ராஜாவிண்டே ஸ்வப்னம்


                                                 ரா ஜா வி ண் டே     ஸ் வ ப் ன ம்


பெயர் தெரியாத திரைப்படம் ஒன்றின் இடைக் காட்சி போல் அந்தக் கணம் ஒழுகிக் கொண்டிருந்தது. பெரிய ஹாலில் தரையில் படுக்கை விரித்து சினிமா பார்த்தபடியே உறங்குவது அவனுக்குப் பிடித்தமானது. மின்சாரம் துண்டிக்கப்பட்ட பொழுது சொந்தமும் அன்னியமுமாக முதுகில் பனியன் ஒட்டிக் கொள்ளுமளவு வியர்வை. நவீனுக்கு எரிச்சல் வந்தது. கோபம் அடக்கும் போது அதன் எனர்ஜியே வேறு என அவனது மேலதிகாரி ரத்தன் சொல்லுவார். செய்ய ஏதுமில்லாத காரணத்தால் உறங்கத் தொடங்கியிருந்தான். இப்போது அந்த உறக்கம் கலைந்தது எரிச்சலின் காரணம். கண்களைத் திறந்து இருளைப் பழக முயன்றான். மிக மெல்லிய சிகரட் புகை எங்கிருந்து வருகிறது? இதென்னது, பூட்டிய அறைக்குள் யார் சிகரட் பிடிக்க முடியும் நவீன் நம்பாமல் தன் விரல்களைப் பார்த்துக் கொண்டான். “டாம் இட் நான் சிகரட்டை நிறுத்தி விட்டேனே, ஞாபகத்திலிருந்தா இத்தனை தாமதமாய்ப் புகைகிறது?”

செறுமல் ஒலி கேட்டது. இவன் பயத்தை தனக்குள் அடக்கிக் கொண்டு “யாரு?” என்றான். இதென்ன கேள்வி என சிரிப்பும் வந்தது. கதவைத் தட்டினால் யார் என்று கேட்பதில் அர்த்தம் உண்டு. இங்கே பூட்டிய வீட்டினுள் உறக்கத்திலிருந்து எழும் நேரம் யாரோ செறுமினால் அதை எப்படி எதிர் கொள்வது? வாழ்க்கை யதார்த்தப் படர்க்கையில் எதையோ திறந்திருக்கிறது.
‘இது இன்று என்கிற நேற்றின் அடுத்த நாள் தானா அல்லது வேறெங்கேயோ எழுந்திருக்கிறேனா நான்?’

“நவீன் பயப்படாதீங்க” குரல் வந்த திசையைப் புரிந்து கொள்ள முனைந்தான். வித்யாசமான வாசனை, தூசி மழை, எங்கிருந்து வருகிறது வெளிச்சம்? இருளோடு குறைந்த பட்ச சமரசம் செய்வது போல மாபெரிய கூடத்தில் சின்னஞ்சிறு மெழுகுவர்த்தி போல ஒளிர்ந்தால் எப்படிப் போதும்? சன்னமாக ஒளிர்ந்தது. இவன் தொண்டையை ஈரம் செய்துகொள்ளச் சிரமப் பட்டு ‘யாருங்க?”, கையில் பிடிக்க எதாவது கழி மாதிரி கம்பெதாவது கிடைக்குமா என்று பார்வையில் தேடினான். மறுபடி அந்தக் குரல் “பயப்படாதீங்க. இங்க பாருங்க” சற்றே அதிகாரமாக ஒலித்தது. இந்தக் குரலை எங்கே  கேட்டிருக்கிறான். யாருடையது என்று புரியவில்லை ஆனால் பரிச்சயமானது தான் நிச்சயமாக. அந்த ஒரு விசயம் ஆறுதலாக இருந்தது. இப்படி எதிர்பாராமல் எதாவது அபூர்வம் அல்லது அமானுஷ்யமாக நடக்கும் போது எதாவதோர் சாதகமான புள்ளி தேவைப்படுகிறது தானே?

அறையின் இருள் சித்திரம் நவீனுடைய கண்களுக்குப் புலப்படத் தொடங்கியது. அறை இடது மூலையில் பியானோ, அதன் முன் நாற்காலியில் கால் மேல் கால் போட்டு யாரோ அமர்ந்திருந்தது தெரிந்தது. சொடக்கிடுவது போல் வலது கையில் முனையில் சிகரட் தன் கடைசி ஒளிப்புகையைக் கமழ்ந்தது. அலட்சியமாகத் தன் காலைத் தரையில் சுரண்டிக் கொண்டு அமர்ந்திருப்பது யார்? அதை விட முதல் வினா எப்படி பூட்டிய அறைக்குள் நுழைய முடியும் என்று தான் இருக்க வேண்டும். ஒரு அசாதாரணம் அடுத்த ஒன்றை முன் நிறுத்தித் தான் மங்கிப் போவதன் விசித்திரத்தை எண்ணும் போதே மின்சாரம் மறுபடி உயிர்த்தது. அறை முழுவதும் ஒளியின் பசிக்கு இரையானதில்  இருள் முழுமையாக அற்றுப் போய் குழந்தை சொன்ன விடுகதை  விடையறியும் கணம்  போல் சாதாரணமாக மாறத் தன் சொந்த அறை எனும் நிம்மதித் தொடர்ச்சியோடு பியானோ மூலையைப் பார்த்தான்.

சுந்தர்பாபு
“மைகாட்”
சுந்தர் பாபூ

நவீன் வார்த்தைகளைத் தேடினான்.

