அன்பு என்பது ஒரு ஏற்பாடு


‘அன்பு என்பது ஒரு ஏற்பாடு’

கவிஞர் அம்மு ராகவ்

மிட்டாய்பசி நாவல் குறித்த விமர்சனம்


ஒரு பெண்ணின் வன்மம் என்ன செய்யும்?
கணவனின் துரோகத்தால் மெளனத்தை கையிலெடுக்கும் செல்லம்மா, அவன் இறந்துவிட
அதைத் தீர்த்துக் கொள்ள முடியாமல், அந்த வன்மத்தைத் தன் மகனிடம் காட்ட,
ஏன் எதற்கு என்று தெரியாமலேயே அன்னையின் அன்பிற்கு ஏங்கும் ஆனந்த்.

தாய்க்கும் மகனுக்குமான இந்த உளவியல் பிரச்சினை ஒருவனை எவ்வளவு தூரத்திற்கு கொண்டு செல்லும்.
அதனுடன் அவனுக்கெதிரான சூழலும் சேர்ந்து கொண்டால் என்னவாகும்?

இளமையில் வறுமை கொடிது.
வறுமை என்பது பொருளில்லாமல் போவது மட்டுமல்ல, பெற்றோரின் அன்பும் அரவணைப்பும் இல்லாமல் போவதும். அதனால் தான் அந்த மிட்டாய்ப்பசியுடன் திரியும் ஆனந்திற்கு திலக அத்தையோ, அனுவோ எவ்வளவு அன்பை பரிமாறினாலும் செரிக்கவில்லை.

மதுரை வளனார் பள்ளி மற்றும் கூர்நோக்கு இல்ல சூழல் பற்றிய விவரிப்பு நம்மையும் அந்த வளாகத்தில் கொண்டு போய் நிறுத்துகிறது. முக்கியமாக ஆனந்த் வளனாரிடம் வேண்டுதல் வைக்கும் காட்சி குழந்தை மனதிலிருந்து எழுதிய எழுத்து அழகு.

பள்ளியில் படிக்கும் சிறார்களில் மனவோட்டத்தையும், சிறார் கூர்நோக்கு இல்லத்திலுள்ள சிறார்களின் வாழ்வையும் கூறியிருக்கும் அத்தியாயங்கள் புதினத்தின் சிறப்பான பகுதி.

சிறார் உளவியலை அவ்வளவு அருமையாக எழுதியிருக்கிறார்.
அந்தப் பக்கங்களை வாசிக்கும் போது மனம் கனத்துப் போனாலும் புத்தகத்தை கீழே வைக்க மனமில்லை.

கதையோடு வரும் எந்த ஒரு உரையாடலையும் சாதாரணமாக கடந்து போய் விட முடியாத எழுத்து.அப்படி புத்தகத்திலிருந்து சில வரிகள்…

“வாழ்வானது தவறாகப் பூர்த்தி செய்யப்படுகிற தகவல் பிழைகள் நிரம்பிய படிவம்”

“மனிதர்கள் உத்தரவாதம் அளிக்கிற வார்த்தைகளை நிறைவேற்றவும் கெடுத்துவிடவும் கடவுளோ எதுவோ பின்னால் இருக்கிறது”

“துறவும் களவும் ஏதாவதொரு புள்ளியில் ஒரு அன்பையாவது நிராகரிக்காமல் சாத்தியமில்லை”

இந்நூலை வாசிக்கும் போது உணர்ந்தது நிச்சயம் இது ஒரு புனைவல்ல என்பது. ஒருவர் தனது சுயசரிதையை எழுதியதைப் போன்ற வாசிப்பனுபவம்.

நூலின் அட்டைப்படமும் தலைப்பும் அவ்வளவு பொருத்தம் இந்த கதைக்கு. வாசகர்களை சில நிமிடங்களாவது நின்று நிதானமாக கவனிக்க வைக்கிறது.

வாழ்வின் மீதும் மனிதர்கள் மீதும்
பெரிய புகார்கள் ஏதுமின்றி தன் மனம் போன போக்கில் நகரும் ஆனந்தின் பயணம்
மாநகரின் ஏதோ ஒரு புள்ளியில் தொடங்கி தலைநகரின் ஒரு புள்ளியில் முடிகிறது அல்லது தொடரும்.அவனது மிட்டாய்பசியைத் தீர்க்கும் அந்த ஒன்றை தேடி….

மனிதர்கள் மீது அவநம்பிக்கையை விதைக்காமல்,
மனிதத்தின் மீது நம்பிக்கையூட்டும் ஒரு நல்ல நாவலை கொடுத்ததற்கு நன்றி❤
இலக்கிய வாசகர்கள் தவறவிடக் கூடாத ஒரு புதினம் ‘மிட்டாய்பசி’

 


May be a closeup of 2 people, people standing and indoor

கவிஞர் அம்மு ராகவ் தேனியைச் சேர்ந்தவர்.
ஏதிலா இவரது முதல் கவிதைத் தொகுப்பு .
B4BOOKS வெளியீடாக வந்திருக்கிறது.
தீவிர வாசக மனோபாவமும் விமர்சன ஆர்வமும் கொண்டவர்.

 


To Purchase Mittoy Pasi click here