நடை உடை பாவனை 1

கோட்டு – ஸூட்டு – பியானோ


வீட்டைக் கட்டுவதை விட கல்யாணம் பண்ணுவதை விட சினிமா எடுப்பது பெரிய வேலை.சினிமாவை உருவாக்குவதில் முன்னே நிற்பவர்கள் பலரை நமக்கெல்லாம் தெரியும்.கண்ணுக்குத் தெரியாமல் பின்னே நின்று உழைத்தவர்கள் எத்தனை பேர்? தொழிலாளிகளும் கைவினைஞர்களும் கடினமாய் உழைக்காவிட்டால் நினைத்ததை எல்லாம் எடுத்து விட முடியாது தான்.தமிழ் சினிமாவின் தொடக்கம் முதல் இன்றைக்கு வரை கதாபாத்திரங்களுக்காகத் தைக்கப் பட்ட ஆடைகளை ஒரே இடத்தில் குவித்து வைத்தால் உலகத்தின் மாபெரிய மலையாகத் தோற்றமளிக்கும்.  சினிமாவைப் பொறுத்தவரை எது தேவையோ அதுவே ஆடையும் அணிகலனுமாகப் பயன்படுத்தப் படும்.சிறு சிறு துண்டுகளாகப் படப்பிடிப்பை நடத்திப் பிறகு தொகுப்பது சினிமா எடுப்பதன் உத்தி.இதில் கண்களில் எண்ணெய் ஊற்றிக் கொண்டு கவனிக்க வேண்டியவற்றில் கண்டின்யூட்டி எனும் இடைத் தொடர்பும் ஒன்று. மஞ்சள் சட்டை அணிந்து கொண்டிருக்கும் நடிகன் அதே காட்சியில் காரணமே இல்லாமல் பச்சை சட்டையோடு வந்தால் அரங்கத்தில் சிரிக்க மாட்டார்களா..? ஒரு படத்தில் எத்தனையோ கவனத்தை மீறி சட்டை மாறி விட்டதும்.நாயகனைத் துரத்தி வரும் பாம்பு பேசுகிறாற் போல் வாய்ஸ் ஓவரில் சமாளித்தார்களாம் “சட்டையை மாத்திட்டா தப்பிச்சிடலாம்னு நினைச்சியா..?விட மாட்டேண்டா உன்னை”

                              கோட்டும் சூட்டும் மாண்புமிக்க ஆடைகள்.சினிமாவைப் பொறுத்தவரை அவை சர்வ சாதாரணம்.கனவானாகத் தோற்றமளிக்க வேண்டிய எந்தக் கதாபாத்திரத்தையும் கோட்டும் சூட்டும் அணியச்செய்து ஒரு பியானோ முன்பு அமரவைத்து விட்டால் போதும் என்று தான் ஆரம்ப காலப் படங்கள் பலவற்றில் காணச் செய்தார்கள்.
180 Best Rajini ideas in 2021 | superstar, actor picture, actors images
                     எனது பள்ளி நண்பன் பரணி ஒரு பளய படம் பார்த்துக் கொண்டிருந்தபோது சற்றே உரக்கக் கேட்டான், ‘மாப்பிளே, பியானோவுக்கு கரண்டு கனெக்சன் உண்டா?’ எந்தப் படத்திலும் எம் ஜி ஆர் தொடங்கி, எஸ் வி சேகர் வரை ப்ளக் பாயிண்ட் இல்லாமலே பியானோ வாசித்தார்கள். பியானோ வாங்குகிறாற் போலவோ, ரிப்பேர் பார்க்கிறாற் போலவோ, விற்கிறாற் போலவோ, உடைவது தொலைவது போலவோ, செய்வது போலவோ, யாரும் யாருக்கும் சொல்லிக் கொடுப்பது போலவோ கூட ஒரு காட்சியும் பார்த்ததில்லை.

எண்பதுகளுக்குப் பிறகு காட்சிகள் மாறின. சிகப்பு ரோஜக்கள் படத்தில் அழகழகான கோட்டு – ஸூட்டுக்களைப் போட்டுக் கொண்டு கமலஹசன் அவர் வீட்டு பியானோ மீது ரத்த ட்ரிங்கிங் பூனை ஒன்று டைய்ங் என்று சத்தமெழுப்பி, ஸ்ரீதேவியை பயமுறுத்திச் செல்லுவது இங்கே நினைவுக்கு வரும் பறவையாகிறது.

