அரசியல் பேசாதீர்

அரசியல் பேசாதீர்

 

1.கெட்ட கனவு

மின்சப்ளை இல்லை.இன்றைக்கு முழுவதும் இருக்காது.வழக்கமாக இப்படிப் பராமரிப்பு நடக்கும் நாட்களில் பீமன் வீடு தங்க மாட்டான்.இன்றைக்குக் காலையில் அவன் கண்ட துர்க்கனவு அவனது உடம்பெல்லாம் விஷமாய்க் கசந்தது.எழுந்திருக்க மனசில்லை.சட்டை உடம்போடு ஒட்டியிருந்தது. வியர்வை அடங்கிய பாடில்லை.காற்றில்லாத வெக்கை ஒருபுறம்.மனசின் வெப்பம் கூட உடம்பில் தான் நதியாய்ப் பெருக்கெடுக்கும். “சரக்கடிக்கலாமா..?”என்று யோசித்தான்.இஷ்டமில்லை.காலையிலிருந்தே எல்லாம் தப்பாய் தோன்றுகிறது.அந்தக் கனவை அவன் மிகவும் வெறுத்தான்.இன்னும் அந்த சாம்பல் தினம் அவனுக்கு மறக்கவில்லை.
அவரவர்க்கு அவரவர் நியாயம்.பீமன் .எதையுமே ஒரு சுயநலப் பார்வையும் இரக்கமற்ற சொற்களுமாய்த் தான் அணுகுவான்.கார்க்காரன் ஒரு சைக்கிள் ஓட்டியை இடித்துவிட்டான் என்று வைத்துக் கொள்வோம்.காரில் வருபவன் தனக்கு வேண்டியவன் என்றால் நடந்து வருபவனைக் குடிகாரன் என்பான்.நடந்து வருபவன் வேண்டியவன் என்றால் காரில் வருபவனைக் கொலைகாரன் என்பான்.பற்களுக்கு இடையே சதா உழலும் நரம்பற்ற பாம்பு பீமனின் நாக்கு.எந்தப் பக்கமும் சீறும்.ஆனாலும் அன்றைய தினம் பீமனுக்குப் பாதகமாய் எழுதப்பட்டிருக்க வேண்டும்.பல நாட்களாகப் பொறுமை காத்த ஒருத்தி அதன் எல்லையில் நின்று ஆங்காரமாய் ஆடியதைச் சமாளிக்க முடியாமல் திணறினான்.போதை வேறு திசைகளை மாற்றிப் பந்தாடியது.
     காற்றைத் துரத்திச் செல்பவனின் வாழ்க்கையை மனைவியானவள் புரிந்துகொள்ள வேண்டாமா..?அவன் யார்..?நாளைய அரசியலைக் கலக்கப் போகும் சாட்சாத் பீமன்.அவனுக்கு இப்படியா ஆறின சோறும் பதத்துப் போன வத்தலுமாய்ப் படைப்பது..?என்ன குறை வைத்தேன் உனக்கு..?” என்று தான் ஆரம்பித்தான்.அவள் பீமனின் பழைய கதையை இழுத்தாள்.தொடக்கக் கோணல்.சேர்ந்த இடம் இன்னும் சிக்கலானது.மூன்றாவது செக்டாரில் பன்னிக் கிடை போட்டிருக்கும் முருகனின் அக்காள் ஜீவிதாவோடு பீமனுக்குத் தொடர்பிருந்ததாகவும் ஒரு நாள் மாதாகோயில் பாலத்துக்கடியில் ஜீவிதா விஷம் குடித்து செத்துக் கிடந்தாள் என்றும் அவள் சாவுக்கு பீமன் காரணமாயிருக்கலாம் என்றும் பல கிளைகளுடன் ஒரு கதையை என்றைக்குத் தெரிந்துகொண்டாளோ அன்றிலிருந்து பீமனுக்கும் மின்னலுக்கும் எல்லாம் கசந்து போயிற்று.நாளானால் சரியாகும் என்று லேசாய்த் தான் நினைத்திருந்தான் பீமன்.அன்றைக்கு எல்லாம் தப்பாயிற்று.அவனது அவச்சொல்லைத் தாங்காமல் கையிலிருந்த கரண்டியால் ஓங்கி அடித்தாள்.போதை கிறுக்கேறி எழுந்துகொண்ட பீமன் வேட்டி அவிழ்வதைக் கூடப் பொருட்படுத்தாமல் மின்னல்கொடியை ஓங்கி மிதித்தான்.இன்னும் கடுஞ்சொற்களால் ஏச ஆரம்பித்தான்.
       அப்படி ஒரு பேச்சை மணற்குப்பம் கேட்டதில்லை.மின்னல்கொடி பேயாட்டம் ஆடினாள்.பீமனை நோக்கி மண்ணை வாரி இறைந்தாள்.சபித்துக் கொண்டே தன் பிள்ளையைத் தூக்கிக் கொண்டு இனி உன் முகத்தில முளிச்சா அப்ப சொல்லுடா என்னையத் தேவிடியான்னு என்று ஆட்டோவில் ஏறிப் போனாள்.பீமன் அதிர்ச்சியை பெரிதாய்க் காட்டிக் கொள்ளவில்லை.தெருவே அமைதியாய்ப் பார்த்துக் கொண்டிருந்தது.வீட்டின் எதிர்க் கறிக்கடை வெட்டுமரத்தின் மீது தாவி அமர்ந்து பீடி குடித்தான்.கஜேந்திரனைப் பார்த்ததும் தான் சுய நினைவுக்குத் திரும்பினான்.கஜேந்திரன் தாமதமாய் வந்தும் தவ்வினான்..நாகேசைக் கூப்பிட்டு மின்னல்கொடியைத் தான் அழைப்பதாகச் சொல்லி அழைத்து வரச்சொன்னான்.அரை மணி நேரம் காத்திருந்த பிற்பாடு நாகேஸ் வந்து இனி பேசுவதற்கு இடமே இல்லை என்று மின்னல் சொல்லிவிட்டதாகச் சொன்ன பிறகு “இப்பத் திருப்தியா உனக்கு..?தனிக்கட்டையாத் திரியணும்.எங்க எவ கிடைச்சாலும் மேயணும்…நீ ஒரு நாறப் பயடா..”என்று திட்டி விட்டுக் கிளம்பினான்.
குப்பத்தில் பெரிய கை கஜேந்திரன் தான்.மேலிடம் அவனிடம் மாத்திரம் தான் நேரடியாய்ப் பேசும்.அவனுக்கு அடுத்த இடத்தில் தான் இருப்பதாக பீமன் நம்புகிறான்.பீமனைப் போலவே இன்னும் இரண்டொரு பேர் இருந்தாலும் ஒவ்வொரு பலமான காரணங்களால் அவர்கள் தகுதியிழப்பதை பீமன் உணர்ந்திருந்தான்.ஒரு நாள் வராமலா போகும்..?மின்னல்கொடிக்குப் பொறுமை இல்லை என்பதே பீமனின் முடிவு.கஜேந்திரன் திட்டுவது தன் மேல் உள்ள பொறாமை என்பது அவனது இன்னொரு மகத்தான புரிதல்.
.பீமனோடு கோபித்துக் கொண்டு தகப்பன் வீட்டுக்குப் போய்விட்டாள் மின்னல்.அவனது வம்சவிளக்கான ஜெகனேசன் என்னும் சுண்டுவையும் தூக்கிக் கொண்டு போய் முழுசாய் ஒருவருடம் ஆயிற்று.இரண்டாவது பிரம்மச்சரியத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் பீமனுக்கு இன்றைய அதிகாலைக்கனவு அடித்துப் புரட்டியது.கட்டிய பொண்டாட்டிக்கு இன்னொருவன் தாலி கட்டுவதாவது..?அது வெறும் கனவென்றாலும் தன் இயலாமையின் அத்தனை கரங்களையும் அறுத்தெறியவே விரும்பினான்.அதன் உக்கிரம் தாளாமல் வெறும் கனவுதானே என்று கொள்ளாமல் வதங்கினான்.அப்போது தொடங்கிய ஒற்றைத் தலைவலி இன்னமும் விண் விண்ணேன்று தெறித்தது.அந்தக் கனவு அவனை ஒரு நண்டைப் போலப் பிடித்துக் கொண்டிருந்தது.அவனால் அதிலிருந்து விடுபடமுடியவில்லை.என்னென்னவோ பின் இணைப்பு நினைப்பெல்லாம் வந்தது.ஒரு ஆணாக அவன் நிறைய வாசல்களைத் தாண்டியிருக்கிறான்.உள்ளும் புறமும் அவன் தீண்டிய உடல்கள் அதிகம்.என்றாலும் மின்னல் கொடியை அவன் தன் தனிச்சொத்தாகவே கருதினான்.அவளை எப்படியாவது சமாதானம் செய்து அழைத்து வந்துவிடவேண்டும் என்று அவனுக்குள்ளே துடித்தது.

