Post Views:
233
விலை
குறுங்கதை
அந்த நகரத்தின் பரபரப்பான வீதியில் அவன் நின்று கொண்டிருந்தான். தலையில் ஒரு தொப்பி எப்போதோ அவன் வாழ்வில் வந்து ஒட்டிக்கொண்டிருந்தது. அதை எங்கே வாங்கினான் என்று இப்போது அவனுக்கு நினைவிலில்லை. அந்தத் தகவல் அவனுக்கோ ஏன் யார்க்கும் தேவையே இல்லை. அவன் தன் பெயரைத் தவிர அனேகமாக சொந்த சரித்திரத்தின் எல்லாவற்றையும் மெல்ல மறந்துகொண்டே வருபவன். இது உண்மையில் ஒருவிதமான ஸெட்டில்மெண்ட் தான். டாக்டர்கள் அவனுடைய உடலுள் பலவிதமான உபகரணங்களை செலுத்திப் பார்த்துப் படங்களாய் அவன் உடலின் தருணபிம்பங்களாக மாற்றிக் கொண்டவற்றின் புரியாமொழிச் சிதில வாக்கியங்களையும் கணித மதிப்புக்களையும் பார்த்துத் தங்களுக்குள் வியந்து கொண்டதைப் பலமுறை பார்த்திருக்கிறான். அவர்கள் சொல்லாமல் அவனுக்குப் புரிவது ஒன்றே ஒன்று தான். இன்னும் நீ எப்படி உயிரோடு இருக்கிறாய் என்பது தான் அது. அவன் தனக்குள் சிரித்துக் கொள்வதும் அப்போது தான். சப்தமாக சிரிப்பான். வாய்விட்டுப் பெரிய சப்தத்தோடு சிரிப்பான். நில்லாமல் சிரித்திக் கொண்டே அந்த இடத்தை விட்டு அகலுவான்.
கூசும் வெய்யிலுக்குக் கையை முட்டுக் கொடுத்து நிமிர்ந்து பார்த்துக் கொண்டான். அவன் அதிகம் வந்து சென்ற மருத்துவமனையிலிருந்து கார்கள் வெளியேறும் வழியில் ப்ளாட்ஃபாரத்தில் நின்றுகொண்டு தன்னைக் கடந்து செல்பவர்களில் தேர்ந்தெடுத்து வெகு சிலரிடம் மட்டும் ஆங்கிலத்தில் பிப்டி ருபீஸ் இருக்குமா என்று தாழ்மையான குரலில் கேட்பான். அந்தக் குரலில் அதிகாரமும் இருக்காது. அதே போல் யாசகனாகவும் தன்னைத் தெரியப்படுத்திக் கொண்டதில்லை. எப்போதும் ஒரே கேள்வி தான். கூடவோ குறையவோ கிடையாது. ஐம்பதே ரூபாய். அதை யார் தந்தாலும் பரவாயில்லை, குறைவான மதிப்புள்ள பணத்தாட்களை அவன் மறுப்பதில்லை. ஆனால் மிகச்சரியாக இருநூறு ரூபாய் வந்ததும் தன் அன்றைய கோருதலை நிறுத்திக் கொள்வான். மனசுக்குள்ளேயே தான் அதுவரை சேகரித்திருக்கும் பணமதிப்பின் கூட்டுத்தொகையை பாடம் செய்துகொண்டே நிற்பான். மொத்தமாக இருநூறு சேர்ந்ததும் மருத்துவமனைக்குள் செல்வான். அங்கே மருந்து செக்சனில் இவனை நன்கறிந்த பரசு என்பவன் இருந்தால் மட்டும் கண்ணாடி முன்பாக நெருங்கி நின்றுகொள்வான். அவன் அந்தப் பக்கம் வந்ததும் கை நுழையும் அளவு இருக்கும் துளையின் வழியே 200 ரூபாய்க்கான சேகரிப்பைத் தருவான். அவன் இரண்டே நூறு ரூபாய்த் தாட்களைத் தந்து அனுப்புவான். சில்லறை எந்த ரூபத்தில் வந்தாலும் அதற்கும் மதிப்பிருக்கும் இடங்களில் ஒன்று அந்த மருந்துக்கடை.
அங்கிருந்து வெளியே வருகிற அவன் யாரையும் லட்சியம் செய்யாமல் தன்னைக் கடந்து விரையும் வாகனங்களைக் குறுக்கே தாண்டியபடி எதிர்ப்புறம் ஒரு ஓரத்திலிருக்கும் மதுக்கடையை ஒட்டிய பாருக்குள் நுழைந்து வழக்கமாக அமர்ந்துகொள்கிற இடத்தில் சென்றமர்கிறான். அது ஒரு மூலை. அங்கே சப்ளை பார்க்கும் இளைஞன் அவன் பெயர் என்னவோ ராசு என வரும். இவனை நெருங்கி என்ன வேண்டும் என்று எதுவும் கேளாமல் இவன் நீட்டுகிற ரூபாயைப் பெற்றுக் கொண்டு ஒரு க்வார்ட்டர் பாட்டிலைக் கொண்டு வந்து வைக்கிறான். இரண்டு தட்டுக்களில் சுண்டலும் காரக்கடலையும் வைத்தவன் பறந்து விடாமலிருக்க ப்ளாஸ்டிக் தம்ப்ளரின் உட்புறம் கொஞ்சமாய் தண்ணீர் ஊற்றி வைக்கிறான். வேறேதும் வேண்டுமா என்கிறான். இவன் ஒன்றும் வேண்டாம் என்று மறுத்ததும் எங்கோ சென்றவன் திரும்ப வந்து தீப்பெட்டியை இவன் பக்கத்தில் வைக்கிறான்.
இவன் ராசுவுக்கு நன்றி சொல்கிறான். சன்னமான குரலில் நாளையிலிருந்து மதுவகைகள் அனைத்தும் விலை ஏறப்போகின்றன என்கிற தகவலைச் சொல்கிறான். நிமிர்ந்து ராசுவைப் பார்த்தவன் லேசாய் சிரித்தபடி நாளை விலை உயர்ந்தாலும் பரவாயில்லை. இன்று பழைய விலை தானே என்று கண்களை மூடித் திறக்கிறான். கூட்டமாய் ஆறேழு பேர் எதோ காரணக்கொண்டாட்டத்துக்கென உள்ளே நுழைகின்றனர். ராசு அவர்களை உபசரிக்கச் செல்கிறான். திரும்பி வந்து பார்க்கும் போது தனியே அதுவரை குடித்துக் கொண்டிருந்தவன் கிளம்பிப் போயிருப்பது தெரிகிறது. திரும்பி அவன் குடித்த தம்ளரைப் பார்க்கிறான். பக்கத்தில் எதோவொரு மருந்துக்குப்பி தலைகவிழ்ந்து ப்ளாஸ்டிக் டேபிளில் லேசாய் உருண்டபடி கிடக்கிறது. ராசு அந்த டேபிளில் இருக்கும் யாவற்றையும் திரட்டிக் குப்பைக்கூடையினுள் போடுகிறான்.