தேன் மழைச்சாரல் 11

தேன் மழைச்சாரல் 11

                       முத்துக்கூத்தன்


ஆயிரம் கைகள் மறைந்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை
ஆணைகளிட்டே யார் தடுத்தாலும் அலைகடல் ஓய்வதில்லை


என்ற உளிப்பாய்ச்சல் வரிகளுக்குச் சொந்தக்காரர் கலைமாமணி முத்துக்கூத்தன். பாடலாசிரியரின் புகழ்பவனி எழுதுகிற எண்ணிக்கையில் இல்லை எடுத்தெழுதுகிற எண்ணங்களில் தான் இருக்கிறதென்பதை மெய்ப்பித்தவர்களுள் ஒருவர் முத்துக்கூத்தன். நாடோடி மன்னனுக்காக இவர் எழுதிய சம்மதமா நானுங்கள் கூட வர சம்மதமா பாடல் அத்தனை திவ்வியமாய் ஒலிக்கிறது.

மாபெரிய காவியக் கதையாடல்களை எளிய பாடலொன்றினுள் அடக்கி விடுகிற வல்லமை முத்துக்கூத்தனிடம் நிறைந்திருந்தது. கலையரசி படத்துக்காக அவர் எழுதிய இந்தப் பாடல் அப்படியான வித்தக வல்லமைக்கொரு நற்சாட்சியம். இதனைப் பாடியவர் பன்முகத் திறன்களின் பேரரசி பி.பானுமதி ராமகிருஷ்ணா இசையமைத்தவர் திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவன்

இந்த ஜெகத்தை மயக்கும் முகத்தைப் படைத்த சிங்காரா வா வா என்று தொடங்கும் அந்தப் பாடலின் அடுத்த வரியில் என் தோழி கூட உன்னைப் பார்க்கத் துடிக்கிறாளே மோகனனே என்று வரும். இத்தனை எழிலை ஒற்றைப் பாட்டில் ஏற்றித் தருவது சாதாரணமா என்ன..? அதே பாடலின் சரணத்தைப் பாருங்கள் காலத்தால் அழியாத தமிழமுதம்.

ஆதியிலே தினைப்புனத்தில் ஆயலோட்டும் வேளையிலே
ஆசை கொண்டு வேடனைப் போல் வேஷம் போட்ட

வேல் முருகன் அதோ வாராண்டி

முத்துக்கூத்தன் தூண்டியிலே மாட்டிக்கிட்டு துடிக்குது பாடல் ஜி.ராமநாதன் இசையில் அரசிளங்குமரி படத்துக்காக எழுதினார். ஜமுனா ராணியும் சீர்காழியும் சேர்ந்து பாடியது. வனிதா மணியே மையலாகினேன் என்ற எடுப்பு அமோகமாயிருக்கும். பாடலில் கூத்துக் கலையைப் பிரதிபலிக்கும் பாடல் என்றால் அதற்கான முதற்தேர்வாக முத்துக்கூத்தன் தான் இருந்திருக்கிறார்.

நாகமலை அழகி படத்தில் கொஞ்சிக் கொஞ்சிப் பேசலாம் என்ற டூயட். எல்.ஆர்.ஈஸ்வரி பிபீ.ஸ்ரீனிவாஸ் இணைந்து பாடியது. எஸ்பி கோதண்டபாணி இசையமைப்பில் இதனை இயற்றினார் முத்துக்கூத்தன்.

கொஞ்சிக் கொஞ்சிப் பேசலாம் கொள்ளை இன்பம் காணலாம்
குறையா அன்பினால் கூடி மகிழ்ந்து ஆடலாம்
என்பததன் பல்லவி. அதே பாடலில் சரணவரிகள்
நெஞ்சினிலே சித்திரமா நெலச்சிருக்கே பத்திரமா
நிழல் போல் நானே தொடர்வேனே நிச்சயமா
கலையா ஆசைக்கனவே வா வா நிலையான காதல் கரைசேரலாமே

என்று ஆழம் காட்டும்.

1995 ஆம் ஆண்டில் நாஸர் இயக்கி இளையராஜா இசையமைத்த அவதாரம் படத்தில் முத்துக்கூத்தன் எழுதிய ஒரு குண்டுமணி குலுங்குதடி கண்ணம்மா காதுல காதுல பாடல் இன்றெலாம் கேட்கத் தக்க இனிய கானம்.

பரலோகம் விட்டு வந்தான்
பரமசிவம் பெத்த புள்ள
வள்ளிய குற வள்ளியை
அவன் வெரட்டி வெரட்டி புடிச்சான்
காயாத கானகத்தே நின்றுலாவும் காரிகையே
பாட்டுக்களை எடுத்துவுட்டான்
பானங்களை தொடுத்துவிட்டான்
வேலை வெட்டி விட்டுபுட்டு
வேஷம்முன்னு கட்டி வந்தான்
முருகனுக்கு இன்னாத்துக்கு
அடவுகட்டும் பொழப்பு
அப்பனுக்குக் குரு சுப்பண்ணே

இதை குப்பண்ணே சொன்னாக்கா தப்பண்ணே

முத்துக்கூத்தனின் பாடற்தமிழ் நிறைந்து வழிந்த கலயம்.
காலத்தின் மறக்க முடியாத கல்வெட்டுச் சொற்களால் தன் பாட்டுலகம் புனைந்தவர்.
வாழ்க இசை