2 .இடத்தைக் காலி செய்

காலையில் இருந்து எதுவும் சாப்பிடவில்லை.பசி ஒரு ஞாபகமாய்க் கூட இல்லை.தண்ணீரைத் திரும்பத் திரும்பக் குடித்தபடி  கட்டிலில் புரண்டபடி கிடந்தான்.இப்போதைக்கு எழுந்து என்ன செய்யப் போகிறோம் என்று இன்னும் சுருங்கியவனின் காதுகளில் வாசலில் ஸ்கூட்டி நிற்கும் ஓசையும் அதன் மோட்டார் ஓட்டம் அணைவதும் கேட்டது.கெந்திக் கெந்தி நுழைந்த சகாயம் “.கரண்ட் இல்லியா” என்றவாறே சட்டையின் மேல் பட்டனைக் கழற்றிக் காலரைப் பின்புறமாக இறக்கி கொண்டு சிரித்தான்.பீமனின் முகத்தையே பார்த்தான்.சகாயத்தின் முகம் பிரகாசிக்கவில்லை.பீமனின் ஒரே தம்பி.பிறந்த போதே அவனது ஒரு கால் போலியோவால் சூம்பியிருந்தது.அப்படி ஒருவன் இல்லாது இருந்தால் பீமன் இன்னும் பெரிய ஆளாகியிருப்பான் என்று பலரும் நினைத்தார்கள்.ஆனால் பீமனுக்கு தன் தம்பி மீது அத்தனை உருக்கம் இருந்தது.அவனை ஒரு நாளும் குறைத்து நினைத்ததில்லை.சகாயத்தை சிறுவயதிலிருந்தே பாசமாக மாத்திரம் வளர்த்தான் பீமன்.அவனுக்குள்ளேயும் பல மனிதத்தனங்கள் இருந்ததெல்லாம் சகாயத்திற்காக மாத்திரமே வெளிப்பட்டிருக்கின்றன.சகாயத்திற்கு எதாவது நல்லது பண்ண வேண்டும் என்று எப்போதும் நினைப்பான் பீமன்.அவனது கதையின் முக்கியத்துவம் ஏதுமில்லாத தருணங்களில் எல்லாமும் கூட சகாயம் குறித்த கவலை பொங்கிப் பெருகத்தான் செய்தது.
“என்னடா எதும் பிரச்சினையா..?” என்றான் பீமன்.
“அண்ணே நீ நார்மலா இருக்கியா..?”என்று சோகையாய் சிரித்தான்.
“என்னடா பிரச்சினை..?” என்று இந்த முறை லேசான எரிச்சலோடு துவங்கியதும் படபடவென்று பேசத்தொடங்கினான் சகாயம்”அதொண்ணும் இல்லண்ணே…இடத்து முதலாளி பலராமன் நேத்து நைட்டு வந்தாப்ள.கடைகளை இடிச்சி பெரிசா கட்டப்போறாப்ளயாம்.நம்ம சைக்கிள் கடையை ஒரு மாசத்துக்குள்ளே காலி செய்துகிட சொல்லிட்டுப் போனாப்ள.நான் அப்பமே உனக்கு ஃபோன் செஞ்சேன்.உன் நம்பர் சுச்சாஃப்னு வந்திச்சி..”என்றான்.
ஒரு சிகரட்டை எடுத்து பற்ற வைத்துக் கொண்டே “பலராமனுக்கு விதி கூப்பிடுது போல!அவன் வந்து சொன்னா நீ கேட்டுட்டு சும்மாவா இருந்தே..?நான் ஃபோன் எடுக்கலைன்னா என்னடா..?கடைய சுத்தி நம்ம ஜனம் தானே இருக்குது.?எச்சியக் காறி முகத்தில துப்பி வெரட்டிருக்கத் தேவல்ல..?”என்றான் துடித்த உதடுகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு.
சகாயம் பேசவில்லை.பலராமன் எட்டுக்கால் பூச்சி தான்.அவனைப் பின்னால் இருந்து சீவி விட்டவன் கஜேந்திரன்.சகாயத்துக்கு கஜேந்திரனை எப்போதுமே பிடிக்காது.தன் அண்ணன் ஒரு போர்வாள்.அவனைத் தன் கையில் வைத்துக் கொண்டு காது குடைவதற்கான குச்சி போலப் பயன்படுத்திக் கொள்ளும் உன்மத்தன் தான் கஜேந்திரன் என்பது அவன் நம்பகம்.எத்தனை சுயநல சந்தர்ப்பங்களை எல்லாம் விட்டுக் கொடுத்தபடி அவனோடு பயணப்படும் தன் அண்ணனை நினைக்கையில் அவ்வப்போது கண் கலங்குவான் சகாயம்.அவனது ஆசையும் ஒன்றே ஒன்று தான்.அது கஜேந்திரனைத் தாண்டி பீமன் ஆளாவது.தம்பியின் அமைதி பீமனை என்னவோ பண்ணியது.
“சரிடா நா கஜேந்திரன் கிட்டே பேசுறேன்..” என்ற பீமன் புகை கலையும் வரை காத்திருந்து விட்டு “பல்ராமனுக்கு பின்னாடி கஜேந்திரன் இருக்கானா இல்லியான்னு அப்பத் தெரியும்ல..?” என்றான்.தன் யோசனையின் அருகாமையில் பீமன் வந்து விட்டான் என்பதே சகாயத்துக்குப் போதுமாயிருந்தது.திடீரென்று உயிர் பெற்ற மின்சாரத்தால் டீவீ வெகுசப்தமாக அலறியது.ரிமோட்டைத் தேடி டீவீயை அணைத்தான் பீமன்.சகாயம் ஃப்ரிட்ஜைத் திறந்து தண்ணீர் பாட்டிலை எடுத்துப் பார்த்தான்.இன்னமும் சில்லென்று தான் இருந்தது.கீழே சிந்தாமல் ஐஸ்வாட்டரைக் குடித்து விட்டு “சரி நா வாரேன்.எதா இருந்தாலும் யோசித்து செய்யி..பதறிப் பதறித் தான் நாசமாப் போனம்..”என்றவன் வாசல் தாண்டும் போது “அண்ணே..” என்றான்.
இவன் எதும் பேசாமல் அவனையே பார்க்க “போயி அண்ணியக் கூட்டியா.வீடாவா இருக்குது..?நீ ஒழுங்கா பொளச்சாத் தான் மரியாதை..தெனம் ஒருத்தியோட இருந்துட்டு வர்றவனுக்கு எந்தக் காலத்திலயும் மரியாதை கெடையாது.ஒன்னைய நம்பி வந்த ஜென்மத்தை வெச்சிக் காப்பாத்துனாத் தான் நீ ஆம்பிள.சொன்னாக் கோச்சுக்காத…அது பாவம்.அண்ணியக் கூட்டியா….”என்றவன் சற்று தாமதித்து “செய்வியா ?”என்றான்.அரை சப்தத்தில் ம்ம் என்று சொல்லி அவனை அனுப்பினான் பீமன்.கதவை உட்புறம் பூட்டிக் கொண்டான்.ஏன் கஜேந்திரன் இப்படிச் செய்கிறான்..?நம்பிக்கை துரோகி…அவனுக்குக் காலையில் கண்ட கனவின் முகம் தெரியாத ஆடவன் மீதான கோபம் தற்போது கஜேந்திரன் மீது இடம்பெயர்ந்தது.சுத்தமாக தலைவலி நின்றுபோனது.கூட இருந்தே குழி வெட்டும் துரோகி..
பற்களை நறநறவெனக் கடித்தான்.சுவரில் ஒரு பல்லி தன் சின்னஞ்சிறிய கண்களால் இவனை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தது.படியேறி மாடிக்குப் போனான்.
பீமனின் வீட்டினுள் எல்லா சௌகர்யங்களும் இருந்தன.ஆனால் வெளித்தெரியாது.அவன் வீடு மாத்திரம் அல்ல.மணற்குப்பம் ஒரு விதமாய் ஏற்படுத்தப் பட்ட குடியிருப்பு.அதன் மொத்த வரலாறுமே இருபத்தி ஐந்து வருடங்களுக்கு உள்ளே தான்.அதன் முன்னால் அந்தப் பிரதேச மொத்தத்திற்கும் ஒரே பெயர் தான்.பன்னிமேடு.பன்றிகள் கூட்டம் கூட்டமாய் மேயும் குப்பைவனம்.இப்போது மாண்புமிகு உள்ளாட்சித்துறை அமைச்சராக இருக்கும் செல்வசேகரன் அப்போது ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர்.முதல் முறை எம்.எல்.ஏ ஆனவருக்கு அப்படியொரு ஜாக்பாட் அடிக்கும் என்று யாருமே நம்பவில்லை.இளைஞரான செல்வசேகரனுக்கு எதாவது செய்து தலைமையின் நற்பெயரை வாங்கிவிட வேண்டும் என்று துடித்தபோது ஒரு இளம் ஐஏஎஸ் அதிகாரி தந்த ஐடியா பிடித்திருந்தது.குடிசை மாற்று வாரியத்தின் சார்பாக மாபெரும் குடிபெயர்ப்பு ஒன்றை திட்டமிட்டார்.எல்லா வேலைகளும் ஜரூராக நடந்தன.இந்த உலகத்தில் எந்த விஷயமானாலும் அதை அரசாங்கம் ஆசைப்பட்டால் போதும்,.நல்லதோ கெட்டதோ தன்னால் நடக்கும்.எந்த சிக்கலும் இல்லாமல் நடக்கும்.அரசாங்கம் மனசுவைத்தால் ஆண்டவனையும் மதம் மாற்றும் என்று சொல்லிச் சிரிப்பார் மதிராசு.அப்படி காகிதத்தில் இருந்த திட்டத்தை செயல்படுத்திக் காட்டியவர் செல்வசேகரன்.அவரது தொகுதிக்குள் திடீரென்று முளைத்த மணற்குப்பம் ஏரியா முழுவதும் அவரது ராசாங்கம் தான்.அதற்கடுத்த நாலு தேர்தல்களிலும் அவர் தான் எம்.எல்.ஏ.அவரது செல்லப் பகுதி மணற்குப்பம்.பெரும்பாலும் ஒரே கட்சியைச் சேர்ந்தவர்கள் மட்டுமே வசிக்கிற பகுதி என்பது விசேஷம்.எல்லாமே இயல்பு போலத் தோன்றினாலும் ஒரு மாபெரும் படத்தின் செட் ப்ராப்பர்ட்டி போலத் தான் மணற்குப்பம் இருந்தது.
செல்வசேகரன் இப்போது உள்துறை அமைச்சர்.கட்சியில் மூன்றாமிடம்.அவருக்கு ஆண் வாரிசில்லாக் குறையை மைத்துனன் ஜோதி தீர்த்தான்.தன் இரண்டாவது மகளை ஜோதிக்குக் கொடுத்திருக்கிறார்.மூத்தவள் டாக்டர்.அரசியல் ஆசை அற்ற அவள் கணவனோடு ஸ்விட்சர்லாந்தில் வசிக்கிறாள்.ஜோதிக்கும் செல்வசேகரனுக்கும் மணற்குப்பத்தை நிர்வகிக்க ஒரு குறு நில மன்னன் தேவைப்பட்ட போது உருவானவன் தான் கஜேந்திரன்.மந்திரி எதைச் சொன்னாலும் முடித்துக் காட்டும் கார்யவீர்யன்.அவனுக்கு அவர்களும் அவர்களுக்கு அவனும் தேவைப்பட்டார்கள்.அந்தத் தேவை தீர்ந்துவிடாமல் இருபுறமும் பார்த்துக் கொள்ளப் பட்டது.நட்பு உறவு என்னும் அன்னிய வார்த்தைகளுக்கெல்லாம் அரசியலில் அர்த்தம் ஒன்றே ஒன்று தான்.அதன் பெயர் பரஸ்பரத் தேவை.
கஜேந்திரனின் கட்டுப்பாட்டில் மணற்குப்பம் இருந்தது.அதன் முடிவில் இப்போதைய பன்றிமேடு இருந்தது.வேண்டாவிருந்தாளியாக அங்கே இருந்தவர்களை நடத்தினான் கஜேந்திரன்.என்றபோதும் அவனை யாரும் பகைத்துக் கொள்ள மாட்டார்கள்.அவ்வப்போழ்து நேரும் சிறு பகைகளைத் தன் செல்வாக்கால் அணைத்து அடித்து ஏன் அழித்தும் சரி பண்ணிக் கொள்வான் கஜேந்திரன்.கஜேந்திரனுக்கு பீமன் பத்து வயது இளையவன்.குஸ்திப்பள்ளியில் பயிற்றுவிப்பவனாக இருந்த பீமனை பார்த்ததும் பிடித்துப் போனது கஜேந்திரனுக்கு.அன்றிலிருந்து பீமனுக்கு கஜேந்திரன் தான் பெரியாள்.உண்மையாகவே பீமன் விஸ்வாசி.பெண் சகவாசம் தவிர அவனிடம் வேறு பெரும் பழக்கம் ஏதும் இல்லை.அளவான குடிகாரன் அரசியலுக்கு எப்போதும் சரியானவன்.ரகசியங்களைத் துப்பாத அளவுக்குள் அமைந்தன பீமனின் குடிக்கோப்பைகள்.கஜேந்திரன் குட்டையான உருவமும் எப்போதும் தகிக்கும் கண்களும் கொண்டவன்.பீமன் முரடன்.கஜேந்திரனின் சொல் அவனது ஆயுதம்.பீமனுக்கு அவன் உடல் கேடயம்.இங்கேயும் மேற்சொன்ன அதே சூத்திரம் தான்.இரண்டு பேரும் ஒருவருக்கொருவர் தேவைப்பட்டார்கள்.ஆகவே இணைந்துகொண்டார்கள்.பீமன் கஜேந்திரனின் தளகர்த்தன்.கஜேந்திரன் பீமனை எந்த விதத்திலும் காயப்படுத்தாமல் பார்த்துக் கொண்டான்.இருவருமே வெகு நேர்த்தியாகத் தங்களுக்குப் பொதுவான உறவாடலைத் தயாரித்துக் கொண்டார்கள்.வெளியே இருந்து பார்ப்பவர்கள் பீமனை கஜேந்திரனின் அடிமை என்றும் கஜேந்திரனை பீமனின் அடிமை என்றும் நினைத்துக் கொள்வார்கள்.ஆனால் அதில் எள் நுனி உண்மை இல்லை என்று இருவருக்கும் தெரியும்.அரசியல் என்பது ஒரு கலை.முயன்று பார்த்து விளைவுகளின் மூலமாய்க் கற்றுத் தேற வேண்டிய கலை.அரசியலில் ஒவ்வொருவர்க்கும் இரண்டு ஆசிரியர்கள்.ஒன்று காலம்.இன்னொன்று சுயவெறி.இவ்விரண்டும் ஒத்து வந்தால் தலைவனாவது சுலபம்.

