பெருங்கூட்டத்தின் கனவு

 பெ ரு ங்  கூ ட் ட த் தி ன்   க ன வு


 

எங்கே செல்கிறது சினிமா?

உலகத்தின் கதையைக் கொரோனா என்ற நோய் திருத்தி எழுதி இருக்கிறது.  சினிமா என்கிற மக்கள் ப்ரியக் கலை முன்பிருந்த சிம்மாசனத்தில் இனி இருக்கப் போகிறதா .சினிமா கடந்த ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக உலகின் பொதுக் கனவுமொழி. எந்தக் கலையுமே  அந்தந்தக் காலங்களின் வளர்சிதை மாற்றங்களைத் தன்னுள் அனுமதித்தபடி அடுத்த கட்டத்துக்குத் தன்னை மேலெழுதிக் கொள்வது முக்கியம். சினிமா அப்படியான மாற்றங்களை ஒருபோதும் புறந்தள்ளியதில்லை. இந்திய சினிமாவில் செல்வாக்கு மிகுந்த திரைவெளியாகத் தொடக்க காலம் முதலே தமிழ் சினிமாவின் பங்கேற்பு விளங்கி வருகிறது.திறமை பணம் கலை உழைப்பு என ஆக்கபூர்வ இடுகைகள் யாவற்றின் கூட்டுக் கலயமாக கலைகளின் தொகுப்பாக சினிமா இன்றளவும் தன் சிகரவீற்றல் சற்றும் குன்றிவிடாமல் இருக்கிறது.

மௌனப் படம்,  சலனத்தின் மொழியைத் தனதே கொண்டிருந்த காலத்தில் காண்போர் மனங்களில் மிகுந்த அச்சத்துடனான வியப்பை சாத்தியமாக்கிற்று. ஒரு புகைப்படத்தில் இடம்பெறுவதே ஆயுசைக் குன்றச்செய்யும் என்பதான சென்ற நூற்றாண்டின் ஆரம்ப நம்பகங்களிலிருந்து பார்த்தால் சினிமா யாவர்க்குமான கலையாக மாறியதெல்லாம் பிற்பாடு தான் என விளங்கும். ஆரம்பத்தில் சினிமா தயாரிப்பு இயக்கம் வெளியீடு தொடங்கி அதன் எல்லா முனைகளிலும் பெரும் இடர் ஏற்புடன் கூடிய ஊகவணிகமாகவே இருந்து வந்தது. முதல் ஐம்பது வருடங்கள் சினிமாவில் அதிகம் ஈடுபட்ட பல வெற்றி  நிறுவனங்கள் பிற்பாடு இருந்த இடம் இல்லாமல் போனதும் தமிழ் சினிமாவின் வரலாறு சொல்லும் தகவல் தான்.

