மிஸ்டர் கே


மிஸ்டர் கேயை எப்படியாவது அறிமுகமாக்கிக் கொள்ள வேண்டும் என்பது மட்டும் தான் இந்தக் கதையைப் பொறுத்தவரை என் ஒரே லட்சியம். இதற்கு வெளியில் வேறேதாவது லட்சியம் என்று இருக்கிறதா என யோசிக்கிறேன். இதுவரைக்கும் எனக்கென்று தனியாக லட்சியம் என்று எதுவுமே இருந்ததில்லை. தேவைகளும் அடைதல்களுமாய் வாழ்க்கை நகர்ந்து வருகிறது. இலக்கும் பயணமுமாய்க் காலம் கழிகிறது. யோசித்ததைக் கைப்பற்றித்தான் எனக்குப் பழக்கம். லட்சியம் என்பது என்ன நீண்ட கால மற்றும் நெடுந்தூரக் காத்திருப்புக்கான புனிதமான பெயர்தானே? அப்படி எதுவுமில்லை, எனக்கு அந்தந்தக் கணங்களாய்க் கழித்தாவது அவசியம்.
மிஸ்டர் கே விசயத்தில் மேற்சொன்ன எதுவும் பலிக்காது. பரந்தாமன் மூலமாகத்தான் மிஸ்டர் கேயை நெருங்க முடியும் என்பது புரிந்தது. அதற்கு முன்பே யார் மூலமாகவாவது மிஸ்டர் கேயைப் பரிச்சயம் செய்து கொள்ள வேண்டும் என்று சிலபல மாதங்களாக முயன்று கொண்டிருந்தேன்.

முரளி என்ற மெக்கானிக் தனக்கு கேயை நன்றாகத் தெரியும் என்றும் தனக்கு அவரை அறிமுகம் செய்து வைப்பதெல்லாம் ஃபூ என்று ஊதிவிடக் கூடிய காரியம் என்றும் சொல்லி இருந்தான். நான் முரளியை அரைமனதாகத்தான் நம்பி இருந்தேன். நெடுங்காலமாகவே நம்பகத்துக்கு ஒவ்வாத சரித்திரம் ஒன்று முரளிக்கு உண்டு என்பதால் மட்டுமல்ல.யாரை நம்புவதானாலும் பாதி நம்புவது ஏமாற்றத்தை இரண்டால் வகுத்துவிடும் என்பது என் கொள்கை. இதுவே காரியம் ஜெயம் என்றால் முரளியைப் பலமடங்கு மெச்சலாம் என அதே மனசு சொன்னது. முரளி தனக்குப் பிரதியுபகாரம் எதுவுமே வேண்டாமென்றும் தன் வாழ்வே பிறருக்கு உதவுகிற ஒரு நற்செய்தி எனவும் பிரசங்கித்து முடித்தபோதே அவனுக்கு என்னென்ன தேவைப்படும், அதற்கெல்லாம் எவ்வளவு செலவாகும் என்பதை எல்லாம் மனதினுள் அனுமானித்து ஒரு தொகையை உத்தேசமாய் அவனிடமே சொன்னேன். அதைக் கவனிக்காதவன் போல முரளி மனதில் பாடம் செய்து கொண்டான்.

“எண்ணி ஒரே வாரம்.பாரேன் உன்னை கே முன்னாடி நிறுத்துறேன். அவரும் நீயும் பரிச்சயமாகி நெருங்கி இருப்பீங்க” என்று கிளம்பித் தன் செகண்ட் ஹாண்ட் வாகனத்தில் விருட்டென்று காணாமற் போனான்.போக்கைப் பார்த்தால் அவன் முடித்து விடுவான் என்று தோன்றாமலில்லை.

