட்டுகிற ஒரு கூட்டம் இருந்தது. அப்பா அப்படி இல்லை. அதே போலவே திமுக தான் அவருடைய அரசியல் தாயகம். என்ன தான் அதிமுக தோன்றிய நாளிலிருந்தே அவர் அதனுள் தன்னைக் கரைத்துக் கொண்டாலும் கூடக் கடைசி வரைக்கும் கலைஞர் மீதான ஒரு நிரந்தர வியத்தலும் மாறாத மரியாதையும் அப்பாவிடம் எப்போதும் இருந்தது.
கிரிக்கெட்டை விரும்பிப் பார்ப்பார். அதை விட அவருக்குப் பிரியம் ஒன்று உண்டெனில் அது அரசியல். தேர்தல்களின் மீது அவருக்குப் பெரும் ஆர்வம் இருந்தது. 1972 ஆமாண்டு டீ.வீ.எஸ் போக்குவரத்து நிறுவனம் நாட்டுடமையாக்கப் பட்ட போது அப்பாவுக்கு அரசுப்பணி கிடைத்தது. அதே ஆண்டு எம்.ஜி.ஆர் திமு.கழகத்திலிருந்து விலகித் தனிக் கட்சி ஆரம்பித்தார். சீக்கிரத்திலேயே மீண்டும் திமுகவோடு சேர்ந்து விடுவார். எம்ஜி.ஆருக்கு அரசியலில் நெடுந்தொலைவு செல்லத் திராணி இல்லை என்றெல்லாம் எள்ளியவர்கள் உண்டு. எல்லாவற்றையும் பொய்யாக்கி ஆட்சிக்கட்டில் ஏறினார் எம்ஜி.ஆர். மாநிலத்தின் போக்குவரத்துக் கழகம் மண்டல அளவில் பாண்டியன் சேரன் சோழன் மற்றும் பல்லவன் என நாலு கழகங்களாகவும் வெளியூர்ப் பயணங்களுக்கானவை திருவள்ளுவர் போக்குவரத்துக் கழகம் என்றும் உருவாயிற்று, ஒவ்வொரு கழகத்திலும் கட்சி சார்பில் தொழிலாளர் பேரவைகள் உருவாகின. மதுரையைத் தலைமையிடமாகக் கொண்ட (அதி.மு.க வின்) அண்ணா தொழிற்சங்கத்தின் நிறுவன பொருளாளராக அப்பாவுக்கு வாய்ப்புக் கிடைத்தது. அரசியலில் நெடுந்தொலைவு பயணிக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைக்கவில்லை. உடனாளி நண்டுகள் உறங்கினாலொழியப் பாத்திரம் தாண்டுவது நிகழாது தானே. அப்பாவின் அரசியல் சீக்கிரத்திலேயே நிறைவுக்கு வந்தது.
அதன் பின்னரும் அரசியல் ஆர்வம் குறையவே இல்லை. ஒரு நோக்கராக ஒவ்வொரு அரசியல் நிகழ்வைக் குறித்தும் தெளிவான பார்வை அவரிடம் இருந்தது. தேர்தல்கள் வந்துவிட்டால் போதும் இன்றைக்கு இருப்பது போல் இத்தனை டெலிவிஷன் சேனல்கள் அன்றேது? பத்திரிக்கைகளும் வானொலியும் தான் ஒரே வடிகால். ஆனாலும் தொகுதி வாரியாக இன்னார் ஜெயிப்பார் என்று அவர் ஒரு தெளிவுக்கு வருவார். 90 சதவீதம் அது சரியாய்ப் பலிப்பதைக் கண்டிருக்கிறேன். 90களுக்கு அப்பால் டீவீயும் கருத்துக் கணிப்பு அலசல் இத்யாதிகள் எனப் பட்டை கிளப்பிற்று. அப்பா கணித்து சில எலக்சன் முடிவுகள் அதன் போட்டியாளர்களுக்கே அதிசயமாக இருந்திருக்கும். அத்தனை துல்லியமாக எப்படிச் சொல்கிறார் என்று வியப்பேன்.