மீறமுடியாத சாங்கியமாகவே ‘இடைவேளை’ என்பதன் இருத்தல் நிகழ்கிறது. பொதுப் புத்தியின் படி சினிமா இடைவேளைக்கு முன் பின்னாக இரண்டாகக் கிளைத்து அதுவே நிலைத்தது.  ஃபர்ஸ்ட் ஆஃப் மற்றும் செகண்ட் ஆஃப் ஆகிய இரண்டு கூறுபாடுகளாகவே சினிமாக்கள் உருவாக்கப்பட்டன. கதை என்பதன் முக்கிய மூன்று கூறுகளாக மேற்கத்தியப் பழக்கமுறை (THREE PREMISES OF SCREEN PLAY)இங்கே முற்றிலுமாகக் கைவிடப்பட்டதாகக் கருதமுடியாது. ஆனால் அதற்கும் பங்கம் வராமல் இதனையும் பகைத்துக் கொள்ளாமல் படமாக்கல் நிகழ்ந்தன. இடைவேளைக்கு முன் பின்னாக திரைப்படம் பிளவுறுவதை மாற்றாமல் திரை இலக்கணத்தையும் மீறாமல் படமாக்கல் கையாளப்பட்டது. கதையின் ஆரம்பம் யாரெல்லாம் கதைமாந்தர் என்பதை விளக்கியது. நடுப்பகுதி அந்த மனிதர்களுக்கு என்ன நடக்கிறது எப்படி நடக்கிறது என்பதை விவரித்தது. மூன்றாம் பகுதி அந்தக் கதையின் ஆதார ஓட்டம் மையப் பிரச்சினை பேசுபொருள் எங்கனம் எவ்விதம் பூர்த்தியாகிறது என்பதை க்ளைமாக்ஸ் என்ற படமுடிவு கொண்டிருந்தது. இந்தக் கண்ணறியாச் சரடு அறுந்துவிடாமல் இடைவேளைக்கு முன்னும் பின்னுமாகப் படம் இரண்டாய்க் கிழிந்தது.இடைவேளை என்பது பெரும்பாலும் ஒரு அதிர்ச்சியை/ ஏற்கமுடியாத புள்ளி ஒன்றை முன் நிறுத்தி அமைந்தது. ரசிகன் படத்தின் கதை நின்றுகொண்டிருக்கிற நிச்சயமற்ற புள்ளியை எண்ணி விகசித்தபடி இடைவேளை நேரத்தை செலவழிக்க முனைந்தான். மீண்டும் வந்து அமர்கையில் படங்கள் மறுபடியும் இடையில் நின்ற ஸ்டேஷனிலிருந்து கிளம்பி வேகமெடுக்கிற எக்ஸ்பிரஸ் ரயிலைப் போலவே படத்தின் இறுதியை நோக்கி ஓடலாயின.இடைவேளை என்பது தவிர்க்க முடியாத பெருந்தெய்வமாகவே இன்றளவும் தொடர்கின்றது.

ரசிகன் படத்தின் இரு விள்ளல்களை ஒட்டித் தன் மன அலைதல்களை அமைத்துக் கொள்ள முனைந்தான். ‘முதல் பாதி ஓகே ரெண்டாவது பாதி சரியில்லை’ என்று பல படங்களை நிராகரித்தான். அரிதாகச் சில படங்கள் ‘முதல் பாதி இழுவை இரண்டாம் பாதி செமை வேகம்’ என்று போற்றப் பட்டன. முற்றிலுமாக ரெண்டு துண்டங்களும் நன்றாக அமைந்த படங்கள் பெருவெற்றி அடைந்தன.இடைவேளை என்பது முற்காலத்தில் ப்ரொஜக்டர் மாதிரியான  படக்கருவிகள் சூடாகிக் கொண்டே செல்வதிலிருந்து தற்காலிக இளைப்பாறல் ஒன்றை ஏற்படுத்தித் தருவதற்காக செய்யப்பட்ட நிர்வாக ஏற்பாடு. அதனை பயனுள்ள விதத்தில் மாற்ற ரசிகர்கள் தின்பண்டம் வாங்க, ஒப்பனை அறை சென்று மீள வழங்கப்படலாயிற்று. பிற்காலத்தில் தொடர்ந்து ஒளிபரப்பினாலும் சூடாகாத க்யூப் சிஸ்டம்  முறைக்கு சினிமா மாறிய பின் டிஜிடல் சினிமா அற்புதங்கள் சாத்தியப்பட்ட பின்னரும் கைவிட முடியாத கரடியாகவே இடைவேளை என்ற வஸ்து படுத்திக் கொண்டிருக்கிறது. இடைவேளை விடாமல் சினிமா ஏற்படுத்தக் கூடிய பார்வை அனுபவம் இன்னும் இந்திய நிலத்தில் பெருங்கண்ணோட்டத்தின் முன் சாத்தியமாகவே இல்லை. அவரவர் தனி அல்லது சொந்தத் திரையிடல்களில் வேண்டுமானால் சினிமாவை வெட்டுக்கத்தி தீண்டாத முழுப் பதார்த்தமாகக் கண்ணுற முடியும்.
கதை சினிமா- பாடல் சினிமா-சண்டை சினிமா என்பதான பிரிவுகள் இன்றைக்குக் கலந்து கட்டியாக மாறிவிட்டன. பேய்ப்படம் நகைச்சுவைப் படம் சரித்திரப் படம் என்பனவெல்லாம் இன்றைக்கு ஒன்றுக்குள் மற்றது பொதிந்து போயிருக்கிறது. முன்பிருந்த எல்லாமே கலைந்து சினிமாவின் சித்திர நிறங்கள் மெல்ல வெளிறத் தொடங்கி இன்றைக்கு நிறமற்ற நிறம் ஒன்றில் சினிமாவின் நகர்தல் குவிந்து கொண்டிருக்கிறது.

