பொருத்தப்பாடு

இன்றைய கவிதை

பொருத்தப்பாடு
உண்மையில் அவ்வளவு தைரியம் யாருக்கு உள்ளது என்றுதான்
நிமிர்ந்து நோக்கினேன்
ஆனால் பாரேன் வேடிக்கையை
இவ்வளவு தூரம் ஞாபகம் வைத்து
காலம் தாண்டியும் தேடிவந்து
கனகச்சிதமாக என் கழுத்தை மட்டும் குறிவைத்து
இரக்கமின்றி உரசிச் செல்லும் ஒரு துரோகத்தின் கைப்பிடி
அங்கு சுற்றி இங்கு சுற்றி
கடைசியில்
எனது கரங்களுக்கு தான் சரியாக பொருந்தியிருக்கிறது

அசகவதாளம் காலச்சுவடு வெளியீடு ரூபாய் 100
பெரு விஷ்ணுகுமார்

கவிதையும் ஒருவகை அறிவியலே” - கவிஞர் பெரு. விஷ்ணுகுமார் நேர்காணல்! | interview with tamil poet peru vishnukumar

கவிதை என்பது சொற்களைச் சுழற்றி போடுவது. சொற்களினூடாகக் கூடுதல் ஒன்றை நிகழ்த்தப் பார்ப்பது அல்லது இயல்பு ஒன்றை நிகழாமல் திருப்பியனுப்புவது .இப்படியான சொற் கன-விலக்க விளையாடலை எந்தவிதமான பூச்சுமின்றி நிகழ்த்த முற்படும்போது ரசிக்க முடிகிறது. பெரு.விஷ்ணுகுமார் இப்படியான கவிதைகளை அதிகம் எழுதுகிறார். இந்தக் கவிதையின் கடைசி மூன்று வரிகளை
“அந்த துரோகத்தின் கைப்பிடி கடைசியில் எனது கரங்களுக்கு தான் சரியாக பொருந்தியிருக்கிறது” என்பதைத் தனியே கத்தரித்து சின்னஞ்சிறு கவிதையாக்கி ரசித்து பார்க்கிறது மனது.
“அங்கு சுற்றி இங்கு சுற்றி” என்பது வேறொரு காலத்தின் அயர்வைச் சொல்லும் அலாதியான முறை.