அப்பா வழக்கமாக முடி திருத்தும் கடைக்குச் செல்லும் போதெல்லாம் நானும் உடன் செல்வேன். முள்ளு முள்ளாய் அதிக பட்சம் நாலு நாள் தாடியோடு என்னோடு வருவார். சைக்கிளில் அவரைப் பின் சீட்டில் அமர்த்திக் கொண்டு சலூன் ஷாப்பிற்கு வந்ததும் அப்பா எனக்கு நன்றி சொல்வார். சின்னச்சின்ன விஷயமென்றாலும் சிறு குழந்தைக்கும் நன்றி சொல்லும் பாங்கு அவரிடம் இருந்த நற்குணம். அதே போல் தன்னை விட வயதில் சிறியவர் என்றாலும் சார் என்றோ அண்ணே என்றோ அழைப்பார். நாங்கள் கேலி செய்வோம். அதைப் பொருட்படுத்த மாட்டார். அப்பாவைப் பார்த்ததும் முடி திருத்தும் கலைஞர் அவர் பெயர் மனோகரன் என நினைவு. அவருக்கும் குஷியாகி விடும். வாங்கண்ணே என்பார். இவரும் அவரை அண்ணே என்பார். கொஞ்சம் வெயிட் பண்ணலாம்ல என்பார் மனோ. இவர் அதுக்கென்ன என்பார். நான் கூடவே இருக்கும் குமார் என்பதால் எனக்கென்று அதில் தனித்த அல்லது முரண்பட்ட அபிப்ராயங்கள் இருக்கமுடியவில்லை.
யாராவது கஸ்டமர் இருந்தால் பொது விஷயங்கள் பேசுவார்கள். அப்பாவின் டர்ன் வந்ததும் அரசியல் தூள் பறக்கும். மனோகரன் ஒரு திமு.க தொண்டர். அவர் மனமெல்லாம் கலைஞர். அப்பாவோ ராமச்சந்திர பக்தர். அப்போது ஜெயலலிதாவின் விசுவாசி. இந்த இரண்டு பேரும் குறைந்த பட்சம் அரை மணி நேரமாவது அரசியலின் அன்றைய நீள அகலங்களை ஆழவுயரங்களை அலசுவார்கள். நெருப்புப் பறக்கும் சொற்கள் என்றாலும் ஒருவரை ஒருவர் புண்படுத்திக் கொள்ளாமல் தன் தரப்பையும் நிலை நிறுத்தி அவர்கள் பேசுவதைக் காண அழகாக இருக்கும். மனோகரண்ணனுக்குத் துணையாக செந்தில் என்றொரு இளைஞர் அவருடைய உறவினர் தான் இவரும் அதே கடையில் மௌனமாக அடுத்த கஸ்டமரை டீல் செய்தபடி இவர்கள் இருவரின் பேச்சையும் கவனித்துக் கொண்டே இருப்பார். அந்த செந்தில் தான் எனக்குத் தெரிந்து முதன் முறையாக எங்கள் திருநகரில் பலருக்கும் ஃபங்க் என்கிற தொங்கி வழியும் சிகையலங்காரத்தை நல்கியவர். அப்போது போலீஸ்காரர்கள் அந்தச் சிகையலங்காரத்தை ஆட்சேபிக்கத் தொடங்கவில்லை. எங்கள் அண்ணன்மார்கள் பலரும் அந்தச் சிகையலங்காரத்தைத் தாங்கியபடி ஊரெல்லாம் வலம் வந்தார்கள்.
RBSI RAJINI FAN PAGE on Twitter: "திமுக தலைவர் கலைஞர் காலமானார் #KarunanidhiHealth #Kalaingar #Karunanithi #DMK #kalaingarKarunanidhi # Karunanidhi #Kalaingar #கலைஞர் #கருணாநிதி #RIPKalaignar @rajinikanth ...