இரண்டாயிரத்துக்கு அப்பால் சினிமா அதுவரையிலான தன் எல்லாப் பற்றுதல்களிலிருந்தும் விடுபடத் தொடங்கியது. ஒரு புறம் மொழி என்ற எல்லையை மிதமாக மீறத் தொடங்கிய படங்கள் வெளிவந்தன. எப்போதுமே ஒரு நிலத்தில் வெற்றி பெற்ற படங்கள் மற்ற மொழிகளுக்குப் பெயர்ந்துவருவது சினிமாவில் வழக்கம் தான் என்றாலும் இரண்டாயிரத்துக்கு அப்பால் பட்ஜெட் என்ற விஷயம் பட்டத்துக்கு வந்தது. சினிமாவின் முகம் பல மாற்றங்களை  அடையத் தொடங்கி இன்றைக்கு அது வந்து நின்று இருக்கக்கூடிய இடம் ஒருவித நகர்தலற்ற முகடு என்று சொல்லத் தோன்றுகிறது.சினிமா தன் கனத்தை முற்றிலுமாக இழந்து உடைந்து சிதறக் கூடிய இடத்தை வந்தடைந்து கொண்டிருப்பதாகவோ அப்படியான இடத்தைக் கடந்துகொண்டிருப்பதாகவோ கொள்ளலாம்.

ஒரு புறம் OTT எனப்படுகிற ஆன்லைன் டேபிள் டாப் சினிமாக்கள் நேரடியாக பார்வையாளனைத் தேடி அவன் வீட்டுக்குள் செல்லத் தொடங்யிருக்கிறது. இன்னொரு பக்கம் வெப் சீரீஸ் என்பதான அளவில் பெரிய-பொட்டலத்திற்குள் அடுக்கப்பட்ட – சினிமாவின் வேறுவடிவம் வசீகரிக்கிறது. BUNDLE CINEMA என்பதாவது முன்பிருந்த நாடகம் டெலி சீரியல் சீரியல் இவற்றைத் தாண்டி நேர அளவு அதிகரிக்கப் பட்ட எபிஸோட் சினிமா என மாற்றம் கொண்டிருக்கிறது. சினிமாவின் பல்வேறு பெருந்தலைகள் இவற்றுக்குள் ஈடுபடத் தொடங்கிவிட்டனர். சினிமா முன்பிருந்த சீருடையில் இனி இருக்காது என்பது புரிகிறது.
மெயின் ஸ்ட்ரீம் சினிமா வணிக சினிமா பொழுதுபோக்கு சினிமா  மெல்லப் பல மாற்றங்களை உட்கொண்டவண்ணம் மாறுகிறது.