3.தாயம்

பல்ராமனின் தைரியம் பீமனுக்கு ஆச்சர்யம் அளிக்கவில்லை.சமீப காலங்களில் கஜேந்திரனின் நடவடிக்கைகளில் லேசான மாற்றங்களைக் காண்கிறான் பீமன்.முன்பு இப்படி இருந்ததில்லை.கஜேந்திரனை எப்போதும் சுற்றும் கூட்டங்கள் இரண்டு.ஒன்று அன்னக்கை கோஷ்டி.அதன் தலைவன் மணி.கஜேந்திரனின் அகில உலக ரசிகர் மன்றத் தலைவன்.தான் கம்பீரமாக இருக்கிறோம் என நினைத்துக் கொண்டு மணி செய்யும் சேஷ்டைகளை முன்னே மதித்துப் பின்னே களுக்கென்று ரசித்து எள்ளும் உலகம்.கஜேந்திரனுக்கு ஒரு விதூஷகனைப் போலவே மணி தேவைப்பட்டான்.வெகுகாலம் ரசிக்கப்பட்ட கோமாளிக் கதாபாத்திரத்தின் கோட்டோவியம் போன்ற தோற்றம் மணியினுடையது.
இன்னொருவன் கஜேந்திரனின் சகலை சொக்கன்.ஹார்லி மில்லில் வேலைபார்க்கிற சொக்கன் ஒரு தொழிற்சங்க வாதி.கஜேந்திரனுக்கு அமைச்சரிடம் இருக்கும் செல்வாக்கின் கீழ் தன் தொழிற்சங்க நடவடிக்கைகளை இணைத்துக் கொள்வது அவனுக்கு உசிதமான சூட்சுமம்.அவன் பின்னாலும் ஒரு கூட்டம் இருந்தது.ஆட்டமேட்டிக்காக அதுவும் கஜேந்திரனின் ஆளுகைக்குக் கீழே வந்தது.
இந்த இரண்டு பேருக்கும் சமமில்லாத உயரத்தில் கஜேந்திரனோடு பயணிப்பவன் தான் பீமன்.ஆட்களுக்கு மத்தியில் கஜேந்திரனை அண்ணன் என்று அழைப்பான்.மற்றவர்களிடம் கஜேந்திரனை அண்ணன் என்றே சொல்வான்.நேரில் பேசும்போது வெறும் வாங்க போங்க தான்.அண்ணன் என்றெல்லாம் சொல்வதில்லை.சகலை சொக்கன் கூட பீமனிடம் விலகியே இருப்பான்.மணி அவ்வப்போது பீமனை எப்படியேனும் மிஞ்சி விடவேண்டும் என்று எதாவது செய்து சாக்கடையில் புரள்வான்.அது அவன் ஜாதகம்.
பீமனுக்குக் குறைவில்லாத வருமானம் கிடைக்கத் தான் செய்தது.வேலைக்கேற்ற கூலி.எல்லா நாளும் மழை.இல்லாத நாட்களில் தன்னை எப்படி நனைத்துக் கொள்ளவேண்டும் என்று ஒரு சிறந்த காரியக்காரன் நன்கு அறிவான்.அதெல்லாம் பிரச்சினையில்லை.பீமனுக்கும் கஜேந்திரனுக்கும் வருடக் கணக்கில் தொடர்ந்துகொண்டிருந்த நல்லுறவு சமீபத்தில் சிதைந்ததற்குக் காரணம் தலைவர் என்று சொல்வதா..?அது கஜேந்திரனின் துர் அதிருஷ்டம் பூசிய ஒரு நாள் என்று தான் சொல்ல வேண்டும்.
மூன்று மாதங்களுக்கு முன்னால் திடீரென்று ஒரு நாள் தலைவர்(உள்துறை அமைச்சர் செல்வேந்திரன்)வந்திருக்கிறார் எனத் தகவல் வந்தது.வழக்கமாக குப்பத்தின் உள்ளே தலைவரின் கார் வராது.அனைவருமே அமைச்சருக்கு வேண்டியவர்கள் என்பதால் நுழைந்தால் நலம் விசாரித்தலுக்கே நாலு நாளாகும்.கலியாணம் அல்லது துஷ்டி இவ்விரண்டுக்கு மாத்திரம் தான் ஊருக்குள் வருவார்.மற்ற போக்குவரத்தெல்லாம் பன்னிமேட்டுக்குப் போகும் வழியில் ஊருக்கு வடக்கே ஒரு நீரேற்று தொட்டி இருந்தது.அதன் கீழே தன் காரில் வராமல் வாடகை டாக்ஸியில் வருவார்.கஜேந்திரனும் மதிராசுவும் எப்போதாவது சகலை சொக்கனும் மாத்திரம் அங்கே செல்வார்கள்.பீமனும் போயிருக்கிறான்.தலைவரை அடிக்கடிப் பார்த்திருக்கிறான்.அப்படி ஒருத்தன் காரியக்காரன் இருக்கிறான் எனத் தலைவருக்குத் தெரியும்.ஆனால் தலைவராக அவனைக் கூப்பிட்டு பேசியதே இல்லை.கஜேந்திரன் உடன் செல்லும்போதெல்லாம் பீமன் ஒரு அடிமையாகவே காது கேளாத தூரத்தில் நின்றுகொள்வான்.
அன்றைக்கு எல்லாம் மாறி நடந்தது.தலைவர் கார் வந்து கொண்டிருப்பதாகவும் கஜேந்திரன் செல் அணைந்திருப்பதாகவும் மணி ஓடி வந்து சொன்ன போது அப்போது தான் விஜியா என்றொரு ஆந்திரக்கிளியைக் கூடி விட்டுத் தன் வீட்டுக்குத் திரும்பி குளித்து முடித்து வெளியே கிளம்பத் தயாராகிக் கொண்டிருந்தான் பீமன்.உன் செல்லுலேருந்து கூப்பிடேன் என்று பரபரத்தான் மணி.அணைந்திருக்கும் செல்போன் யார் கூப்பிட்டாலும் சப்தமா எழுப்பும்..?மணி சொன்னதைக் கேட்டு தானும் கஜேந்திரனின் இரண்டு நம்பர்களையும் அடித்தான்.கஜேந்திரன் மனைவி சூர்யா நம்பரையும் முயன்றான்.எல்லாமே ஆஃப் ஆகியிருந்தது.அவசரம்னு சொன்னார்யா..ஆபத்துக்கு பாவமில்ல..நீ வேணா போயி என்னான்னு கேளேன் என்ற மணி நா வர்லை அண்ணன் திட்டுவாரு என்று கழன்றுகொண்டான்.அன்றைக்கு பீமனுக்குத் தாயம் விழுவேண்டியது விதி.
கிளம்பி வேலாவின் ஆட்டோவில் சென்று இறங்கினான் பீமன்.
எங்கேடா அந்த முண்டப்பய என்றார் தலைவர்.அவர் உதடுகள் துடித்தன.கண் புருவங்களின் மேலே முத்து முத்தாய் வியர்வை.ஒரு சிகரட்டைப் பற்றவைத்துக் கொண்டான்.பீமன் கைகளை விஸ்வாசமாய்க் கட்டிக்கொண்டு தெர்ல தலைவரே…என்னான்னு..இப்டி அணைச்சி வெக்க மாட்டாரே…என்ன ஆச்சோ என்றான்.
சரி…ஒரு அவசர வேலை..சின்னப்பனூர்ல ஒரு இஞ்சினியர் பேரு ஜெயகணேசன்னு…நீ என்ன பண்றே அங்கே..என்று ஆரம்பித்து ஒரு விஷயத்தின் சிக்கலை விளக்கினார் தலைவர்.அவர் முடித்ததும் “சரிங்க தலைவரே…நான் போய் முடிச்சிட்டு வந்துர்றேன்”என்றான்.
நீ முடிச்சிருவே..?என்று சந்தேகமாய்ப் பார்த்தபடியே அந்த பாலா சரியாவானா நமக்கு..?”என லேசாய் இழுத்தார்.
என்னா தலைவரே…நானா முடிக்கப் போறேன்…உங்க பேரைச் சொல்லி முடிக்கிறேன்.,நீங்க சொன்னப்புறம் அதை மீறுற அளவுக்கு அந்த பாலா ஒண்ணியும் அவ்ளோ பெரிய தாட்டியக்காரன் கிடையாது.நான் கிளீனா முடிச்சிர்றேன்..” என்ற பீமனை மகிழ்ச்சியோடு பார்த்த தலைவர் “உன் நம்பரைச் சொல்லு..” என்று தன் நம்பரையும் குறித்துக் கொள்ளச் சொன்னார்.
இது எதிர்பாராமல் கிடைத்த வெற்றி.ஒரு நம்பரைப் பாம்பு கொத்துகிறது. முன்னும் பின்னும் இரண்டு நம்பர்களிலும் ஏணிகள் தொடங்குகின்றன.இது ஒரு ஆட்டம்.இங்கே வேறு விதிகள்.ஒரு எண்ணைப் பாம்பு கொத்தும் போதே அதன் பலனாக வேறோரு எண்ணுக்கு அது ஏணியாக மாறும் மாய விளையாட்டு அரசியல்.தலைவர் தேடியது கஜேந்திரனை.அவர் தேடியது பீமனை அல்ல.ஆனால் அன்றைக்குத் தன் செல்ஃபோனை ஸ்விட்ச் ஆஃப் செய்தது கஜேந்திரன் செய்த பிழை.ஆட்ட விதிகளின் பிரகாரம் அது அவனைக் கொத்தும் பாம்பு.அதே நேரம் அதுவே பீமனுக்கான ஏணி.இப்போது முதல் பீமனின் நம்பரும் தலைவரிடம் உண்டு.தலைவரின் நம்பரும் பீமனிடம் உண்டு.
காரியத்தின் பலன் வேறு பீமனுக்கு சாதகமாக இருந்தது கூடுதல் சிறப்பு.பாலா என்பவன் ஒத்து வராவிட்டால் அவனை எப்படி டீல் பண்ணுவது என்ற யோசனையோடே கிளம்பிப் போனான் பீமன்.வழக்கமாக இப்படியான செயல்களை கஜேந்திரன் சொல்லி அவன் செய்திருக்கிறான்.அப்போதும் அவை எல்லாமும் தலைவர் சொல்லி தலைவருக்காகவே நடந்தவை தான்.அப்போதெல்லாமும் அவை எல்லாவற்றையுமே செய்தது பீமன் தான்.அது தலைவருக்கும் தெரியும் என்றாலும் ஓவியன் கையில் இருக்கும் தூரிகைக்குத் தனியாக யாரும் நன்றி சொல்வதில்லை அல்லவா..?அப்படித் தான் எல்லாமும் கஜேந்திரன் என்னும் ரெகுலேட்டரின் வழியாகவே நடந்துவந்தன.இன்றைக்கு உடைந்தது சின்ன திறப்பல்ல.அது ஒரு மாபெரும் சுவரின் இருப்பை உடைத்தெறிந்திருக்கிறது.இனி என்ன நடக்கவேண்டும் என்று எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தன் அந்தக் காரியத்தை சாதித்து முடித்தான் பீமன்.என்ன ஒன்று சாயந்திரமே தலைவரின் நடவடிக்கையில் தெரிந்த மாற்றம் கண்டு குழம்பினான் கஜேந்திரன்.என்ன நடந்ததென்றே தெரியாமல் ஒரு துஸ்டி வீட்டுக்குப் போய்த் திரும்பியிருந்த கஜேந்திரன் மதியானத் தூக்கம் கெட்டதில் வேறு எரிச்சலாயிருந்தான்.இரவு சாயும் வரைக்கும் கொதிக்கத் தான் செய்வான்.
மணி தலைவர் வந்ததை நடந்த எல்லாவற்றையும் சொல்லி தன்னால் ஆன அளவுக்கு இன்னும் பல பிட்டுக்களைப் போட்டிருந்தான்.எரிந்தது கஜேந்திரனுக்கு.அவனைப் பொறுத்த வரை அவன் சாகும் வரை நடந்திருக்கக் கூடாத ஒரு நிகழ்வு கேவலம் அரை நாள் துஸ்டிக்கு போய் வந்த கேப்பில் நடந்து விட்டதை அறிந்து தன் மனைவி தொடங்கி அன்றைய துஸ்டியின் ப்ரேதம் வரை எல்லாரையும் சபித்தான்.எல்லாம் போச்சு என்று தனக்குள் சொல்லிக் கொண்டான்.இடிந்தே போனான்.உடலெல்லாம் தளர்ந்து கண்கள் இருளாகி சகிக்க முடியாத நோவுக்குள் ஆட்பட்டான். கஜேந்திரன் நிற்கும் போது தலைவர் பீமனைப் புகழ்ந்து நாலு வார்த்தை சொன்னார் கஜேந்திரனுக்குக் காது கொதித்தது.இவனை வெச்சிக்கடா..நல்ல காரியக்காரண்டா என்றார்.தன் கையாலேயே பீமனுக்கு இருபதாயிரம் பணத்தைக் கொடுத்தார்.           எல்லாவற்றுக்கும் மேலாக தலைவர் பீமனின் தோளைத் தட்டி என்னன்னாலும் கேளு..எப்பன்னாலும் வா என்று அனுப்பினது தான்.இதைப் பார்த்தும் இன்னமும் நான் இருக்கிறேனே என்று எரிந்தான் கஜேந்திரன்.
அதில் இருந்தே கஜேந்திரன் புழுங்க ஆரம்பித்தான்.இதே விசயம் தான் இல்லாத இடத்தில் தன் சகலை சொக்கனுக்கு இப்படி ஒரு உயர்வு வந்திருந்தாலாவது எரிந்துகொண்டே வரவேற்றிருப்பான்.பீமனுக்கா.?நாய் கடைசி வரை நாயாகத் தானே இருக்கவேண்டும்..?இதென்ன கொடுமை.அய்யோ என் முன்னே காலைப் பிடித்துக் கையைக் கட்டியவன் நாளை என் முன்னாலேயே தோளில் மாலையோடு திரிவானே…நோ…..இல்லை..நடக்கக் கூடாது.மருகினான்.
அரசியலில் பாலபாடமே தன்னைத் தவிர மற்ற எல்லார் மீதும் பொறாமைப் படுவது தான்.ஒரே நேரத்தில் தன் கட்சியில் ஒன்றியச்செயலாளராக இருப்பவன் மீதும் அமெரிக்க அதிபர் ஒபாமா மீதும் காரணமே இல்லாமல் ஒரு அமைச்சர் பொறாமைப் படவேண்டும்.பட்டால் தான் அவர் பழுத்த அரசியல்வாதி.தனக்கு மேலே இருப்பவன் மீது கொள்ளும் பொறாமையின் பெயர் இயலாமை.தனக்குக் கீழே இருப்பவர் மீது கொள்ளும் பொறாமையின் பெயர் பாதுகாப்பு உணர்ச்சி.தனக்குச் சமம் என்று அரசியலில் யாரும் இல்லை.சொல்லப் போனால் அரசியலில் சமம் என்ற சொல்லே கிடையாது.ஞானிகளுக்கும் அரசர்களுக்கும் அரசியலின் உள்ளே பெரிய வித்யாசமில்லை.வெறும் ஞானம் உபதேசிக்க மாத்திரமே தகும்.இங்கே எல்லாருமே ஆட்டக்காரர்கள்.ஓய்வு என்பதன் பெயர் மரணம்.கைவிட்டு ஒதுக்கப்படும் ஒவ்வொரு மனிதனுக்கும் அதுவே சூன்யம்.அதுவே மரணம்.அதனைத் தாண்டிய ஒரு வெளிச்சமும் இல்லை.
.கஜேந்திரனின் இயல்பு யாருக்கும் எதையும் அள்ளித் தந்துவிடுபவனில்லை.தன் கை மீறி இது நடந்து விட்டாலும்  பீமனை இன்னமும் தன்னால் வெல்ல முடியும் என்று அவன் நம்பினான்.அதனால் தான் தலைவரை பீமன் நேரடியாய்ப் பரிச்சயம் செய்து கொண்ட நாளிலிருந்தே பீமனுக்காகப் பல குழிகளை வெட்டத் தொடங்கி இருந்தான்.பின்னிப் பின்னிப் பலதும் செய்தான்.ஒரு கட்டத்தில் பீமன் ஏரியாவுக்குள் தனியாகவே திரிய ஆரம்பித்ததும் என்ன செய்வதென்று கஜேந்திரனுக்கு புரியவில்லை.பீமன் அவனை எதிர்க்கவில்லை.உடன் நிற்கவுமில்லை.தன் வழியில் தனக்கே உரிய நிதானத்தோடு போய்க்கொண்டிருந்தான்.
நோக்கம் இல்லாத போது நிகழ்வுகளின் இயல்புக்கேற்ப வாழ்க்கை நகரும்.இங்கே தான் கஜேந்திரனுக்கு உள்ளே வெகு துல்லியமான நோக்கங்கள் உண்டே…?அதன் ஒரு பகுதியாகத் தான் பல்ராமனைத் தன் வீட்டுக்கே வரச்சொல்லிக் கொம்பு சீவினான்.முதலில் தயங்கிய பல்ராமன் கஜேந்திர  தைர்யத்தில் சகாயத்திடம் கெடு சொல்லிவிட்டு கடமையாக அந்தத் தெருவைத் தாண்டிய உடனே கஜேந்திரனுக்கு ஃபோன் போட்டு விசயத்தைச் சொல்லவும் செய்தான்.”நான் பாத்துக்கிறேன்யா..நீ கூலா இரு” என்று சொல்லி வைத்தான் கஜேந்திரன்.

