வினுச் சக்கரவர்த்தி

கரிய நிறமும் நெடிது உயர்ந்த கன சரீரமும் காண்பவரை மருளச் செய்யும் தோற்றம் கொண்டவர்  வினு சக்ரவர்த்தி. ஆனாலும் அச்சு அசலான தனித்துவம் மிகுந்து ஒலிக்கும் அழுத்தமும் திருத்தமுமான வசன உச்சரிப்பு அவருக்கான அரியாசனத்தைப் பெற்றுத் தந்தது. தான் ஏற்கிற பாத்திரத்தை சின்னச் சின்ன நுணுக்கங்களின் மூலமாக நம்பச் செய்து விடுவது அவரது பலம். சிரிப்பு என்றாலும், கோபம் என்றாலும், உருக்கம் என்றாலும், கருணை என்றாலும் ஏற்கிற வேடங்களெல்லாம் தானாகத் தெரிந்தவர் வினு சக்ரவர்த்தி.

பொது மனிதனாகவும், பலவித உறவுகளை ஏந்தியும் அவர் காட்டிய வித்தியாசங்கள் நெடுங்காலத்துக்கு அவர் புகழைப் பறைசாற்றும். வெகுளி, வெள்ளந்தி, அப்பாவி, வினயன், வஞ்சகன், வில்லாதி வில்லன் என சாந்தமும் கம்பீரமும் அடைப்புக்குறிகளாக தன் வேடங்களை நடித்துக் காட்டினார் வினு. மனதின் அடி ஆழத்தில் நடிப்புக்கலை மீதான நீங்காத வேட்கை எத்தனை பக்கம் பக்கமாக வசனங்களைப் பேசியும், பல தோற்றங்களை ஆண்டும் பசி தீராத நடிகப் பறவையாகவே அயராமல் சிறகசைத்து பரிணமித்தவர். பல நூறு படங்களில் நடித்திருக்கும் வினு வேடங்களே விரும்பிச்சென்ற நடிகர்
பலாப்பழத்தின் மனித உருவாகவே முள்ளும் கனிதலும் நிரம்பியவராக வினுசக்கரவர்த்தி ஏற்ற பல கதாபாத்திரங்களை நம்மால் சுட்டிக்காட்ட முடியும் அந்த வகையில் மணிவண்ணன் இயக்கிய கோபுரங்கள் சாய்வதில்லை திரைப்படத்தின் ஆணிவேர் அவரே பூதலிங்கம் எனும் பாத்திரம் பல வருடங்களுக்குப் பின்னால் தன் உயிர் நண்பரை பார்த்த மாத்திரத்தில் உன் பொண்ணுக்கு என் பையனுக்கும் வர்ற 12ஆம் தேதி கல்யாணம் என்று அங்கேயே பாக்கு வெத்தலை மாற்றி நிச்சயம் செய்து கொள்வார்  படம் முழுவதுமே வினுச்சக்கரவர்த்தியை மீறமுடியாத மோகன் பாத்திரத்தின் சுயநலத்தின் மீது தான் பயணிக்கும்

கமல்ஹாசனுடன் பல படங்களில் இணைந்த வினு ஒரு கைதியின் டைரி படத்தில் சவாலான வில்லனாக பங்கேற்றார். ரஜினியின் ஜாலியான சகா என்று இவரைச் சொல்லலாம் பல படங்களில் ரஜினியுடன் வெவ்வேறு வேடங்களில் இணைந்தவர் அண்ணாமலை படத்தில் ரெண்டே காட்சிகளில் வந்தாலும் நறுக்கென்று இருந்தது அவரது வேடம். ராஜாதி ராஜா படத்தில் ஒரு ரஜினிக்கு மாமனாராக சவால்விட்டு அதில் தோற்பார் “மாமா உன் பொண்ண கொடு” பாடல் இன்றளவும் இவரது பெயரையும் நினைவூட்டிய படி ஒலிக்கும் கல்யாண கானம். குரு சிஷ்யன் படத்தில் கௌதமியின் அப்பாவாக லஞ்சம் வாங்கும் இன்ஸ்பெக்டர் நல்லசிவம் கதாபாத்திரத்தில் படம் முழுக்க வருவார் நவரசத்தையும் வசனங்களின் வழியாக கற்றுக் கொடுப்பதற்கு ஒரு பாடத் திட்டம் வகுத்தார் நல்ல சிவம் வேடத்தை அதில் ஒரு பாடமாக ஆக்கலாம். ஏமாற்றும் சிபி.ஐ அதிகாரி வேடத்தில் பிரபு போலி மீசைப் போலீசாக ரஜினி இருவரும் தங்கள் கூட்டத்தோடு வினுச்சக்கரவர்த்தி இல்லாத நேரத்தில் அவரது வீட்டில் ரெய்டு செய்வார்கள் ஒப்புகை கடிதத்தில் வினு சக்கரவர்த்தியின் மனைவி மனோரமாவிடம் கையொப்பம் வாங்கி அதை காண்பித்து வினுவை பிளாக்மெயில் செய்வார்கள் அதை வாங்கி வாசிக்கும் காட்சியில் அசத்துவார் “என்.கல்யாணி இனிசியல் ரொம்ப முக்கியம்” என்று பல்லைக் கடித்தபடி கடித்தபடி சட்டென்று அந்த கடிதத்தை கிழித்து தன் வாய்க்குள் போட்டுக் கொள்வார் ஒரு முக்கியமான காகிதத்தை துண்டுதுண்டாக கூட கீழே எறிந்தாலும் யார் கையிலும் அது கிடைத்து விடக்கூடாது என்பதை உணர்த்தும் வகையில் அப்படி செய்வார் அதையொட்டி தன்னை இனி ஒன்றும் செய்ய முடியாது என்று ஒரு டான்ஸ் ஆடுவார் தமிழ் சினிமாவில் அந்த பாத்திரத்தை தன்னை விட்டால் வேறு யாராலும் செய்ய முடியாது என்ற அளவில் உச்சம் தொட்டார் வினுச்சக்கரவர்த்தி