அப்பா மனோகரனிடம் டீ சாப்டலாமாண்ணே என்பார். அப்படியானால் அரசியல் பேசியது போதும் என்று அர்த்தம். சில சமயம் அவரே அப்பாவிடம் கேட்பதையும் பார்த்திருக்கிறேன். டீ சாப்டலாம்ணே என்பார். செந்தில் ஒரு தூக்கு வாளியில் பாய் கடையில் பார்ஸல் காப்பி வாங்கி வருவார். எனக்கு அப்போது வீட்டைத் தாண்டி வெளியே காபி குடிக்கும் பழக்கம் ஏற்படாத காலம். எனக்கு மசால் வடை அல்லது இனிப்பு அப்பம் எதாவது கையளிக்கப் படும். சூடான காப்பியை ஊதி ஊதிக் குடித்துக் கொண்டே அப்பாவும் மனோகரண்ணனும் சினிமா விலைவாசி என்றெல்லாம் பேசுவார்கள். எனக்கு அப்போது புரியாவில்லை. அப்பாவும் மனோகரண்ணனும் ஒரு நிமித்தம் சார்ந்த சந்திப்பினூடே நட்பையும் நிகர் செய்தபடி இருந்திருக்கின்றனர். சொந்த ஊருக்கு விசேசத்தில் கலந்துகொள்ளச் சென்ற மனோகரண்ணன் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். அப்பாவுக்கு அதன் பின் அதே போன்ற இன்னொரு சலூன் வாய்க்கவே இல்லை. நாலைந்து இடங்களுக்கு மாறி மாறிப் போனாலும் என்னவோ அவருக்கு ஒட்டவே இல்லை. ஒரு சுப தினத்தில் சுய சவரத்துக்கு மாறினார். அதுவும் அவருக்குக் கைகூடாமற் போனது. அவரது அந்திம ஆண்டுகளில் நான் தான் அவருடைய தாடி நீக்கியாக செயல்பட்டேன். ஆரம்ப முறைகளில் ஆங்காங்கே ரத்தம் காட்டினேன். அப்புறம் தெளிவான சவரம் கைகூடியது. அப்பா ஒவ்வொரு முறை ஷேவிங் முடித்ததும் என்னிடம் தேங்க்ஸ் கண்ணா என்பார். இதுக்கெல்லாமா தேங்க்சூ போப்பா என்பேன். அப்பாவுக்கு அது எவ்வளவு பெரிய நிம்மதி என்பது பின்னாளில் புரிந்தது.
அவரால் மனோகரண்ணனின் மறைவை அதன் எதிர்பாராமையைத் தாங்கி கொள்ள முடியவில்லை. அந்த நட்பின் உள்ளடக்கம் இன்னொருவரால் மாற்று செய்ய முடியாமற் போனதும் அந்த இழப்பின் கனபரிமாணத்தைப் பெரிதாக்கியிருக்கக் கூடும்.
91 ஆமாண்டே அப்பா வேலையை எழுதிக் கொடுத்து விட்டார். அதன் பின்னர் முழுவதுமாக வீட்டிலேயே தான் இருந்தார். டீவீ வாங்குவதற்கு முன்பாகவே கிரைண்டர் மிக்சி இரண்டும் எங்கள் வீட்டில் நுழைந்தது. அதி அவசியத்துக்கு அப்பால் தான் டீவீ வந்தது. அந்த டீவீயை அப்பா அப்படி ரசித்துப் பார்த்தார். இந்தி எதிர்ப்பாளராக முற்காலத்தில் வாழ்ந்த அதே அப்பா வேறு வழியில்லாமல் கண்ணில் பட்ட இந்தி நாடகத் தொடர்களை எல்லாம் விரட்டி விரட்டிப் பார்த்தார்.
1991 ஆமாண்டு ராஜீவ் கொல்லப்பட்டதும் அதற்கப்புறம் அறுதிப் பெரும்பான்மையுடன் ஜெயலலிதா முதல்வரானதும் அப்பாவுக்கு பெரும் சந்தோஷம். அடுத்து வந்த ஐந்து வருட காலமும் அவருக்கும் எனக்கும் எக்கச்சக்க வாய்ச்சண்டைகள் ஏற்படக் காரணமானவர் ரஜினிகாந்த். என் கண்ணறிந்த முதல் தலைவர் அவரே.
