பீஷ்மபர்வம்

பீஷ்மபர்வம்

 


பீஷ்மபர்வம் பார்த்தேன். மம்முட்டி மைக்கேலாகத் தோன்றியிருக்கிறார். அமல் நீரத் தயாரித்து இயக்கியிருக்கும் படம் இது. அமல் 2004 முதல் படங்களை இயக்குகிறார். நல்ல ஒளிப்பதிவாளரும் கூட. ப்ளாக், ஜேம்ஸ் ,சாகர் அலையஸ் ஜாக்கி மற்றும் அன்வர் ஆகியவை அமல் நீரத் பெயரை வணிகப்பரப்பில் அழுத்தமாய்ப் பதிந்தவற்றில் சில. அமல் இயக்கிய அயோபிண்ட புஸ்தகம் ஒரு அற்புதம். மலையாளத்தின் ஆகச்சிறந்த முயல்வுகளில் ஒன்றாக எப்போதும் உணர்வுகூரப்படும் படம் அது. சமீபத்தில் அமல் இயக்கிய ட்ரான்ஸ் பெரும் அதிர்வுகளை உண்டுபண்ணியது. இப்போது பீஷ்மபர்வம். இது FANBOY படமா என்பது கூறுவதற்கில்லை ஆனால் இது ஃபேன்களுக்கான படம். மம்முட்டியை எவ்வளவு ரசித்தாலும் புதிதாய்க் கொண்டாடுவதர்கும் கூர்ந்து நோக்கவும் ஒவ்வொரு படத்திலும் வெவ்வேறு புத்தம் முயல்வுகளைத் தன் முகத்தில் விளைவிக்கும் நல் நடிகர் அவர். இந்தப் படத்தில் அதிகம் பேசாமல் ஒரு ஓங்கிய பெருமனிதன் கதாபாத்திரத்தில் அளந்து வாசித்திருக்கிறார். ஆனாலும் இனிக்கிறது.
இந்தப் படம் எண்பதுகளில் நடக்கிறது. கதை அப்படித் தேவையை முன்னிறுத்தி இருக்கக் கூடும். சினிமா என்பதே நிழலை நிஜம் போல் தோன்றச் செய்விக்கும் சவால். இதில் பீரியட் படம் என்பது சவால்களின் அரசன். சின்னச்சின்ன இடங்கள் கூட பார்த்துப் பார்த்து உருவாக்கி இருக்கிறார்கள். பின்புலத்தின் சித்திரங்களை ரசிப்பதற்கென்றே இன்னொரு சில முறைகள் பார்த்தாக வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தி விடுகிறது படம். பொருட்கள் ஆடை அணிகலன்கள் வசதி வாகனங்கள் தொடங்கி பெயிண்டிங்க் லைட்டிங் கட்டிடம் சாலை என எல்லாமே அந்தக் காலத்துக்குள் அழைத்துச் சென்று விடுகின்றன. மிகக் குறிப்பாகச் சொல்ல வேண்டியது இசை. பாடல்களும் பின்னிசையும் வேறொரு காலத்தின் சாட்சியமாகவே நிரம்புகின்றன
Trailer of Mammootty's 'Bheeshma Parvam' hints at an exciting noir flick | Entertainment News | English Manorama
கதை வழக்கமான பழி பகை குரோதம் கொலை காத்தலும் அழித்தலுமான கதை தான். சொன்ன விதம்..அது வேறொரு தளம். எல்லாப் படமும் படமல்ல என்பதற்கான விஷூவல் ட்ரீட் பீஷ்ம பர்வம். ஷௌபின் ஷாஹிர் ஹரிஷ் உத்தமன் நதியா மொய்து திலீஷ் போத்தன் ஃபரான் ஃபாஸில் மற்றும் பலர் நடித்திருக்கும் இந்தப் படத்தில் சமீபத்தில் காலமான நெடுமுடி வேணு மற்றும் கே.பி.எஸ்.சி லலிதா ஆகியோரும் அழுத்தமான தோற்றத்தில் நடித்திருப்பதும் கூறவேண்டியது. இதற்கு இசை சுஷின் ஷ்யாம். ஏற்கனவே ட்ரான்ஸ் மற்றும் அஞ்சாம்பாதிரா ஆகியவற்றில் வெளுத்தெடுத்தவர். இதிலும் பின்னியிருக்கிறார் இசைப்பின்னல்.
அலைஸ் எனும் மைக்கேலின் தோழி பாத்திரத்தில் நடித்திருக்கும் அனுஸூயா பரத்வாஜ். ஏற்கனவே ரங்கஸ்தலம் மற்றும் புஷ்பா படங்களில் தனக்குக் கிடைத்த வேடங்களைப் பிரமாதப்படுத்திய நடிகை. இந்தப் படம் அனுஸூயாவின் ஹாட்ரிக் ஜாக்பாட். சின்னச்சின்ன இடங்களிலும் அனுஸூயாவின் அதகளம். மென்மையான உணர்வுகளைத் தன் முகம் முழுவதும் கார்த்திகை தீபங்களைப் போல் ஏற்றி வைக்கிறார். உன்னதமான வேடவழங்கல்.

 

Anasuya Bharadwaj movies, filmography, biography and songs - Cinestaan.com

எழுபதுகளில் பிறந்து எண்பதுகளெங்கும் விழிவிரியக் கடந்தவரா நீங்கள்…அவசியம் இந்தப் படத்தை இரண்டு முறையாவது பார்த்துவிடுங்கள். கண்களில் ஒற்றிக் கொள்வீர்கள். நாஸ்டால்ஜிக் பஃபே.
அப்புறம் ஒரு விஷயம். இந்தப் படம் ஓட்டீடியில் இருக்கிறதால் தமிழில் டப்பிங் செய்யப்பட்டுக் கிடைக்கிறது. அதை அவசியம் தவிர்த்து விட்டு மலையாள ஒரிஜினலில் பாருங்கள். சில நல்ல படங்களை டப்பிங் செய்யக் கூடாது என்பதால்.