வாசகர் வட்டம்

உரத்த சிந்தனை- வாசகர் வட்டம்


ஸ்ரீநிரா என்பது அவர் தனக்குத் தானே சூட்டிக் கொண்ட புனைப்பெயர். உண்மைப் பெயரின் சுருக்கம். ஸ்ரீநிவாசராகவன் என்பது அவருக்கு சூட்டப்பட்ட பெயர். அவரொரு வழக்கறிஞர். மதுரை உயர் நீதிமன்றத்தில் பிரசித்தி பெற்றவர். கல்மண்டபம் சுமதி அவரை எனக்கு அறிமுகம் செய்தார்.கூடவே வரும் நிலா என்ற கவிதைத் தொகுப்பிற்கு என் அணிந்துரை ஒன்றினைத் தந்தேன். கொடுந்தொற்றுக் காலத்தின் கதவடைந்த தினமொன்றில் இணையவழி வெளியானது அந்தத் தொகுதி.

உரத்த சிந்தனை உதயம் ராம் எனக்கு பாலகுமாரன் விருது வழங்கப்பட்ட விழாவில் கலந்துகொண்ட பலருள் ஒருவர். அன்றைக்குக் கரம் குலுக்கி விடைபெற்றவர் அடுத்த சில தினங்களிலேயே அழைத்தார். முதல் பேச்சிலேயே நல்ல பரிவை உணர்வது அரிது. ராம் அப்படியானவர். மதுரையில் 1987 ஆம் ஆண்டுவாக்கில் தொடங்கப்பட்டு சிலகாலம் மட்டுமே செயல்பட்ட வாசகர் வட்டம் அமைப்பைத் தற்போது பல ஊர்களிலும் தொடங்கி நடத்தி வருகிறார். மதுரையில் அந்த அமைப்பின் தொடக்க விழாவும் மேற்சொன்ன ஸ்ரீநிராவின் நூல் அறிமுக விழாவும் நேற்று காலை நூற்றாண்டு கண்ட மதுரை சேதுபதி பள்ளியின் உள்ளரங்கத்தில் நடந்தேறியது.

இந்த விழாவின் மூன்றாம் முகமாக மிருதன் பாலா எழுதிய உள்வெளியின் உயிர்வளி எனும் கவிதை நூல் வெளியீட்டு விழாவும் நடந்தது.

ஸ்ரீ நிரா வரவேற்றார்.எழுத்தாளரும் சொற்பொழிவில் சிறந்தவருமான திருமிகு இந்திரா சௌந்தரராஜன் இந்த நிகழ்வுக்குத் தலைமை தாங்கினார். மூத்த இயக்குனரும் பண்பட்ட கலைஞருமாகிய எஸ்.பி.முத்துராமன் அவர்கள் இந்த விழாவின் முதன்மை ஏற்றார். ஹைகூ கவிஞர் இரா.ரவி,வழக்கறிஞ்ர் பகவதிராசா உள்ளிட்டோர் பங்களிப்பில் மதுரை குறித்த ஆறு தலைப்புகளில் கவிதைவாசிப்பு நடந்தது. மிருதன் பாலாவின் நூல் வெளியீடு இனிதே நிகழ்ந்தது. முருகபாரதி ஸ்ரீநிராவின் நூல் பற்றிய தனது பார்வையைத் தந்தார்.

மதுரை ஹலோ பண்பலை வானொலியின் நட்சத்திரத் தொகுப்பாளினி செல்வகீதா, சேதுபதி பள்ளியின் செயலர் வழக்கறிஞர் திரு பார்த்தசாரதி உதயம் ராம் உள்ளிட்டோருடன் நானும் வாழ்த்துரை நல்கினேன். இந்திரா சௌந்தரராஜன் சீர்மிகு சிறப்புரையும் எஸ்பி முத்துராமன் வழங்கிய அறவுரையும் பயன்மிகுந்த தருணமாக உருத்தந்தவை.

தொடர்ந்து உரத்த சிந்தனை தன் நிகழ்வுகளை மதுரையில் நிகழ்த்திச் சிறக்க மீண்டும் வாழ்த்துகிறேன்

வாழ்தல் இனிது.