தமிழ்விக்கி

தமிழ்விக்கி


தமிழ்விக்கி தொடங்கப்பட்டு படிக்கக் கிடைத்த நாள் முதற்கொண்டு இன்று வரை அந்தத் தளத்தை விடாமல் பின்பற்றி வருகிறவர்களில் நானும் ஒருவன். அதனைத் தொடக்க காலத்தில் வாசிக்க நேர்கையில் இத்தனை பெரிதாக,இவ்வளவு நேர்த்தியாகத் தமிழ் விக்கியின் பரவல் விரிந்துகொண்டு செல்லும் என்றெல்லாம் எதிர்பார்க்கவில்லை. பூனைக்கு மணி கட்டுவதே இயலாமற் போன ஒரு கலைந்த காலத்தில் இந்தச் செயல்பாடு டைனோசர்களைப் பழக்கிப் பள்ளி நடத்துகிறாற் போன்றது. அதனை வெற்றிகரமாகச் செய்து வருவது போற்றுதலுக்குரிய செயல். இலக்கியத்தின் வேர்களுக்கு நீர் பாய்ச்சுவது என்று சொன்னால் அது சிறிய உதாரணம். 

முன்பிருந்த காலத்துக்கான ரெஃபெரன்ஸ் என இன்று எதனைச் சொல்ல முடியும்..? முன்பிருந்த பற்பல அற்புதங்கள் அழிந்து விட்டன. சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து திகழ்ந்து கொண்டிருந்த பல பத்திரிகைகள் இல்லாமற் போயின. பல எழுத்தாளர்களின் பல்வேறு அற்புதங்களைப் பற்றிய முதற்சொல் கூட இல்லாமல் இருக்கிறோம். நம்மிடம் இருப்பதெல்லாமும் மிகச் சமீபமான காலகட்டத்தின் எல்லாமும் கலந்துகட்டியாய்க் குவிந்திருக்கும் தகவல் மலை தான். அது நேர்த்தியானதும் அல்ல. முழுமையானதும் அல்லவே அல்ல. இந்தச் சூழலில் தான் பார்த்துப் பார்த்துக் கோத்தெடுத்த ரசமணிமாலை போல் தமிழ் விக்கியின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது.

அது வெறும் மனிதர்களின் தொகுப்பல்ல. அவர்தம் செயல்பாடுகளின் வழியாகத் தொட்டெடுத்துச் சென்று அடுத்தடுத்த கதவுகளைத் திறந்து வைக்கிற கட்டற்ற காற்றுத் தன்மையோடு தமிழ்விக்கியின் நிகழ்தல் மகிழ்வளிக்கிறது. சரித்திரத்தைப் பின்னுவதில் சம்பவங்களும் மனிதர்களும் சமபங்கு வகிக்கிறவை. அப்படி இருந்தால் தான் மாச்சரியமற்ற சரித்திரமாக அதனைப் பகிர்ந்தெடுக்க இயலும். இன்றைய இளந்தலைமுறையினர் ஒரு சொல்லாய்க் கூட அறிந்திராத பல கதைஞர்களை-இதழியலாளர்களை-கலைஞர்களை மற்றும் கவிஞர்களை எல்லாமும் தமிழ் விக்கி ஆவணப்படுத்துகிறது. அதனூடாகக் கடந்த காலத்தின் மைல் கற்களனைய பத்திரிகைகள்- சிற்றிதழ்கள்-இலக்கிய இயக்கங்கள் எனப் பல்வேறு ரத்தினமுத்துக்களையும் வரிசைப்படுத்துவது நுண்மையானது.சமகாலத்தின் மாந்தர்களையும் தொகுத்தெடுப்பதன் மூலமாக ஒரு முழுமையான சித்திரத்துக்குத் தேவையான தொடர்புள்ளிகளைத் தனதே நிகழ்த்தவும் தமிழ் விக்கி தவறுவதில்லை.

தமிழ் விக்கி பக்கங்களின் கட்டமைப்பு எளிமையாகவும் அதே நேரத்தில் யாதொரு சிடுக்குமின்றித் திகழ்வது சிறப்பு. இடங்கள்-நிகழ்வுகள்-மனிதர்கள் என ஒன்றைத் தொட்டு அடுத்ததற்குள் சென்று திரும்புவது யாதொரு சிரமமும் இல்லாமல் அமைக்கப் பட்டிருப்பதும் கூறத் தக்கது.

தமிழ் விக்கி எனும் மாபெரும் ஸ்வாரஸ்ய மழைக்குக் கீழ்க்காணும் சில துளிகள் சிறு எடுத்துக் காட்டெனத் திகழக் கூடும். இலக்கியார்வம் கொண்ட ஒவ்வொருவருக்கும் சென்று திளைக்கத் தீராப் பெருமழையாகவே தமிழ்விக்கி காலங்கடக்க வல்லது.

_______________

ஆர்.சூடாமணிக்கு அமையப் பெற்றிருந்த ஒவியத் திறமை-

இடைச்செவலில் கி.ராஜநாராயணன் வீடு இருந்த அதே தெருவில்தான் அழகிரிசாமியின் வீடும் இருந்தது.
அவர்கள் இளமைக்கால நண்பர்கள்.
(தமிழகத்தில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த இருவர் சாகித்ய அகாதெமி விருது பெற்றது இடைச்செவலில்தான்

பிற்காலத்திய துப்பறியும் கதாபாத்திரங்களுக்கு முன்னோடி ஆரணி குப்புசாமி முதலியார் படைத்த ‘ஆனந்த்ஸிங்’ பாத்திரமே. ஆங்கிலக் கதைகளை அப்படியே எடுத்துக்கொண்டு அதில் வரும் பாத்திரங்களையும் ஊர்ப்பெயர்களையும் அப்படியே தமிழ்ப்படுத்தி விடுவது ஆரணி குப்புசாமி முதலியாரின் பாணி.