பரணியார் பூங்காவுக்கு எதிர்ப்புறம் கருணாமூர்த்தி கோவில்.அதற்குப் பக்கவாட்டில் அனந்தன் டெய்லரின் கடை மாடியில் வக்கீல் செங்காளியப்பனின் கட்டப்பஞ்சாயத்து அலுவலகம் இருந்தது. அங்கே யார் நிமித்தமோ மிஸ்டர் கே வரப் போவதாகத் தகவல் அறிந்து என்னை வரச்சொன்னான் முரளி.நானும் எனக்கு மிகவும் ராசியான மஞ்சள் வெள்ளை பாதிப்பாதி ஜாயிண்ட் டிசைனில் ஒரு சட்டையை அணிந்து கொண்டு கிளம்பினேன். உடுத்துறதுக்கு இரண்டு நிமிடங்களுக்கு மேல் ஆகக் கூடாது என்பார் பாவா. எதற்கு எனக் கேட்டால் எதற்குமே இரண்டு நிமிடங்கள்தான். அதற்கு மேல் ஆகக் கூடாது.சம்போகத்திலிருந்து சன்னதி தரிசனம் வரை நல்லது அல்லது எல்லாமே பொன்பொழுது இரண்டே நிமிடம் தான்.அதற்குள் ஆகாதது எதற்குள்ளும் ஆகாது எனக் கறாராய்ச் சொல்வார்.அவர் அனுபவத்தை அகழ்ந்து அதிலொரு விள்ளலைத் தருவார் “எலே…கழுத்துக்குக் கீழ கொஞ்சம் கக்கத்துல கொஞ்சம் பவுடரை அடிச்சி கோண வகிடெடுத்து சீவித் தள்ளி லேசா பவுடராலயே திருநீறு கணக்கா ஒரு கீத்து இழுத்து கர்ச்சீப்பை எட்டா மடிச்சி குண்டிப்பக்கம் செருகிட்டு கௌம்புறதுல என்ன சாகசமிருக்குன்னு கேக்குறேன்? இதென்ன கஸ்டம்? இதுக்கு எனக்கெல்லாம் ஒரு நிமிசம்தான் ஆகும்.எல்லாம் சுளுவா செய்து பழகவேண்டாம்? நேரம்ன்றது தண்ணி மாதிரி இருக்கப்ப தெரியாது. இல்லாங்காட்டி தாகந்தவிக்கும்லா? டக் இன் செய்து பார்த்தேன்.இல்லை. இந்த சட்டைக்கு சரியாய் வராது. தொந்தி அளவாயிருக்குற வரைக்கும் அதும் ஒரு அழகுடே. பீரைக் குடிச்சிக் குடிச்சி தர்மசத்திரத்து வாசல்ல வக்கிற மண்பானை கணக்கா இதென்னடே தொந்தியா? அசிங்கமா இருக்குடே என்று அட்டகாசமாய் சிரிப்பார். எத்தனை குடித்தாலும் வயிறு வைக்காத தன்னுடைய ஃபிசிக் மீது பெருமையான பெருமை பாவாவுக்கு.மற்றவரைக் கொத்துவதில் அவரொரு சர்ப்பம்.

பவ்யமாய் காத்திருந்தேன். கண் திறந்திருக்கையில் லேசாய் அயர்த்தி ஒருமாதிரி உறக்கத்துக்கு முந்தைய ஞானம் பொங்கும். விட்டால் குறட்டைதான் என்றாற் போல் நான் வந்து ஒரு மணி நேரம் கழித்து என் காலை மிதித்த முரளி,

“அங்கன பார். அவர்தான் கே” என்று தேவையில்லாமல் எனக்குச் சுட்டினான் .

நான் என்ன கேயைத் தெரியாதென்றா வந்திருக்கிறேன்.இருந்தாலும் அமைதியாக அப்படியே உறைந்தபடி இருந்தேன்.பழுப்பு நிற அம்பாஸிடர் காரின் பின் பக்கம் இருந்து மெல்ல இறங்கின மிஸ்டர் கே சுற்றி இருக்கும் பிரபஞ்சத்துக்குத் தான் ஒருத்தர் தான் நாயகன் என்ற கித்தாய்ப்பில் வேஷ்டியை ஒரு தரம் அவிழ்த்து சாவகாசமாய் மறுபடி இடுப்பைச் சுற்றி இறுக்கிக் கொண்டார்.அதன் நுனியை வலக்கரத்து விரல்கள் இரண்டால் பற்றிக் கொண்டார்.நாலு எட்டு நடப்பதற்குள் வேட்டி நுனியைக் கீழே விட்டவர் கை நீட்ட எங்கிருந்தோ கிங் சைஸ் சிகரெட்டை வாங்கி உதட்டோரத்துக்குத் தந்தவர் நடந்து கொண்டே பற்ற வைத்தார்.
என்னவோ தோன்றினாற்போல் கை சிகரெட்டைப் பின் பக்கம் மறைத்துக் கொண்டு திரும்பி கருணாமூர்த்தி கோயிலின் பூட்டிய கதவைப் பார்த்து ஒரு கையால் கன்னத்தை வழித்து பிரார்த்தித்தவர் டெய்லர் கடையைத் தாண்டி மாடிக்குச் செல்லும் படிகளை அடைந்தவர் சரியாக அங்கே நின்றுகொண்டிருந்த முரளியின் முகத்தை பார்த்ததுமே கடுகடுவென்றானார்.எனக்கு வியர்த்தது.

“ஒழுங்கா இருக்கியாடே?” என்றார்.

அவன் “ஆங் முதலாளி.” என்றான்.

“ஃப்ராடு நாயி” என்றபடியே அவன் தோளை அமர்த்தலாய் அடி என்று சொல்லவும் மறுக்கவும் முடியாத பாணியில் ஓங்கித் தொட்டுவிட்டுக் கடந்தார்.இவன் என் சினேகிதன் என்று சொல்லத் தொடங்கின முரளியிடம் “அவனுமா” என்று சிரித்தபடியே கடந்து மாடிப் படி ஏறிப் போனார். என்னவோ அந்த வருடத்தின் சிறந்த நடிகர் விருதை சனாதிபதி கையால் வாங்கின பெருமிதத்தோடு என்னை உற்று நோக்கி “பார்த்தியா…” என்றான் முரளி. எனக்குப் புரியவில்லை. அவனை கேவுக்கு தெரிந்திருக்கிறது என்று எனக்கு நிரூபிக்கவா நான் இங்கே வந்திருக்கிறேன். எனக்குத் தேவையான அறிமுகத்தை இவனது சந்ததி முழுவதாலும் எனக்குப் பெற்றுத் தரவே முடியாது என்று ஊர்ஜிதமானது.

