தாமரைபாரதி

                        தாமரைபாரதி


அன்பு நண்பர் தாமரைபாரதி. இவரது தபுதாராவின் புன்னகை கவிதை நூல் அறிமுக விழா மதுரையில் நிகழ்ந்தது. ஒரு நெடிய காலம் இலக்கியப் பத்திரிகைகளில் எழுதுகிற அதே நேரத்தில் முதல் நூலைத் தொகுத்து வெளியிடாமல் இருக்கிற மனவலையைத் தாண்டி அப்போது தான் தாமரைபாரதியின் முதல் நூல் வெளியாகியிருந்தது. ஆழமான கவிதைகள் என்னை ஈர்த்தன. கவிதை குறித்த தரிசனத் தேட்டம் மிகுந்த கண்களை தாமரை பாரதி கொண்டிருப்பதை அந்த நூலின் வழியாக மாத்திரமின்றி அந்தக் கூட்ட நிகழ்வில் அவர் மேற்கொண்ட ஏற்புரையினூடாகவும் அறிய முடிந்தது. அதற்குப் பின்னர் எத்தனையோ சந்தர்ப்பங்களில் செல்பேசி அழைப்புக்களினூடாக அவர் இலக்கியத்தின் பால் கொண்டிருக்கும் மாறாப் பற்றையும் தொடர்ந்த வாசிப்பு வழியாக நகர்ந்து வந்திருக்கக் கூடிய தீர்க்கத்தையும் அறிய முடிந்தது. பாடல்களின் மீது அவருக்கு இருக்கும் ஈர்ப்பும் பாடுவதில் காட்டுகிற சிரத்தையும் என்னை வியக்கச் செய்தன. அவருடைய ரிங் டோன் தேடிச்சோறு நிதந்தின்று எனத் தொடங்கும் பாரதியின் தீயுமிழுங்கவிதை வரிகள். அதை அதற்கேயுண்டான நியாயபாவத்தோடு தாமரைபாரதி உச்சரித்திருப்பதைக் கேட்பதற்கென்றே அலுவல் பரபரப்பில் ஆழ்ந்திருக்கும் சந்தர்ப்பங்களில் அழைத்திருக்கிறேன். என்னால் எடுக்க முடியவில்லை வேலை பரபரப்பு என்று அவர் சொல்லும்போதெல்லாம் உங்கள் குரலில் பாரதியின் வரிகளைக் கேட்பதற்காகத் தான் அழைத்தேன். காலை வேளைகளில் நான் அழைக்கையில் நீங்கள் எடுத்தால் பேச்சு எடுக்காவிட்டால் கவிதை எனக்கொன்றும் நட்டமேயில்லை அதனால் உங்களால் அழைப்பை எடுக்க முடியவில்லை என்பதற்காக வருந்தவேண்டாம் என்று சொல்வேன். என்னுடைய ஏந்திழை நாவலைப் படித்து விட்டுத் தன் ஆழமான அலசலை அதிராத சொற்களால் பாரதி விவரித்த விதம் அழகு. சமீபத்தில் பாலகுமாரன் விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்டு எதிர்பாராத அன்பின் பரிசொன்றை எனக்களித்தார். வீட்டுக்கு வந்து தான் பிரிக்க வேண்டுமென்ற அன்புக்கட்டளையை நானும் மீறவேயில்லை. அவ்வண்ணமே செய்தேன். ச-ரி-க-ம- கேரவன் ஒன்றை ஐயாயிரம் பாடல்கள் பதியப்பட்டதைத் தான் எனக்கு வழங்கியிருக்கிறார் என்பதை அறிந்த கணத்தில் சிலிர்த்துப் போனேன். பரிசு என்பதைத் தாண்டிய நெகிழ் தருணமாகத் தான் அதன் பாடல்கள் எப்போதும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. நமக்கு வாழ்வில் பல்லாயிரம் பேர்கள் அறிமுகமாவது வாழ்வின் வடிவமைப்பு. அறிமுகமாகும் அனைவரிலிருந்தும் வெகு சிலரே நண்பர் என்ற பதத்தை அர்த்தமூட்டுகிறார்கள். அன்பு நண்பர் இனிய கவிஞர் தாமரை பாரதிக்கு இன்று பிறந்த தினம்.

இனிய பிறந்த தின நல்வாழ்த்துகளைச் சொல்லி “வான் போல் வாழ்க” என்று வாழ்த்துகிறேன்.

வாழ்தல் இனிது