தானாய்ச்சுழலும் இசைத் தட்டு 1
            மழையே மழையே


ஏவி.எம் தயாரித்த படம் அம்மா. வணிகப் படங்களை எடுப்பதில் எண்பதுகளில் மிகப்பெரிய வெற்றியை அடைந்தவர் ராஜசேகர். தம்பிக்கு எந்த ஊரு-மலையூர் மம்பட்டியான் -விக்ரம்- காக்கிச்சட்டை- மாவீரன்- படிக்காதவன்- ஈட்டி -கூலிக்காரன்-பாட்டி சொல்லைத் தட்டாதே-மாப்பிள்ளை-தர்மதுரை எனப் பல வெற்றிகளைப் பார்த்தவர். இந்தியிலும் கங்க்வா என்று மம்பட்டியானைப் பெயர்த்தெடுத்தார் ராஜசேகர். துல்லியமான இயக்குனர். இன்னும் இருந்திருந்தால் நிறைய நல்கியிருப்பார்.
அம்மா படத்திற்கு சங்கர் கணேஷ் இசை வைரமுத்து வரிகள் எஸ்பிபாலசுப்ரமணியமும் எஸ்.ஜானகியும் சேர்ந்து பாடிய டூயட் பாடல்.நடித்திருப்பவர்கள் பிரதாப் போத்தன் சரிதா.

மிக அழகாகப் படமாக்கப் பட்ட பாடல் இது.

பாடல் தொடங்கும் போது மழையில் துவங்கும். பிறகு மெல்ல பாடலே மழையாகும். இந்தியத் திரை வான் கண்டெடுத்த பேரழகுப் பெருநடிகை சரிதா. க்ளோஸ் அப் தோரணங்களாய் விரியும் அழகதிகப் பாடல் இது. ப்ரதாப் ஒரு வயலட் தொப்பியும் ரேபான் கண்ணாடியும் அணிந்து படகு ஓட்டிச் செல்வதாகக் காட்சி வரும். லேசாய்க் கடக்க முடியாமல் அந்த நீர்ப்பரப்பிலேயே மனம் கிடந்து அல்லாடும்.

பல்லவி முடிந்து சரணத்திற்குப் போவதற்கான வழியிடை இசையிழை ஒன்று வரும். அதிர்ந்து ஒலிக்கும் தாளக்கட்டும் உடனொலிக் குரல்களுமாகப் பூங்காவில் சரிதாவும் ப்ரதாப்பும் அன்னியோன்னியமாக நடந்து வருவதாகக் காட்சி. அந்த ஒரு காட்சிக்குள் சரிதா தன் முகத்தில் தோற்றுவிக்கிற உணர்தல்கள் அபாரமானவை.

பாடலின் காணொலியை அடைய இங்கே சொடுக்கவும்

மழையே மழையே இளமை முழுதும்
நனையும் வரையில் வா
சாரல் விழும் நேரம் தேவ மயக்கம்
கூந்தல் மலரில் தேனை எடுக்க
காத்து கிடந்தேன் கால்கள் கடுக்க
இதயம் துடிக்க
{மழையே மழையே}
விரக வேதனையில் பருவமான ஒரு தாமரை
மன்மத தேசத்து மாதுளை
நாம் போகும் பாதை எங்கெங்கும்
பயிராகும் காதல் தங்கம்
உயிருக்குள் எரிகின்ற நெருப்பு
வந்து அணைப்பது இனி உந்தன் பொறுப்பு
{மழையே மழையே}
நனைந்த பூவில் வண்டு ஒதுங்கும் போது ஒரு சோதனை
மார்கழி மாதத்து வேதனை
மடி மீது சாயும் இந்நேரம்
மழைக் கால ஆசை தோன்றும்
இடைவெளி குறைகின்ற நெருக்கம்
இந்த இரவினில் இளமைக்கு பசிக்கும்
{ மழையே மழையே }

 

மழையே மழையே இளமை முழுதும் நனையும் வரையில் வா என்கிற தொடக்கமே பாடலைத் தன் கையில் பற்றித் தந்திருக்கும்.
எடுக்க-கடுக்க-துடிக்க என்பதெல்லாம் எண்பதுகளில் முந்தைய காலப் பாடற்தமிழின் நீட்சி.