பயனற்றது எனத் தெரிந்த பிற்பாடு எனக்கென்ன வேலை? முரளி மனம் நோகாமல் ரொம்ப நன்றிடா என்று மட்டும் சொல்லிவிட்டுக் கிளம்பினேன்.
அதன் பிற்பாடு அடுத்த மனிதரைக் கண்டறிவதற்குள் என்னைப் பற்றிய ஞாபகக் கீறல் மிஸ்டர் கேவுக்கு முற்றிலுமாக மறந்து போகவேண்டுமே என்று என் இஷ்ட தெய்வங்களை எல்லாம் வேண்டிக் காத்திருந்தேன். எதிர்பாராத ஒரு தருணத்தில்தான் பரந்தாமனை சந்தித்தேன். பரந்தாமன் எங்கோ திருவனந்தபுரத்தில் ஸெட்டில் ஆகி விட்டதாக சொல்லப்பட்டிருந்தது. அவர் குலதெய்வ வழிபாட்டுக்காக வந்து அப்படியே இரண்டு மாத கோடை விடுமுறை காலத்தை இங்கே கழித்துக் கொண்டிருந்தார். என் மூத்த சகோதரன் அவருக்கான மாம்பழம் நெல்லிக்காய் வற்றல் வடகங்கள் ஊறுகாய் அப்பளம் இத்யாதிகள் எல்லாவற்றையும் தனித்தனியே பேக் செய்து நீயே நேர்ல போய் குடுத்துரு என நாலு முறை சொல்லி அனுப்பி இருந்தான். அகஸ்மாத்தாக எல்லாவற்றையும் பெற்றுக்கொண்டு பரந்தாமன் மனைவி சில்லென்ற கண்ணாடி தம்ளரில் கிரேப் கிரஷ் தந்ததை மிச்சம் வைக்காமல் குடித்து விட்டுக் கிளம்பும் தருவாயில் எனக்கே நம்ப முடியாத என் ஞாபகதைரியத்தின் விளைவாகக் கேட்டேன்.

“ஸார்… உங்களுக்கு மிஸ்டர் கே பழக்கமா?”

பரந்தாமன் என்னையே உற்றுப் பார்த்தார். என்ன காரணத்துக்காக நான் கேயோடு நெருக்கமாக விரும்புகிறேன் என்பதை எல்லாம் பொறுமையாகக் கேட்டுக் கொண்டவர், “சரி, சாயங்காலம் வா. வரும்போது டார்க் கலர்ல ட்ரெஸ் போட்டுட்டு வா.” என்றார். வாசல் தாண்டும்போது என்னிடம் சொன்னார். “கேவுக்கு கறுப்புன்னா உயிர்… சரியா?” என்று சிரித்தார்.

அதே கட்டப்பஞ்சாயத்து வக்கீல் ஆபீஸிற்கு நாலு விலாசம் தள்ளி மனோகர் முதலாளியின் வீடு இருந்தது.அவருடைய மூத்த பெண் வீட்டு செக்யூரிட்டியோடு காதலாகிக் கசிந்துருகிக் கடிமணம் செய்துகொண்டு காணாதூரம் சென்ற பிற்பாடு தன் வீட்டு வாசலுக்கு எலெக்ட்ரானிக் செக்யூரிட்டி சிஸ்டம் ஒன்றை ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்திருந்தார்.இரண்டாவது பெண்ணை கிட்டத்தட்ட வீட்டுச் சிறையில் வைத்திருப்பதாக ஊருக்குள் பேச்சு.சனிக்கிழமை சாயந்திரமானால் தன் வீட்டு மொட்டை மாடியில் நிறை போதையில் நிலா பார்த்தபடி தன் பெண்ணையும் முன்னாள் செக்யூரிட்டி அலையஸ் இன்னாள் மாப்பிள்ளையையும் கெட்ட வார்த்தைகளால் ஆசை தீர திட்டித் தீர்ப்பார் என்றும் அன் கான்ஷியஸ் ஆகும் அளவுக்குக் குடித்த பிறகே சனிக்கிழமை பைத்தியம் அடங்கும் என்றும் ஜோயும் கார்த்தியும் மங்கலம் ரெஸ்டாரெண்டில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள்.அந்த மனோகர் முதலாளியின் வீடு பலவிதக் கதைகளுக்குப் பெயர் போனது.