சினிமா முன்பு பிடித்துக் கொண்டிருந்த கதை சொல்லும் முறை காட்சிக் கோர்வை திரைக்கதைத் திருப்பங்கள் க்ளைமாக்ஸ் என எல்லாமே சரிந்து சிதைந்து உருமாற்றங்களோடு திகழ்கின்றன.பாடல்கள் முன்பிருந்த ராஜ ஆசனத்தில் தற்போது இல்லை.  ஒரு படத்திற்கு ஐந்து அல்லது ஆறு பாடல்கள் என்று இருந்த 90களின் சினிமா இப்போது இல்லவே இல்லை.இப்போதைய படங்களில் படத்திற்கு உள்ளே வெளியே மொத்தமே இரண்டு பாடல்கள் இருந்தால் அதிகம் சென்ற நூற்றாண்டின் இறுதி வரை பாடல்கள் சினிமாவுக்கான முதல் நோக்கு விளம்பரம் என்பதில் துவங்கி சினிமாவை ஓட வைக்கிற   துரித ஊக்கிகளாகவே பார்க்கப்பட்டது .ஆனால் இந்த நூற்றாண்டில் பாடல்கள்  தேவையற்ற தேவையாக வெளியேறி நிற்பதை உணரலாம். பாடலாசிரியர்கள் இசையமைப்பாளர்கள் பாடகர்கள் எனச் சென்ற நூற்றாண்டின் மிகுதி செல்வாக்கு மனிதர்கள் கையில் இப்போது பாடல்கள் இல்லை.பாடல்கள் உள்ளும் புறமுமாக அவற்றின் அமைப்பை இழந்துவிட்டன. ஒரு பாடலின் ஓட்ட காலம் அதிகபட்சம் ஆறு  ஐந்து  நான்கரை நிமிடங்கள் என்றெல்லாம் இருந்தது தற்போது இல்லை
பாடல் தொடங்குவதற்கு முந்தைய இசை பல்லவிக்கான இசை பல்லவிகளுக்கு இடையிசை இரண்டு அல்லது மூன்று சரணங்கள் என முந்தைய அமைப்பு வலுவிழந்து விட்டது. 70களின் இறுதிவரை மூன்று சரணங்கள் என்றிருந்த தமிழ்த் திரைப்பாடல்கள் எண்பதுகளில் 2 சரணங்கள் ஆக மாறிய போதும் பாடலின் வடிவம் அப்படியே தான் இருந்தது சரணங்களுக்கு முன்பின்னாக  இரண்டு அல்லது மூன்று முறை பல்லவி ஒலிக்கும் இன்றைய பாடலின் கட்டுமானம் ஒருமுறை பல்லவி ஒரே ஒரு சரணம் மீண்டும் ஒரு பல்லவி அல்லது அதுவும் இல்லை என்கிறாற் போல் வடிவங்கொள்கிறது. இனி எதிர்வரும் காலத்தில் பாடல்கள் துக்கடா பாடல்களாக உருவமற்ற பாடல்களாக பல்லவி/ சரணம் ஏதுமற்ற ஒற்றைகளாக மாறிவிடும் என சொல்லத் தோன்றுகிறது

மூன்று மணி நேரம் ஓடிய படங்கள் இப்போது இல்லை. இப்போதைய படங்களின் அதிக பட்ச ஓட்டநேரம்  அறுபது+நாற்பது என நூறு நிமிடங்களாய்ச் சுருங்கி விட்டது. இனி வரும் சினிமா இன்னும் சுருங்கி ஒரு மணி நேரம் என்றாகக் கூடிய வாய்ப்பு இருக்கிறது அப்படி ஆகும் போது கதையிலிருந்து நாயகன் கிட்டத் தட்ட வெளியேற்றப் படலாம். நாயகன் தன் அதிமனித பிம்பத்தை முற்றிலுமாக இழந்துவிடுவான்.எல்லாமே மாறும் அல்லது சலித்துப் போகும் என்கிற கொள்கையின் பிரகாரம் இன்னும் அதிக பட்சம் 5 அல்லது 10 வருடங்கள் இந்த நாயக வழிபாடு தாக்குப் பிடித்தால் அதிகம்.

