தேன்மழைச்சாரல் 10


தேன்மழைச்சாரல் 10

               உதயணன்


உதயணன் அதிகம் எழுதியவரில்லை. பாடலைத் தன் ஆன்மாவிலிருந்து எடுத்தெழுத முனைந்தவர். கவிஞர் உதயன் என்ற பேரில் கடைக்கண் பார்வை படத்தில் அறிமுகம் ஆனார். இந்தப் படத்தில் ஒரே ஒரு பாடலை எழுதுவதற்குத் தான் வாய்ப்புக் கிட்டியது. புலமைப்பித்தன் முத்துலிங்கம் மு.மேத்தா வைரமுத்து கங்கை அமரன் ஆகியோர் தலா ஒரு பாடல் எழுதிய படமான இதில் உதயனுக்கும் ஒரு பாடல் கிடைத்தது. அவர் எழுதிய அந்தப் பாடல் நல்ல பிரபலம் அடைந்தது.

விழி தீபம் உனைத் தேடும்
புது ராகம் மனம் பாடும்
சங்கீத மேடை தெய்வீக ஜாடை
என்று எழுதினார்.
இது ஒரு டூயட். பாலுவும் சுசீலாவும் பாடியது. வி.எஸ்.நரசிம்மன் இசையமைப்பு,
உன் பாடல் கேட்டு தென்றல் இளங்காற்று
உரசும் தழுவும் தினந்தோறும்
பூவான எந்தன் நெஞ்சம் எந்நாளும்
உந்தன் சொந்தம் கடைக்கண் பார்வை பேசாதோ

என்று படத்தின் தலைப்புக்குப் பாடலில் நியாயம் செய்தது இந்தப் பாடல் பாண்டியன் சத்யராஜ் இளவரசி ஆகியோர் நடித்தது இந்தப் படம்.
அத்தி மரத்துல முட்டையிட்டு ஆவாரம் காட்டுல குஞ்சுபொரிச்சு என்று தொடங்குகிற வித்யாசமான பாடலை நீர் நிலம் நெருப்பு படத்துக்காக சங்கர் கணேஷ் இசையமைப்பில் எழுதினார் உதயணன். பழம்பெரும் பாடகர் எஸ்.சி.கிருஷ்ணன் பி.எஸ்.சசிரேகாவுடன் இணைந்து பாடினார்.இயக்குநர் திலகம் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கிய படம் இது மருதகாசியும் உதயணனும் பாடல்களை எழுதினர். கொக்கரக்கோ உதயணன் என்று டைட்டிலில் வந்தது.
மௌலி இயக்கத்தில் நன்றி மீண்டும் வருக படத்தில் பச்ச மொளகா காரச்சட்டினி என்ற பாட்டு உதயணனுடையது. கௌசல்யாவும் உதயணனும் சேர்ந்து பாடிய இதற்கு ஷ்யாம் இசையமைப்பு. பிரதாப் நடித்த இந்தப் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கௌரவத் தோன்றலும் உண்டு.இதே படத்தில் ஹெச் பி.ஹரன் பாடிய மேடையில் நானே என்ற பாடல் நல்ல பிரபலம்.இதை எழுதியவர் புலவர் மணி.
குரோதம் படத்தில் உதயணன் எழுதிய ஒரு பாடல் வானம் நல்லா பொழியணுங்க எனத் தொடங்கிற்று எல்.ஆர்.ஈஸ்வரியின் ஸோலோ பாட்டு இது.சங்கர் கணேஷ் இசைவார்ப்பு
கங்கை அமரன் இசைத்த படம் சிவந்த கண்கள். விஜயகாந்த் நாயகனாகத் தோன்றியது. இதில் ஒரு பாடல் வாங்க மச்சான் கிட்ட வாங்க மச்சான் என்பதை எழுதினார் உதயணன். கருப்பான உன்னை நெனச்சு கருத்தாகக் காத்திருக்கேன் கல்யாணத் தேதி பார்த்தா கை சேரக் காத்திருக்கேன் மதுரவீரன் மீச என் மாமன் மேல ஆச என்றெல்லாம் எழுதினார். மலேசியாவும் ஜானகியும் பாடினார்கள். இதே படத்தில் இனி ஒரு சபதம் எடு என்ற பாடல் வைரமுத்து எழுதி பிரபலமானது.
உதயணன் மிக நன்றாகப் பாடல் புனையும் வல்லமை கொண்டிருந்தாலும் அவருக்கு அமைந்த வாய்ப்புகள் மிகக் குறைவாகவே இருந்தன. ராகமாலிகா இண்டர்நேஷனல் சார்பில் ஸ்ரீகுமார் என்ற புதிய இசையமைப்பாளர் இசையில் “சரிகமப” என்றொரு படம் உருவானது.இந்தப் படம் வெளிவரவில்லை. இதில் எஸ்பி.பாலசுப்ரமணியம் குரலில் உதயன் எழுதிய ஒரு பாடல் காலத்தால் அழியாத கான மல்லிகையாக மணம் வீசுகிறது. அதிகம் அறியப்படாத பாடலான இதன் ஒவ்வொரு சொல்லும் முத்து எனச் சொல்லத் தக்க வகையில் சொற்கடலில் முத்துக் குளித்தாற் போல் இதனை எழுத்தில் வார்த்தார் கவிஞர்
நினைவிலே மனைவி என்று
அழைக்கிறேன் அவளை இன்று
இரவெலாம் நிலவில் நின்று

எழுதுவேன் கவிதை ஒன்று

 

(நினைவிலே)
நேர்மறைப் பொருளமுதம் பொங்கி வழிகிற வண்ணம் இதனை இயற்றினார் உதயணன். எஸ்.பி.பால சுப்ரமணியம் பாடிய மதுரத் தூறல் இந்தப் பாடல்.

இந்தப் படம் வெளிவந்திருந்தால் இன்னும் பல்லாயிரம் ரசிகர்களை மிகச்சரியான முறையில் சென்றடைந்திருக்கக் கூடும். இன்றெல்லாம் கேட்டுக் கொண்டே இருக்கக் கூடிய நல்லிசைச்சாரல் இந்தப் பாடல். இதனை இசையமைத்த ஸ்ரீகுமார் மற்றும் எழுதிய உதயன் இருவருக்கும் மாபெரும் தொடக்கவெளிச்சமாக அமைந்திருக்க வேண்டிய பாடல்.

 

வாழ்க இசை