  4.வரம் கேட்டல்

தலைவரிடம் போய்விடலாமா என்று ஒரே டைலம்மாவாக இருந்தது பீமனுக்கு.போகலாம் தான்.அவரே சொல்லியிருக்கிறார் என்ன வேணும்னாலும் எப்பன்னாலும் என் கிட்டே வா என்று.அதற்காக இதை எப்படிப் போய் தலைவரிடம் கேட்பது.பெருங்கொண்ட ப்ராஜெக்ட் எதையாவது கொண்டு போய்ச் சொன்னால் அவருக்கும் பிரயோஜனமாக இருக்கும்.மகிழ்ந்து போய் அவர் சிந்துகிற சில துளிகளே லட்சங்களாய்க் கொட்டாதா என்ன..?இதைத் தன்னால் சரி செய்ய முடியாதா..?அரசியலில் பீமனுக்குப் புரிந்த இன்னொரு பாடம் இது.கடவுள் பரிச்சயம் என்பதற்காக கண்டதையெல்லாம் கேட்பவன் வீழ்வான்.கடவுளுக்குப் பிடித்ததை ஆராய்ந்து அதையே வரமாய்க் கேட்பவனுக்கே ஜெயம்.
பீமன் சென்ற போது கஜேந்திரனின் வீட்டு வாசலில் ஏற்கனவே இரண்டொரு பகுதிவாசிகள் காத்திருந்தனர்.பீமனைப் பார்த்ததும் எழுந்து “வணக்கம்ணா” என்றனர்.ஒருவன் பீமனிடம் “அண்ணா டீ வாங்கிட்டு வரவா?” என்றான்.அவனைப் பார்வையாலேயே மறுத்து விட்டுத் தன் புல்லட்டை ஓரமாய் ஸ்டாண்ட் போட்டுவிட்டு வாசல் கதவை சப்தமெழுப்பாமல் திறந்து உள்ளே சென்றான் பீமன்.நுழைந்தவுடன்   இருந்த வராந்தா உள்வட்டத்தினருக்கானது.அங்கே தான் பீமன் கஜேந்திரனுக்காக் காத்திருப்பான்.இன்று நேற்றல்ல.பல வருடங்களாக இந்த ரூமைத் தாண்டியதில்லை பீமன்.
“காப்பி குடிக்கிறியா பீமா..?” எனக் கேட்ட கஜேந்திரனின் மனைவி வசந்தியிடம் “வேணாம்ணீ ” என்றவன் “நா வந்துருக்கேன்னு அண்ணங்கிட்டே சொல்லுங்க” என்றான்.
“ம்ம்…எண்ணை வெச்சிக் குளிக்கப் போறாப்ல.சொல்றேன்” என்றாள்.
இதைச் சொன்னதிலிருந்து சரியாக ஒன்றே கால் மணி நேரமாயிற்று அதன் பின் இரண்டு முறை வெவ்வேறு காரணங்களுக்காகத் தன்னைத் தாண்டி புறத்தேயும் உள்ளேயும் சென்ற வசந்தியிடமும் வேலைக்காரி மைனாவிடமும் தான் காத்திருப்பதை ஞாபகப் படுத்தச் சொன்னபடியே அமர்ந்திருந்தான் பீமன்.திடீர் என்று பீமனின் மனசுக்குள்ளே ஆவேசம் ஒரு குறளியைப் போல் எழுந்தது..
தன் வருகை தெரிந்தே வேண்டுமென்றே காக்க வைக்கிறான் கஜேந்திரன் என்று புரிந்தது.தான் எதற்கான வயிற்று நோவோடு வந்திருக்கிறோம் என்பதும் தெரியும் தானே..?இனி இவன் சரிப்பட மாட்டான் என்று ஆத்திரத்தில் எதிரே இருந்த கண்ணாடி ஷெல்ஃபை ஓங்கிக் குத்தலாமா என்று ஒருகணம் எழுந்த கோபத்தைக் கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டான்.”வரட்டும் இன்றைக்கு ரெண்டுல ஒண்ணு தான்!” எனக் கறுவிக் கொண்டான்.அவமானத்திற்கு எப்போதும் மதிப்பிருப்பதில்லை.அவமானம் தண்ணீரைப் போல் நிறமிலியாகவே இருந்துவிடுகிறது.ஆனால் எவனொருவன் அவமானத்திற்குப் பின் வெற்றி அடைகிறானோ அவனுக்கு அந்த வெற்றியின் கூர் நுனியால் தான் சுமந்த அவமானத்தின் வழங்கு கரங்களை வெட்டி எறிந்துவிடவேண்டும் என்று துடிக்கிறான்.இங்கே பகையைத் தக்க வைத்துக் கொள்வதற்கான எரிசக்தி அவமானத்திற்கு அதிகம் உண்டு.
அந்த ஒற்றை நிமிடம் கஜேந்திரன் மற்றும் பீமன் ஆகிய இருவரின் அரசியல் பரமபதத்தில் மிக முக்கியமான நிமிடமாயிற்று.பீமனின் செல்ஃபோனுக்குத் தலைவர் செல்வசேகரனிடமிருந்து அழைப்பு வந்தது.லேசாய் நடுங்கியபடியே எடுத்து மெலிந்த குரலில் வணக்கம் சொல்லிக்கொண்டே தெருவில் இறங்கி எதிர்ப்புற டீக்கடைக்கு வந்தான் பீமன்.
கஜேந்திரனின் செல்லுக்குத் தான் கடந்த அரை மணி நேரமாக முயற்சிப்பதாகவும் அவனிடமிருந்து பதிலில்லை என்றும் சொல்லி நீ எங்கே இருக்கே என்று வினவினார் தலைவர்.குளிக்கும் கஜேந்திரனுக்காகத் தான் அவன் வீட்டு வாசலில் கடந்த ஒன்றரை மணி நேரமாய்த் தானும் காத்திருப்பதாகவும் தன்னோடு ஏரியா கட்சிக்காரர்கள் சிலரும் காத்திருப்பதாகவும் சொன்னான் பீமன்.தலைவருக்குக் கடுமையாய்க் கோபம் வந்தது.
“எருமைக்குப் பொறந்தவன் எம்புட்டு நேரம்டா குளிப்பான்..?குளிக்கிறானா இல்லை யாரையாச்சும் பாத்ரூம்ல வெச்சி …………?”
சிரிப்பை அடக்கிக் கொண்டு “தெர்ல தலைவரே” என்ற பீமனிடம்
“இங்கபாரு. பீமா நீ நேரா அவன் குளிக்கிற எடத்துக்கே போ..நான் லைன்ல இருக்கேன்னு சொல்லி ஃபோனை அவன் கிட்டே குடு.தாயோளிய செருப்பால அடிக்கிறேன்”. என்று சைலண்ட் ஆனார்.
இது எவ்வளவு பெரிய சதுரங்க நகர்வாக மாறப்போகிறது எனச் சற்றும் யோசிக்காத பீமன் வீட்டின் காம்பவுண்டு சுவரை சுற்றிக்கொண்டு பின் பக்கம் சென்றான்.கிணற்றடிக்கு அந்தப் பக்கம் பாத்ரூமுக்குள் லேசான குரலில் நான் பூவெடுத்து வெக்கணும் பின்னால என்று பாடியபடியே குளித்துக் கொண்டிருந்தான் கஜேந்திரன்.
கதவை சற்றே சப்தமாகத் தட்டிய பீமன் குரலில் எதையும் காட்டிக்கொள்ளாமல் “அண்ணே..எம்புட்டு நேரமா குளிப்பீங்க?” என்றான்.தாளிடப் படாத கதவு திறந்து கொண்டது.கதவுக்கு அப்பால் நிர்வாணமாய் அமர்ந்திருந்த கஜேந்திரனுக்கு கோபமும் வெறியும் உச்சந்தலை வரை ஏறியது.”நேற்று வரை என் கால்களை நக்கிய நாய் இது.என்னைக் கேள்வி கேட்கும் அளவுக்கு வந்துவிட்டதா?” என்று தான் யோசித்தானே தவிர தலைவர் செல்ஃபோன் ரூபத்தில் பீமனோடு உடன்பயணித்து வந்திருப்பதை சற்றும் எதிர்பார்க்கவில்லை.
“எச்சப்பொறுக்கி நாயே..இங்க எதுக்குடா வந்த..?நான் எம்புட்டு நேரம் குளிச்சா உனக்கென்னடா ?”என்று கண்களைக் கழுவிக் கொண்டு அவசரமாய் வழுக்கியபடியே எழுந்து கொடியில் கிடந்த துண்டை அவசரமாய் உடலில் சுற்றியவாறே வெளியே வந்தவன் வலது காலால் பீமனின் நெஞ்சில் எத்தினான்.அவனைத் தவிர சராசரி உடலமைப்புக் கொண்டவனாக இருந்தால் கீழே விழுந்திருப்பார்கள்.பீமனுக்கு ரத்தம் தலைக்கேறியது.
“உன் எச்சிய நா எதுக்குய்யா பொறுக்கணும்..?மரியாதையாப் பேசு.வகுந்துருவேன்…தலைவருக்காகப் பாக்குறேன்” என்றான் உஷ்ணமாக.
“போடா வெண்ணை…தலைவரு உன்னையப் பார்த்து நாலு தடவை இளிச்சிட்டா நீயெல்லாம் ஒரு ஆளா…இந்த மணற்குப்பத்துக்கு நாந்தாண்டா எல்லாம்…உன்னைய மாதிரி ஆயிரம் நாயைப் பாத்திருக்கேன்.தலைவரு பளக்கமாயிட்ட திமிரா..?போட்டுக்குடுத்து உன்னையக் காலி பண்ண எனக்கு எம்புட்டு நேரம் ஆகும்..?என்னையவே எதுக்க துணிஞ்சுட்டேல்ல..?வெளிய போடா நாயே..”.என்று மேலும் கத்தினான்.
அமைதியாக செல்ஃபோனை எடுத்து தன் காதில் வைத்த பீமன் “தலைவரே…கேட்டீங்களா..?நான் கெளம்பட்டுமா…இல்ல இன்னம் அவரோட பேசணும்னு ஆவலா இருக்கீங்களா?”என்றான்.
அதெல்லாம் இருக்காது..பீமன் சும்மா ரீல் சுத்துகிறான் என்று தான் நினைத்தான் மூளை செத்த கஜேந்திரன்.அடுத்த நிமிடம் செல் போனை தன் பக்கம் நீட்டி தலைவர் லைன்ல இருக்காரு..பேசு என்ற போது தான் உண்மை விஷமாய்  பரவத் தொடங்கி உடம்பு நடுங்கலாயிற்று.சைகையால் தலைவரா தலைவரா என்று ரெண்டு முறை கேட்டான் பீமன் முறைத்தானே ஒழிய பதில் சொல்லவில்லை.எதிர்ப்புறம் தலைவர் “அந்தத் தாயோளி கிட்ட ஃபோனைக் குடு.குடுக்குறப்ப ஸ்பீக்கர்ல போட்டுக் குடு” என்றார்.ஸ்பீக்கரை தேடி ஆன் செய்து இந்தா என்று கொடுத்தான்.
நடுங்கியபடியே “தலைவரே ட்ரெஸ் இல்லாமக் குளிச்சிட்டு இருந்தன் தலைவரே அதான்” என்று எதையோ பரிதாபமாக ஆரம்பித்தவனை இந்த வார்த்தை இல்லை என்று பச்சை பச்சையாகத் திட்டினார் தலைவர்.
“நீ நிக்கிற மண்ணு நான் பார்த்துப் போட்ட பிச்சை.ஒண்ணுமில்லாத நாயே…கூட இருக்கவுன இப்பிடித் தான் நடத்துவியா..?நீ என்ன மந்திரியா..?இப்பமே இப்பிடி ஆடுறியே..உனக்கெல்லாம் ஒரு உசரத்தைத் தந்துட்டாலும் என்னையே மேய்ஞ்சுற மாட்டே..?…த்தா…கட்சிக்கு நீ மட்டுமாடா ஆளு..?ஆயிரமாயிரம் பேரோட ரத்தம்டா இந்தக் கச்சி…சொகுசு கேக்குதோ..?என் மூஞ்சிலயே முளிக்காத…முகத்தக் காட்டுனேன்னு வைய்யி…எந்த எடம்னு பார்க்க மாட்டேன் செருப்பாலயே அடிப்பேன்”
அவர் அந்தப்பக்கம் வைப்பதற்கும் வசந்தி வருவதற்கும் சரியாக இருந்தது
சட்டென்று முகத்தை செயற்கையாக மலர்த்திக் கொண்ட கஜேந்திரன் “ஏண்டீ தம்பிக்கு காப்பி எதும் தந்தியா..?பீமா நீ போயி ஹால்ல உக்காரு..நிமிசத்துல வந்துர்றேன்” என்று எதுவுமே நடக்காதது போல அவன் கைகளைப் பற்றி அழுத்தி போ…வெளிய போயி பேசிக்குவம் என்றான்.பீமன் இன்னும் தன்னிலைக்கு வரவில்லை.நாயே என்றவனைக் கெஞ்சி நடுவீட்டில் அமரச்சொல்கிறான்.”தம்பியாம்ல தம்பி…?”முறைப்பு குறையாமல் வீட்டின் பின் பக்கம் நடக்க ஆரம்பித்தவனைத் தோளைத் தொட்ட கஜேந்திரன் எதையும் மனசுல வெச்சிக்காத.எதோ டென்ஷன்…இப்பிடி போ வீட்டுக்குள்ளாற…ஏய் என்னடீ சும்மா நிக்குறே தம்பியை கூட்டிட்டு போடீ என்று அனுப்பினான்.
வசந்திக்கும் ஒன்றும் புரியவில்லை.இந்த மனுஷனுக்குக் கிறுக்குப் பிடிக்கும் அவ்வப்போது என்று தனக்குள் முனகிக் கொண்டு அவனை ஹாலில் அமரச்சொன்னாள்.அந்த வீட்டுக்கு ஆண்டுக் கணக்கில் வந்திருக்கிற பீமனுக்கு இதுவொரு புதிய அனுபவம்.பின் வாசல் வழியாக தான் அந்த வீட்டின் ஹாலில் அமர்வோம் என்று கனவிலும் எண்ணியதில்லை.ஜம்மென்று கால் மேல் கால் போட்டு அமர்ந்தான்.காஃபியை ருசித்துக் குடித்தான்.கட்சிக் கரை வேட்டி சட்டையோடு வந்த கஜேந்திரன் “வா போலாம்” என்றான் சாதாரணமாக
“என்ன பீமா தலைவர் லைன்ல இருக்கார்னு ஒரு வார்த்தை சொல்லிருக்க வேணாமா..அவரு என்னைத் திட்டுறதெல்லாம் அவார்டு குடுக்குறாப்லய்யா..இப்பத் தானே மேல வந்துருக்க..இனி போகப் போகத் தெரியும் உனக்கும்.வராதம்பாரு..நான் போயி நிப்பேன்.செருப்பக் கழட்டி அடிப்பேன்னு சொல்வாரு…அஞ்சு நிமிசத்ல உட்கார்றா கஜான்னு அணைச்சிக்குவாரு..சும்மாவா அவருக்காக எத்தினி செஞ்சிருப்பேன்.அவரோட வலது கைய்யில்லயா இந்த கஜேந்திரன்..? உன் புல்லட்டுலயே போலாம்” என்று பலராமனின் கடைக்கு அழைத்து வந்தான் கஜேந்திரன்.
“ஏண்டா பல்ராமா…சகாயம் என் தம்பிடா..கடைய காலி செய்யச்சொன்னியாமே..?…பீமன் வேற நா வேறயா…நீ என்ன பண்றே…ஒரு ரேட்டை வாங்கிக்கினு கடையக் கெரயம் பண்ணிக் குடுத்துரு என்றான்.ஆடிப்போன பலராமன் கஜேந்திரனின் முகத்தில் தனக்குச் சாதகமான எதாவதொரு கீற்று தென்படுகிறதா என்று குழம்பினான்.