Sigappu Rojakkal (1978)
இந்தியாவெங்கும், ஏன் உலகெங்கிலும் ஒரு கட்டத்தில் தன் காதல் ஏக்கத்தை பிரசவித்தபடியே மௌனியாய் விலகிச் செல்லும் நாயகிக்கு மனுப் போட்டுக் கொண்டே டொட்டய்ங் டொட்டய்ங் என்று கோட்டும் ஸூட்டுமாய் பியானோவைப் படுத்தி எடுக்கும், சுய பரிதாப அழாச்சி பாடல்கள் பெருக்கெடுத்தன. கருப்பு வெள்ளைப் படங்களிலிருந்து கலர்ப்படங்கள் வரத் தொடங்கியபோது, வந்தது வண்ணக் கலர். அதுவரை இரண்டு வண்ணங்களில் தோன்றிய பலரும் பல ஷேடுகளுக்கு, பல வண்ணங்களுக்கு, பல கோட்டு – ஸூட்டுகளுக்குப் புகுந்து கொண்டார்கள்.

வி.சி.கணேசன், சிவாஜி கணேசன், சிவாஜி... நடிகர்திலகம்! நடிப்பில் எட்டாவது  அதிசயம்; எட்டாத ஆச்சரியம்! - நடிகர் திலகம் சிவாஜி 92வது பிறந்தநாள் ...
‘தெரியாத்தனமா ஒரு கொலையைப் பண்ணிட்டு நான் படற பாடு இருக்கே’ என்று வாய்விட்டு சொல்ல முடியாமல் ஆனானப்பட்ட சிவாஜி புதிய பறவை படம் முழுக்க அலைந்து திரிந்தார். தன் குற்ற உணர்வைக் கருப்புக் கோட்டோடு கழற்றி வைத்துவிட்டு, வெள்ளை மஸ்லின் துணியில் யாருமற்ற இடத்தில் உண்மையைப் புலம்பிப் புலம்பி அவர் பாடிய ‘எங்கே நிம்மதி’ பாடல் இன்றளவும் பிரசித்தம்.

M.G Ramachandran(MGR) - profile, Biography information and favourites
கையிலொரு கம்பு, இன்னொரு கையில் பெட்டி, தலையிலோ தொப்பி, கட்டம் கட்டமாய்ப் போட்ட கோட்டு சகிதம், பெரிய பெரிய பூட்ஸ் கால்களுடன் காணாமல் போன விஞ்ஞானியான தன்னைத் தன் தம்பியாகத் தொடர்ந்து கண்டுபிடித்தார் தலைவர் எம் ஜி ஆர். தனக்கு வாசிக்க மட்டுமல்ல, இசையமைக்கவே தெரியும் என்கிறாற் போல் பெருந்தன்மையாக வாசிப்பார் எம் ஜி ஆர்.

வந்தது அடுத்த காலம். பல படங்களில் கமல், ஜெய்கணேஷ், விஜயகுமார், முத்துராமசிவச்சந்திரஜெய்சங்கர், எனப் பலரும் தயாரிப்பாளர் செலவில் பல கோட்டுகளை அணிந்து கொண்ட போதிலும், குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய அடுத்த மனிதராக ஒரு படம் முழுக்க கோட்டு மட்டுமே அணிந்து வந்தார் ரஜினிகாந்த். பில்லாவைச் சேர்ந்த பலரும் நல்லாவே கோட்டணிந்தார்கள். சீனியர் ஆர் எஸ் மனோகர் தொடங்கி, சர்வதேச காவக்காரர் சுந்தரராஜ மேஜர் வரை அழகழகான கோட்டுகளில் வலம் வந்தார்கள்.

பின்னாட்களில் தன் வீட்டை இடித்த பழைய நண்பன் அசோக்கை தொழிலில் முடக்கி, தானும் பெரிய பணக்காரனாகி, பல கோட்டுகள் அணிந்து அவரை ஏழையாக்கி, க்ளைமேக்ஸில் ‘இந்தா உன் வீட்டையெல்லாம் நீயே வெச்சுக்கோ’ என்று அவர் சொத்தையெல்லாம் திரும்ப அசோக்குக்கே தந்துவிட்டு ‘தலை நரைக்கலாம், ட்ரெஸ்ஸு நரைக்காது’ என்று தன் பழைய யூனிஃபார்முக்கே திரும்புவார் சூப்பர் ஸ்டார். ‘அரசியலுக்கு எப்போ வருவீங்க தலைவா?’ என்று இப்போது கதறிக் கொண்டிருக்கும் பலரும் அப்போது அவரைக் கண்டிக்காமல் ‘என்ன சொல்ல வர்றீங்க தலைவா?’ என்று கதறாமல் மாபெரும் பரவசத்தோடு கைதட்டி அவரை ஊக்குவித்தார்கள்.