அடர் வன மத்திமம் போன்ற தோற்றமளிக்கக் கூடிய அந்த வீட்டின் நுழைவு தொடங்கி ஏற்படுத்தப்பட்ட இருளும் குளிரும் சதா சர்வகாலமும் பெருகி ஒலிக்கும் மேற்கத்திய இசையும் வரிசையாக வந்துகொண்டே இருக்கக் கூடிய ஸ்னாக்ஸ் இத்யாதிகளுமாக ஒரு முதல் தர ஐந்து நட்சத்திர ரிஸார்ட்டில் ஏற்பாடு செய்யப்பட்ட மது விருந்துக்கு ஒருவிதத்திலும் குறைவானதல்ல மனோகர் முதலாளியின் வீட்டுச் சூழல். சைவத்துக்கும் அசைவத்துக்குமாய் ஆறேழு சமையல்காரர்கள் அவரிடம் பணி புரிந்தார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக சந்தனம் என்றொரு சகலகலா வல்லவன் இருந்தான். அவன்தான் அங்கே நாளெல்லாம் அடுத்தடுத்த மது விருந்துகளை யார் மனமும் கோணாமல் வெற்றிகரமாக நடத்திவைப்பவன்.மேனேஜர் என்றும் சொல்லலாம். சில சமயங்களில் அவனே பரிமாறவும் செய்வான். அந்த மாளிகையில் மனோகர் முதலாளியைத் தவிர மற்ற எல்லாருமே அவனுக்குப் பயந்து கொண்டிருந்தார்கள். யார் கண்டது.அவனை வேலை வாங்குகிற பாவனையில் ஒரு வேடமேற்றல் போலத்தான் மனோகர் முதலாளி கூட அவனை நடத்திவருவதாகவும் உண்மையில் அவனுக்கும் அவருக்கும் பலவித தொழில் வருமான சமன்பாடுகள் இருப்பதாகவும் கூட இஸ்திரி போடுகிற கண்ணையன் சொன்னதாக ஜோய் ஒருதடவை சொன்னான்.

அந்த மாளிகைக்குள் செல்வதே டவுனில் ஒரு பெரிய அந்தஸ்தான செய்கையாக கருதப்பட்டது. பகட்டுக்காக சில கிளப்புகளில் சேர்வதும் சில செய்கைகளை செய்வதுமாகத் திகழ்வார்கள் அல்லவா. புதிய செல்வந்தர்கள் தங்களை ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ளச் சொல்லி சொல்லற்ற செயல்களால் கெஞ்சுவார்களல்லவா..இதெல்லாம் இருளில் ஒளிரும் சில கண்களுக்கு மாத்திரம் புலப்படுகிற பாவனைகள்.இதற்கான கண்களைக் கொண்டே இவற்றைக் காண முடியும்.மற்றவர்களுக்கு அது வெறும் திரை போலத்தான் தெரியும். மனோகர் முதலாளி நடத்தி வந்த மில் இத்யாதிகள் நொடித்த பிற்பாடு அவருடைய செல்வந்தம் குன்றினாலும் செல்வாக்கு குன்றவில்லை. ஒருபக்கம் அவரிடத்தில் கையிருப்பு குறைந்து வருகிறதாகவும் பொன்னகர் போலீஸ் ஸ்டேஷனுக்கு எதிர்ப்புறத்தில் இருக்கிற இந்தப் பெரிய மாளிகை மாத்திரம்தான் அவருடைய கடைசி சொத்து என்றும் பேச்சு அடிபட்டது. இன்னொரு பக்கம் அவர் சமூகத்தில் அத்தனை தளங்களிலும் செல்வாக்குப் பெற்றவர் என்றும் வக்கீல் செங்காளியப்பன் ஒருவகையில் மனோகர் முதலாளியின் ஷட்டகர் என்றும் அவருடைய பின்புலம் தருகிற தைர்யத்தில் பல கடன்காரர்களுக்கு நல்ல தரமான நாமக்கட்டியைக் குழைத்து நெற்றித் திருமேனி துளியும் தெரியா வண்ணம் நாமம் இட்டுவிட்டார் என்றும் அந்த லாபங்களுக்குப் பதில் கைங்கர்யமாகத்தான் அரசியல்வாதிகள் போலீஸ் அதிகாரிகள் தொடங்கிப் பலருக்கும் அவர் வீட்டில் அவ்வப்போது தாகசாந்தி செய்து மரியாதை செய்து விடுவதாகவும் பேச்சு அடிபட்டது.

எது உண்மை என்று நெருங்காத வரைக்கும் உண்மைகளின் வெப்பம் எதுவும் செய்வதில்லை.நான் எப்போதுமே அப்படியான வெப்ப அருகாமையில் குளிர்காய்வேனே தவிர சதை பொசுங்கும் அளவுக்கு நெருங்கவே மாட்டேன்.அதனாலேயே என்னைப் பலருக்கும் பிடிக்கும்.

