உருவகங்களின் பேரரசி

மனுஷி எழுதிய “கருநீல முக்காடிட்ட பெண்” கவிதைத் தொகுதிக்கான ஆத்மார்த்தியின் அணிந்துரை

கையில் ஒரு பொம்மையை வைத்துக் கொண்டு தானும் அதுவுமாக மாறி மாறிப் பேசியபடி இருக்கும் வெண்ட்ரிலோகிஸ்ட் ஒருவளாகவே தானும் தன் மாயாவுமாகக் கவிதைகளை நிகழ்த்துகிறது மனுஷியின் அகமனம். அத்தகைய வித்தகன்மீது வியத்தலைத் தாண்டிய சின்னதொரு பரிவும் சட்டென்று பூக்கிறது.

ஆழ்ந்து நோக்குங்கால் அத்தனை பரிவும் அந்த பொம்மைக்கானது என்பது விளங்கும். நியதிகளின் எல்லாச் சாலைகளிலும் காதல் முகிழ்கிற நேரம் ப்ரியமான பொம்மையிடமிருந்து கைமாற்றித் தன் காதலிணைக்குத் தந்தவர்களை உற்றுப் பார்த்தபடி தனிக்கின்றன டெடிபேர்கள். மௌனித்தல் முறையிடுவதற்கான சிறந்த வழி. மாயாவும் தானுமாய் மனுஷி நிகழ்த்திப் பார்க்கிற காகித நடனங்கள் ‘கருநீல முக்காடிட்ட புகைப்படம்’ தொகுதியின் கவிதைகள்.

அவசரமும் நிதானமும் கலந்து பெருகும் வினோதம் ஆர்ப்பரித்தலின் ஆழத்தை அரிதாய்க் கூடிப் பூக்கிற அரிய மலர்களாய் இக்கவிதைகள். மாறிக் கொண்டே இருக்கும் வாழ்க்கை மீது எந்தவிதமான முறையிடல்களையும் கொண்டிருப்பதில்லை. எதன் மீதான கணக்கையும் அவ்வப்போது தீர்த்துப் போவதன் மூலம் அன்றாடத்தின் கனாக்களில் வாழ்வின் துகள்கள் கொஞ்சமும் உதிராமல் பார்த்துக் கொள்வது ஒரு உத்தி. தனிமை மேலாண்மையின் முக்கிய சூட்சுமம் தனக்குள் வாழ்வது. அது மனுஷிக்கு இயல்பாகக் கைவருகிறது.

உபவிபரங்களால் நிரம்பிப் பெருகுகிற கவிதைகள் காலத்தின் தற்கலயங்களிலிருந்து தப்பி அடுத்த காலங்களுக்கு வேறொரு வாசனையுடன் நுழைகின்றன. நிர்ப்பந்தத்தின் சிதைவுகள் கவிதையின் நீர்மத்தை முற்றிலுமாய்க் காய்ந்துவிடாமல் ஈரவாசனையோடு காப்பாற்றி விடுகின்றன. காலம் கையிலிருந்து மெல்ல நழுவுகிற கண்ணாடிப் பண்டமாகவே யாவர்க்கும் வாய்க்கிறது. நழுவுவதைப் பற்றிக் கொள்ள எத்தனிக்காமல் கரங்களினூடான அனுபவத்தைப் பதியனிட்டுக் கொள்கிற லாவகம் மனுஷி தன் மொழியினூடாகக் கண்டடைந்திருக்கிற ஒளித்தெறல்.

இல்லாமற் போதல் யாரை என்னவாக மாற்றும் என்பது யூகிக்க முடியாத அற்புதம். அல்லது அது ஒரு சூன்யத்தின் உட்புறம். கவிதையினூடாகத் தன்னை ஒளித்துவைப்பது ஒரு மந்திரத்தை உருவேற்றுவதன் ஆரம்பம் போன்றது. மனுஷியை விடவும் மாயாவை இயல்பாக அறிந்து கொள்கிற யார்க்கும் இவை கவிதைகளைத் தாண்டிய கூடுதல் சிலவாய் நேரக் கூடியவை.

தனியே சத்தியம் செய்யத் தேவையற்ற வாக்குமூலங்கள் இவை. நம்பகம் சத்தியத்தின் அதே குளிர்மை கொண்டது. அரூபத்தின் கண்களை மாயா வாசிப்பவனின் இமைத்திரைகளுக்குள் எளிதாகத் திறந்து வைக்கிறாள். கவிதைகளின் போதாமை போதுமானதாகிறது. திருப்பித் தருகிற முத்தத்தைப் போன்ற நல்மன ஈரங்களாய்ப் பெருகும் இக்கவிதைகளின் தன்னொலித்தல் நெடுங்காலம் அதிரவல்ல ஆளற்ற குளத்தின் கல்வட்டங்கள். வாழ்தல் இனிது.