பியானோவுக்கு சற்றே மேலே சுவரில் சுந்தர்பாபுவின் ப்ளாக் அண்ட் ஒயிட் படம் கண்களை மூடிய முகத்தின் எக்ஸ்ட்ரீம் க்ளோஸ் அப் உறைதல் ‘சகோதரன்’ படத்தில் அவரது தோற்றத்தின் ப்லோ அப்பை ஃப்ரேம் செய்து மாட்டி இருக்கிறான். வதனா இந்த அறைக்கு வரும்போதெல்லாம் சொல்வாள் “எதுக்குப்பா இவ்ளோவ் பெரிசாப் படம்?மூடிய கண்களால அந்தாள் நம்மளை நோட்டம் விட்டுக்கிட்டே இருக்கார்னு தோணுது. நம்ம கல்யாணத்துக்கப்பறம் இதே படத்தை சைஸ் சின்னதாக்கி வச்சிக்க. இவ்ளோ பெரிசு வேணாம் ப்ளீஸ்”. மூன்றரை வருடக் காதல் முடிவுக்கு வந்து வதனாவுடன் அவனுக்கு ப்ரேக் அப் ஆகி 2 மாதமாகிறது. அவனாக எதையுமே  தேடியதில்லை. கால் கடுத்து காத்திருந்து கெஞ்சி மண்டியிட்டு மலர் நீட்டி யாசித்துப் பெறுவதற்கு காதல் பிச்சைப் பதார்த்தமா என்ன? அவனது உலகத்தில் பல வார்த்தைகளுக்கு வேலையில்லை. காதல் ஒப்பந்தம் ரத்தான அடுத்த இரண்டு தினங்கள் அவன் மொத்தம் முன்னூற்று நாற்பத்தேழு பாடல்கள் கேட்டான். மொழிகளின் முதுகில் உலாவித் திரும்பும் போது அவன் தலைக்குள் யாரோ சாதகம் செய்து கொண்டிருந்தார்கள். குளிர் ஷவரில் அரைமணி நேரத்துக்கு மேல் நின்றான். தலை துவட்டி முடித்துத் தன் கட்டிலில் சாய்ந்தவன் ம்யூசிக் சிஸ்டத்தில் சுந்தர்பாபுவின் பாடல் ஃபோல்டரைத் தான் திறந்தான். ஒவ்வொரு பாட்டாக அவர் குரலின் பொறுப்பில் தன் அன்றைய இரவை,  கனவை, உறக்கத்தின் துகள்களை ஒப்படைத்தவன் கொண்டதறியாமல் தூங்கிப் போனான்.

நம்ப முடியாத ஒன்று என்று புத்திக்குப் பட்ட ஒரு விசயத்தை எப்படி எதிர்கொள்வது, எப்படி எடுத்துக் கொள்வது?

எப்போதோ இறந்து போன ஒருவரால் இப்போது இங்கே எப்படித் தன் முன் அமர்ந்திருக்க முடிகிறது?  இதென்ன லாஜிக்?

தன் தொண்டையைச் செறுமிக் கொண்டவராய்
“லாஜிக்…நல்லதொரு வார்த்தை நவீன். இதிலிருந்து நமது உரையாடல் தொடங்கட்டும். உங்கள் மனதில் இப்போது கூட  பார்க்க முடியாத ஒருவனைப் பார்க்கிற சந்தோஷத்தை விட எப்படி அவன் இங்கே வரமுடிந்தது என்கிற தர்க்கம் தான் அரிக்கிறதல்லவா..? உங்களை நான் பார்க்க வந்தது யதார்த்தமோ சுயநலமோ திட்டமோ சதியோ எதுவுமோ அல்ல நவீன். இதொரு ஏற்பாடு. இதனை யார் செய்கிறார்கள் இதனால் ஆய பயன் என்ன என்பதைப் பற்றி எல்லாம் கேட்டுப் பதில்கள் அறிவதெல்லாம் நடவாது. உங்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறேன். நான் என் ஞாபகத்திலிருந்து வந்திருக்கிறேன். எப்படி என் எப்போதோ பதிந்த குரலை நீங்கள் இந்தக் கணத்தில் ஒலிக்க விட்டு  அதை இன்னொரு முறை நிகழ்த்துகிறீர்களோ அப்படி  என் நினைவுகளின் மீவருகையாக நான் வந்திருக்கக்கூடும். உடல் உயிர் என்பனவற்றைத் தாண்டி மூன்றாம் ஒன்றாக ஆன்மா என்பதைச் சொல்லலாம். உங்கள் வசம்  உங்கள் உடல் உயிர் ஆன்மா மூன்றும் தற்போது இருக்கிறதல்லவா..? அப்படிப் பார்த்தால் என்வசம் தற்போது இருப்பது என் ஆன்மா மட்டும் தான். என் ஆன்மாவின் குரலும் உடலுமாக உங்கள் முன்னால் நிகழ்கிறேன். இந்த நமது சந்திப்பு சீக்கிரத்திலேயே உங்களுக்கு மறந்துவிடும். தற்கணம் ஒரு மழையின் பொழிதல் போல உங்களை நனைத்தாலும் இந்த மழையின் அனுபவம் தவிர உங்களுக்குள் ஒரு துளி ஈரம் கூடத் தேங்காது”.

அவரது குரலைக் கேட்க முடிவதன் அதிசய உட்புறம் இன்னும் இருந்து கொண்டிருந்தான் நவீன். எல்லாச் சொற்களுமே  எதோ நெடுந்தூரத்தின் சன்னத்துடன் ஒலித்தன.

“காலம் தனக்காகத் தான் பலவற்றை நிகழ்த்திக்குது. மனிதர்கள் அவற்றைத் தமக்காக என்றெண்ணுவது அவர்களுடைய வசதிக்கான பிசகு. என் தோன்றலைக் குறித்து யாதொரு பயமும் வேண்டியதில்லை நவீன். நான் கெடுதல் எதையும் செய்யப் போவதில்லை” அதே குரல். அரை நூற்றாண்டுக்கு முன்னால் இருந்த பல படங்களில் பார்த்துக் கேட்ட குரல். வித்யாசமான, எல்லோருக்கும் அவ்வளவு எளிதாக வாய்த்திராத குரல்.

சுந்தர் பாபு ஒரு பிரசங்கியின் சலனமற்ற தொனியில் பேசினார். நவீன் கண்களை இமைக்கத் தோன்றாமல் இருந்தான்
“நான் ஏன் உங்களைத் தேடி வந்தேன்? உங்களுக்கு என்னோட நடிப்பு மேல பெரும்ப்ரியம் இருக்கு. உங்களை சேர்ந்த யாருக்குமே என் மீதான உங்க அபிமானம்  தெரியாம இருக்காது. இந்த அறையில் என் எவ்ளோ பெரிய படம் இருக்குது..? நான் நடிச்ச படங்கள் எல்லாத்தையும் பார்த்திருக்கிறீங்க. என்னைப் பற்றிய செய்திகள், புத்தகங்கள், பேச்சு, தகவல்னு ஒண்ணு விடாம சேகரிச்சு வச்சிருக்கிங்க. என் பாடல்கள் மேல உங்களுக்கு இருக்கிற மரியாதை அதான் விஷயமே.. நான் செத்தப்புறம் தான் நீங்க பொறந்தீங்க. என் பாட்டுத் தான் உங்களுக்கு உயிர். தன் காலத்ல ஒரு முறை கூட சந்திக்காத, தனக்கு முன்னாடி வாழ்ந்திட்டுப் போன ஒருத்தன் மேல நீங்க வச்சிருக்கிற பற்றுதல் அமேஸிங். இது ஒருவகையில எனக்குத் தீராக்கடன் தான். அதான் அசாத்தியம் சாத்தியம் இந்த மாதிரி பொது விதிகளை எல்லாம் உடைச்சிட்டு ஒரு தடவை உங்களை நேர்ல பார்த்துட்டுப் போயிடணும்னு தோணுச்சி. உங்க காதல் தோத்துப் போன பிறகு வந்த இரவுகளை நீங்க டீல் செய்த விதம்.. என் வாழ்க்கையை எக்ஸ்டெண்ட் செய்து இன்னொருத்தன் வாழ்றாப்ல ஒரு சந்ததித் தனம் தெரிஞ்சுது. .அதான் உங்களைப் பார்க்க வந்தேன் நவீன். உங்க அனுமதி இல்லாம உங்க அறைக்குள்ளே நுழைஞ்சிட்டதுக்கு என்னை நீங்க மன்னிக்கணும்”.