எது எப்படியோ மனோகர் முதலாளியின் மாளிகையில் நாளெல்லாம் திருநாள்.மது பெருக்கெடுத்து ஓடுகிற போதை நதியின் போக்கும் வரத்தும் அங்கே உண்டு. எல்லாவற்றையும் கவனிக்கிறவன் சந்தனம். இந்த சூழலில்தான் பரந்தாமன் என்னை அழைத்துக் கொண்டு மனோகர் வீட்டு முன்னால் தன் காரை நிறுத்தினார். வாசலில் இருந்த கூண்டில் இருந்து எட்டிப் பார்த்த இரும்புக் கரம் ஒன்று முன் பின்னாய் எங்கள் காரை ஸ்கேன் செய்தது. அடுத்த மூன்றாவது நிமிடம் கதவு திறந்தது.எங்கள் கார் உள்ளே சென்றதும் வெள்ளுடை அணிந்த ட்ரைவர் எங்களை இறங்கச் செய்து விட்டு மாளிகையின் பின்புறத்தில் இருந்த வாலட் பார்க்கிங்குக்கு எங்கள் காரை எடுத்துச் சென்றான். எனக்கு பிரமிப்பாக இருந்தது. தூரத்தில் ஆடும் ஊஞ்சலில் ஒரு காலை மடித்தமர்ந்து வறுத்த முந்திரிப் பருப்புக்களை கொறித்தவாறு செல்ஃபோனில் யாரிடமோ பேசிக் கொண்டிருந்தார் கே. தொடுகிற தூரத்தில் வட்டவடிவ டீப்பாய் மீது ஒரு ஒல்லியான கோப்பையில் வயலட் நிற மதுபானம் நுரைத்துக் கொண்டிருந்தது. அதைப் பார்க்கிற யாரும் தங்கள் வாழ்வின் முதல் மதுபானத்தை அதன் மூலமாய்த் துவங்குவதற்குக் கூட வாய்ப்புகள் அதிகம் என எனக்குத் தோன்றியது. பரந்தாமன் என்னைப் பார்த்த பார்வையில் மதுமீதான காலகால இச்சை தோன்றி மறைந்தது.

எங்கிருந்தோ வந்த மனோகர் முதலாளி அரக்கு நிற பெர்மூடாஸும் கையில்லாத பனியனும் அணிந்து சற்றே தளர்வாகத் தெரிந்தார்.

அவர் நிறையக் குடித்திருந்தார் என்பது தெரிந்தது. “சந்தனம், சந்தனம்” என்று ஒரு தடவைக்கு இரண்டு தடவை இரைந்து கூப்பிட்டார். அவன் வருவதற்குத் தாமதமாகவே தன் கையிலிருந்த கண்ணாடி டம்ளரை அந்தத் திசை நோக்கி வீசினார். அது தரையில் பட்டு நொறுங்கியது. எங்கிருந்தோ முதலில் சந்தனமும் தொடர்ந்தபடி இன்னொரு வேலைக்காரன் பெரிய தட்டில் ஆவி பறக்கப் பல உணவு பதார்த்தங்களோடு தெரிந்தார்கள். பேசி முடித்த கே செல்ஃபோனைத் தன் கர்ச்சீஃப்புக்குள் பொதித்து ஊஞ்சலில் தனக்கு அருகாமையில் கிடத்தினார்.

தென்பட்ட சந்தனத்தின் திசையைப் பார்த்து மனோகர் முதலாளி கத்தினார். “வந்திருப்பது யாரெனத் தெரியவில்லையாடா, கே என்றால் சாதாரணமா? ராஜாடா ராஜா. நமக்குக் காட்சி தர மாட்டாரா, நம்மோடு உலாவி அளவளாவ மாட்டாரா என்று இந்த ஊரில் எத்தனை பேர் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள் என உனக்குத் தெரியாதா? இனி எதாவது தாமதித்தால் உனைக் கொன்றுவிடுவேன்,தெரிஞ்சுதா?” என்றார். மிகுந்த பணிவோடு, தன் உடலை ஒரு கொக்கி போல் வளைத்துக் கைகளை முன்புறம் கட்டிக் கொண்டிருந்தான் சந்தனம்.

எனக்கென்னவோ பலதடவை ஒத்திகை பார்க்கப்பட்ட நிஜத்துக்கு அருகாமையில் இருக்கக் கூடிய புனையப்பட்ட தத்ரூபம் போலவே அந்தக் காட்சி தோன்றியது. இதில் குறைகிற ஏதோ ஒன்று சேர்ந்தால்தான் அது நிஜம் என நினைத்துக் கொண்டேன். இத்தனை கத்திய மனோகர் முதலாளியைப் பொருட்படுத்தவும் கடிந்து கொள்ளவும் செய்யாமல், அங்கு எதுவுமே நிகழாதது போல, “மனோ… பேசிவிட்டேன், மந்திரி சரி என்று சொல்லிவிட்டார்” என மட்டும் சொன்னார். வரவழைத்துக் கொண்ட உற்சாகத்தின் அடுத்த காட்சியைப் போல், “ஹுர்ரே” என்று கத்தினார் மனோகர் முதலாளி. அவரது அசைவுகள் மிகையாக இருந்தன. அதையும் மிக எளிதாக எடுத்துக் கொண்டார் கே. அப்போதுதான் இருளில் இருந்த எங்களைப் பார்த்தவர், “யாரது பரந்தாமனா?” என்று சட்டென்று எழுந்தார். தெய்வ சிநேகிதம் தெய்வ நிகர்தான். அந்த இடத்தின் அத்தனை கண்களும் எங்களை மொய்த்தன. சந்தனத்தின் கண்ணசைவு கண்டு ஊஞ்சலுக்கு எதிராக மூன்று நாற்காலிகள் போடப்பட்டன. அதுவரை நடையா நடனமா எனத் தெரியாதபடி ஆடிக் கொண்டிருந்த மனோகர் முதலாளி, தனக்கு வழங்கப்பட்ட கூடை நாற்காலியில் பொதுக் என்று அமர்ந்தார்.
இந்த இடத்தில் மனோகர் முதலாளியின் தற்காலிக மௌனம் குறிப்பிடத் தக்கதாகிறது. போதைப் பொழுதில் பேசுகிற ஒவ்வொரு சொல்லும் பணமெழுதாத செக்கில் கையெழுத்திட்டுத் தருவதைப் போல என்பது மனோகர் முதலாளியின் வாழ்வியல் கண்டுபிடிப்பு. அவரது வாழ்வின் சமகால உச்சபட்ச நற்செய்தியாக அவர் இந்த மதுச் சந்திப்பை ஏற்பாடு செய்ததன் நோக்கமுமான மந்திரி மூலமான உபகாரம் நிகழ்ந்தேறிவிடும் என்கிற நம்பிக்கையை அப்போதுதான் மிஸ்டர் கே ஏற்படுத்தித் தந்திருந்தார். மனோகர் முதலாளி பசித்த நாயென வாழ்வைப் பார்த்து அவ்வப்போது குரைப்பது வழக்கம்தான் எனினும் தேவையான பொறைகள் வந்து விழுகிறபோதெல்லாம் மெல்லிய முனகலோடு அமைதியாகி விடுவார். இரையுண்ட வயிறு குரைப்பதற்காகாது. ஆகவே போதையின் பெருங்கால அத்தியந்தத்தின் பலனாய்க் கண்கள் செருக, மோனத்தில் ஆழ்ந்தார். பரந்தாமனும் கேயும் மிகுந்த வாஞ்சையோடு ஒருவருக்கொருவர் புன்னகையும் பரவசமுமாய்ப் பேசிக் கொண்டிருந்தார்கள். பற்றிய கைகளை விடாமல் அவர்கள் பேசிக் கொண்டிருந்தது பழைய சினிமாக்களில் வருவது போலிருந்தது.

