கரவொலிகள் மழைக்கப் போகின்றன

 

வாழ்க்கையின் வடிவமே ஈர்ப்புக்குரியது. எல்லாவற்றிலும் பன்முகத் தன்மை கொண்டிருப்பது வசீகர மலரின் ஓரிதழ். உறவு நட்பு சொந்தம் பந்தம் என்று ஓராயிரம் அடுக்குகளைக் கொண்டது அந்த மலர். பயணம் என்பது நிமித்தம் சார்ந்த நகர்தல் தான்.வாழ்வில் யதார்த்தமாகக் கிடைக்கிற சில அறிமுகங்கள் பெருவழித் துணையாக நிலைபெற்று நெடுங்கால நிழலாகின்றன. நண்பர் ஸ்ரீனிவாசராகவன் எனக்குக் கிடைத்த நல்வர நட்புக்களில் ஒருவர். எழுதுவதன் மீதான தீராப்ரியம் எல்லாரிடத்திலும் இருந்து விடுவதில்லை. அவரிடம் நான் கண்டது கலப்படமேதுமில்லாத எழுத்தார்வம்.

கவிதை என்பது மாயச்சாவி. எதையாவது திறப்பது போல் வேறெதையாவது திறக்கும். எழுதுகிறவனை எங்காவது பூட்டி அவனிடமே சாவியைத் திணிக்கும். சிலருக்கு எழுத்தின் மீதான ஆர்வம் தூறத் தெரியாத மழையாக முதற்புத்தகத்தோடு முடிந்துவிடும். செல்வத்துக்குச் சொல்லும் அதே குணாம்சம் கவிதை எனும் திருவொளிக்கும் பொருந்தும். “எங்கே தங்குமோ அங்கே தங்கம்” . அது போலத் தான் மனத்தளவே கவிதையும் விளையும். “கூடவே வரும் நிலா” இவரது முதல் கவிதைகளின் தொகை. முதல் நூலுக்கே உண்டான கூட்டல் கழித்தல் கணிதபலன்கள் இதற்கும் உண்டு. அதனைத் தாண்டி பேசுவதற்கான பல நுட்பமான கவிதைகள் இந்த நூலில் இருப்பது மகிழ்ச்சி. எழுத்தின் மீதான ஆர்வமும் பிரயாசையும் நிரம்பத் தெறிக்கும் கவிதைகள் இவை. எதிர்பாராப் புதிர்மையும் புதுமொழிப் பாய்ச்சலும் ஆங்காங்கே சன்னல்களாய்த் திறந்துகொள்கின்றன. வசந்த வருடல்களாய் நிகழ்கிறது வாசக அனுபவம்.

உம்மாச்சி விளையாட்டு
என்று சொன்ன குழந்தைக்கு
உலகில் மொத்தம்
எத்தனை கடவுள்கள்
என்பது தெரியாது

தன் பால்யத்துக்குள் சென்று திரும்பாமல் ஒருவரால் இந்த வரிகளை நிச்சயம் வாசனை பார்த்திருக்க முடியாது.சின்னச்சின்ன தருணங்களை எழுதிப் பார்க்க முனைவதும் அவற்றின் அடிவாரத்தில் அனேக சங்கதிகளைச் சொல்லிச் செல்வதும் இயல்பாகக் கைவருகிறது. எல்லோரும் வேகமாய்க் கடந்து செல்கிற நிறுத்தங்களில் தன் இருசக்கர வாகனத்தை நிறுத்தி நிதானித்துக் கடக்கிற சஞ்சார- ரீங்காரத்துடன் பல கவிதைகள் பெருக்கெடுக்கின்றன. யாரிடமாவது பேசுவதன் மூலமாய்த் தனக்கான ஆறுதலை நேர்த்திக் கொள்கிற தருணங்கள் எழுத்துவழி நிகழ்கின்றன. தன் கையில் நிரம்பிய தானியங்களைப் பங்களிக்கிற நல்-தான-மனத்தின் துளிகளாகின்றன இக் கவிதைகள்.