இன்றைக்கு எந்த நடிகருக்கும்  தனித்துவமான கதைகள் உருவாக்கப்படுவது இல்லை சினிமா இன்று நாயகனை ஒரு பொது-முகம்-மூடிய நாயகனாக நிர்ப்பந்திக்கிறது.எல்லோருமே எதிரிகளை பறந்து பறந்து அடிப்பவர்கள் நாயகிகளை மிகவும் வெறிகொண்டு நேசிப்பவர்கள் தனக்கென்று வாழ்க்கை முழுவதற்கும் நடப்பதற்கான தனி நியாயக் கொள்கை ஒன்றை வைத்திருப்பவர்கள்  வானத்தை பார்த்து முடிவு எடுப்பவர்கள் நேருக்கு நேராய் வசனம் பேசுகிறவர்கள் ஆக முடியாத காரியங்கள் பலவற்றை செய்பவர்கள் எப்போதும் வெல்பவர்கள் எல்லோரையும் கொல்பவர்கள், மிக முக்கியமாக மிகுந்த பில்டப்புகளுடன்  தோற்றுவிக்கப்பட்ட வில்லன்களை  பூச்சி போல் கையாண்டு ஜெயிப்பவர்கள்.நாயகனுக்கும் வில்லனுக்குமான குணாம்ச வேறுபாடுகள் குன்றித் தீர்ந்து போயிருக்கின்றன. நல்ல மற்றும் கெட்ட என்பதான சென்ற நூற்றாண்டுப் பார்வை முற்றிலுமாக அற்றுப் போய் கெட்ட மற்றும் கெட்ட என்பதாக நாயக வில்ல பாத்திர வகைமைகள் வேறுபடுத்தக் கடினமாக உள்ளன. நாயகர்கள் நுழைய முடியாத இடங்களில் நுழைவார்கள்   செய்ய முடியாத காரியங்களை செய்வார்கள் எதிலுமே எந்த ஒரு காரண நியாய பொருத்தமும் இருக்காது இன்றைய ஹீரோயிசம்  மாபெரும் கூட்டு-மன-நோய்மையின் அவரவர் பெயர்தாங்கிய விள்ளல்களை சந்தைப்படுத்துவதன்றி வேறில்லை. சில பல படங்களின் முக்கியக் கட்டங்களில் நல்லா அடிங்க ஸார்..சாத்துங்க ஸார்’ என்று நாயகனை வில்லன் அடிக்கும் போது கரவொலிகள் தந்து வில்லனுக்கு சாதகமாகப் படம் பார்ப்பவர்கள் ஆங்காங்கே குரல் தருவது பகடி அல்ல ஒருவித வேதனையின் வெளிப்பாடு.

படத்தின் கதை சொல்லும் முறைகள் மாறி வருகின்றன. எப்படி எண்பதுகளின் இறுதியில் திரைப்படக் கல்லூரி மாணவர்களின் வருகை பெரிய சலனத்தை ஏற்படுத்தியதோ அப்படி இன்றைய காலத்தில் சினிமாவின் வழக்கமான குருகுல முறையை முற்றிலும் நிராகரித்த படி எழுந்து வரக் கூடிய புதிய இயக்குனர்களின் வெற்றி பேசுபொருளாக மாறி இருக்கிறது. சினிமாவில் முன்பிருந்த அதே குருகுல முறை இன்னமும் இருப்பது போலவே தோற்றமளித்தாலும் மாபெரும் இரும்புத் திரை அப்படியே இருக்கையிலும் உள்ளே மாற்றங்கள் நிகழாமல் இல்லை என்பதும் நிசமே. சென்ற நூற்றாண்டில் ஒரு பெரிய இயக்குனரிடம் அடுத்தடுத்த உதவியாள-சந்ததியினர் வரிசையாக வெளிப்படுகிறாற் போல் இன்றைய திரை உலக நடைமுறை இல்லை. ஒரே இயக்குனரிடம் ஒரு உதவியாளர் பத்து வருட காலம் உதவி இயக்குனராக இருந்து ஏழெட்டு படங்கள் தொழில் கற்றுவிட்டு பிறகு நிதானமாக தன் முதல் படத்தை இயக்குவதெல்லாம் இன்றைக்கு  சினிமா வந்தடைந்திருக்கிற இடத்தில் சாத்தியமற்றவை.