என் மனநிலையும் மனோகர் முதலாளியின் மோனத் தவத்தை ஒத்ததாய் இருந்தது. ஏற்கனவே நான் மிகவும் சொற்பமாய்ப் பேசுகிறவன். இதில் பரந்தாமன் ஒருமுறைக்கு இருமுறை உபதேசித்திருந்தார். “அழைக்கப்படும்வரை அமைதியாய் இரு, நீயாக எதையும் பேசாதே” என்று சத்தியம் வாங்காத குறையாய் என் மனதிற் பதிந்தார். எனக்கு அந்தச் சித்திரத்தின் சர்வநிச்சயப் பலனாக என் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும் என்கிற நம்பிக்கை நிம்மதி தந்தது.

எனக்கு வழங்கப்பட்ட நாற்காலியில் அமர்ந்து அப்படியே ஒரு சிலை போல் இருந்தேன். இடையில் ஒரு தடவை வெகு உற்சாகமான குரலில் எனைப் பார்த்த கே, “நீ குடிக்கமாட்டாயா?” என என்னிடம் கேட்டார். கணப் பொழுதில் சுதாரித்துக் கொண்டு, இல்லை எனத் தலையை இடவலமாய் ஆட்டினேன். அந்தப் பதிலை அவர்கள் இருவருமே வெவ்வேறாய் ரசித்தார்கள் என்று பட்டது.

மெயின் ரோட்டில் இயங்காமல் பலகாலமாய்ப் பூட்டிக் கிடக்கிற அமராவதி தியேட்டரை அங்கு அமர்ந்த வாக்கிலேயே பரந்தாமனுடைய தம்பி சீனுவாசன் லீஸுக்கு எடுத்து நடத்துவதை இருவரும் உறுதிசெய்தபோது மணி இரண்டரை. அதுவரையிலான மதுவை நிறுத்திவிட்டு அங்கேயே எங்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

ஆண்டனி ஸ்கூல் கரஸ்பாண்டென்ட்டும் எதிர் வரிசையில் புதுமலர் பள்ளியை நடத்துகிற டாக்டர் சபரிதாஸும் எட்டு வருடங்களாக நீதிமன்றத்தில் வழக்காடி வந்த நிலையில், அவர்கள் இருவரையும் அழைத்து வந்த செங்காளியப்பன், பரந்தாமன் முன்னிலையில் இருவருக்கும் பாதகமின்றி கே செய்துவைத்த சமரசத்தை எழுதி வாங்கிக் கொள்வதாக நன்றி கூறிவிட்டுக் கிளம்பிச் சென்றார்கள். மணி நான்கரை. மனோகர் முதலாளியின் மனைவி அவர்களது இரண்டாவது மகளை ட்யூஷனுக்குக் காரில் அழைத்துச் செல்வதைக் கவனியாதது போல் பார்த்துவிட்டு மறுபடி பேச்சுக்குத் திரும்பினார் மனோகர் முதலாளி. நடுநடுவே ஊர் சேர்மனுக்கும் எம்எல்ஏவுக்கும் இரண்டு முறை போன் செய்து பேசினார் கே.