Superstar Rajinikanth meets old blockbuster film director on the release anniversary! - Viral photo - Tamil News - IndiaGlitz.com
அப்பாவுக்கு நான் ரஜினி ரசிகனாக என் பால்யத்திலிருந்தே வளர்ந்து வந்ததில் எந்த மறு கருத்தும் இருந்திருக்கவில்லை. 90களின் ஆரம்பத்தில் இருந்தே ரஜினியை எப்படியாவது ஒரு மாற்று சக்தியாக உருத்தந்து விடக் கூடிய வேலையைப் பத்திரிகைகள் தொடர்ந்து செய்தன. தினமலர் ஒரு மாதிரி ந்யூட்ரலாக அவரைப் பற்றிய சேதிகளுக்கு முக்கியத்துவம் தந்து கொண்டே இருந்தது. ஜூனியர் விகடன் நக்கீரன் முதலான அரசியல் பத்திரிகைகளுக்கு இடையே பெரும் போட்டியே நடந்தது. ரஜினி நின்றால் நடந்தால் ஒடினால் ஓய்வெடுத்தால் என எதையுமே செய்தியாக்கித் தீர வேண்டிய நிர்ப்பந்தத்தைத் தமக்குத் தாமே வழங்கிக் கொண்டன. இன்னும் சற்றே காலம். சமீபத்தில் பெரும் மாறுதல் காத்திருக்கிறது. ரஜினி தான் அடுத்த முதல்வர் என்றெல்லாம் எழுதின.
ஆர்.எம். வீரப்பனின் கைப்பாவையாக ஆடுகிறார் ரஜினி என்பார் ஒரு நாள். இன்னொரு நாள் சோ தான் ரஜினியைக் கெடுக்கிறார் என்பார். எல்லாராலும் எம்.ஜி.ஆர் ஆகிவிட முடியாது என்று ஒரு நாளைக்கு ரெண்டு முறையாவது என்னிடம் சொல்லிக் கொண்டே இருந்தார் அப்பா. ஒரு மழை நாளில் எங்கள் வீட்டில் அரிய நிகழ்வாக அப்பா நான் சித்தப்பா என் தம்பி கோபால் மற்றும் அப்பாவின் அக்கா மகன்கள் கைலாசம், சுந்தர் மற்றும் குமார் ஆகியோர் கூடியிருந்தோம். மழை விடாமல் பெய்தது. காபி பலகாரத்தோடு அரட்டைக் கச்சேரி நடந்தது. சுந்தரும் குமாரும் தீவிர ரஜினி பக்தர்கள். நானும் தான். என் தம்பி கோபாலுக்கு ரஜினி பிடிக்கும் பிடிக்காது என்பதை விட அப்பா பெரியப்பா என்ன சொன்னாலும் அதை எதிர்த்துப் பேசுவதே சுகம் என்று இருந்தான். பேச்சில் பொறி பறந்தது.
நானும் கோபாலும், ரஜினி ஆட்சியமைத்தால் ஆர்.எம்.வீக்கு என்ன இலாகா, சோவுக்கு என்ன இலாகா என்றெல்லாம் சொல்லி அவரை வெறுப்பேற்றினோம் . அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த அப்பா என்னிடம் “இளையராஜா மினிஸ்டராவார். ரஜினி ஆவமாட்டார்” என்றார்.
மூப்பனார்-சோ-ஆர்.எம்.வீரப்பன் என மூன்று வலிமையான மனிதர்கள் உடன் இருக்கிறார்கள். ரஜினி நிச்சயமாக அரசியலுக்கு வருவார். ஆட்சியைப் பிடிப்பார் என்று குமார் அத்தான் அடித்துச் சொன்னார். அது நிகழவே வாய்ப்பில்லை என அப்பா மறுத்தார். சிவாஜி பக்தரான என் சித்தப்பாவிடம் அபிப்ராயம் கேட்கப் பட்டது. அவர் ந்யூட்ரலாக வந்தால் வரலாம். ஜெயித்தால் ஜெயித்தது தான் என்று தீர்ப்பளித்தார். சிவாஜி தொடங்கிய கட்சி,அரசியலில் பெரிதாக வெற்றி பெறவில்லை என்பதால் அப்படிச் சொல்கிறாய் என சித்தப்பாவை நோக்கித் தன்னிடம் மீதமிருந்த பந்தை எறிந்தார் அப்பா. நீங்க சொல்றது தாண்ணே கரெக்ட் என்று மழை சற்றே குறைந்ததும் சித்தப்பர் எஸ்கேப் ஆனார்.