கடிகாரம் நிறுத்திவிட்டு
காலத்தை தேடுகிறோம்
திரும்ப வரும் போது
காலம் கடந்திருக்கும்

அலைபேசி எண்ணியபடி
நண்பர்களை தேடுகிறோம்
அமர்த்தி திரும்புகையில்
உறவுகளை இழந்திருப்போம்

விடையற்ற வினவுதல்கள் மலை உச்சியில் நிற்கிற பொழுது பெருங்குரலெடுத்துக் கத்துகிற எதிரொலி நிரவல்களாக நிகழ வேண்டியதில்லை. ஆழவனத்தினூடே நடந்து திரும்புகிற வரை ஒற்றைச் சொல் கூடச் சப்திக்காத தியான நிகர் நிசப்தங்களாகவும் வினாக்கள் எழலாம்.

புல்லாங்குழல்
தன்னைத்தானே
வாசிக்க முடியுமா

இதற்குப் பதிலறிவதை விட வினவுகிற பொழுது நமக்குள் நிகழ்த்துவது பெருமழை நிகர்த் துளிர்த்தல்களைத் தான் இல்லையா..?

அந்த மருத்துவமனையில்
ரத்ததான பிரிவில்
நான் கடவுளை சந்தித்தேன்

என ஒரு கவிதை தொடங்குகிறது

அவள் நினைவு மட்டும் என் உயிர் சமைக்க விறகானது

என்று ஒரு கவிதை முடிகிறது

“முன்னால் ஒரு முன்னாள்” என்று ஒரு கவிதை . இருவரும் எப்போதோ காதலித்தவர்கள். பிரிந்தவர்கள். கைகூடாத காதல் கூடிக்கொண்டே செல்லும் தீராக்கடன் போன்றதே. அவர்கள் இருவரும் இன்னொரு சந்தர்ப்பத்தில் சந்திக்கிறார்கள். ‘எனக்கு நீ யார்?’ என்று ஒருவரை ஒருவர் வினவுகின்றனர். நேசத் தேர்ச்சியும் காதல் மாட்சியும் மட்டுமே பேசுவதல்ல கவிதை இயல்பு,அதுவே தீர்ப்பெழுதும் காய சாட்சியம் ஆகவும் நேர்ந்துவிடுவது. அப்படித் தன் பேனாவில் ஊறிய ஈரம் குறையாத சிரபுஞ்சிச் சொற்கூட்டைக் காகிதத்தில் வடிக்கிறார். கண்ணீர்த்தீ எரியக் காடு-மனம் இரண்டும் எரிந்து சாம்பலாகி உயிர்க்கிறது சாஸ்வதப் பறவை.

” நீ என் இதயத்தின் இசை” என்று செப்புகிறது ஒரு ஜோடி உதடு. அதற்குப் பதிலாக மறுமுனை உதடுகள் மொழிவதென்ன தெரியுமா..?
“நீ என் கருவில் மரித்த சிசு”
நீதிமான் தீர்ப்பு நியமம் வழுவாமல் நிகழ்ந்தேறுவதைப் போலவே தன் கவிமனதையும் கோடுபிசகாத கோலத்தின் புள்ளியொன்றினுள் உறைகிற ஆரம் போலவே துல்லியமாய்க் காணத் தருகிறார் ஸ்ரீனிவாசராகவன்.