ஒரு டெண்டர் விஷயமாக இறுதி செய்வதற்காக பஸ் ஓனர் பாலுவும், க்ரானைட் கிட்டுவும் வந்த பிற்பாடு பெரும் விவாதமாக அந்த இடம் மாறிப் போனது. ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த மிஸ்டர் கே உரிமையும் கோபமும் கலந்த குரலில் தன் செல்பேசியை எடுத்துப் பேச ஆரம்பித்தார். அவர் வைத்த பிற்பாடுதான் தெரிந்தது, அதுகாறும் அவர் பேசியது மந்திரியுடன் என்பது. எனக்கு லேசாய்ப் பரபரத்தது. செரிமானத்துக் கடினமான ஒரு தினம், என் வழக்க வார தினங்கள் அமைதியானவை, எந்தவிதப் பரபரப்பும் இல்லாதவை. இருக்கும் இடம் தெரியாமல் இருந்து விடுவதன் லாவகம் உணர்ந்தவை. இந்த தினம் வேறாக இருந்தது. ஒரு எளியவனின் வாழ்வில் பண்டிகை நுழைந்தாற்போல். எப்போதாவது நிகழ்வதும் எப்போதும் அசைபோடுவதுமாய்ப் புத்தம்புதிய தினம்.

காணவாய்த்த ஒரு கடவுளைப் போல அந்தத் தினம் முழுவதும் கே தன்னைக் கொண்டு நிரப்பினார். கேயின் ரசிகனாகவே நான் மாற ஆரம்பித்திருந்தேன். சந்தோஷத்தோடு தன்னை பாரத்துக்கு ஒப்புக் கொடுக்கிற ஒரு வண்டி மாட்டின் மனோநிலையில் நான் இருந்தேன். குதிரையின் விரைதல் அதன் விசுவாசமும்தான். என் மனம் பரபரத்தது. என்னாலேயே நம்பமுடியாத ஒன்றாக இன்று காலையிலிருந்தே நான் கேயோடு இருக்கிறேன்.

எனக்குக் கிடைத்தவற்றிலேயே அபாரமான ஞானாபிஷேகம் எது தெரியுமா? திருப்பதி வாத்தியாரும் ஜிம் வைத்திருக்கிற ஈஸ்வரமுத்துவும் காபி அருந்துகிற டயத்துக்குச் சரியாக வந்து சேர்ந்தார்கள். என்ன பிரச்சினை அவர்களுக்குள் எனத் தெரியவில்லை. மற்ற சாதாரண மனிதர்கள் என்றால் மதுவுக்குப் பிற்பாடு உணவும் காபியும் என்று சத்தியமாக உட்கொள்ள முடியாது. ஆனால் கே எளிதாகக் கையாண்டார். இருவரையும் பார்த்துப் பேச ஆரம்பித்தார். என் வாழ்வின் பொன்னான பத்து நிமிடங்கள். கார்ப்பொரேட்டை எப்படிக் கையாள வேண்டும், அரசாங்கத் துறையினரை எப்படிக் குளிர்விக்க வேண்டும், அதிகார வர்க்கத்தை எப்படி சினேகிக்க வேண்டும், பணம் படைத்தோரை எப்படி வழிபட வேண்டும், இதெல்லாவற்றையும் ஆராய்ச்சி மாணவர்களுக்குப் பாடமெடுக்கிற மேதை ஒருவரைப் போல சொல்லிக் கொண்டு வந்தார்.

சமூகத்தின் பல அடுக்குகளில் வெவ்வேறு அரியாசனங்களில் வீற்றிருக்கக்கூடிய பலரை நான் சந்தித்திருக்கிறேன். இத்தனை நாள் ஒருவரைத் தேடித் திரிந்ததும் இல்லை, பரிச்சயமான பிற்பாடு அவர் குறித்து அபிப்ராயங்கள் குன்றாமல் இருந்ததும் இல்லை. அவருடைய மேதமையின் பால் ஈர்க்கப்படுவதை வசீகரிக்கப்படுவதை உணர்ந்து மெய்மறந்தேன்.

வெளியே சென்றிருந்த மனோகர் முதலாளியின் மனைவியும் மகளும் திரும்பி வருவது தெரிந்தது. என்ன நினைத்தாரோ சட்டென்று எழுந்து கொண்டார் மிஸ்டர் கே. சரி, அப்ப பாக்கலாம், என்று பொதுவாய் மனோகரிடம் சொல்லிவிட்டு நடக்க ஆரம்பித்தவர், பரந்தாமா, ஒன் கார்ல போலாம், என்று தன் காரைப் பின்னால் வரச் செய்தார்.

இறக்குமதி செய்யப்பட்ட கார் இந்த தேசத்தின் குளுமை மொத்தத்தையும் உட்புறம் வழங்க முயற்சித்துக் கொண்டிருந்தது. பரந்தாமன் காரை ஓட்டினார். முன்பக்கம் நான் அமர்ந்திருக்க, பின்னால் சர்வாதிகாரனாய் கே தெரிந்தார். “ஒவ்வொரு நாளும் இப்டி மத்தவங்க தொயரத்த சொமக்க முடியலடா பரந்தாமா..நானும் மனுஷன்தானேடா…” என்று கேயின் குரல் இதுவரை இல்லாத நட்பின் குரலாய் ஒலித்தது. அதையும் நான் ரசித்து என் மனதுக்குள் குறித்துக் கொண்டேன். “இந்தப் பையன் பேரு…”” என என் பேரைச் சொல்லிக் கடகடவெனப் பேசத் தொடங்கினார் பரந்தாமன். எனக்கு லேசாய் வியர்க்கத் தொடங்கியது. இன்று என்னைப் பற்றிய பேச்சு வரும் என்று நான் எதிர்பார்த்திருக்கவில்லை.