அண்ணாமலை படத்திலிருந்தே ரஜினிக்கு தொல்லைகள் தொடங்கின. ஊடகங்கள் எல்லாவற்றையும் பெரிதுபடுத்திக் கொண்டே இருந்தன. உழைப்பாளி படத் தொடக்கவிழாவிலிருந்தே பல பிரச்சினைகள். எஜமான் ஏ.வி.எம் தயாரிப்பு என்பதால் சிக்கலின்றிக் களம் கண்டது. வள்ளி என சொந்தப்படம் எடுத்தார் ரஜினி. முதன் முறையாகத் திரைக்கதை வசனம் வேறு எழுதினார். அந்தப் படத்தில் ஒவ்வொரு அசைவுமே அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தவை என்றே கருதப்பட்டது. கற்பிக்கப் பட்டது. ரஜினி அதில் கெஸ்ட் ரோல். அந்தப் படம் பெரும் வெற்றி பெறவில்லை. என்னிடம் அப்பா என்ன தம்பி வள்ளி படம் நல்லா இல்லையாமே…என்னவாம்..? என்று கடுப்பைக் கிளப்பினார். என்னை முந்திக் கொண்டு சுந்தர் அத்தான் “தலைவர் டாக்ஸ்காக எடுத்த படம். அதான் சரியாப் போவலை” என்றார். எங்களுக்குச் சாதகமானவற்றை நம்பினோம்.
Valli poster.jpg
பாட்ஷா படம் யாராலும் யூகிக்க முடியாத இந்திய வெற்றியைத் தனதாக்கிற்று. ரஜினி அவராலேயே வீழ்த்த முடியாத பெரு நட்சத்திரமானார். அந்தப் பட விழாவில் ஆர்.எம்.வீயோடு மேடை ஏறி ரஜினி பேசிய பேச்சு அரசியலில் பூகம்பம் கிளப்பியது. ஆர்.எம்.வீரப்பனுக்கும் ஜெயலலிதாவுக்கும் முரண் முற்றியது. நாங்கள் இமைப்பதை நிறுத்தினோம். ரஜினி அரசியலில் நேரடியாக வந்துவிட்டதாகவே நம்பலானோம். மன்றத் தலைவன் மாரி என்னிடமெல்லாம் சொன்னது இதுதான். வேஸ்டா காசெல்லாம் செலவழிக்காதீங்கப்பா வேற எதுக்கும். நமக்கெல்லாம் வேலை நெறைய இருக்குது. காசு சிக்கனப்படுத்துங்க. தேவைகள் ஏராளம் என்றான். அத்தனை ஊர்களிலும் அத்தனை மன்றத் தலைவர் மாரிகளும் அப்படிச் சொல்லத் தொடங்கிய காலம் அது. திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு அடிக்கும் போஸ்டர்கள் தொடங்கி எல்லாமே அரசியல் மயமாக மாறியது. நாளை எமதே என்றானோம்.
சைக்கிள் சின்னம் தமிழ் மாநில காங்கிரஸூக்கு வழங்கப்பட்டது. ஊரெல்லாம் அண்ணாமலையில் ரஜினிகாந்த் சைக்கிளோடு நிற்பது நடப்பது வலம் வருவது போன்ற பதாகைகள் மிளிர்ந்தன. எடுத்த எடுப்பிலேயே அடித்தாடும் பேட்ஸ்மன் போல் அந்தத் தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் அசுரவேகம் காட்டிற்று. எங்களைப் போன்ற ரஜினி பக்தர்கள் ரஜினி ஆரம்பிக்க இருந்த கட்சியைத் தான் மூப்பனார் ஆரம்பித்திருக்கிறார். ரஜினியின் கட்சி தான் அது என நம்ப விரும்பினோம். அப்படித் தான் அசரீரி ஒலித்தது என்றாற் போல் ரஜினி தேர்தலில் நிற்காமலேயே கிங் மேக்கராகி விட்டதாக மகிழ்ந்து கொண்டோம்.
