விஷ்ணுபுரம் நிகழ்வு

விஷ்ணுபுரம் நிகழ்வு


சென்ற வருடம் சுரேஷ்குமார் இந்திரஜித் அவர்களுக்கு விஷ்ணுபுரம் விருது வழங்கப்பட்ட நிகழ்வு பெருந்தொற்றுக் காலத்தின் கட்டுப்பாடுகளால் எளிய நிகழ்வாக மதுரையில் நடத்தப்பட்டது. பரிசு வழங்குகிற விழாவில் நண்பர் இளங்கோவன் முத்தையாவுடன் கலந்துகொண்டேன். எளிய நிகழ்வு என்றாலும் சிறப்புற நடைபெற்ற நிகழ்வாகவும் அமைந்தது. இந்த வருடம் கவிஞர் விக்ரமாதித்யனுக்கு விஷ்ணுபுரம் விருதளிப்பு விழா கோவையில் இரண்டு நாள் நிகழ்வாக நடக்க இருப்பதாக அறிவிக்கப் பட்டது. முதலில் இரு தினங்களும் பார்வையாளனாகக் கலந்து கொள்ளலாம் என்று தான் நினைத்திருந்தேன். அப்படியே தகவலும் தெரியப்படுத்தி இருந்தேன். கடைசி நேரத்தில் என் அம்மாவுக்கான மாதாந்திர நீத்தார் கடன் கழிக்கும் சடங்கு ஞாயிற்றுக் கிழமை வந்தபடியால் சனிக்கிழமை ஒரு நாள் மட்டும் கலந்து கொள்ள முடிவு செய்தேன். நிறைய நண்பர்களைப் பார்க்க முடிந்தது. பலரை முதல் முறை பார்க்கிறேன். தமிழினி யாவரும் விஷ்ணுபுரம் உள்ளிட்ட புத்தக விற்பனை அரங்கங்களும் மிகவும் பயனளித்தன. புதிய வெளியீடுகள் பலவற்றை வாங்கினேன். சரவணன் சந்திரன் இளங்கோவன் முத்தையா இருவருடனும் ஒரு தேநீர் கொஞ்சம் அரட்டை எனச் சிறிய அளவளாவலுக்கு அப்பால் கிளம்பினேன். திரும்ப வருகிற வழியில் உக்கடத்தில் இருக்கும் பழைய புத்தகங்களுக்கான மார்க்கெட்டுக்குப் போய் அங்கே சில கடைகளில் சில நூல்களை வசப்படுத்திக் கொண்டேன். பொள்ளாச்சியில் கௌரி கிருஷ்ணாவில் மதிய உணவுக்கப்பால் அதற்கடுத்த வளாகத்தில் இருந்த எதிர் வெளியீடு புக்ஸ் அண்ட் புக்ஸ் கடைக்குப் போய் அங்கிருந்து இரண்டொரு புத்தகங்களை வாங்கிவிட்டுக் கிளம்பிய போது மணி நாலரை. அன்றைய இரவு உறங்குவதற்கு வீடு திரும்பியாயிற்று. விஷ்ணுபுரம் நிகழ்வு பல மனிதர்களின் எத்தனம் மற்றும் ஈடுபாட்டின் கூட்டு விளைதல் என்பது சாதாரணமாய்ச் சொல்லிக் கடப்பதற்கல்ல. மிக நேர்த்தியான ஏற்பாடு. அன்பான உபசரிப்பு மற்றும் திட்டமிட்ட நிகழ்ந்தேறல் என்று மிளிர்ந்தது. தொடர்புள்ள அனைவருக்கும் வாழ்த்துகள். அடுத்த வருடம் இரண்டு நாட்களும் முழுமையாகக் கலந்து கொள்ள வேண்டும்.

வாழ்தல் இனிது.