நவீன் தனக்கு முன்னால் காட்சியாக நிகழ்வதை நம்பமுடியாத உறைதலில் இருந்தான். அவனுக்கு அதை எப்படி பத்திரப் படுத்துவது, எப்படி நம்புவது, என்ன செய்து சந்தேகிப்பது, எதுவும் தோன்றவில்லை. அவனுக்கு இப்போது முப்பத்தைந்து வயது. பத்து வயதிலிருந்து சுந்தர்பாபுவைப் பிடிக்கும். “எனக்காக அன்பே எனக்காக இந்த உலகில் நீயும் பிறந்து வந்தது எனக்காக” என்ற பாடலை அவன் முதன்முதலில் ப்ளாக் அண்ட் ஒயிட் டெலிவிஷன் ஒன்றில் பார்த்தான். அதை நினைவில் வைத்திருந்து அப்புறம் எங்கெல்லாம் அதைக் கடக்க நேர்கிறதோ அப்போதெல்லாம் அதிலேயே லயிப்பான். ஒரு பெயராக சுந்தர்பாபு அவனுக்குள் மெல்லப் பதிந்தார். அவன் வயதுகள் ஏற ஏற அவனுக்கு மட்டும் சொந்தமான அவன் பார்த்துப் பார்த்து உருவாக்கிக் கொண்ட பிரத்யேகம் ஒன்றுக்குள் மிகுந்த செல்வாக்குடைய நபராக சுந்தர்பாபு மாறினார். அவனைச் சார்ந்த பலருக்கும் தற்கண ராஜாக்களாக நிகழ்காலத்தின் பல நடிகர்களைப் பிடித்தபோதிலும் நவீன் குறையாமல் கொண்டிருந்த சுந்தர்பாபு மீதான அபிமானம் களங்கமற்றது.

என்னென்னமோ தோன்றியது. வார்த்தைகள் எழவேயில்லை. என்ன செய்தாவது தன்னைத் தேடி வந்திருக்கக் கூடிய நட்சத்திர மனிதனை கவுரவிக்க வேண்டுமே என்பது தான் சிந்தனையில் ஓடிக் கொண்டிருந்தது. சுந்தர்பாபு அவன் மனதை முழுமையாக வாசித்துக் கொண்டிருந்தார் என்பதும் புரிந்தது.

“அதெல்லாம் எதுவும் தேவையில்லை நவீன். நான் சந்திக்க நம்பகமான ஆட்கள் வெகுசிலர் தான் இப்ப இருக்கிறாங்க. இது காலம் செய்ற விளையாட்டு. இந்தக் காலத்தைப் பொறுத்தவரைக்கும் நானெல்லாம்  நினைவாலயம் மாதிரி ஒருவிதமான ஞாபகச்சிற்பம் மாதிரித் தான். செல்வாக்கான நன்மைகளை மட்டும் மேலெழுதிக்கிடுறது மனிதனோட விருப்பம். எனக்கு மட்டுமா? எல்லார் கதைக்குமே ஒரே முடிவு தான். மெல்லத் தேஞ்சுகிட்டே போய் எதுவுமில்லாம சில சொற்களா தரவுகளா குன்றிப் போறது. அவங்கவங்க அந்தந்தக் காலத்தோடயே அழிஞ்சிர்றது கூட நல்லது. இப்பிடிக் குறிப்பிட்ட பருவம் ஏகோபித்த உலாவல்கள் அசாத்திய சிகரத் தொடல்கள் எல்லாம் செய்திட்டு அப்புறமா எதுவுமே இல்லாமப் போறது எவ்ளோ பெரிய துன்பம்..?”

“என்னை விடுங்க நவீன். நான் கோமாளி. உதய்ஷங்கரோ ப்ரேம்குமாரோ பர்க்காத உயரமா? அடையாத பெருமையா? இன்னிக்கு என்னாச்சு? உதய் பின்னாடி போயிட்டிருந்த பெருங்கூட்டம் காலமாய்டிச்சி. இன்னிக்கு நேரடியா அவரைப் பார்த்துப் பழகினவங்களே அருகிட்டாங்கல்ல..? ப்ரேம் குமாரோட பேரன்கள் நடிக்க வந்து தன்னை நிறுத்திக்கவே போராடிட்டிருக்காங்கல்ல..? இது தான் சினிமா. இங்கே தான் ஆள்ற ராஜாங்கத்தை அப்படியே வாரிசு கையில கொடுத்திட்டுப் போறதெல்லாம் நடக்காது. எவ்ளோ ப்ளான் செய்தாலும் கலை தன்னோட சொந்தப் ப்ளானைத் தான் நடைமுறைப் படுத்தும். எல்லாம் வாழ்றதோட பூர்த்தியாவுறது தானே”

அவர் உதடுகள் துடித்தன. மெல்லிய நீர்த்தாரை ஒன்றே ஒன்று நெற்றியிலிருந்து பக்கவாட்டில் கன்னம்வரை வந்ததை கேரம் போர்டில் வசமான காயினை சுண்டுகிற அதே லயிப்போடு சுண்டித் தள்ளினார். தன் கால்களை விடுவித்து சாதாரணமாக அமர்ந்துகொண்டார். தன் உடலை முன்பின்னாய் நகர்த்தியபடி எதோ சொல்ல முனைவது போல் தோன்றியது. நவீனுக்குத் தன் அறை முழுவதுமாக ஒருவித சாம்பல் தனத்தோடு புகையதிகம் அடர்ந்த படத்தின் பின்புல  அசாதாரணத்துடன் தெரிந்தது

“நானே பேசிக்கிட்டிருக்கேன் நவீன்” என்றார், முனகலுக்குத் தேவையான சப்தத்தோடு.