லாஜிக் என்கிற தர்க்க நியாயங்கள் முந்தைய காலத்தில் கண்ணில் விளக்கெண்ணை ஊற்றி பார்க்கப்பட்டன. துப்பாக்கியிலிருந்து வெளிவரும் ஆறு குண்டுகளை விடாமல் எண்ணிய தலைமுறை ஒன்று இருந்தது.இன்றைக்கு லாஜிக் என்பது குறித்து பெரிதும் கவலை கொள்ளாத திரை உருவாக்கங்கள் மலிந்துவிட்டன இப்போதைய படங்களில் பார்ப்பதற்கு சுவாரஸ்யமாக இருந்தால் போதும் என்பது பொது விதியாகியிருக்கிறது.

ரசிகன் பாதி நாயகனாகத் தோன்ற இடமின்றித்  திரைக்கு முன் ததும்புகிறான்.முன்பிருந்த நெடியடிக்கும் கொசுக்கள் மொய்க்கிற வெளிப்புற டிக்கட் கவுண்டர்கள் இப்போது இல்லை. இப்போதைய ரசிகன் ஆன்லைனில் டிக்கட் உடன் சேர்த்து காம்போ ஆஃபரில் தின்னவும் கொறிக்கவும் பண்டங்களை புக் செய்துவிட்டுக் கிளம்பி நேரே வந்து பதவியேற்றுக் கொள்கிறவனாக மாறிவிட்டான்.இந்தப் பெருநோய் காலம் தீர்ந்து திறக்கப்பட்டால் தான்  திரை அரங்குகள் முன்பிருந்த அதே அமர்விட ஏற்பாடுகளுடன் தொடருமா என்பது தெரியவரும். உலக அரசுகள் முன்பிருந்த கருணையோடு கேளிக்கைத் தலங்களைக் குறிப்பாக திரையரங்குகளை அணுகுமா என்பதே கேள்விக்குறிதான். இந்த இடத்தில் 175 நாட்கள் தினமும் 4 காட்சிகள் அரங்கு நிறைந்து வெள்ளிவிழா பொன்விழா ஒரு வருடம் இப்படியெல்லாம் ஓடி சாதனை புரிவதெல்லாம் திரும்ப முடியாத ஞாபக ஏக்கமாகவே மாறுகின்றது.

நேரடியாக ஆன்லைனில் வெளியாவதே இப்போதைக்கு திரைப்படங்கள் வெளியாகிப் பணம் ஈட்டுவதற்கான நல்லதோர் மார்க்கமாகக் கைக்கொள்ளப் படுகிறது. இனி இன்னும் படங்கள் இப்படி வெளியாகலாம்.திரைப்படம் முற்றிலுமாக ஓடு உடைந்து மஞ்சள் மற்றும் வெண்மை நிறமாக தனித்தனியே மிதந்து கொண்டிருப்பதை உணர முடிகிறது. மொழியை அறிவது திரைப்படங்களை ரசிப்பதற்குத் தடையாக இல்லை.ஆன்லைனில் சப்டைட்டில்களுடன் தெலுங்கு மலையாளம் கன்னடம் இந்தி போன்ற பிற மொழி படங்களை தேடித் தேடிப் பார்த்தபடி மனம் பூக்கிறான் நவயுக ரசிகன். இன்று கைபேசியில் பல சேனல்களை பார்க்கும் வசதி வந்து விட்டது. முன்பு தனக்குப் பிடித்தவற்றை சேமித்துக் கொண்டிருந்த காலம் மாறிவிட்டது. இணையம் ஒரு மாபெரிய சேகரக் கலயமாக மாறியுள்ளது. தான் விரும்பிய பாடலை காணொளியை வசனத்தை ஏன் முழுப் படத்தை இன்று வேண்டும்போது சட்டென்று திறந்து பார்த்துக் கொள்வது எளிதாகியிருக்கிறது.