பி.எஸ்.ராமையா குங்குமப்பொட்டு குமாரசாமி என்னும் துப்பறியும் கதாபாத்திரத்தை உருவாக்கி அவரை மையமாக்கி பல கதைகள் எழுதியிருக்கிறார். தமிழில் தொடக்க காலத்தில் எழுதப்பட்ட துப்பறியும் கதாபாத்திரங்களில் ஒன்று அது

தமிழ் நேசன் பலநோக்கங்களுக்காக நிதி கோரி இயக்கங்களை நடத்தியுள்ளது. 1975-ல் தமிழ்ப் பள்ளிகளை மூடவேண்டுமென மேல்தட்டு மக்களின் வற்புறுத்தலை எதிர்த்து, தமிழ் பள்ளிகள் தொடர்ந்து இயங்குவதற்கான நிதியை திரட்டிய இயக்கத்தில் தமிழ் நேசனும் பங்காற்றியுள்ளது. அந்த காலத்தில் சென்னையில் எரிந்து போன காங்கிரஸ் மாளிகையை புதுப்பித்து கட்டவும், தமிழகப் புயல் பேரிடர் நிவாரணம் வழங்கவும் குவேட்டா துருக்கி பூகம்ப பேரிடர் நிவாரணம் வழங்கவும் தமிழ் நேசன் நிதி வசூலித்தது. பல்வேறு சூழல்களில் கைவிடப்பட்ட குடும்பங்களுக்கு ஆயிரக்கணக்கான தொகை நிதி சேர்த்து உதவியுள்ளது தமிழ் நேசன்.

தீரன், அரவிந்தன், பொன்முடி, வளவன், மணிவண்ணன், கடலழகன், இளம்பூரணன், செங்குளம் வீரசிங்கக் கவிராயர் ஆகிய புனைப்பெயர்களிலும் எழுதிவந்தார் நா.பார்த்தசாரதி

வட்டத்தொட்டி

டி.கே.சிதம்பரநாத முதலியார் திருநெல்வேலியில் வழக்கறிஞராக பணியாற்றிய போது 1924-ம் ஆண்டு ’இலக்கியச் சங்கம்’ என்ற அமைப்பைத் தொடங்கினார். இந்த அமைப்பு ஒரு நட்புக்கூட்டமாகவே இருந்தது. வண்ணாரப்பேட்டையில் இருந்த தன் இல்லத்தில் இதன் சந்திப்புகளை நடத்தினார். நெல்லையிலுள்ள பாரம்பரிய வீட்டின் உள்முற்றத்தில் இக்கூட்டம் நடந்தமையால் இது வட்டத்தொட்டி (உள்முற்றத்துக்கான நெல்லைமாவட்ட பெயர்) என அழைக்கப்பட்டது.

ஜி.நாகராஜன்

ஜி.நாகராஜன் அடித்தள மக்களின் குற்றவாழ்க்கையை விந்தையானதாகவோ திரிபுநிலையாகவோ பார்க்கவில்லை. அது மானுட வாழ்க்கையின் ஒரு சாத்தியக்கூறு என்றும், அதிலும் மனிதனின் அடிப்படை இயல்பே வெளிப்படுகிறது என்றும் கருதினார். மனிதனின் குணங்கள் உச்சகட்ட அழுத்ததுடன் பரிசீலிக்கப்படும் களம் என்பதனால் மனிதனைப் புரிந்துகொள்ள உகந்தது அந்த உலகுதான் என எண்ணினார்.

விக்ரமாதித்யனும் வேதாளமும்

அம்புலிமாமாவின் வெற்றிக்கு மிக முக்கியக் காரணமாக அமைந்த தொடர், விக்கிரமாதித்தன்-வேதாளம் தொடர்கதை. “தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மீண்டும் மரத்தின் மீதேறி அங்கு தொங்கும் உடலைக் கீழே வீழ்த்தினான்…” என்று தொடங்கும் அம்புலிமாமாவின் விக்கிரமாதித்தன் தொடர், சிறுவர்களால் மிகவும் விரும்பப்பட்ட தொடர். அதன் வரவேற்பிற்கு அதில் இடம் பெற்ற ஓவியங்களும் முக்கியக் காரணமானது.
_________________

நான் தினந்தோறும் செய்திப் பத்திரிகை வாசிப்பதைப் போலத் தொடர்ச்சியாகத் தமிழ் விக்கியை வாசித்துக் கொண்டிருக்கிறேன். இது பெருந்தவத்துக்கு ஒப்பான இலக்கியச் செயல்பாடு. புதியவர்களுக்கும், மாணவர்களுக்கும் ஆராய்ச்சியாளருக்கும் மட்டுமன்றி அரசாங்கம் உள்ளிட்ட நிறுவனங்களுக்கும் கூட வருங்காலத்தில் தமிழ் விக்கியின் கொடை மறுக்க முடியாத ஒன்றெனத் திகழும் என்பது திண்ணம். இந்தச் மாபெரும் இலக்கியச் செயல்பாட்டுக்குப் பின் இருக்கும் அத்தனை கரங்களுக்கும் மனங்களுக்கும் நன்றி.

வாழ்க தமிழ் விக்கி குழாம். வளர்க இந்தச் செயல்பாடு.

வாழ்தல் இனிது