கோட் – ஸூட் என்றாலே ராஜாதி ராஜா படத்தில் ரஜினிகாந்தும், மைக்கேல் மதன காமராஜனில் கமலும், கோகுலத்தில் சீதை படத்தில் கார்த்திக்கும், வாலி படத்தில் அஜித்குமாரும் ராஜா கைய வச்சா படத்தில் பிரபுவும் எனப் பலரும் அழகிய திருக்கோலம் ஏற்றார்கள்.சத்யராஜ் பிரம்மா படத்தில் பியானோ வாசிப்பார்.எப்படியும் ஏழெட்டு டேக் வாங்கி இருபது கட்டைகளையாவது உடைத்திருப்பார் என நினைக்கும் அளவுக்கு முகத்தை உம்மென்று வைத்தபடி அந்தப் பாடலில் பாவம் காட்டி நடித்திருப்பார்.பியானோவும் அவரைத் திரும்ப முறைத்த பிறகு தான் கையை எடுத்தார் போலும்

பாட்ஷா படத்தின் ஹைலைட்டாக  மும்பை எபிஸோடின் ஆரம்பத்தில் துள்ளல் நடையோடு பாட்ஷாவும் அவர் பரிவாரங்களும் கோட் சூட் அணிந்து நகர்வலம் வரும் காட்சியாகட்டும் ஆண்டனி ரகுவரனும் பாட்ஷா ரஜினியும் சந்தித்துக் கொள்ளும் காட்சியாகட்டும் கோட்டும் சூட்டும் பட்டை கிளப்பும்.கோட் சூட் அணிந்து குறுநகை தவழும் ரகுவரனைத்  தாண்டி இந்தியத் திரை இன்னொரு அழகிய வில்லனைக் கண்டதேயில்லை என்றால் தகும்

மறக்க முடியாத கோட் ஸூட் கதாபாத்திரம் என்றால் என் சாய்ஸ் ஜனகராஜ் தான்.இதயத் தாமரை படத்தில் தன்னை மறக்கும் நோய்மை கொண்டவராக வருவார் ஜனகராஜ்.மால் ஒன்றில் புகுந்து சிகரட் கடையில் சிகரட் கேட்பார்.அங்கே தீபாவளி சீஸன் என்பதால் சீனிவெடி கட்டு இருக்கும்.தானே சிகரட்டுக்கு பதிலாக சீனி வெடி ஒன்றை எடுத்து வாயில் வைத்து பற்ற வைக்கப் போவார் கிட்டத் தட்ட மூன்று நிமிடங்கள் பல வித டயலாக் பேசி சிகரட்டை பற்ற வைக்கப் போவதும் எடுப்பதுமாக இருப்பார்.தத்துவம் உதிர்ப்பார் வேதாந்தம் பேசுவார் வியாக்யானம் அளப்பார் விட்டேற்றியாய் பலதும் பேசி முடித்த பிறகு சுற்றி இருப்பவர்கள் அனைவரது நல்லாசியுடன் அந்த சிகரட்டுக்கு பதிலான சீனிவெடியைப் பற்ற வைப்பார்.அது வெடித்த பிறகு தான் வெடி என்பதே தெரியவரும்.
The Talkative Man speaks: Stills from Idhaya Thamarai/Aur Ek Prem Kahani

வாயில இருக்குறது சிகரட் இல்லை பட்டாசுன்னு யாராவது சொல்லியிருக்கக் கூடாதா என மன்றாடுவதோடு அந்தக் காட்சி முடியும்.

கோட் சூட் அணிந்து நடிக்கும் போது அதற்கென்று ஒரு உலர்ந்த நடிப்பு தேவையாகிறது.பாத்திரத்தின் கனபரிமாணங்களைத் தன்னால் ஆன அளவு மென்மையும் மெருகும் ஏற்றித் தருகிறாற் போல நடிக்க வேண்டியது அவசியம்.அதனை உள்வாங்கிக் கொண்டு நடிப்பதில் தான் சவாலே ஒளிந்திருக்கிறது.பாசமலர் படத்தில் சிவாஜியும் எம்.என் நம்பியாரும் ஒரு காட்சியில் சந்தித்துக் கொள்வார்கள்.அவர்கள் இருவரது நடை உடை பாவனை அத்தனையும் கச்சிதமான மேல் தட்டு வர்க்கத்தினரின் பிரதி பிம்பங்களாகவே நம் கண்களின் முன்பாக விரியும்.

இன்றும் இந்தியத் திரையுலகில் பெருகும் கதைகளிலும் பேருருக் கொள்ளும் நடிகர்களின் தோற்றத்திலும் கோட்ஸூட் தனக்கே உண்டான கவுரவத்தோடு தான் இருக்கிறது.யாருக்குமே ராஜதோரணையில் தன் உருவத்தைக் காணப் ப்டிக்கவே செய்யும் அதற்கு நடிகர்களும் விதிவிலக்கல்ல.என்ன ஒன்று பழைய படங்களில் செல்வாக்கோடு இடம்பெற்ற அந்தப் பழங்கால பியானோக்களை இன்றைய யுவர்கள் கண்டுகொள்வதில்லை என்பது தான் என் போன்றவர்களுக்கு லேசாய் வருத்தம்.பியானோ இசையும் கோட் சூட் பாவனையுமாய்ப் பெருக்கெடுத்த பாடல்கள் காலநதியின் ஞாபகக் கரைகளெங்கும் நுரைப்பூக்களாய்த் ததும்புகின்றன.வாழ்க சினிமா