ரஜினியின் 'பாட்ஷா' மேடைப்பேச்சுக்கு என்னிடம் ஜெ. காட்டிய கோபம்!" - ஆர்.எம்.வீ பகிர்வுகள் - Jayalalithaa angered me by Rajini's speech , RMV Sharings
பி.ஆர்.சி உள்ளிட்ட அனைத்து அரசு நிறுவனங்களிலும் ரஜினி மீது அன்பு கொண்டவர்கள் தொழிற்சங்கப் பேரவைகளை ஆரம்பிக்கலாயினர். ரசிகர் மன்றங்கள் வலுப்படுத்தப் பட்டன. அடிக்கடி ரஜினி மன்ற ஆலோசனைக் கூட்டங்கள் மாவட்ட அளவில் நடந்து கொண்டே இருந்தன. ஆர்.எம். வீ உள்ளிட்டவர்கள் ரசிகர் மன்றத்தினரை வெவ்வேறு காரணங்களை ஒட்டி சந்திப்பதும் அன்பு பாராட்டுவதுமாகப் புகைப்படங்களும் செய்திகளும் வந்து கொண்டே இருந்தன.
வரலாறு அடுத்த தலைவனை சந்தித்து விட்டதாகவும் தேர்தல் வெற்றி சமீபித்து விட்டதாகவும் நம்பியவர்களில் நானும் ஒருவன். 96 ஆமாண்டு தேர்தலில் இரண்டு கழகங்களுக்கும் மாற்றாக ரஜினி உருவெடுப்பதாக வலம் வந்த எல்லா செய்திகளையும் பொய்யாக்கித் தான் நேரடியாகத் தேர்தல் அரசியலில் ஈடுபடப் போவது இல்லை என்று அறிவித்தார் ரஜினி. நாங்கள் அதை ராஜதந்திரம் என்றோம். என் அப்பா உள்ளிட்டவர்கள் அவ்வளவுதான் என்று கெக்கலித்தனர். இன்னொரு பக்கம் அரசியலில் அனல் குன்றாமல் வளர்ந்து கொண்டேயிருந்தது.
தேர்தலில் ரஜினி திமுக கூட்டணிக்கு ஆதரவாக வாய்ஸ் தந்தார். மூப்பனார் காங்கிரஸை உடைத்துப் பிரிந்து தமிழ் மாநில காங்கிரஸ் கண்டார். சோ திமுக கூட்டணிக்காக நெஞ்சார்ந்து உழைத்தார். தேர்தல் முடிவுகள் வெளியாகின.
நாலு கூட்டணிகள் தேர்தலை சந்தித்தன. வைகோ கம்யூனிஸ்டுகளுடனும் ஜனதா தளத்துடனும் ஒரு அணியை அமைத்தார். திவாரி காங்கிரஸூம் பா.ம.கவும் கூட்டாய் நின்றன. இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக் (காதர் மொய்தீன்) ஆகியோருடன் அதிமுக தேர்தல் களம் கண்டது. திமுக த.மா.காங்கிரஸ் நல்லக்கண்ணு மற்றும் சில கட்சிகள் சேர்ந்து தேர்தலை சந்தித்தன.
Some great facts about Superstar Rajinikanth's Baasha
1996 ஆமாண்டுத் தேர்தல் முடிவுகள் அப்பாவை நிலைகுலையச் செய்தன என்றால் அது தான் நிஜம். அதிமுக தோல்வியடையும் என எதிர்பார்த்திருந்த அப்பாவுக்கு வெறும் 4 தொகுதிகள் தான் வரும் என்பதைத் தாங்கமுடியவில்லை. அவருடைய அதுகாறும் பலிதம் கண்ட கணிதங்கள் பொய்த்துப் போன தேர்தல் அது. அப்பா அக்டோபரில் காலமாகும் வரையிலான அந்த நாலு மாதங்கள் தேர்தல் முடிவு குறித்து அவ்வப்போது கலக்கமாகப் பேசியதைக் கண்டிருக்கிறேன். இத்தனை பெரிய மெஜாரிட்டியுடன் திமுக வென்றிருப்பதாலும் ஜெ மீது பல வழக்குகள் வரிசையாகப் பதிவாகத் தொடங்கியதாலும் எம்ஜி.ஆர் தோற்றுவித்த கழகம் எப்படி சமாளிக்கும் என ஒரு கடைக்கோடித் தொண்டனாக கலக்க இருளில் அல்லுற்றார். குடியும் புகையும் இல்லாமல் அவரால் இந்தத் தோல்வியை எப்படி எவ்வண்ணம் மேலாண்மை செய்வது என்று தெரியாமல் அல்லாடினார். மிகச் சன்னமான குரலில் புலம்பிக் கொண்டிருப்பதைப் பல முறைகள் பார்த்தேன். அப்பா எனும் பெரும்பிம்பம் இரண்டாய் நாலாய்க் கிழிந்து உடைந்த சந்தர்ப்பங்களில் ஒன்று அந்தத் தேர்தல் முடிவு அறிவிக்கப் பட்ட நாள்.