வெளியே எங்கோ டமடம என்று ட்ரம்களை உருட்டுகிற பேரோசை கேட்டது. நவீன் குடியிருக்கும் அபார்ட்மெண்ட் இன்னும் பாதி கட்டுமான வேலை மீதமிருப்பதால் எப்போதுமே எதாவது வேலையின் ஒலிகள் பெருகியபடி தான் இருக்கும். சின்னதோர் அமைதிக்கப்பால் நவீன் “உங்களைப் பற்றி எழுதப்பட்ட எல்லாத்தையும் படிச்சிருக்கேன். பட் என்ன கேட்குறது பேசுறதுன்னு தெரிலை. எதுனா பெர்ஸனல் அல்லது ரகசியம்னு இருக்கறதை கேட்டாத் தானே உண்டு?” என்றான். இது சரியான தொடக்கமா என்பது தெரியாமற் போனாலும் ஓரளவு பெரிய பத்திகளுக்குப் பின்னதான அறிமுகக் கொள்முதலோடு ஒலித்ததை அவரும் உணர்ந்து கொண்டதாகவே தெரிந்தது. அவனது வலியைப் பெற்றுக் கொண்ட அவஸ்தையுடன்  புன்னகைத்தார்.

“நம்ம ரெண்டு பேருமே சரியான ஆட்கள் தான் நவீன். நீங்க எங்கிட்டே என்ன வேணும்னாலும் கேட்கலாம். பெர்ஸனல்  ப்ரைவஸின்றதெல்லாம் எஞ்சாத பொது சூன்யத்துக்கு உள்ளே இருந்து தான் நான் பேசிட்டிருக்கேன். என்னால எதையும் அதிகரிக்கவோ குறைக்கவோ முடியாது. பட் ஒண்ணே ஒண்ணு பண்ணலாம். எதாவது சரியற்று இருந்தா அதை சரி செய்யலாம். என்ன நடந்தது தெரியுமா அப்டின்னு உண்மையை சொல்ற ஸீன் மாதிரி தோணுதில்ல?” அவருடைய புன்னகை இந்த இடத்தில் இன்னும் ரசிக்கக் கூடியதாக விரிந்தது.

“என் உலகத்தோட கிட்டத்தட்ட அத்தனை பேரும் எனக்கு முன்பின்னா மரணமடைஞ்சிட்டாங்க. நான் வாழ்ந்த காலத்துல என்னை வந்து சந்திக்காத எத்தனையோ ரசிகர்களோட ஒரு உதாரணப் பிரதி நீங்க. இன்று நேத்துன்னு அர்த்தங்களுக்கு அப்பாலான உங்களோட அன்பு எனக்குக் கிடைச்சிருக்க வேண்டிய ஒரு பண்டம் தானே..? எனக்கு அப்புறம் நிகழ்ந்தாக் கூட இந்த அபிமானம் அத்தனையும் என்னோடது இல்லையா? அதுதான் மெஷின்ல ஏறிவந்து என்னோடதை வாங்கிட்டு போறாப்ல வந்திருக்கேன்னு வைங்க. எங்கிட்டே கேள்வின்னு என்ன பெரிசாக் கேட்டுறப் போறீங்க..?  சொல்லப்படாத நிஜங்கள்னு எதுனா எஞ்சி இருந்தா நிச்சயமா சொல்றேன்” என்றவர் தன் சட்டையின் மேற்பித்தானைக் கழற்றிக் கொண்டார்.

“உங்க குரல் நிச்சயமா ஒரு வரம்தான் இல்லே..?”

“சினிமா சரித்திரத்துல என் குரலோட தொடர்புகொண்ட  சம்பவங்கள் அதிகம் தான். ஒரு உதாரணம் சொல்றேன். ஒரு ரசிகை பேர் ரீத்து. மாகாணத்லயே மிகப்பெரிய செல்வந்தம் அவளோடது. பேரழகி. என் மேல் பைத்தியமா அன்பு அவளுக்கு. அவளோட பங்லாவுக்கு என்னை இன்வைட் செய்தா, அவளோட பர்த்டே செலிப்ரேட் செய்ய. அந்த ஃபங்க்ஷனுக்கு நான் மட்டும் தான் கெஸ்ட். ரெட் கார்பெட்ல நடக்க வச்சி பூமழை தூவி வரவேற்பெல்லாம் பலம்மா இருந்தது. எங்கிட்டே அவ கேட்ட பர்த்டே பரிசு என்ன தெரியுமா நவீன்..? யார் முன்னாடியும் நான் பாடியதுல ஒரே ஒரு பாட்டை மட்டும் பாடக் கூடாது. மேடை நிகழ்ச்சிகள் தனிப்பட்ட கூட்டம் எதுவா இருந்தாலும் அந்த ஒரு பாட்டு அவளோடதா மாத்திக்க விரும்பினா. இதை வாய்விட்டுக் கேட்டா. எனக்கு மட்டும் பாடு. என் காதுக்குள்ளே மட்டும் ஒலிக்கட்டும் உன் குரல். உனக்கு வேண்டியதெல்லாத்தையும் செய்றேன். எனக்குன்னு இந்த ஒரு பாட்டை தந்திடு அப்டின்னு கெஞ்சுறா. இண்டர் நேஷனல் பிஸினஸ், அவங்களுக்கு இல்லாத செல்வாக்கில்லை. அவ கேட்ட ஒரே விஷயம் என் பாட்டு ஒண்ணை அடகு வச்சிடச் சொல்றா. பதிலுக்கு நான் கேட்டா இந்த உலகத்தையே தருவேங்குறா.. இந்த உலகத்லயே மதிப்புக்குரிய விலைக்குத் தரவியலாத பண்டங்கள்ல  ஒண்ணு தான் சுதந்திரம். அதை இழந்துட்டு எதை அடைஞ்சும் என்ன? I SAID NO. SIMPLY NO. அவ என்னை வெறுமையா ஒரு பார்வை பார்த்தா. அந்தப் பார்வை ஒரு லாங்க்வேஜ். அதுல பல சொற்களோட வெறுப்பு தொனிச்சதைப் பார்த்தேன். ஒருவேளை அவளோட நான் ஒத்திசைந்து போயிருந்தா டாப் நடிகர்கள் எல்லாரையும் தாண்டிய இடத்துக்கு போயிருப்பேனோ என்னவோ. இது நடந்திருந்தா அது நடந்திருந்தா அப்டின்னெல்லாம் எதுவுமே கிடையாது நவீன். நடக்க வேண்டியதோட சத்தியம் அதோட கச்சிதம். அது மட்டும் தானே நிகழும்..”