“நீயா சொல்ல மாட்டே…..இன்னிக்கிருந்தா எட்டு லச்சம் போகுமா இந்தக் கடை..?ஒரு ஏள்ரூவா வாங்கிக்க…ஒரு மாசம் டைமு..முடிக்கிறான் என் தம்பி பீமன்.தப்புச்சின்னா நீ சொல்றத ஏத்துக்குவம்…இந்தா என்று தன் டவுசரிலிருந்து ஆயிரத்தோரு ரூபாயை எடுத்து பீமனின் கையில் கொடுத்து குடு பீமா…இனி எல்லாம் உனக்கு நன்மை தான். என்று கொடுத்தான்.
ஒரு கணம் யோசித்த பீமன் உடனே அதை வாங்கி மேலும் தன் பர்ஸில் இருந்த பணத்தை சேர்த்து “இந்தாங்க பல்ராமன்..இதுல பத்தாயிரத்து ஒர்ரூவா இருக்கு.ஒரு மாசத்துக்கு உள்ளயே முடிச்சிக்கலாம்” என்று தந்ததை பெற்றுக்கொண்டு இது நன்மைக்கா தீமைக்கா என்று பெரிதாக யோசித்தபடியே வீட்டுக்குள் போனான் பல்ராமன்.இப்போது கஜேந்திரனின் சுமோ வந்து நிற்க அதன் ட்ரைவர் சீட்டில் இருந்த மணி பீமனைப் பார்த்ததும் “வணக்கம் நாட்டாம..” என்றான் நக்கலாக அவனைப் பார்த்துத் தேவையே இல்லாமல் நாலைந்து அவச்சொற்களை உதிர்த்த கஜேந்திரன் “நீ போடா…நானும் பீமனும் தலைவரைப் பார்க்க போறம்” என்றபடியே புல்லட்டை நெருங்கினான்.
தலைவரின் வீடு வரை இருவரும் எதுவுமே பேசிக்கொள்ளவில்லை.அங்கே ஆயிரம் பேர் காத்திருந்தனர்.கூட்டத்தில் இவர்களும் நிற்க திடீரென்று இவன் மேல் தலைவரின் பார்வை விழுந்தது
“அடடே…பீமனா….வாய்யா…எப்ப வந்த..நீ ஏன்யா கூட்டத்தோட நின்னுக்கிட்டு..நேரே வரவேணாம்..?அவனை அருகே அழைத்து ஒரு பக்கமாய் அணைத்துக் கொண்டார்.கட்சியின் ஆஸ்தான ஃபோட்டோ கிராஃபரைக் கண் காட்ட அவன் வரிசையாய் படமெடுத்தான்.கஜேந்திரன் அங்கே நிற்பதையே கவனிக்காதது போல நின்றார்.
சட்டென்று நினைவுக்கு வந்தவனாய் ஓட்ட நடையில் வாசலுக்குப் போன பீமன் புல்லட்டின் சைட் பாக்ஸைத் திறந்து இப்படி என்றாவது ஒரு சந்தர்ப்பம் வரும் என ஒரு மாதம் முன்பே காதி கிராஃப்டில் வாங்கி வைத்திருந்த நெடிய சந்தன மாலையை எடுத்து வந்து தலைவருக்கு அணிவித்தான்.மீண்டும் படங்கள் கிளிக் செய்யப் பட்டன.தலைவரின் காலில் விழுந்து எழுந்தவனை ஒருகணம் பார்த்த தலைவருக்கு மனம் நெகிழ்ந்தது.அரசியலில் யாரையாவது வெறுப்பேற்ற இன்னொருவருக்கு உயரங்கள் வழங்கப்படுவது ந்டக்கும்.அன்றைக்கு பீமனுக்கான சுக்ரதிசை கஜேந்திரனின் வருகையால் நிகழ்ந்தது.
“வடக்கு மாவட்ட தொண்டரணி அமைப்பாளரா தம்பி பீமராஜை மகிழ்ச்சியோட அறிவிக்கிறேன்.” என்றதும் கஜேந்திரனின் முகம் இன்னும் கறுத்தது.ஏற்கனவே மாவட்ட இளைஞரணி அமைப்பாளராகத் தான் கடந்த எட்டு வருசங்களாக கஜேந்திரன் இருக்கிறான்.இது அவனுக்குச் சமமான பதவியல்ல என்றாலும் ஒரே பதவி போலவே தோன்றக் கூடியது.தலைவருக்கு எங்கே பிளந்தால் எங்கே திறக்கும் என்று தெரியாதா என்ன..?அவர் கஜேந்திரனின் முகவாட்டத்தை ரசித்தார்.
கொஞ்ச நேரம் வேண்டுமென்றே பீமனிடம் பேசி விட்டு கஜேந்திரனை கடைசியாக “நீ போயிட்டு நாளைக்கு வா..” என்றார் தழுதழுத்த குரலில் “என் மேல எதும் கோவமில்லைன்னு சொன்னாத் தான் நா போவேன்” என்றான் கஜேந்திரன்.இதனை ஒரு ரகசியத்தை பகிரும் குரலில் தான் சொன்னான்.,அருகே நின்ற பீமனுக்கே சரியாய்க் கேட்கவில்லை.”ஒரு மயிருமில்ல கெளம்பு”என்றார் தலைவர்.அவர் இதனைச் சொன்னது பள்ளி மாணவன் மனனம் செய்து ஒப்பிக்கும் பதிலைப் போல தொனித்தது.
வெளியே வந்த கஜேந்திரன் எதுவும் சொல்லாமல் வேகமாய் நடந்து தெருவின் கோடியில் இருக்கும் ஆட்டோ ஸ்டாண்டுக்குப் போய் இருந்த ஒரே ஒரு ஆட்டோவில் ஏறி அமர்ந்தான்.உடனே கிளம்பிய ஆட்டோ எதோ ஒரு திசையில் சென்று மறைந்தது.பீமனுக்கு வேறு வேலை இருந்தது.முதலில் சகாயத்துக்கு ஃபோன் செய்து தனக்குப் பதவி கிடைத்ததை சொன்னான்.உடனே அடுத்த ஃபோன் மின்னல் கொடிக்கு அடித்தான்.”மாமா வீட்ல இருக்காரா..?” என்றான் ம்ம் என்று மாத்திரம் பதில் வந்தது.ஸ்வீட்டோட வரேன்னு சொல்லு என்று வைத்தவன் நேரே ஆனந்தபவனுக்குப் போய் ரெண்டு கிலோ ஸ்வீட் வாங்கினான்.
மின்னல்கொடி இவனைப் பார்த்ததும் எதுவும் பேசாமல் உள்ளே அகன்றாள்.மாமனார் வயசாளி.பொறுமையும் அதிகம்.வாங்க மாப்பிள்ள என்றார்.படு பவ்யமாக “ஆசீர்வாதம் பண்ணுங்க மாமா…கட்சில பதவி குடுத்துருக்காங்க.மாவட்ட அமைப்பாளரா…என்று காலில் விழுந்தான்.அயர்ந்தார் மாமனார்.தான் பலவருடங்கள் தொண்டராகவே தொடரும் தன் கட்சியில் மருமகன் ஒரு இடத்தைப் பிடித்து விட்டார் என்பதை ரசித்தார்.மேலும் பதவி கிட்டியதும் நேரே தன்னைத் தேடி வந்து காலில் விழும் அவனது பண்பு அவரை நெகிழ்த்தியது.”இவனா கள்வன்..?இவனே அரசன்” என்று உருகினார்.உள்ளே இருந்து என்னவோ எனப் பயந்து கொண்டிருந்த மின்னலுக்கு இந்தச் சேதி இனிப்பை விட இனித்தது.
“குடும்பப்பிரச்சினை எங்க தான் இல்ல..?எல்லாம் சரியாப்போகும்” என்று வராத வழக்கிற்குத் தீர்ப்புப் போலச் சொன்ன மாமனார் அவனை வைத்துக் கொண்டே “நீ இன்னும் அனுசரிச்சி போகணும்.புருசன் டெல்லியை ஆளணும்னா பொஞ்சாதி இன்னுங் கொஞ்சம் தாழணும்” என்றார்.அவள் தலையை மாத்திரம் “சரி” என்று ஆட்டினாள்.
புருசனும் பொஞ்சாதியும் பழைய பகைச்சொற்களை மறந்து தனியே சற்று நேரம் பேசிக்கொண்டிருந்தனர்.
“சகாயத்தோட கடை வெலைக்கு வருது கொடிம்மா,,,ஒரு வாரத்துக்குள்ள பத்து லச்சம் புரட்டணும்.நம்மளால முடியுமா..?”என்றான். புதுமாப்பிள்ளையாய்ப் பார்த்தது போல அவனை பிரமிப்பாகப் பார்த்த படியே இருந்த கொடிக்கு அவன் “நம்மளால முடியுமா..?” என்று சொன்னதே கிறக்கமாய் இருந்தது.”என் நகைங்க இருக்குல்ல மாமா..?” என்றாள்.”ச்சீச்சீ சும்மாவே நீ ஜொலிக்கணும்னு நினைக்கிறவன் நானு..பதவி வந்த நேரம் நகைங்க இல்லாம இருந்தா நல்லாவா இருக்கும்..?”என்று இழுத்தவன் மாமனாரின் வரத்தால் அமைதியாய் டீவீயைப் பார்ப்பது போல பாவனை செய்தான்.உள்ளே அழைத்துச் சென்ற மாமனார் கொடியின் கையில் செக் ஒன்றை எழுதித் தந்தனுப்பினார்.கேரம் போர்டில் எந்தக் காயின் முதுகைத் தீண்டினால் எந்தக் காய் பள்ளத்தில் வீழும் எனக் கணிப்பது தானே ஆட்டசூத்திரம்,?சரியாய்க் கணித்தாற் போன்றே காய் வீழ்ந்தது.
“சரி வா கெளம்பலாம்” என்று தன் புல்லட்டில் மின்னல் கொடியை ஏற்றிக் கொண்டு வீட்டுக்கு கிளம்பினான்.”பள்ளிக்கூடம் விட்டு வந்ததும் நானே கூட்டியாந்து விடுறேன் ஜெகனேசனை” என்று மாமனார் சொல்லிவிட்டார்.வழியில் மெதுவாய்க் கேட்டான் ஏன் கொடி மாமாகிட்ட இருந்திச்சா…நாம சிரமப்படுத்திட்டமா என்றான்..நீங்க என்னாங்க..எனக்கு செய்யாம யாருக்கு செய்யப்போறாரு..?அதெல்லாம் ஒரு பிரச்சினையும் இல்ல…பத்து லச்சத்துக்கு செக் குடுத்திருக்காரு.நாளைக்கி காலையில பேங்குல மாத்திக்கலாம்” என்றாள்.
அடுத்தடுத்து காரியங்கள் நினைத்தாற் போல் நடந்தன.பல்ராமனிடம் இருந்து பத்து நாட்களுக்குள்ளாக பத்திரத்தைக் கிரயம் செய்து சாவியை வாங்கித் தம்பியிடம் தந்தான் பீமன்.அதற்கப்புறம் கஜேந்திரன் பீமனைக் கூப்பிடவும் இல்லை.முறைக்கவும் இல்லை. பீமனுக்குப் பதவி கிடைத்ததை மணற்குப்பம் பகுதியைச் சேர்ந்த பீமனின் உறவுக்கூட்டம் பெரிய அளவில் கொண்டாடியது.ஊரெல்லாம் லித்தோ போஸ்டர்களும் ஃப்ளெக்ஸ் பேனர்களும் மின்ன தலைவரை அழைத்து ஒரு நல உதவி வழங்கும் விழாவை நடத்தினான் பீமன்.அந்தக் கூட்டத்திற்குத் தலைமை என்று கஜேந்திரன் பெயரைத் தான் போட்டிருந்தான்.அதற்குள்ளாக தலைவருக்கும் கஜேந்திரனுக்கும் இருந்த பூசல் குறைந்தாற் போலத் தோன்றியது.ஆனாலும் மேடையில் கஜேந்திரனை வைத்துக் கொண்டே பீமனை வாயாரப் புகழ்ந்து உயர்த்திப் பேசினார் தலைவர்.மின்னல்கொடியின் குடும்பத்தாரும் அந்தக் கூட்டத்திற்கு வந்து முதல் வரிசையில் அமர்ந்திருந்தார்கள்.சொக்கன் மாத்திரம் கூட்டம் முடிந்த மறு தினம் “பந்தலை இன்னும் பிரிக்கலியா?” என்று கேட்டு கூட்டம் நடந்த இடத்தில் சலம்பிச் சென்றதாக பஞ்சு வந்து சொன்னான்.பீமன் அதை மதிக்கவில்லை.கொசுவுக்கெல்லாம் வீரம் வருது என்று முனகிக் கொண்டான்.
மறுபடியும் முழுகாமல் இருக்கிறாள் எனத் தெரிந்ததும் மின்னல்கொடி வீட்டார் வந்து அவளையும் ஜெகனேசனையும் அழைத்துப் போனார்கள்.ஒருவிதத்தில் அது பீமனுக்கும் நிம்மதியைத் தந்தது.கட்சியில் உட்கட்சிச் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப் பட்டது.இருபதே நாட்கள் இருந்த நிலைமையில் தலைவர் பீமனுக்கு மணற்குப்பத்தையும் கஜேந்திரன் வசம் ஊர்த்தோட்டம் மற்றும் பன்னிமேடு ஆகிய பகுதிகளையும் பொறுப்பு அறிவித்தார்.பீமனின் பகுதிகளில் தேர்தல் எந்தக் குழப்பமும் இல்லாமல் தலைவர் மற்றும் அவரது மச்சான் ஜோதி ஆகிய இரண்டு பேரின் எண்ணத்துக்கேற்ப நடத்தி முடித்தான்.அதில் கஜேந்திர விசுவாசிகள் சிலரைக் கட்டம் கட்டி ஒழித்தான்.செல்வராஜூ பாக்கியம் முத்துக்கனி போன்ற பழைய ஆட்களை மறுபடி பொறுப்புக்களுக்கு தேர்வாக செய்தான்.இத்தனையும் பீமனுக்குக் ஊர்வாசிகள் கட்சிக்காரர்கள் மத்தியில் பெரிய மதிப்பை ஏற்படுத்தியது.
கஜேந்திரன் தன்னை நொந்தவாறு இருந்தான்.ஒரு பக்கம் கட்சி மாறிவிடலாமா என யோசித்தான்.இத்தனை வருட ஏற்றத்தில் இது ஒரு சறுக்கல் கூடக் கிடையாது.இன்னொருவன் படபடவென்று மேலே வருவதை தாங்கிக் கொள்வதென்ன சாதாரணமா..?மணற்குப்பத்துக்குள்ளே ராஜநடை நடந்த தன்னால் முன்பு போல் அங்கே செல்ல முடிகிறதா எனத் தனக்குத் தானே மறுகினான்.உண்மையில் பீமனின் சமீபத்திய வளர்ச்சியால் கஜேந்திரனின் மவுசு எந்த வகையிலும் குறைவதாய் அர்த்தம் இல்லை.ஆனாலும் ஒன்றே ஒன்று இருந்த இடங்களிலெல்லாம் இப்போது இரண்டு முகங்கள் அல்லவா தெரிகின்றன..?