Multilingual actor Vinu Chakravarthy passes away - IBTimes India
நாட்டாமை படத்தில் தான் ஒரு பணக்கார வீட்டுப் பெண் என புகுந்த வீட்டில் கர்வத்தோடு நடந்துகொள்வார் மீனா எதுவரை என்றால் அவருடைய அப்பா வினு பெரியதோர் தனவந்தர்  ஒரு முறை எதார்த்தமாக சந்திக்கையில் மிகப் பணிவாக குடும்பத்தின் மூத்தவர் சரத்குமாரிடம் பேசிவிட்டு செல்வார் அதைப் பார்த்து மனம் திருந்துவார் மீனா இந்தக் காட்சியில் நூல் பிடித்தாற்போல் வினுவின் நடிப்பு மெச்சத்தக்கது.

மண்ணுக்குள் வைரம் திரைப்படத்தில் சிவாஜி கணேசனின் தம்பியாக முரளிக்கு அப்பாவாக நடித்திருப்பார் வினு சக்ரவர்த்தி செல்வத்தின் திமிர் ஆணவம் தான் நினைத்ததை எப்படியாவது செய்த தீர்க்கும் பிடிவாதம் வெளிதோற்றத்துக்கு அண்ணனுக்கு அடங்கி நடப்பது போல் காண்பித்துக் கொண்டாலும் யாருமறியாமல் தன் மனதில் தோன்றும் வக்கிரங்களை நிறைவேற்றிக் கொள்ளும் வேடத்தில் தோன்றினார். ஊரறிய தன் மகன் மீது புகார் சொன்ன ரஞ்சனி யுடைய தகப்பன் ராஜேசை வாயை பொத்திக் கொள்ள சொல்லிவிட்டு “இப்ப நான் அடிப்பேன் சத்தம் வெளியே கேட்டது கொலையே செய்திடுவேன்” என்று மிரட்டி அடித்து நொறுக்குவார். அந்தக் காட்சியில் கண்கள் கன்னம் தாடை நாசி என முகத்தின் ஒவ்வொரு பகுதிகளும்  ஆணவம் ஆத்திரம் வஞ்சகம் இவற்றையெல்லாம் பிரதிபலிக்கும் வண்ணம் சிறந்த நடிப்பை வழங்கினார் வினுசக்கரவர்த்தி.

இயக்குனர் சரண் வீ சேகர் எஸ்பி முத்துராமன் போன்ற பலருக்கும் செல்ல நடிகராகவே திகழ்ந்தார் வினுசக்கரவர்த்தி அட்டகாசம் படத்தில் நன்றி மறவாத மனிதனாக அஜித்துக்கும் ரகுவரனுக்கும் நடுவில் அல்லாடக்கூடிய வினோதமான பாத்திரத்தை ஏற்றார். ஜெமினியிலும் அல்லி அர்ஜுனாவிலும் குறிப்பிடத்தக்க வேடங்களை ஏற்றார். சேரன் இயக்கிய பாண்டவர் பூமி படத்தில் பொறாமையும் வெறுப்பும் மேலிட பக்கத்து வீட்டுக் கிணற்றில் விஷம் வைப்பவராக பதைபதைக்க வைத்தார்.  பெற்ற மகனின் ஊதாரி தனத்தை எதுவும் செய்ய முடியாமல் தன்னைத் தானே சவுக்கால் அடித்துக் கொள்ளும் தந்தையாக உனக்காக எல்லாம் உனக்காக படத்தில் அதகளம் செய்தார்