சட்டுச் சட்டென்று காட்சிகளை மாற்றித் தருகிற லாவகம் வசப்படுகிறது கவிஞருக்கு. சிலர் திட்டமிட்டுச் சில திருப்பங்களைத் தமது எழுத்தில் நிகழுமாறு முனைந்து வலிந்து ஏற்படுத்துவார்கள். அவற்றில் சில பலிதமானாலும் வேறு பல துருத்திக் கொண்டே இருந்துவிடும். தன் இயல்பிலிருந்து எழுத முயலுகிறவர்களிடம் மட்டும் அப்படியான திருப்பங்களும் ஈர்த்தல்களும் யதார்த்தமாக அமைந்துவிடும். ஸ்ரீனிவாசராகவன் தன் இயல்பின் மசி கொண்டு தன்மனப் பேனாவை நிரப்பி எழுத முனைந்திருக்கிறார். அதனால் வசப்பட்டது தான் அந்த லாவகம். கலைடாஸ்கோப்பின் சித்திரங்களைப் போலவே அடுத்தடுத்து நம்மை ஈர்த்தபடி நகர்கின்றன கவிதையின் உட்கணங்கள்.
உதாரணமாகச் சொல்லப் போனால்

இன்றாவது
உன்
அகக்கண்ணையும்
திற

இயற்கையின்
மொழிபெயர்ப்பாளர்கள்
பறவைகள்
என்ற ரகசியம்
உனக்குப் புலப்படும்

இந்த வரிகளில் இருந்து அத்தனை சீக்கிரம் யாரால் விடுபட முடியும்..? பறவைகள் குறித்துப் பல்லாயிரம் சொற்கூட்டுக்கு அப்பால் இதனை சிந்தித்த பாங்கு மெச்சத்தக்கது. கரவொலிகள் மழைக்கப் போகின்றன என்பதைச் சொன்னபடியே தம்மைப் பூத்துக் கொள்கின்றன கவிதை மலர்கள். சின்னஞ்சிறிய சொற்திருப்பத்தின் ஆழத்தில் மீள்தல்கள் சாத்தியமாகின்றன.

சாகும்வரை
உயிரோடு
இருப்பதா வாழ்க்கை?
அது
உயிரோடு
இருக்கும் வரை
வாழ்வது.

எல்லாவற்றைக் குறித்தும் எழுதிட வேண்டும் என்பது ஒருவகையான ஆவல். அதில் சரி அல்லது தவறு என்றேதும் இருப்பதில்லை. எழுத எழுத ஆவல் குறையவோ கூடவோ செய்யலாம். அதற்கு நியதிகள் இருப்பதில்லை. புத்தம் புதிய இடுபொருட்களின் விளைநிலமாய்த் தன் படைப்பை நிகழ்த்துகிற உள்ளார்வம் உண்மையில் மொழிக்கும் சமூகத்துக்கும் ஒருவர் தன்னால் இயன்ற அளவு பங்களித்துச் செல்வதற்கான உந்துசக்தி.
முதுமுனைவர் வெ.இறையன்பு தனது மேலே உயரே உச்சியிலே என்ற நூலில் பயணப்படாத பாதை என்ற அத்தியாயத்தினை இப்படித் தொடங்கியிருப்பார்

“பழக்கமான பாதையில் சென்றால் அது சுற்றுப்பயணம்.
புதிய பாதையில் சென்றால் அது சாகசப்பயணம்.
அப்போது தான் நாம் பலருக்கு வழியை ஏற்படுத்துகிறோம்.”

அப்படியான புது வழி சமைக்கிற பேராவல் கொண்டவராகவே நண்பர் ஸ்ரீனிவாசராகவன் எனக்குத் தோற்றமளிக்கிறார். கவிதை என்கிற பேரிலக்கிய வடிவத்தின் முதல் வாசலில் நுழைவதற்கான கடவுச்சீட்டாக அவரது வரிகளிலேயே சொல்வதானால் காதல் என்பது ஆதல் காதல் என்பது ஆக்கல் என்பதைப் போலவே கவி ஆகுக. கவிதை ஆக்குக என்று சொல்லி தொடர்ந்து கவிதை வெளியில் நல்ல இலக்குகளை அடைந்து உயர்ந்தோங்க  வாழ்த்துகிறேன்.

வாழ்தல் இனிது.

அன்போடு
ஆத்மார்த்தி
14-02-2021