நவீன் உன்னிப்பாக அவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். நவீன் மனவோட்டத்தை அவர் படித்து விடுவதால் பெரிதாகக் கேள்விகளை எழுப்ப வேண்டியிராமல் போனது. ஒன்றைப் பற்றி அதன் திரிகளைப் பிரித்து அடுத்தடுத்து சுந்தர்பாபு பேசிச்செல்வது புரிந்தது.

“உலகம் பலவிதம் நவீன். நீங்க விழணும்னு ஏற்பாடு செய்றவங்க ஒருவிதம். விழுறதுக்காகக் காத்திட்டிருக்கறவங்க, விழுந்தா சந்தோசம் கொள்றவங்க, அதுக்காக மவுனமா பிரார்த்தனை செய்றவங்க, இப்படிப் பலரும் இருப்பாங்க. இவங்களுக்கெல்லாம் பேர் வைக்கிறதோ பேச்சுவார்த்தை செய்றதோ அர்த்தமற்றது. பாராமுகத்தோட போய்டுறது தான் உத்தமம். நான் அதைத் தான் செய்தேன். அதை என் திமிர்னு சொல்ல ஆரம்பிச்சாங்க. பணிவுன்றது ஒரு போலி. கடமையை செய் பலனை எதிர்பாராதே அப்டின்றதெல்லாம் ஒத்துவராத உபதேசங்கள். நான் என் தனிமையில என் அகத்துக்குள்ளே தான் பணிவா இருக்கணும். பொதுவில மௌனமா இருந்தாப் போதும். வேணும்னு சீண்டுறவங்க கிட்டே அடிமைப்பட்டுப் போறதுக்குப் பேர் பணிவுன்னா என் முதுகு யாரும் படம் வரையுறதுக்கு இல்லை என் நண்பா.. நான் திமிராவே இருந்திட்டுப் போறேன்னு இருந்திட்டேன்.”

“நீங்க ஏன் ஹீரோவா தொடர்றதுக்கு முயற்சிக்கவே இல்லை ஸார்? எனக்கெல்லாம் பெரிய ஆதங்கமே உண்டு.”

“ஹூம்… ஹீரோன்றது வெறும் வெயிட் லிஃப்டிங் மட்டும் தான் நவீன். என்னைப் பொறுத்தவரைக்கும் கோமாளி வேஷம் தான் பெருசு. இருக்கிறதே கடினம் அப்டின்ற வாழ்க்கையோட நியதி யாரை வேணா கோமாளியாக்கிடும். இந்த உலகத்ல எல்லாருக்குமே தங்களை மகிழ்ச்சிப்படுத்துறவங்களை ரொம்ப பிடிக்கும். கோமாளியின் புன்னகையை அறிஞ்சுக்க எல்லாருமே தயாரா இருப்பாங்க. அவனுக்குக் கண்ணீரே கிடையாதுன்னு நம்புவாங்க. ஆனா கோமாளியோட சாபம் அவனால புன்னகையைப் பொதுவாகவும் கண்ணீரைத் தனிமையிலுமா மட்டும் தான் நிகழ்த்த முடியும். அவனோட வாழ்க்கை ரெண்டாக் கிழிஞ்ச காட்சிகளால் செய்யப்பட்டது நண்பனே. ஆனாலும் நான் திட்டமிட்டுத் தான் காமெடியனா மாறினேன். அந்தரங்கமே இல்லாத பொதுவெளி தான் கோமாளியோட மொத்த வாழ்க்கையும். நிரந்தரமா சிரிக்கிறாப்ல அவனோட முகத்தை மாத்தி வரைஞ்சுக்கிடுறது உலகத்தோட வழக்கம். ஆனாலும் நாயகனை விட வில்லனை விட கோமாளியா இருக்கிறது தான் கடினம். என் கண்ணுக்கு  உயரமான சிகரம் கோமாளியோட இடமாத் தான் தெரிஞ்சுது. நான் விரும்பித் தான் காமெடியனா ஆனேன். நான் விதைச்சதை விட அதிகமா அறுவடை செய்ய முடிஞ்சது நவீன்.

“உதய்ஷங்கர் ப்ரேம் குமார் இந்த ரெண்டு பேருக்கும் நீங்க ஒரு பொதுவான தொந்தரவாகத் தான் இருந்தீங்களா?”

சத்தமின்றி சிரித்துக் கொண்டவர், “பாம்புல வகைகள் இருக்கலாம். விஷம் கொள்றது பொதுத் தன்மை தானே..? அந்த ரெண்டு பேருக்கும் ஊரறிஞ்ச பகை. ஆனா  அபரிமிதமான ரகசியப் புரிதலும் உண்டு. நான் நடிக்க வந்தப்ப உதய்ஷங்கர் சின்னச்சின்ன ரோல்ஸ் நடிச்சிட்டிருந்தாப்ல. ப்ரேம் நாடகங்கள்ல இயங்கின காலம். எனக்கு பாடுறதுக்கும் காமிக் ரோல்ஸூக்கும் அப்பப்ப சான்ஸ் வரும். அப்ப வேறொருத்தருக்கு நான் பாடின ஒரு பாட்டு சூப்பர் ஹிட் ஆச்சுது. நான் ஏறவேண்டிய ஏணிகள் அங்க ஸ்டார்ட் ஆச்சு. நல்லாத் தான் ஏறி வந்தேன். என்னோட சம ட்ராக்ஸ்ல தான் அந்த ரெண்டு பேரும் வந்தாங்கன்னாலும் ரெண்டு பேருமே ஹீரோஸ்.. என்னிக்குமே சினிமான்றது ஹீரோ செண்டிரிக் தான் நவீன். சில இடங்கள்ல யார் ஹீரோ அப்டின்றது மாறலாம். ஆனால் நாயகன் தான் தலைவன். சொந்தக் குரல்ல பாடின தலைமுறை முடிஞ்சப்புறம் உதிச்ச முதல் இரண்டு நட்சத்திர உச்சங்கள் உதய்யும் ப்ரேமும். இந்த ரெண்டுபேருக்குமே பேசவரும் பாடவராது. அந்தக் காலத்துல பாடியும் பேசியும் நடிச்ச நடிகனா நான் மட்டும் தான் இருந்தேன். ப்ரேம்குமாரும் உதய்ஷங்கரும் 25000-35000 வாங்கிட்டிருந்த காலத்ல நான் ஒரு லட்சம் வாங்குனேன் நவீன். இது எதுவுமே எனக்குத் தெரியாது. நான் என்னோட விலையைத் தீர்மானிக்கிற உரிமை இருக்கு தானே..? அதைத் தான் நான் செய்தேன். அவங்க ஹீரோஸ். அவங்களே தொடாத சம்பளத்தை நான் தொட்டிட்டேன் அப்டின்றதே எனக்குத் தெரியாது. நீ எவ்ளோ வாங்குறே அவன் எவ்ளோ கேட்குறான் அப்டின்றதெல்லாம் எனக்கு தேவையில்லாத தகவல்கள்னு நினைச்சவன் நான். நான் லட்சம் கேட்டு அதை குடுக்குறாங்கன்னு தெரிஞ்சப்ப என்னை அந்த ரெண்டு பேருமே வெறுக்குறதுக்கான நல்ல காரணமாக் கூட அதுவே ஆகியிருக்கலாம் இல்லியா?