காரை நிறுத்தினார் பரந்தாமன். குறிப்பை உணர்ந்தவனாய் நான் இறங்கிப் பின்னால் ஏறிக் கொண்டேன். என் வலது கரத்தை சினேகிதத்தோடு பற்றிய கே எனக்கு மட்டும் கேட்கும் முன்பில்லாக் குரலில் “முன்பெல்லாம் நாய் வாய் வைத்தாற்போல் திரிந்து கொண்டிருந்தேன். பிறகு சமூகத்தில் எனக்கு இருக்கும் பெயர் சிதைந்துவிடக் கூடாது என்பதற்காக இப்போதெல்லாம் வெகுவாகக் குறைத்துக் கொண்டாயிற்று, எனக்கு என் அந்தஸ்து மிகவும் முக்கியம்..இல்லியா.?”

பரந்தாமன் மெலிதான புன்னகையுடன் என்னைச் சுட்டிக் காட்டி சொன்னார், “இவன் நமக்கு நூறு சதவிகிதம் உண்மையாக இருப்பான், இவனை நம்பலாம் நீங்க.”
எனது எண்ணைக் குறித்துக் கொள் என்று தனது செல்ஃபோன் எண்ணைச் சொன்னார் மிஸ்டர் கே. நான் பதிந்து கொண்டிருக்கும்போதே, எங்கேயும் எப்போதும் என் பெயர் வெளியே தெரிந்துவிடக் கூடாது. என்றார்.

“நான் பேசலாமா” எனக் கேட்டேன், இந்தக் கதையில் இப்போதாவது நான் பேசியாக வேண்டும் அல்லவா? அவர், ம், என்றதும், “உங்கள் பெயரைக் கூட மிஸ்டர் கே என்றுதான் என் செல்பேசியில் பதிந்து கொண்டிருக்கிறேன்.என் வாடிக்கையாளர்கள் எனது அரசர்கள். தரமே மந்திரம். சந்தைச் சரக்குகளை ஒருபோதும் சேர்த்துக் கொள்ளுவதில்லை நான். என்னிடம் இருப்பவர்கள் நூறு சதவிகிதம் பரிசுத்தமானவர்கள், வேறு எங்கேயும் வாய்க்காதவர்கள். எந்தத் திசையிலும் எந்தப் பாதையிலும் எதிரில் வராதவர்கள். என்னுடைய நெட்வொர்க் எஃகுக் கோட்டையை விட உறுதியானது, இத்தனை வருடம் குடும்ப நண்பராக இருந்தபோதிலும் பரந்தாமனுக்கே நான் சொல்லித்தான் என் பின்புலம் குறித்துத் தெரியும். உங்களுக்கு ஒரு கவலையும் வேண்டாம்” என்றேன்.

திருப்தியான கே தலையை ஆட்டிக் கொண்டார். “எனக்கு மேலே மந்திரி.அவருக்கு மேலே என்று சீக்கிரத்தில் மலை உச்சிக்கே சென்றுவிடலாம் நீ. என்னளவில் எனக்கு மந்திரியின் நட்பு மிகவும் முக்கியம் நண்பனே” எனச் சிரித்தார். இதற்குப் பதில் இல்லை என்பதால் மௌனமானேன். நான் இறங்க வேண்டிய இடம் வந்ததும் பரந்தாமனின் தோளைத் தொட்டேன். “எனக்கு நீங்கள்தான் முதலில். யாராக இருந்தாலும் அப்புறம்தான் என்றேன். அந்தப் பதில் பொய் என்றாலும் அவருக்குப் போதுமானதாக இருந்தது. “சரி, நான் இறங்கிக் கொள்கிறேன். வாட்ஸப்பில் வரும் புகைப்படங்களிலிருந்து தேர்ந்தெடுப்பதை மாத்திரம் திருப்பி அனுப்புங்கள். நாளை வெடிக்க வேண்டிய பட்டாசுகளை இன்றைக்கே உறுதி செய்துகொள்ள வேண்டும். அதுதான் உசிதம்” என்று இறங்கிக் கொண்டேன்.

உனது பெயரை என்ன என்று சேவ் செய்து கொள்ளட்டும் என்று கேட்டார் கே. அவர் அப்படிக் கேட்டபோது அவரது மொத்தக் கம்பீரமும் தொலைந்து போயிருந்தது. எனக்குத் தெரியும் இது நான் இறங்க வேண்டிய இடம் மாத்திரமல்ல, நான் வரவேண்டிய இடமும் கூட. எத்தனை பார்த்தாயிற்று. இறக்கி விடப்பட்ட சன்னலில் இரண்டு கைகளையும் வைத்துக் கொண்டு சொன்னேன். “என் எண்கள் அடிக்கடி மாறிக் கொண்டே இருக்கும். பெயர் வேண்டாம். ஏற்பாட்டாளன் என்று வைத்துக் கொள்ளுங்கள் எப்போதும்” என்றேன். மெல்லத் திரும்பி இருளில் கலந்து மறைந்தேன்.