Vinu Chakravarthy Net Worth (Actor)
மாணிக்கம் படத்தில் பெரும் குடும்பஸ்தன் கதாபாத்திரம் ஏற்ற மீனு தனக்காக உண்மையிலேயே கலங்கி அழ யார் இருக்கிறார்கள் என்பதை சோதித்துப் பார்ப்பதற்காக இறந்து போனது போல் நடிப்பார் கிட்டத்தட்ட ஐந்து நிமிடங்கள் இடம்பெறும் அந்த காட்சியில் கொஞ்சமும் கூடி குறைந்திருந்தால் சப் என்று போயிருகும். தன் அனுபவம் மிகுந்த நடிப்பினால் தூக்கி நிறுத்தினார் வினோ. ஒவ்வொருவரும் எப்படி எல்லாம் பாசாங்கு காட்டி போலியாய் அழுகிறார்கள் என்பதையெல்லாம்   சோதித்து அறியும் வினோதமான   காட்சியின் தன்மையை நுட்பமாக உள்வாங்கி தனக்கே உரிய முறையில் சீர்மிகு நடிப்பை வெளிப்படுத்தினார்

“கோயில் புறா” என்று ஒரு படம். இளையராஜா இசையமைக்க, கே.விஜயன் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தின் கதையை எழுதியவரும் வினு சக்ரவர்த்திதான். அந்தப் படத்தில் நாதசுரக் கலைஞராக வாழ்ந்து காட்டினார் வினு. படத்தில் ஃப்ளாஷ்பேக் எனப்படும் எடுத்துக்காட்டுக் காட்சிகள் பதினைந்தே நிமிடங்களில் சொல்லப்படும். ஊர்க் கோயிலில் தன் மனதின் உருக்கமான வழிபாடாகவே தான் அறிந்த நாதசுரக் கலையை இசையெனும் மலராக்கி, எளிய வாழ்வில் தானும் தன் சின்னஞ்சிறு மகனுமாய் வாழ்ந்துகொண்டிருப்பார் வினு சக்ரவர்த்தி. அவரது இசைத் திறமையை சந்தைப்படுத்தி, லாபம் ஈட்டும் தீய எண்ணத்தை இனிக்கும் சொற்களால் சாதித்துக் கொள்வார் “என்னத்த கன்னையா”. அவரும் அவரது மருமகள் “சில்க்” ஸ்மிதாவும் சேர்ந்து டவுனுக்கு அழைத்துவந்து பாசம் காட்டுவதுபோல் நடித்து ஏமாற்றுவார்கள். அதனால் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகும் வினு ஒரு கட்டத்தில் குடியால் பொலிவிழந்து போவார். கடைசியில் மீண்டும் தன் கிராமத்துக் கோயிலுக்கே திரும்பி அங்கே மறுபடி பழைய வீரியத்தோடு தன் உயிர் நிகர் நாதசுரத்தை வாசிக்கும்போதே உயிரையும் விடுபவராக ஒப்பிட இயலா பெருங்கொண்ட நடிப்பை வாரி வழங்கினார் வினு. மிகக் குறைவான வசனங்களும், தொழில்முறை நாதசுரக் கலைஞர்களின் நடை, உடை, பாவனை அத்தனையையும் கனக்கச்சிதமாகத் தோற்றுவித்தார் வினு. ஒரு கிராமத்துச் சாமான்ய மனிதனின் கூச்சமும், எது சரி எது தவறு என்று அறியத் தெரியாத சலனமும், அன்பை நம்பி நெடுங்காலம் மெல்ல மெல்லச் சரிந்து ஒரு புள்ளியில் நிர்க்கதியாகையில் கையறு நிலையின் தவிப்பும், அவமானமும் குற்ற உணர்வும் ஒருங்கே தளும்புகிற பார்வையும் என, தான் எழுதிய பாத்திரத்துக்கான நியாயத்தைத் தானே ஏற்று வழங்கிச் சமன் செய்தார் வினு சக்ரவர்த்தி.  எத்தனை முறை பார்த்தாலும் கோயில் புறா படத்தில் ஒரு நாதசுரக் கலைஞர்தான் நம் கண்களுக்குத் தெரிவார். அந்த அளவுக்கு, பதினைந்தே  நிமிடங்களில் நம்மைக் கரைய வைத்திருப்பார் வினு சக்ரவர்த்தி.

ஆயிரம் படங்களில் நடித்தவர் என்று தகவல்கள் கூறுகின்றன ஒன்றிரண்டு கூடிக் குறையலாம் வற்றாத ஜீவநதியின் நெடுங்கால பயணம் போல திரை உலகில் தன் கொடியை ஏற்றிய வினு வெள்ளந்தி தனமும் வில்ல சாகசமும் ஒருங்கே கொண்ட சக்கரவர்த்தி தான்