‘பெர்ஸனலாவும் நிறைய நடந்ததில்லையா?’  நவீனின் குரலை லேசான மறுதலிப்போடு “நான் அந்த ரெண்டு பேரையும் என் கதையோட ஒட்டுமொத்த வில்லன்களா ஆக்க ட்ரை பண்ணலை நவீன். பெர்ஸனலுக்கும் பொதுவுக்கும் யதார்த்தத்தோட வெளிச்சமும் ரகசியத்தோட இருட்டும் ஒண்ணு தானே..? என்னல்லாம் எனக்கு நடந்ததுன்ற நினைவுபடுத்துதல்ல இதெல்லாம் வருதே ஒழிய என் கதையில திருப்பங்களுக்கும் அர்த்தமில்லை முடிவுக்கும் நியாயமில்லை.” மீண்டும் ஒரு சிகரட்டை பற்ற வைத்துக் கொண்டார். நவீனிடம் தன் கையிலிருக்கும் பாக்கெட்டை நீட்ட முனைந்து “நீங்க விட்டுட்டீங்கள்ல இட்ஸ் குட் ஆக்ச்சுவல்லி” என்றபடி  வாட்டர் பாட்டிலின் நீரைப் பாதி காலி செய்தார்.

“உங்க ஸ்டைலே தனிதான் ஸார்” என்ற நவீனின் குரல் அறியாமையின் இதத்தோடு ஒலித்தது.

“எல்லாத்தையுமே நான் ஸ்டைலா அணுகினேன் நவீன். சொல்லிக்கறா மாதிரி ஒரு பெர்ஸனல் விஷயம் உண்டு. நான் சொல்லப் போறது ப்ரேம் உதய் ரெண்டு பேர்ல ஒருத்தரைப் பற்றி. யாருன்னு கேட்காதீங்க. விஷயம் மட்டும் சொல்றேன். அந்த நடிகரும் அவர் மேல அன்பு கொண்ட ஒரு தோழியும் அவுட் டோர் ஷூட்டிங்ல சந்திச்சு அளவளாவிட்டிருந்த ஒரு சந்தர்ப்பத்தில் என்னைப் பற்றியும் பேச்சு வந்திருக்கு. யதார்த்தமா அந்தத் தோழி ‘அடடா சுந்தர் பாபு என்னா ஹேண்ட்ஸம், ஸ்டைல். அவரோட குரல் அமேஸிங்’ அப்டின்னெல்லாம் சொல்லிட்டு ‘அர்ப்பணம்ங்குற படத்துல நிலைக்கண்ணாடி முன்னாடி நின்னுட்டு ஒரு கைல வைன் க்ளாஸ் இன்னொரு கைல சிகரெட் ரெண்டையும் ஏந்திக்கிட்டு நெடிய வசனத்தை அனாயாசமாப் பேசுவாரே.. அவரை மாதிரி நடிக்க உலகத்லயே ஆளில்லை’ அப்டின்னு புகழ்ந்திருக்கா. அவரும் ‘செண்ட் பெர்ஸண்ட் நீ சொல்றதெல்லாம் கரெக்ட்’ அப்டின்னு அப்பத்திக்கி சொல்லிட்டு வந்துட்டார். இதுக்கப்புறம் ஒரு ஸீன் வருதில்லே நவீன்.. அங்க ட்விஸ்ட். நம்ம நண்பர் அந்த இன்னொரு நண்பரை சந்திக்கிறப்ப இதை சொல்லி ‘ஏம்பா மிஸ்டர் நீயா நானான்றது அப்பறம்.. இவனை கோமாளியாக் காட்டுறோம். இருந்தாலும் நெஜத்ல ஹீரோவா இருக்கான் போல’ அப்டின்னு பொலம்பித் தள்ள ‘விடுப்பா நான் பார்த்துக்கிறேன்’னு அவரும் சொல்லியிருக்கார். அதுக்கப்புறம் தான் என் ஏணிகளோட நம்பர்ஸ் குறைஞ்சி பாம்புகள் பெருகிச்சி. என் ஸ்டோரி முன்பின்னா மாறிட்டுது” சலனமற்ற குரலில் நுட்பமாக சொல்லி முடித்தார். அவர் முகம் எதையும் யூகிப்பதற்கு இடமற்ற இறுக்கத்தோடு தெரிந்தது.

நவீன் ஹா என்று காற்றை வாய்வழியே உள்ளிழுத்தான்.

