மழை ஆகமம் 5

 

 

 

                                      தோற்றமாற்றம்


நிரந்தரமாய்ப்
பிரித்துப்போடும் வல்லமை
சில வார்த்தைகளுக்கு உண்டு
காலகாலமாக
வார்த்தைகளால் வாழ்ந்தும் வீழ்ந்தும்
வந்து தொடர்வதிவ்வுலகம்
வார்த்தைகள்
மிக எளிதாக உணர்விழைகளை
அறுத்துப்போட்டுவிடுகின்றன
ஒலிக்குறிப்புகளை மீறி
நிசப்தத்தில் கோரம் கலக்கையில்
ஒரு வார்த்தை
தன்
ஆகச்சிறந்த கெடுதியொன்றைப்
புரிந்து முடிக்கின்றது.
அதற்குப் பின் நிகழ்கின்றவைகளை
ஏதும் செய்யவியலாது
வெறுமனே
பார்த்துக்கொண்டிருக்கிறது
அன்பு
காதல் முழுக்க முழுக்க
இரும்புக்கோளம் போல
அலங்கரிக்கப்பட்டிருக்கிறது.
ஆனால்
அது சோப்புக்குமிழிகளால்
செய்யப்பட்டதாகவே நேர்கின்றது
இரும்பின் நிர்வாணம்
சோப்புக்குமிழிகளைக் காட்டிக்கொடுத்துவிட்டு
ஓடத்துவங்குகையில்
மொத்தக் காதலும் சிதறிவிடுகின்றது
காதல்
வார்த்தைகளின் கூர்மையை
எப்போதும்
சந்தித்திராத துக்கமொன்றாகவே
அணுக நேர்கின்றது
ஒரு வார்த்தை போதுமானதாயிருக்கிறது
காதல்
வீழ்ந்து
காணாமற்போகின்றது.
பின்னர் நிகழுகணங்கள் யாவையும்
கடந்த சம்பவங்களின் முழு அர்த்தத்தையும்
ஒருமுறை நிதானித்து அசைபோடுவதற்குள்
பலமுறை மயங்கி நனவிலி நிலைக்கு
காதல் மனதை உட்படுத்துகின்றது.
செய்வதறியாது
அந்த மனது
எந்தச்சாலையிலிருந்தாவது
மீட்க வரும் தேவதேவதைகளின்
பேர் சொல்லிக் கதறியழுகின்றது
காதல்
வலுக்கட்டாயமாக
ஒரு மாலை நேரத்தில்
வீதியில் வீசியெறியப்பட்டுக்
கலைந்து கிடக்கிற
வீடொன்றாக
ஸ்தம்பித்துவிடுகின்றது
ஆறுதல் சொல்ல அணுகுகிறவர்களைக்
கூட
ஆயுதபாணிகளாய்
தோற்றமாற்றம்
செய்து
பயமுறுத்துகின்றது
இனி
மரணம்
புறப்படட்டும்
என்ற
கடைசிக்குறிப்பொன்றை
வாழ்வின்
கடைசிச்சாலையின்
மீது
காதல்
எறிய எத்தனிக்கிறது
ஒரு நொடி
ஒரு நொடியின்
உள்ளுறை
மைக்ரோ கணமொன்றில்
மழை
நிகழ்கின்றது
எல்லா மழைகளுக்கும் நடுவாந்திரத்தில்
அரற்றி அழுகையில்
பெய்யத் தொடங்குகிற மழை
அலாதியானது
அதற்கு
முன்னும்
பின்னுமான
மழைத்தல்களினின்றும்
அது மட்டும்
விலகிப் பெய்கின்றது.
வாய் திறந்தால்
அழ மட்டுமே தெரிந்த
அனாதைச் சிசுவொன்றிற்கு
முலைகொடுத்து
பசியகற்றும்
உயிர்த்திரவமாய்த்
தன்னை
அந்த மழை
மாற்றிக்கொள்கின்றது
மழை
மாற்றி அமைக்கின்றது
எல்லாம்
எல்லாம்
எல்லாம்
மெல்ல
மாறத் தொடங்குகின்றது
ஒரு வார்த்தைக்குப்
பின்
நீண்ட இடைவெளிகளுக்கப்பால்
இன்னொரு
இணக்கமான
வார்த்தை
மருந்தாய்ப் பூக்கின்றது
அது
மழை
தந்தது