இனி எதிர்காலத்தில் இன்னும் சினிமா என்னவெல்லாம் மாறும்..?

ஒரு மணி நேரமே ஓடும் சினிமாவின் எதிர்காலத்தில் இடைவேளைகள் இருக்காது படத்தின் நடுவே தின்பண்டங்கள் பரிமாறப்படுவது வலுப்பெறும். மீண்டும் டிரைவ்-இன் திரையரங்குகள் மிகும்.   சமூக  பரவலுக்கு எதிரான  தனி நபர் இடைவெளி என்னும் கூற்றினை முன்வைத்து புதிய திரையரங்குகள் தோன்றக்கூடும் அதிக பட்சம் அறுபது எழுபது பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய சிறு-திரையரங்குகள் அதிகரிக்கும்.  ஒரு நாளைக்குப் பத்துக் காட்சிகள் வீதம் திரையிடல் நிகழும்   பாதி உண்மை என்கிற அளவில் ஒரு நிஜத்தை மையமாக வைத்து அது சார்ந்த அலசல் திரைப்படங்கள் வரக்கூடும். முழுவதுமான இசை அடிப்படையிலான படங்கள் ஒரு மணிநேரமும் பாடல்கள் நிரம்பிய படங்கள் வந்தால்கூட வியப்பில்லை அப்படியே விளையாட்டு சார்ந்த படமற்ற படங்கள் வரலாம்.

இன்னும் ஆருடம் சொல்வதானால் தொழில்நுட்பம் அசுரவேகம் எடுப்பதன் மூலம் திரைப்படங்கள் மீதான ரசிக ஆளுமை அதிகரிக்கலாம். தங்களுக்கு விருப்பமான படங்களைக் கலைத்து புதிய படங்களை உருவாக்கும் தொழில்நுட்பங்கள் வரும். ஒரு உதாரணத்துக்கு சொல்வதானால் ‘ஜிம்’ என்ற நடிகர் நடித்த ‘ஜூஜூ’ என்ற படத்திலிருந்து அவரை உருமாற்ற செயலி மூலம் மாற்றி ‘கிம்’ என்ற நடிகர் நடிப்பதாகக் கூடப் பார்க்க முடியும். இன்னும் பல படங்கள் மொழிகளைத் தாண்டிக் கலைந்தும் சேர்ந்தும் புதிய படங்கள் உருவெடுக்கக் கூடும்.கொலாஜ் சித்திரங்களைப் போல் சினிமாக்களிலிருந்து சினிமா உருவாக்கம் அடுத்த படிநிலைகளை எட்டும்.

 

சற்றே பெரிய குறும்படங்கள் செல்வாக்குப் பெறும். குறும்படங்கள் சினிமாவுக்கும் பொதுசமூகத்துக்கும் இடையிலான தூரத்தைக் குறைக்கும். பள்ளி கல்லூரிப் பாடத்திட்டங்கள் சினிமாவை உட்கொண்டு சினிமாவை நோக்கி கல்விமுறையை விரிவுபடுத்தினால் நல்லது.  சரிகை சலசலப்போடு வாழ்வுக்கு எதிர்த் திசையில் எங்கோ தூரத்தே வட்டமடிக்கிற காற்றாடியைக் கையில் பற்றுகிறாற் போல் சினிமாவின் சாத்தியங்களைச்  செறிவுபடுத்தலாம்.சினிமா பெருங்கூட்டத்தின் கனவு .அதனை மெய்ப்பாடு நோக்கி நகர்த்துகிற காலம் தொலைவில் இல்லை. ஒருவேளை கொரோனா எனும் உலகளாவிய திரைக்கதையில் திரை சார்ந்த ட்விஸ்ட்
ஆகவும் மேற்படி மாற்றங்கள் அமையலாம் யார் கண்டது