“இதான் நிஜம். அந்த நிகழ்ச்சி நடந்திருக்கத் தேவையில்லாதது. இதைத் தவிர்த்துட்டு பார்த்தா ரெண்டு பேருமே என் நண்பர்கள் தான். இருவருமே என்னைத் தங்களோட படங்கள்ல நெறைய நடிக்க செய்திருக்காங்க. என் திறமைகளை ஊக்குவிச்சிருக்காங்க. எல்லாம் சரியாத் தானே இருந்தது. அந்தத் தோழி செய்ததும் தப்பில்லை. ரசனை, பலூனுக்குள் நிரம்பிய காற்று. நேரம் கடக்கும் போது வெடிக்கிறாப்ல நிகழும் போது கட்டுப்படாது. இதெதுவும் திட்டமிட்டு நடக்கலை ஆனா நிகழாம இருந்திருக்கலாம்.” எங்கோ பார்வையை மாற்றியவர் உதடுகளை ஒன்றை மற்றொன்றால் வருடியபடி லேசாக சிரிக்கத் தொடங்கி அப்படியே நிறுத்திக் கொண்டு சட் சட்டென்று முகபாவங்களை மாற்றிக் கொண்டவாறே,

“நவீன்..மை டியர் யங் மேன் நாம ராஜாவோட கனவுல வர்றதே தப்புத் தான். அந்தக் கனவில் என்னவா வந்தோம், என்ன பண்ணோம் அப்டின்றதெல்லாமே கூடுதல் விபரங்கள்தான். நம்மால மாற்றமுடியாத ஒண்ணா அந்தக் கனவில் இடம்பெற்ற பிழை ஆயிடுது. எந்தப் பெரிய கூட்டத்திலும் எத்தனை நெடிய காலத்திலும் நம்மைச் சட்டுன்னு வெறுக்கிற வாய்ப்பை அந்த ஒற்றைக் கனவு ராஜாவுக்கு உண்டாக்கித் தந்துட்டே இருக்கும். நான் செய்த பிழை வேறொருத்தர் என் மீது கொண்ட ப்ரியம். எனக்கு நடந்த எதன் பின்னாலும் மறைஞ்சிருந்த ராஜவிருப்பத்தை எதிர்த்து வழக்காட என் தரப்புக்கு வலுவில்லை”

உதடுகளை ஈரம் செய்துகொண்டே  “ராஜாவிண்ட ஸ்வப்னம். நான் டைரக்ட் செய்த படம். தமிழ் மலையாளம் ரெண்டுலயும் உதய் நடிக்கவேண்டியது. முதல்ல சம்மதிச்சு, அப்பறம் வெலகி, நானே நடிச்சு நல்லாத் தான் ரிஸீவ் ஆச்சு. அதுக்கப்பறம் நடந்ததெல்லாம் தான் எல்லாருக்கும் தெரிஞ்சது தானே..?”

“நான் பரபரப்பா இருந்த காலத்ல தூக்கத்துக்காக ஏங்கியிருக்கேன். வீட்ல போயி பெட்ரூம்ல இறங்கி அப்பிடியே படுக்கையில சாய்ஞ்சுக்கிற அந்த கணத்தை நான் மிகவும் விரும்பினேன் நவீன். படுக்கை அறை வரைக்கும் ஒருத்தன் ஏன் கார்ல போக ட்ரை பண்றான்னு யாருமே புரிஞ்சுக்க முயற்சி பண்ணலை. என் சமகாலத்ல யாருமே என் மனசுக்கு அருகே வந்து சேரவே இல்லை. அந்த மனவெறுமை என் வாழ்க்கையில பெரிய தனிமையா உருவாச்சு நவீன். அத்யந்தத்துக்காக ரொம்பவே ஏங்குனேன். நிறைய சந்தர்ப்பங்கள்ல தற்கொலை செய்துக்கலாமான்னு தோணிருக்கு. நடிக்க சான்ஸ் கிடைக்கலைன்றதுக்கே நான் தற்கொலை செய்துக்க முயற்சி பண்ணிருக்கேன். ஜெயிச்சதுக்கப்பறம் வந்த எந்தத் தோல்விக்கும் மறுபடி உயிரை மாய்ச்சுக்க முயலவே இல்லை. அதுக்குக் காரணமும் நான் முன்னாடி இருந்த இன்னொசென்ஸை இழந்தது தான். கருவறைக்குத் திரும்பிட மாட்டோமான்னு கர்ப்ப நீச்சலை எண்ணி ஏங்காத யாருமே இந்த உலகத்ல கிடையாது நவீன். என்ன ஒண்ணு, தான் அப்டி ஏங்குறதே தெரியாம நிகழ்றது தான் அந்த ஏக்கத்தோட ஜாலம். வாழ்க்கை வெளிய போனப்புறம் தான் புரியத் தொடங்கும். எல்லா முட்டாத் தனமும் அறிவுஜீவிதமும் சமமாகுற ஒற்றை மவுன வெடிப்புல எல்லாம் முடிஞ்சுரும்”.

“மேரேஜ் நான் பண்ண இன்னொரு பிசகு. என் குணாம்சத்தின் நேர்க்கோட்ல விலகாம நடக்கிறது என் சுபாவம். என் கல்யாணம்கிற விஷயம் துன்பமும் இன்பமும் அற்ற ந்யூட்ரல் சம்பவம் தான். எல்லாரும் பெரிசா பேசின அளவுக்கு என் கல்யாணத் தோல்வியினால நான் உருகி என்னையே சிதைச்சிக்கிட்டேன்றதெல்லாம் நிசமில்லை. ஒரு தோல்வியை நான் செலிப்ரேட் செய்திருக்கலாம். பட் என் மேரேஜூம் அதை ஒட்டி நான் நடந்துகிட்டதெதுவும் என் மனவிரோதமா கிடையாது. என்னைக் கல்யாணம் செய்துக்கிட்ட பெண் வேற ஒரு அன்பை மறக்க முடியலைன்னு சொன்னா. நான் ‘கோ அஹெட்’னு சொன்னேன். அவ அதை நம்ப முடியாம திகைச்சா. அப்பறம் புரிஞ்சுகிட்டா. நம் மூலமா பிறருக்கு ஒரு அதிர்ஷ்டம்-அற்புதம் நடக்கணும்னு இருந்தா பின்புலத்துல நாம இழக்க வேண்டியதும் இருந்தே தீரும் நவீன்”.

காலிங் பெல் அடிக்கவே ஆன்லைனில் மாசாந்திரத்துக்கு என ஆர்டர் செய்திருந்ததன் அன்றைய பார்ஸலை வாங்கிக் கொண்டு திரும்பினான் நவீன்.
‘நீங்க சாப்டலாம் நவீன்’  குரலில் உபசாரம் தொனித்தது.

