தேன்மழைச்சாரல் 7


                 தேன்மழைச்சாரல்

                7.நிழலும் தேகமும்


அழகான பாடல் இது. எழுத்தாலும் இசையாலும் பாடிய திறத்தாலும் மட்டுமின்றிப் பாங்குடனே படமாக்கம் செய்யப்பட்ட விதத்தாலுமே இப்பாடல் சிறப்பு மிகுந்தது. சீர் நிறைந்தது. திரைப்படங்கள் பாடல்களால் நிரம்பப் பெற்றிருந்த ஒரு காலம். மெல்ல மெல்லத் திரைப்படங்களின் பிடி பாடல்களினின்றும் வசனங்களை நோக்கித் திரும்பிய காலமும் அதுதான். அப்படியான காலத்தில் சீர்மிகு சரித்திரக் கதையைக் கையில் எடுத்துத் திரையாக்கம் செய்து உருவாகி வந்த நல்லதோர் படமாம் ராஜா தேசிங்கு. புரட்சி நடிகர் எம்ஜி.ராமச்சந்திரனும் லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரனும் இணைந்து நாயகர்களாய்த் தோன்ற ஈடிணை நாயகியராய் பானுமதியும் பத்மினியும் வேடமேற்றனர். இந்தப் படத்தினை இயக்கம் செய்தவர் டி.ஆர்.ரகுநாத். பெரும் பொருட்செலவில் இதனைத் தயாரித்தவர் லெட்சுமணன். செப் 2ஆம் தேதி 1960 ஆம் வருடம் வெளியானது இந்தப் படம். காண்போர் விழிகளில் நிறைந்தது கதை. மனங்களில் நிரம்பியது கானமழை. காலத்தால் அழியாத பாடலாக இந்தப் படத்தின் பேர் சொல்லி ஒலித்துக் கொண்டிருக்கும் ஒரு பாடலைத் தான் தேன் மழைச் சாரலில் முதல் நாதகானத் தூறலாக்கித் தர விருப்பம்.
இதனைப் பாடியவர்கள் சீர்காழி கோவிந்தராஜன் சி.எஸ்.ஜெயராமன் ஜிக்கி மற்றும் பானுமதி ஆகிய நால்வருமாவார்கள். இசைமேதை ஜி.ராமநாதன் இசையமைப்பில் உருவானது இந்தப் பாடல். இதனை ஒளித்திறம் கொண்டு ஒளிப்பதிவு செய்தவர் MA ரஹ்மான்.

ராஜாதேசிங்கு படத்தில் தஞ்சை ராமையாதாஸ் எழுதிய பாடல் இது

படமாக்கத்தைப் பற்றி முதலில் சொல்லிவிடலாம். யாருமே தங்களைப் பார்த்துக் கொண்டிருக்கவில்லை என்பது காதலர்களின் சந்திப்புக்குத் தேவையான நிம்மதி தானே.., அத்தகைய நிம்மதியில் காற்றள்ளிச் சூடிக் கொள்கிற மாலை வேளை பூவுதிரும் சோலை அங்கே எஸ்.எஸ். ராஜேந்திரனின் முகத்தோடு முகம் நோக்கிப் பாட ஆரம்பிக்கிறார் பத்மினி