 

5. எதாவது செய்

ஹார்லி மில்லில் இருந்து பன்னிமேடு செல்லும் வழியில் சமாதானபுரம் பனிமய மாதா கோவிலுக்குச் செல்லும் பாலம் ஒன்று இருந்தது.கோயில் திருவிழா என்றால் மட்டுமே அங்கே கூட்டம் குழுமும்.மற்ற தினங்களிலெல்லாம் சுற்றுப்பட்டுப் பகுதி இளசுகள் கிரிக்கெட் உள்ளிட்ட பல ஆட்டங்களை நிகழ்த்த பாலத்தைத் தாண்டியிருந்த கரம்பை நிலம் உதவிற்று.பாலம் தாண்டினால் வலதுபக்கம் மாதா கோயில் இடது பக்கம் கரம்பை நிலம்.அதைத் தாண்டி மலைப்பகுதிதான்.ரகசியங்களை திறப்பதற்கென்றே உருவானாற் போல் அந்த இடத்தின் இருளும் அமைதியைக் கிழிக்கும் பூச்சிகளின் சப்தமும் இருந்தன.
கரம்பை நிலத்தில் தலைவரின் கார் ஏற்கனவே நின்றுகொண்டிருந்தது.கஜேந்திரன் கைகளைத் தன் மார்புக்குக் குறுக்கே கட்டியிருந்தான். அப்படி கைகட்டி இருந்தது செயற்கையாக இருந்தது.பீமன் புல்லட்டில் சென்று மரியாதையான தொலைவில் வண்டியை நிறுத்தி விட்டு தலைவரை இரு கைகளால் கும்பிட்டபடியே அருகே போனான்.
முகத்திற்கு நேரே பீமனைப் பார்த்து “என்ன பீமா கஜேந்திரனுக்கு சேர்மன் சீட் குடுக்கலாம்னு கட்சில முடிவு.நீ அவனுக்கு சரியா ஒத்துழைக்க மாட்டியோன்னு பயப்படுறான்.நீ என்ன சொல்றே..?” என்றார்.
இந்தக் கேள்விக்கான அரசியல் அர்த்தத்தை விறுவிறுவென்று யோசித்தான் பீமன் லேசாய் சிரித்தவாறே “என்ன தலைவரே…நீங்க முடிவு பண்ணி ஒரு ஆளை நிப்பாட்டும் போது ஒத்துழைக்காம என்ன செய்யப் போறேன் நான்..?என்றவன் கஜேந்திரனை சாதாரணமாய் பார்த்து உனக்கென்ன கிறுக்கா பிடிச்சிருக்கு..என்னைய சந்தேகப் படலாமா நீயி..?” என்றான்.கஜேந்திரனின் முகத்தில் அதுவரைக்குமில்லாத நிம்மதி படர்ந்தது.
“அப்பறம் என்னய்யா…கஜேந்திரன்..நீ ஜெயிச்சிட்டன்னு வெச்சிக்க..சின்னப்பிள்ள சண்டையெல்லாம் அரசியலுக்கு ஆவாது.நான் வரேன்.ஒத்துப் போங்கப்பா..” என்று கிளம்பிப் போனார்.கஜேந்திரன் “சரக்கடிக்க வர்றியா.?” என்று கேட்டதற்கு “நான் குடிய விட்டுட்டேன்.தெரியாதா..?” என்று நகர்ந்தான் பீமன்.
பீமனுக்கும் கஜேந்திரனுக்கும் இடையே இருந்த ஒற்றுமை என்ன..?இருவருமே சாமான்ய பிறரைப் போலக் குடும்பம் குட்டி வேலை வீடு வாசல் வாழ்க்கை என்று வாழ்பவர்கள் இல்லை.கஜேந்திரனுக்கு முன்னால் பல வழிகள் இருந்தன.அரசியல் அத்தனை வழிகளையும் வெளிச்சப்படுத்தியது.அவனுக்குப் பல வேலைகள் தரப்பட்டன.அரசியலுக்கு அவன் போன்ற காரியக்காரர்கள் வேண்டியிருந்தார்கள்.தான் செய்யும் எதையும் தன் அரசியல் என்றே கஜேந்திரன் கருதினான்.கஜேந்திரன் கை ஓங்கினாலும் கத்தி தூக்கினாலும் அரிசி கடத்தினாலும் கொலை செய்தாலும் கற்பழித்தாலும் என்னென்ன செய்தாலும் எல்லாம் அரசியலின் ஒரு பகுதி தான்.அப்படி அவனது பல வேலைகளைச் செய்து முடிக்கிற ஒரு மனிதக் கருவியாகத் தான் பீமன் வந்தான்.அவனுக்கும் வாழ்வதற்கான வழியாக அரசியலே இருந்தது.இன்னும் சொல்லப் போனால் கஜேந்திரனுக்குக் கடவுளை தரிசிக்கிற வாய்ப்பு முங்கூட்டிக் கிடைத்தது. அது கிடைக்காத பீமன் கஜேந்திரனை தரிசித்துக் கொண்டே இருப்பதன் மூலமாய்த் தனக்கும் அந்த வாய்ப்பு ஒரு நாள் வரும் என்று நம்பினான்.                    
கம்போ கத்தியோ தான் கஜேந்திரனுக்காகத் தூக்கும் போதெல்லாம் அதன் பின்னால் கஜேந்திரனை இயக்கும் செல்வசேகரனின் முகமும் குரலும் பீமனுக்குள் எப்போதும் வந்து போகும்.மானசீகமாய் அவரையே தான் சென்றடைய வேண்டிய இலக்காகவும் தன் பிரார்த்தனைகளை நிறைவேற்ற வேண்டிய திருத்தலமாகவும் வைத்திருந்தான்.அப்படி ஒரு நாள் வராத வரைக்கும் எல்லாம் கஜேந்திரன் வசம் இருந்தது.அல்லது அப்படி அவன் நம்பினான்.அந்த ஒரே ஒரு நாள் அவனது வருகைப்பிறழ்வு கஜேந்திரன் மற்றும் பீமனின் வாழ்க்கைகளைப் புரட்டிப் போட்டதை அவனால் எத்தனையோ நாட்கள் ஆகியும் ஜீரணிக்க முடியவே இல்லை.
கஜேந்திரன் பார்த்துப் பார்த்துச் சேர்த்த கூட்டம் அவனுடையது.பீமன் ஒரு நாளும் கஜேந்திரனாக ஆகி விட முடியாது என்று தான் இறுமாந்திருந்தான்.”வசதியற்றவன்.ஒரே ஒரு நொண்டித் தம்பி.இவன் வாழ்வெல்லாம் என் காலை அண்டியே இருக்கப் போகும் நாய்” என்று தான் நினைத்திருந்தான்.கஜேந்திரன் கணிக்காமல் விட்ட ஒரே ஒரு விசயம் பீமனின் உறவுக்கூட்டம்.ஒரு காலத்தில் அரசியல் ஆசை இருந்து அதை விடுத்து தொழில் வீடு வாழ்வு என்று சுருங்கிப் போன வெங்கடேசன் தன் மகளை பீமனுக்குக் கட்டிக் கொடுத்ததே கஜேந்திரன் எதிர்பாராத விசயம் தான்.அப்போது கூட”இவனுக்கு வந்த வாழ்வைப் பார்றா” எனத் தனக்குள் சொல்லிக் கொண்டானே ஒழிய அதை பீமனின் அரசியல் ஏற்றத்துக்கு உதவப் போகும் கஜானா என்று பார்க்கத் தோன்றவில்லை.அவனே முன் நின்று தன் பெருமை பேசிக்கொண்டே பீமனின் திருமணத்தை நடத்தி வைத்திருப்பானா..?கலைத்திருப்பான் இல்லையா..? அதன் பின்னரும் பீமனுக்கும் மின்னலுக்கும் சண்டையாகி இருவரும் பிரிவின் கரை வரை போனதையும் என்னென்று அறியாமல் தனக்குள் ரசித்தான்.
வசதியில்லாத பீமன் தன்னைச் சார்ந்திருக்கும் அடியாள் என்றிருந்த அத்தனை பிம்பமும் கஜேந்திரனுக்கு அடுத்தடுத்து மாறியதைத் தான் அவனால் தாங்க முடியாமற் போனது.தலைவர் திடீரென்று அவனைச் செல்லம் கொஞ்சியது பலமான முதல் அடி என்றால் மாமனார் காசை விட்டெறிந்து பலராமனின் கடையை கிரயம் முடித்த போது லேசாய் யோசித்தான் கஜேந்திரன்.இப்போது விட்டால் தனக்கு ஆப்பு வைப்பான் என்று உள்ளே பெரும் ஓலம் கேட்டுக்கொண்டே இருந்தது..அவசரப் பட்டு வாய வுட்டுட்டமோ…பய்யன் எட்டடி தாண்டுறான்…அபாயம் என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே தலைவர் அவனுக்கு சமமான பதவியைத் தந்த போது நிலை குலையவே செய்தான்.
வாடீ வா…செலவு செய்தாத் தான் அரசியல்…பிச்சைக்காரனுக்கெல்லாம் அது சரி வராது என்று அப்போதும் அதனைத் தனக்குச் சாதகமாய்ப் பார்த்த கஜேந்திரனுக்கு சரியான பாடம் எங்கே எங்கனம் காத்திருந்தது என்றால் பீமனின் உறவுக்கூட்டம் அவனுக்குப் பதவி கிடைத்ததைத் தங்கள் ஒவ்வொருவருக்கும் கிடைத்ததாகக் கருதி ஊரையே அமளிதுமளிப் படுத்திய போது தான்.கஜேந்திரன் தன் உறவுகளில் இருந்து தள்ளியே நிற்பவன்.என்னால் தான் இந்த உலகம் சுழல்கிறது என்ற அடிப்படை நம்பகம் அவனை அப்படி வைத்திருந்தது.
தலைவரை தனியே சந்தித்து அவர் கால்களில் விழுந்தவன் நான் தான் அடுத்த சேர்மன்னு நீங்க சொன்னாத் தான் எழுந்திருப்பேன் என்று அழுது புலம்பினான்.உங்களுக்காக என்னல்லாம் செய்திருப்பேன் என்று கழுத்தைப் பிடித்துக் கேட்டால் யாருக்கும் கோபம் வரும்.அதையே காலைப் பிடித்துக் கேட்டால் ஆதுரம் பொங்குமல்லவா..?அரசியலில் கழுத்து கிட்டாத யாருடைய காலையும் விடாமற் பிடித்துக் கொள்வது பலனளிக்கும்.சேர்மன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டான் கஜேந்திரன்.