“இல்லை ஸார் எனக்கு நேரமாவும்” என்றவாறே தலையை அசைத்தான்

“நடிப்புன்றதே கொடுமையான கலை தான் நவீன். உண்மை அப்டின்ற ஒற்றை நிசத்தை பல துண்டங்களா அறுத்து பல திசைகள்ல வீசுறதுக்கான சம்மதம் தான் நடிப்புன்றது. எந்த ஒரு நடிகனுமே தன் வாழ்க்கையோட உண்மையான கணங்களை ஒவ்வொண்ணா இழந்துகிட்டே இருப்பான். தனக்கு நிசமா நடக்குற எந்த ஒரு விசயத்தையுமே இது நிசமா அல்லது நிசம் மாதிரி நடிக்கணுமான்ற விலகல் இருந்தே தீரும். சாவும் போது கூட தான் சாவுற மாதிரி நடிச்ச காட்சிகளோட நினைவு வந்தே தீரும், அது எளியதல்ல நவீன். சதா குறுகியும் பெருகியும் உண்மைன்ற ஒண்ணை நிரந்தரமா இழந்துட்டு கிடைக்கிற எல்லாமே வெறுமையா மாறும்ல..?”

அவர் எழுந்து சின்னதாக அறைக்குள்ளேயே நடந்து திரும்பினார். மறுபடியும் சப்தமெழுப்பாமல் அமர்ந்தார்.

“என்னடா வாழ்க்கை இது எப்டியாச்சும் தப்பிச்சுரணும்னு தோணிருக்குதா உங்களுக்கு?” இதைக் கேட்டதும் அவர் முகத்தில் முன்பில்லாத புன்முறுவல்.

“வாழ்க்கைங்குறதே தனக்குள்ளேருந்து தப்பியோடுற ஓட்டம் தான். அந்தச் சொல்நிகரா வேட்டைன்னு ஒரே ஒரு வார்த்தையை சொல்லலாம். எல்லாமே வேட்டைப் பலிகள். இழக்கிற ஒவ்வொரு கணமும் பலிப்பொருள். வாழ்ந்துட்டுப் போற ஒவ்வொரு நபருமே காலத்தின் பலிகள். புகழோட விலை ரொம்பப் பெருசு. எதை நோக்கி ஓடுறமோ அதுவே நம்மை வெறியோட துரத்துற சீன் வரும். அப்ப அதுகிட்டேருந்து தப்பிச்சிக்க ஓடிட்டிருப்பம். எந்தக் குறிக்கோளுமே நமக்குப் பலியாகுற பாவனையில் நம்மை விழுங்கப் பார்க்கும் மிருகத்தின் பசி தான். இதை சரியா உள்வாங்கிக்கிறவனுக்கு சின்னதொரு நிழல் அகப்படும். புரியாதவனுக்கு ஓய்வு, தனிமை, முதுமை, தோல்வி, நிராகரிப்பு இதுகள்ல எதாவது ஒண்ணு மத்ததை ஆக்டிவேட் செய்தவண்ணம் நிகழ்ந்துரும்”.

அவர்  தூரத்து மூங்கில்களைக் காற்று முறிப்பதன் மினியேச்சர் சப்தத்தோடு விரல்களை சொடக்கிட்டுக் கொண்டார்.

“நவீன் முதுமையை புரிஞ்சுக்கிறது சுலபம். சாவைப் புரிஞ்சுக்கிடுறது தான் கஷ்டம். வாழ்க்கைன்றது கொஞ்சூண்டு சந்தோஷத்தைச் சுத்தி நிறைய யோசனை மட்டும் தான். அழக் கூடாதுன்னு முடிவெடுத்திட்டா அதை செய்துகாண்பிக்கிறதுக்கு நிறைய சந்தர்ப்பங்கள் வரவர லைஃப் அழகாய்டும். சவாலா பந்தயத்தோட கணங்களா மாறிடும். எனக்கு வாழ்க்கை மேல விருப்பு வெறுப்பற்ற அன்னியம் தான் இருந்தது. பருவப்படி வர்றது, இருக்கிறது, போறது, எதுவுமில்லாம எஞ்சுறதுன்னு எல்லாம் ஏற்பாடுகள் தான். நாம் என்பதும் நமதென்பதும் நமக்கு முன்னும் பின்னும் என ஆயிரம் ஏற்பாடுகள் ”

எழுந்து கொண்டார். நவீனுக்கு லேசாக அப்போது தான் பசிக்க ஆரம்பித்தது. அந்த அறையை அதன் உள் அமைப்பை அங்கே இருக்கும் யாவற்றையும் ஆர்வ-நிதானத்தோடு பார்த்தவர் ஃப்ரிட்ஜ் மேல் இருக்கும் கடிகாரத்தைக் கண்களால் கடந்து லேசாக செறுமினார். சின்னதோர் அறிமுகம் தருகிற குரலில் “இந்தப் பாட்டை அதுக்கப்புறம் யார் முன்னாடியும் பாடவேயில்லை. வாழ்வோட தன்மையும் பாடுறாப்ல இல்லை. பல காரணங்களுக்கு மத்தியில இந்தப் பாட்டும் எனக்குள்ளே கசங்கிட்டது. நம் சந்திப்போட ஞாபகமா இந்தப் பாட்டு இருக்கட்டும்” என்றவர் விரல்களை சொடக்கிட்டவாறே பாடினார்.

அழுதபடியே பிறக்கின்றாய்
அழுதபடியே இறக்கின்றாய்
இன்றொரு தினம் மட்டும்
துயரமில்லாமல்
சிரிப்பாய்  நீயும் சினேகிதனே
அழுதபடியே பிறக்கின்றாய்
அழுதபடியே இறக்கின்றாய்

தன்னை மறந்தவனாய் “சாவே கிடையாது ஸார் உங்க குரலுக்கு” என்று சற்றே உயர்ந்த குரலில் சொல்லி நாக்கைக் கடித்துக் கொள்வது போல் பாவனை செய்தான் நவீன். சுந்தர்பாபு சிரித்தார். மெல்ல நடந்தார். வாசல் கதவைத் திறக்கவும் அந்தப் பொழுதின் புறவொளி முழுவதுமாய் அறைக்குள் பொழியத் தொடங்க, அதீத ஒளிர்தலுக்கு நடுவே அவர் நிற்பதன் நிழலும் இருளும் சேர்ந்துகொள்ள, லேசான இகழ்தலுடன் தொனித்த அவரது சிரிப்பு வசீகரித்தது. நவீன் அவரையே இமைக்காமல் பார்த்தான். “இங்கே விட்டுட்டு போன என் குரலை மறுபடி நான் சந்திக்கிறதுக்கு இன்றைய தினம் உதவிச்சி. வாழக் கிடைக்கிற வாய்ப்பு ரொம்ப அழகானது. எல்லாமே ஏற்பாடுகள் தான். மகிழ்ச்சியா இருங்க! குட்பை” என்றபடியே கதவைத் தாண்டிச் சென்று ஓங்கிச் சாத்தினார்.