வனமேவும் ராஜகுமாரா
வளர் காதல் இன்பமே தாராய்
மனமோகனா சுகுமாரா
மறவேன் உனை எழில் தீரா
என்று பத்மினியின் வாயசைப்புக்கு ஜிக்கி தன் தனியமுதக் குரலால் பாடலைத் தொடங்கித் தருகிறார்.
சீர்காழியின் குரல்தானத்தில் எஸ்.எஸ்.ராஜேந்திரனின் முகபாவத்தில் இந்தப் பாடல் தன்னைத் தொடர்ந்து கொள்வது எப்படித் தெரியுமா..?
வனமேவும் ராஜகுமாரி
வளர் ஜோதியே சுகுமாரியே
மனம்போலே நாம் இனி பாரில்
மகிழ்ந்தே செல்வோம் அதன் தேரில்
இந்தப் பாடலின் பேரழகுப் பொன்வரி எது தெரியுமா..?
“நிழல் நீயே தேகம் நானே
நிஜம் இது கேள் பெண்மானே”
என்ற வரிதான். இது என் தீர்மானம் என்பதல்ல. யார்க்கும் இதில் இரண்டாம் கருத்து வராது என்பதே என் கண்டடைவு. உல்லாச வேளையிலே ஓவியப் பூங்காவிலே உள்ளன்பால் தேடிவந்தேன் உறவாடும் பூங்குயிலே என்ற வரி கவித்துவத்தின் காத்திரத்தைப் பறைசாற்றித் தருகிறது என்றால் கலை வீசும் கண்களாலே கனிந்தேன் கண்ணே அன்பாலே என்ற வரி புதைமணல் திருகி மறைபொருள் கவரும் காலகாலப் பேரின்பமாய் மனதில் விரிகிறதல்லவா..? காலத்தின் கல்வெட்டாய்க் கேட்கக் கிடைக்கும் இதே பாடலில் யாருமில்லை என்ற ஏகாந்தமா இதோ நாங்கள் இருக்கிறோம் என்று வந்து கலக்கும் இரு முகங்களாய்ப் புரட்சி நடிகர் எம்ஜி.ராமச்சந்திரனும் அவரது இணையாய்த் தோன்றும் பேரொளித் தாரகை பானுமதி ராமகிருஷ்ணாவும் திகழ்வது புதுரசம்.
தஞ்சை இராமையாதாஸ் - தமிழ் விக்கிப்பீடியா
நின்று நிதானித்து ஒலிக்கும் சுழலிசைப் பாடல்களுக்கென்று தனித்த பேரேட்டைத் தயாரித்தால் இந்தப் பாடலுக்கு அதனுள் சிறந்தவோர் தனியிடம் வழங்கியாக வேண்டும். பாடல் முடிந்த பிறகும் பெருநெடுங்காலம் மனதினுள் மீண்டும் மீண்டும் தன்னை ஒலிக்கச் செய்கிற சாமர்த்திய கானம் இது என்பது மிகையறு நற்சொல் தான். பெரும்பாலும் பெயற்சொல் விளிகளால் நேர்பேச்சினைப் பாட்டாக்கிப் பார்த்தாற் போலவே உரைமொழியை இசைக்குட்படுத்திப் பார்த்த எண்ணிலடங்காத பாடல்கள் ஒலித்த காலமொன்றின் மிகையிலா சாட்சியப்பாடலாக இன்றும் கேட்கச் சலிக்காத மின்னற்பூ ஒன்றாகவே ஒலிக்கவல்லது இந்தப் பாடல்.
எழுதப்பட்ட காலத்திலிருந்து ஞாபக மலராக மாறினாலும் இன்றும் என்றும் எடுத்துப் பார்க்கையில் தன் அதே ஒரே மலர்தலை சாத்தியம் செய்கிற மாயம் பாடலுக்கு மட்டுந்தானே வாய்க்கும்..? கறுப்பு வெள்ளை என்பது காலத்தில் பின் தங்கிய கோலம் அல்ல. கறுப்பு வெள்ளை என்கிற இரண்டு வண்ணங்களுக்குள் காதலும் பாடலுமாய்ப் பெருக்கெடுப்பவை எண்ணிலடங்கா. அவற்றில் நடு நாயகம் போலவே திகழ்கிற இப்பாடலானது கேட்பவர் மனங்களைக் கழுவித் தோய்ந்து ஒரு மகரந்த மனோபாவத்தை விதைக்கிற வல்லமை கூடி ஒலிக்கிறது. மறக்கவே முடியாத பேரமுது.

இதனை எழுதியவர் தஞ்சை ராமையாதாஸ்.தமிழின் திரைப்பாக் கவிகளில் முதல் வரிசையில் இடம் பெறுகிற நற்கவி. திருக்குறள் இசை அமுதம் என்ற நூலின் ஆசிரியர். லலிதாங்கி என்ற படத்தைப் புரட்சி நடிகரை நாயகனாக்கி எடுக்க விழைகையில் கருத்து பேதம் ஏற்படவே எடுத்த பத்தாயிரம் அடிப் படத்தையும் தூர வைத்து விட்டு மறுபடி நடிகர் திலகம் சிவாஜியை நாயகனாக்கி ராணி லலிதாங்கி என்ற படத்தை எடுத்து வெளியிட்டவர். முப்பதுக்கு மேற்பட்ட படங்களுக்கு வசனம் எழுதிய கவி ராமையாதாஸ் சில படங்களுக்குக் கதையும் எழுதியவர் ஆவார். திரை எழுத்தாளுமை ஆரூர் தாஸின் ஆசான் கவி ராமையா தாஸ் அவர்களே. இவரது எழுத்துகள் 2010-11 ஆமாண்டு தேசவுடமையாக்கப் பட்டன.

சொப்பனத்தின் வித்தையடா யாவும் சொந்தமென்பதில்லையடா (விதிக்கு மனிதனே பாடல் விளையாட்டு பொம்மை படம்1954) என்றெழுதியவர் தஞ்சையார். அரை நூற்றாண்டு காலமே வாழ்ந்த பெருங்கவி.ஒரு ஜாண் வயிறு இல்லாட்டா இந்த உலகினில் ஏது கலாட்டா என்று எளிமையும் கருத்தின் அருமையுமாகப் பாடல் (சிங்காரி 1951 )புனைந்தவர். மதுவேந்தும் மலரும் நீயே (அடுத்த வீட்டுப்பெண் 1960 ) என்று காதலில் உருகவைத்த கவி.
ஊரைப் படைச்சவன் கடவுளடா-
அவன் பேரைக் கெடுப்பவன் மனுசனடா
ஏரைப் புடிப்பவன் ஏழையடா அவனை
ஏச்சுப் பொளைப்பவன் மேதையடா
(தங்கம் மனசு தங்கம் 1960 )என்று எளிய வரிகளில் உளிகளைப் பாய்ச்சியவர்.
மலைக்கள்ளன் படத்தில் இடம்கொண்ட “எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே” எனத் தொடங்குகிற சாஸ்வதப் பாடல் அவரது பேரை இன்னும் பல நூற்றாண்டுகளைத் தாண்டி ஒலிக்கச் செய்து தானும் ஒலிக்கும். தமிழ்த் திரைக் கவி சரிதத்தில் தஞ்சை ராமையா தாஸ் என்பது பொன்னொளிரும் பெருமைமிகு பெயர்.
வாழ்க இசை