ராசிபுரத்தில் பி.ஆர் சுந்தரம்- நத்தத்தில் நத்தம் விசுவநாதன்-அறந்தாங்கியில் திருநாவுக்கரசு மற்றும் திருவில்லிப்புத்தூரில் முரட்டு பக்தர் தாமரைக்கனி என நால்வர் மட்டுமே வென்றனர். திமுக தனியாக 173 சீட்டுகளைக் கொத்தித் தனதாக்கியது. தமிழ் மாநில காங்கிரஸ் 39 இடங்களை வென்றது. பர்கூரில் ஜெயலலிதா ஈஜி.சுகவனத்திடம் தோல்வியுற்றார்.
அப்பா 96 எலக்சனுக்கு முன்பாக சித்தப்பாவிடம் சொல்லிக் கொண்டிருந்தார். “கலைஞரைப் போல் வகை வகையான எதிரிகளை சந்தித்த இன்னொரு தலைவரைச் சொல்ல முடியாது. அவருடைய எதிரிகள் எதிரிலிருந்தும் வருவார்கள் அவரோடிருந்தும் பிரிந்து வருவார்கள். மொத்தத்தில் எதிர்ப்பு வளம் மிக்கவர் கலைஞர். தன் எதிரிகளின் எதிர்ப்பிலிருந்தே தனக்கான வளர்ச்சியை உண்டாக்கக் கூடியவர்” என்றெல்லாம் வாயாரப் புகழ்ந்தார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
இந்தத் தேர்தலில் நிச்சயம் ஜெ தோற்பார் எனத் தெரிந்தே இருந்த அப்பாவுக்கு ரஜினி நேரடி அரசியலில் ஈடுபடாமல் திமுக கூட்டணிக்கு ஆதரவு மற்றும் அதிமுக கூட்டணிக்கு எதிர்ப்பு என்ற நிலைப்பாட்டை எடுத்த போது பெருங்கோபம் வந்தது. அதனைக் கடுமையாக விமர்சித்து எங்களிடம் பேசினார் அப்பா. அரசியலுக்குத் தேவையான தைரியம் ரஜினியிடம் இல்லை. ஒரு போதும் ரஜினியால் ஒரு தேர்தலை சந்திக்க முடியாது என்றார். தேர்தல் முடிவுகளுக்கு அப்பாலும் அதே கருத்தில் உறுதிபட நின்றார் அப்பா. நான் அவரிடம் பெரிதளவில் முரண்பட்டேன். என் மனத்துக்குள் அப்போது ரஜினி மற்றும் இளையராஜா இருவரையும் வழிபட்டேன் என்று தான் சொல்லவேண்டும். என் இரண்டு கண் பார்வைகளாகவே இவர்களது திரையாளுமையைக் கருதினேன்.
ரஜினி மீதான விமர்சனத்துக்காக அப்பாவை வெறுத்தேன். அப்பா ரஜினியை முழுமையாக வெறுத்தார். முதன்முறையாக என்னிடம் ரஜினியைத் திட்டினார். நான் அப்பாவை நோக்கித் தாங்க முடியாத சொற்களைக் கற்களாக்கி வீசினேன். இரண்டொரு தினங்கள் நாங்கள் பேசிக்கொள்ளாமல் இருந்தோம். பிறகு இயல்பாக மறுபடி பேசத் தொடங்கினோம். என்னை அருகே அழைத்து என் தலையைத் தடவியபடியே சிரித்த அப்பா “ரஜினியிடம் இருக்கும் எல்லோருக்கும் நல்ல பிள்ளையாகிற விருப்பம் அவரை அரசியலில் ஈடுபட விடாது” என்றார் .அவர் சொன்னதை அப்போது மிகவும் எதிர்த்தேன். இன்றைக்கு யோசித்தால் அதுவும் ஒரு வகையில் சரிதானோ எனத் தோன்றுகிறது.