6. எட்டு ஓட்டு

தான் தான் அடுத்த சேர்மன் எனக் கிட்டத் தட்ட உறுதியாகிவிட்ட நிலையில் சேர்மனுக்கு அதாவது கஜேந்திரனுக்கு திடீரென்று ஒரு ஆசை வந்தது.எப்போது என்றால் எலக்சன் அறிவித்ததில் இருந்து முப்பத்தி ஏழு நாட்கள் பிரச்சாரமெல்லாம் முடிந்து ஊரெல்லாம் சுற்றிவந்து பல வித பிரச்சார யுக்திகளை எல்லாம் பிரயோகம் பண்ணி அனைத்துக்கும் பீமனைக் கூடவே வைத்துக் கொண்டிருந்து விட்டு நாளை மறு நாள் எலக்சன் ரிசல்ட் என்றான போது  அந்த ஆசை அவனை சித்ரவதை செய்தது.
தான் பதவி ஏற்கும் போது பீமன் உயிரோடு இருக்கக் கூடாது என்று முடிவு செய்தான்.பீமனைப் போடுவதற்காக அவன் குறுக்கு மூளை ஆபத்தே இல்லாத ஒரு வழியைத் தேடியது.பன்னிக்கிடைக்கு என்றைக்கும் போகாதவன் பன்னிப் பண்ணை வைத்து வளர்க்கும் முருகன் வீடு தேடிப் போனான்.
“உனக்கு பீமன் கூடப் பகையிருக்கு.எனக்கும் இருக்கு.நீ அவனைத் தட்டி விட்டுறு.நான் நாளை மறுநாள் ரிசல்ட் வர்றப்போ இந்த ஊருக்குச் சேர்மனாய்ருவேன்.உன்னைய நா பார்த்துக்கிறேன்.பத்து லட்சம் கூலி.இந்தா அட்வான்ஸ் ரெண்டு லச்சம் இருக்கு என்று பாலித்தீன் கவரை வைத்து விட்டு நடந்தான்.
ஓட்டளிக்கும் மக்களைப் போல் விசித்திரமான இச்சை கொண்ட இன்னொரு கூட்டத்தைப் பார்க்க முடியாது.யாரை எப்போது ஜெயிக்கவும் தோற்கவும் வைப்பது என்ற விளையாட்டை அவர்கள் பல காலமாய் ஆடிக்கொண்டே இருக்கிறார்கள்.வெற்றியும் தோல்வியும் அவர்கள் கூட்டமாய்ச் சேர்ந்து யாருக்கோ தந்தாகவேண்டிய ஒரே விஷயம் தான்.பெற்றுக் கொள்ளும் நபர்கள் மாறிக்கொண்டே இருப்பது அவர்களுக்குக் கிடைக்கும் உல்லாச அனுபவம்.
கஜேந்திரன் வெறும் எட்டு ஓட்டுக்களில் தோற்றுப் போனான்.முனுசாமி என்னும் பீமனின் சாதியைச் சேர்ந்த ஆனால் அவர்களுக்கு எதிரிக் கட்சியைச் சேர்ந்த கஜேந்திரனை விட ஆறு வயது மூத்த முன்னாள் மில் தொழிலாளி சேர்மனாக ஜெயித்திருந்தார்.இது முனுசாமியின் கதையாக இருந்தால் இந்த இடத்தில் மகிழ்ச்சி இருக்கக் கூடும்.இல்லையல்லவா..?எத்தனை தடவை கூட்டினாலும் எட்டே எட்டு ஓட்டுக்கள் தான் வித்யாசம்.ஒரே நாளில் எல்லாம் தலை கீழாய்ப் போனது.எட்டு என்னும் எண் அவனை வெறியாக்கியது.அவனைப் பார்த்து பயந்த பலரும் எட்டு என்று கூப்பிட்டார்கள்.அவன் எதைப் பார்த்தாலும் எட்டு எனும் எண்ணின் உருவமே தெரியத் தொடங்கிற்று.பைத்தியத்தின் அருகாமையில் தளர்ந்தான் கஜேந்திரன்.ரெண்டு நாளாய் வீட்டுக்குள்ளேயே ஃபுல் போதையில் உருண்டு கொண்டிருந்தவன் வீட்டிலிருந்த கட்சித் தலைவர்கள் ஃபோட்டோவையெலாம் எடுத்து தெருவில் எறிந்தான்.அமைச்சர் ஆஃபீசில் சொல்லாமல் செல்வசேகரனைத் தேடிப் போயி எல்லாம் நீ தான்யா காரணம்.உனக்கு விசுவாசமா இருந்ததுக்கு என்னையச் சரிச்சிப்புட்டேல்ல..?எத்தினி செய்திருப்பேன்..?எட்டு ஓட்டுல போச்சின்னு நம்பச்சொல்றியா..?நீயும் அந்த பீமனும் சேர்ந்து குழி வெட்டிட்டீங்கல்லய்யா..?நன்றி வேணாம்..பாரு…முதல்ல அந்த பீமனை போட்டுத் தள்றேன்..அப்பறம் உன்னைய வெச்சிக்கிறேன்” என அழுதவன் திடீரென்று தரையில் குனிந்து மணலை அள்ளி விசிறினான்.அந்த நேரம் கட்சிக்காரர்கள் கூட்டமாய்க் காத்திருக்க இந்தக் கிறுக்குப் பயலைக் கூட்டிப் போங்கய்யா என்று மாத்திரம் சொல்லிவிட்டு “பீமனை பேசச்சொல்லு ஜேம்சூ” என்று தன் ட்ரைவரிடம் சொல்லிவிட்டு குளிக்கப் போனார் தலைவர்.
அந்த நேரம் முருகன்  பீமனைச் சந்தித்தான்.”.இந்தா பார்….எங்கக்கா செத்ததுக்கு நீ காரணமில்ல.ஏன் யாருமே காரணமில்ல.அவளுக்குக் கடுமையான வயித்து வலி.சாவுறதுக்கு முன்னாடி எனக்கு ஃபோன் செய்து அழுதுட்டு தான் மருந்தைக் குடிச்சா.என் கிட்டே சொல்லிட்டு சாகணும்னு ஒண்ணும் எனக்குப் பேசலை.சாவுறதுக்கு முன்னாடி உனக்கும் அதுக்கும் எந்த சம்மந்தமும் இல்லைன்னு எனக்கு புரியவெக்கிறதுக்குத் தான் பேசுனா.இதை நா வெளில சொல்லலை.எங்கக்காவுக்கு உன்னிய ரொம்பப் பிடிக்கும்.எனக்குக் கூட பிடிக்கும்னு வெய்யி.;நீ சாகணும்னு என்னயால நெனைக்க முடியாது.கஜேந்திரன் நன்றி கெட்டவன்.இப்பக் கிறுக்கனாவும் ஆய்ட்டான்.நான் கண்காணாத எதுனா ஊருக்குப் போறேன்.நீ முந்திக்க.அவனைப் போட்டுரு.நான் இல்லாட்டி இன்னும் வேற ஆளுகள வெச்சி நிச்சயமா அவன் உன்னையக் கொல்லப் பாப்பான்.வரேன்:”என்று மெலிதான குரலில் சொல்லி விட்டுக் கிளம்பிப் போனான்.சற்றைக்கெல்லாம் பீமனுக்கு தலைவரிடமிருந்து ஃபோன் வந்தது.

7.வேறு வழியில்லை

பீமனுக்குப் பசித்தது.நேற்று மதியானம் சாப்பிட்டது.இரவெல்லாம் கண்விழித்து கோழிக் கூண்டு லாரியில் அத்தனை நாற்றத்துக்கிடையே பயணம் செய்தது தூக்கமே வரவில்லை.வெறும் வயிற்றில் குடித்திருக்கக் கூடாது.முதலில் ஊரிலேயே இருந்து சமாளித்து விடலாம் என்று தான் சகாயம் சொல்லியிருந்தான்.நேரம் ஆக ஆக போலீஸ் ஒருபக்கம் தேட இன்னொரு பக்கம் கஜேந்திரனின் சொந்தக்காரர்களில் இளவட்டமாய் ஒரு க்ரூப் தன்னைத் தேடிக் கொண்டிருப்பதாகத் தகவல் வந்தபின் தான் லேசாய்ப் பயம் வந்தது.சரி தப்பென்று எதுவுமே இல்லை.தனக்குத் தேவையாய் இருக்கும் எதையும் செய்துவிடுவதைத் தவிர வேறு வழியில்லை.கஜேந்திரனுக்குத் தான் உயர்த்திய கத்தியின் கூர்முனைதான் சாவைத் தந்தாகவேண்டும் என்பது அவன் விதி.தான் வெறும் கருவி என்றெல்லாம் ஒருபுறம் எண்ணினான்.இன்னொரு பக்கம் மின்னல்கொடி மற்றும் ஜெகனேசனின் முகங்கள் வந்து போயிற்று.அசந்த நேரம் வசந்தி வந்து என் தாலிய அறுத்துட்டியேடா பாவி என்று தலைவிரி கோலமாய் அழுத பிம்பம் சுத்தமாய்த் தூக்கத்தை அகற்றிப்போனது.
காலை ஏழு மணிக்கெல்லாம் திருப்பத்தூர் வந்து சேர்ந்தார்கள்.கூடவே தன் டிரைவர் பழனியை துணைக்கு அனுப்பியிருந்தார் வக்கீல் ஆரோக்கியம்.இங்க சிரமம்.சவுத்துக்குப் போயிருங்க பீமன்…திருப்பத்தூர் போங்க.என் க்ளாஸ்மேட் செழியன்னு.நம்ம கட்சி வக்கீல் தான்.அந்தூர்லயே பெரிய வக்கீல்.நா பேசிட்டேன்.காலைல அங்கே ஆஜராகிக்கலாம்.அப்பறம் ப்ரொசீஜர்ஸ் மூவ் பண்ணிக்கலாம்.முதல் தடவை டிக்ளைன் ஆகும் பெயில் பெட்டிசன்.ரெண்டாவது ரவுண்ட்ல தெரிஞ்ச ஆளுகளை அழுத்தம் பண்ணி வாங்கிடுவம்.நீங்க எதுக்கும் கவலைப் படாதீங்க” என்று கோழி வண்டியில் ஏற்றி விட்டார்.அதற்குள் சகாயம் கொஞ்சம் மாமனார் கொஞ்சம் எனக் கற்றையாய்ப் பணம் வந்து சேர்ந்திருந்தது.” ஏரியாவில் யாருமே இருக்க வேணாம்” என்று சகாயத்தையும் திருவள்ளூர் தாண்டி ஒரு பண்ணை வீட்டுக்கு அனுப்பினார் வக்கீல்.மாமனார் வீட்டையும் அலர்ட் செய்தாயிற்று.
“வேற வழியில்லைங்க..என்னாங்க..?” என்று திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருந்தான் பழனி.
அன்றைக்கும் வழக்கம் போலவே இன்னொரு நாளாய்ப் புலர்ந்து கொண்டிருந்த திருப்பத்தூருக்குச் சற்றும் தெரியாது பீமன் என்ற ஒருவன் வந்து சேர்ந்தது.எந்த ஊருமே அன்னியர்களுக்குத் தருவதற்கென்றே பெரும் அலட்சியத்தைத் தன்னோடு வைத்திருக்கிறது.பீமன் முகத்தில் பெரிய துண்டை சும்மா சுற்றியிருந்தான்.ஒரு புறம் அவமானமாக இருந்தாலும் இன்னொரு புறம் அது தேவையானது என்பதுவும் புரிந்தது.பேப்பர்களில் தன் புகைப்படம் வந்திருக்கிறதா எனப் பார்த்தான்.சென்னையைச் சுற்றிய பதிப்புக்களில் மட்டும் தான் வந்திருக்கும் என்று சின்னதாய் ஒரு நம்பிக்கை இருந்தது.அதைப் பழனி தகர்த்தான்.தினசரி பேப்பரின் முதற்பக்கத்தில் உட்கட்சிப் பூசல்.கட்சிப் பிரமுகர் கொலை.சக கட்சிக்காரர் வெறிச்செயல் என்றிருந்தது.தனக்கும் அதற்கும் சம்மந்தமே இல்லாதது போல் பார்த்தான் பீமன்.
செழியன் என்னும் வக்கீலின் ஆபீஸ் திருப்பத்தூர் பஸ்ஸ்டாண்டுக்குக் கொஞ்சம் பக்கத்திலேயே மெயின் ரோட்டிலேயே இருந்தது.அதற்கு எதிரே இருந்த காம்ப்ளக்ஸில் வரிசையாக் கீழ்தளக் கடைகளில் ஓபராய் சலூன் அடுத்து ஜீவா காபி பார் அதற்கடுத்து ஒரு சிமண்ட் கடை அதற்கடுத்து மாடிப்படி இருந்தது.அதனைத் தாண்டி நாலைந்து கடைகளை ஒருங்கிணைத்து சூப்பர் மார்க்கெட் ஒன்று இருந்தது.பழனி பீமனை டீக்கடை முன் பக்க பெஞ்சியில் உட்காரச் சொல்லி விட்டு இங்குமங்கும் அலைந்தபடி இருந்தான்.உண்மையில் அவனுக்கு பயமாகவே இருந்தது.கூட வந்திருப்பவன் ஒரு கொலையைச் செய்துவிட்டு வந்திருக்கிறான்.ஆனாலும் அவனோடு போகச் சொல்லி முதலாளி அனுப்புகிறார்.நான் ஏன் உன்னோடு ஒட்டிக்கொண்டிருக்க வேண்டும்,என் இஷ்டப்படி நான் இருக்கிறேன் என்றாற் போல அடிக்கடி வந்து எதுனா வேணுமா டீ சொல்லவா என்றெல்லாம் கேட்டுச் சென்றான்.ஆனால் முகத்துக்கு நேரே பீமனைத் தெரிந்தாற்போல்  காட்டிக்கொள்ளவில்லை.எதோ ஒரு திசையைப் பார்த்துப் பேசினபடி இருந்தான்.
இப்போது தான் மணி எட்டு.வக்கீல் வரப் பத்து மணியாகுமாம்.மணற் குப்பத்தில் இப்போது என்ன நிலைமை என்று தெரியவில்லை.யாருக்காவது ஃபோன் செய்யலாமா வேண்டாம் என்றே முடிவெடுத்தான்.வக்கீல் சொல்லி இருந்தார்.எதுவும் ஆகாது.நீங்க எஸ்ஸாவணும்.அது மாத்திரம் தான் உங்க கவனத்ல இருக்கணும்.மத்ததை பத்தி எதும் யோசிக்க வேணாம்.,புரியுதா.வழில எங்கேயிருந்தும் யாருக்கும் ஏன் எனக்கே கூட நீங்க ஃபோன் செய்யக் கூடாது.இன் கமிங் கால் வந்தா மாத்திரம் அட்டெண்ட் பண்ணுங்க.எனச்சொல்லி புதிய செல் மற்றும் நம்பரைத் தந்தார்.அவனது செல்லை வாங்கித் தான் வைத்துக் கொண்டார்.
                               சிமெண்ட் கடையைத் திறந்தவனுக்கு முப்பது வயது இருக்கும்.மிக ஒல்லியான தேகம்.கூடவே பின்னால் முதலாளி போன்ற ஒருவன் நுழைந்து சாமி கும்பிட்டான்.பீமன் அமர்ந்திருக்கும் இடத்தில் இருந்து துல்லியமாக எல்லாக் கடைகளின் உட்புறமும் தெரிந்தது.சலூனைச் சற்று நேரம் பார்த்தபடி இருந்தான்.இங்கே இந்தத் தெருவில் இப்போது நடமாடும் யாராவது என்னைப் போல சுடச்சுட ஒரு கொலையைச் செய்துவிட்டு சரணடையக் காத்திருப்பார்களா என்று ஒரு கணம் யோசித்தான்.ஒரு விதத்தில் அவனுக்கு நிம்மதியாகத் தான் இருந்தது.சாக வேண்டிய ஒருவன் தான் செத்திருக்கிறான்.திடீரென்று இருட்டினாற் போல் மழைக்கு முந்தைய சப்தங்கள் கேட்டன.
சிமெண்ட் கடைக்காரன் யாரிடமோ ஃபோனில் பேசுவது கேட்டது.
“இங்க பாருங்க பெரியசாமி அண்ணே…நான் சொல்றதைக் கேளுங்க.உங்களுக்கு ஒரு காரியம் ஆகும்னு தானே வந்தீங்க..?உங்க கூட வந்த ஆளும் அதுக்குத் தான வந்தாரு..?என்னால முடிஞ்ச வரைக்கும் ட்ரை பண்ணேனா இல்லியா..?அதுக்கு தண்டனையா..?”
இப்போது பழனி எதிரே அமர்ந்து டீ சொன்னது தெரிந்தது.தனக்கு வழங்கப்பட்ட டீ கிளாஸை அசுவாரசியமாக ஏந்தினான்.
வக்கீலு வந்திட்டு இருக்காப்ளயாம்,ஃபோன் வந்திச்சி என்றான் பழனி.
இவன் தலையை மாத்திரம் ஆட்டினான்.
இப்போது சிமெண்ட் கடைக்காரன் குரல் ஏறியது.
“பெரியசாமி அண்ணே…என்னைய என்ன வக்கத்த நாயின்னு நெனைக்கிறீகளா..?உங்க கூட வந்த ஆளு தாங்க ராங்கா பேசுறான்..அவனுக்கென்ன மரியாத..?இது வெறும் செருப்புன்னு எப்டி சொல்வீங்க..?என்னண்ணே பேசுறீங்க..?வாங்கி ரெண்டு நாளு கூட ஆகலை.ஆயிரத்தி நூறு ரூபா..பில்லு கூட இருக்குது.நான் ஏங்க பொய் சொல்லப்போறேன்..?உங்க கூட வந்தவன் அவன் பேர் என்ன.,./பன்னீரோ பாயாசமோ அந்தாளு செருப்பு இங்க தாங்க கிடக்குது.வந்து பார்த்துக்கங்க.”
எதிர்முனையில் எதோ பேசிக்கொண்டே போக இவனுக்கு இங்கே சூடு ஏறுவது நன்றாய்த் தெரிந்தது
“இங்க பாருய்யா…என் பொண்டாட்டி கேக்குறா ஒரு புதுச்செருப்ப காக்குறதுக்கு வக்கில்லையான்னு…இதெல்லாம் ஒரு பொழப்பா..?பிச்சைக்கார நாயி செருப்பத் திருடுறதெல்லாம் ஒரு வேலையா..?அவன அடுத்து எங்கன பார்த்தாலும் என் செருப்பக் கழட்டி அடிச்சே தீருவேன்…பன்னீருகிட்டே சொல்லும்…உமக்கென்னய்யா மரியாத..?சொந்தமாவது மயிராவது.பேசாதய்யா..வச்சிரு..இன்னும் எதாச்சும் வெஞ்சிரப் போறேன்.
ஃபோனை ஆத்திரத்தில் தூக்கி அடித்தவன் மறுபடி வேறு எண்ணை ஒற்றி ஆவேசமாய்ப் பேச ஆரம்பித்தான் “மாப்ள…நாந்தான் சுரேசு பேசுறேன்…ம்ம்…அந்தாளு பெரியசாமி கூட வந்தாண்டா…போறப்ப என் செருப்பு புதுசுட மாப்ளே..அத தூக்கிட்டு போயிட்டாண்டா களவாணிப்பய..”என்று விடாமல் பேசியபடி இருந்தான்.
எதிரே நிழலாடியது
ஒரு ஸ்பெலண்டரில் இருந்து இருவர் இறங்கினர் “நான் செழியன்.இது பாஸ்கர்.இவரோட போங்க..சரண்டர் பண்ணித் தருவாப்ல..உங்க மேல சஸ்பெக்ட் இருக்கறதால சரணடையிறீங்க..செஞ்சதா ஒரு இடத்ல கூட சொல்லக் கூடாது.அதே மாதிரி விரோதமான்னு கேட்டா நட்புத்தான்.விரோதமெதும் இல்லைன்னே சொல்லுங்க.கேக்குற கொஸ்டீனுக்கு மாத்திரம் ஷார்ட்டா ஆன்சர் பண்ணுங்க.மதுரை ஜெயில் தான் அலாட் பண்ணுவாங்க.அப்பறம் பார்த்துக்கலாம்.”என்று கைகுடுத்தான்.
சரி கெளம்பலாமா என்று தயாராய் வந்து நின்ற ஆட்டோவில் பாஸ்கர் முதலில் ஏறிக் கொண்டான்.நடுவில் பீமன் அமர அந்தப் பக்கம் பழனி உட்கார்ந்தான்.ட்ரைவரின் முதுகைத் தொட்ட பாஸ்கர் கோர்டுக்கு போப்பா என்றான்.ஆட்டோ அரை வட்டம் அடித்துத் திரும்பியது.சிமெண்ட் கடை வாசலில் அந்த சுரேசு பலத்த குரலில் இறைந்து கொண்டிருந்தான்.
“அவன் காலை வெட்டாம விடமாட்டேன்..பாத்துக்கிட்டே இரு”என்று.
பாஸ்கர் கிசுகிசுப்பான குரலில்..தலைவர் செல்வசேகரனோட பீ.ஏ பேசுனாரு.அவர் பேரை எந்த இடத்லயும் நீங்க இன்க்ளூட் பண்ணிர வேண்டாம்னு சொல்லச் சொன்னார்.அப்பறம் இன்னொரு விஷயம்..உங்களை கட்சிலேருந்து நீக்கிருக்காங்களாம்.இந்த கேஸ் பரபரப்பெல்லாம் சரியானப்புறம் மறுபடி சேர்ந்துக்கலாம்னு சொல்லச் சொன்னாப்ல.பார்த்து…”என்றான்.அன்றைய தினத்துக்கான வெயிலைக் கிழித்துக் கொண்டு ஆட்டோ போய்க்கொண்டிருந்தது.எதுவும் பேசாத பீமன் திரும்பிப் பழனியின் முகத்தைப் பார்த்தான்.பழனி பயத்தை மறைத்துக் கொண்டு சிரித்தான்.