தாமரை-மாதுளை எங்கும்-தங்கம் நெருப்பு பொறுப்பு என்பதில் இசைக்கு இயைந்து ஒலிக்கிறாற் போல் தோன்றினாலும் வைரமுத்துவின் விஷயதானம் இவற்றின் முன் பகுதிகள்.
பருவமான ஒரு தாமரை
மன்மத தேசத்து மாதுளை
பயிராகும் காதல் தங்கம்
போன்றவை அவற்றுக்கு உதாரணங்கள்


இரண்டாவது சரணத்தில் இன்னும் வேகமும் மோகமும் கூடிய வரிகளை எழுதியிருப்பார்.மார்கழி மாதத்து வேதனை இரவினில் இளமைக்குப் பசிக்கும் இவற்றை எல்லாம் தாண்டிய பரவசத்தைப் பாடல் முடிகிற இடத்தில் ஓங்கி ஒலிக்கச் செய்தது ரசம். இடைவெளி குறைகின்ற நெருக்கம் என்பது சாதாரணம் போலத் தொடங்கினாலும் மடி மீது சாயும் இந்நேரம் மழைக்கால ஆசை தோன்றும் என்கிற வரிகள் யூகத்திற்கு அப்பாற் பட்ட எளிமையும் கூடி ஒலிக்கிற மழைத்தமிழ்.

வைரமுத்து சங்கர் கணேஷின் இசையில் பல பாடல்களைப் புனைந்திருக்கிறார். அவற்றின் வரிசையில் அம்மா படத்தில் இடம்பெற்று ஒலிக்கும் மழையே மழையே பாடல் வானொலிக் காற்றை ஆளவந்த கானம். தொட்டதும் பற்றி எரியக் கூடிய நீருருவ யாகம். இந்தப் பாடலை எஸ்பி பாலசுப்ரமணியம் ஜானகி இருவரும் பாடிய விதம் எத்தனை புகழ்ந்தாலும் தகும். அதிலும் இந்தப் பாடலின் ஸ்பெஷாலிட்டியாக நான் கருதுவது மலேசியாவின் குரல் மிருதுவாகிற ஒரு இடம் உண்டு. அவரால் மட்டுமே பிறப்பிக்கக் கூடிய வைடூர்ய வெளிச்சம் அது. அதைத் தன் குரலால் தோற்றுவித்து அனாயாசம் காட்டி இருப்பார் பாலு.அதையும் பல்லவியிலேயே பரவசப் படுத்தி இருப்பார் என்பது தான் ஜாலம். மழையே மழையே என்று தன் ஆதர்சத்திலிருந்து தொடங்குபவர் தனிச்சையாகப் பல்லவி முடிந்து மீவொலித்தலை ஜானகி கையாண்டு முடித்ததும் சரணத்திற்குள் நுழையும் அந்த இடத்தில் விரக வேதனையில் பருவமான ஒரு தாமரை என்ற அந்த ஒரு வரியைக் கடப்பதற்குள் சட்டென்று சின்னதோர் ஜாலத்தைத் தோற்றுவித்து விலகி இருப்பார். இன்றைக்குக் கேட்டாலும் அந்த இடத்தில் புதைமணலில் சிக்குண்டு தவிக்கும் யானை ஒன்றாய் மனசு கிடந்து கனக்கும். அல்லாடும். அத்தனை எளிதாய்க் கடந்து போய்விடவே முடியாது. அதையே இரண்டாம் முறை பாடும் போது தன் குரலுக்குத் திரும்பிவிடுவார். அடுத்து ஜானகி தன் ஐஸ்குரலால் வருடி முடிக்கையில் பல்லவியைத் தன் பனிநுனிக் குரலால் அபிஷேகம் செய்வார் பாலு.

மடி மீது சாயும் இந்நேரம்
மழைக் கால ஆசை தோன்றும்

இந்த வரிகளை பாலு பாடிக் கேட்க வேண்டும்…அத்தனை யௌவனம் அசாத்தியம். காதலுக்கே குளிரும். கண்கள் லேசாய்க் கலங்கும் அளவு காதலை இசையிலும் பாடலிலும் உருக்கித் தர முடியும் என்பதை மெய்ப்பிக்கும் பாடல் இது.

எழுபதுகளில் கோலோச்சிய சங்கர்கணேஷ் எண்பதுகளில் தங்கள் பாடலிசையை மேலெழுதிக் கொண்டு இசையமைத்த பல பாடல்கள் மக்கள் மனங்களைக் குளிர்வித்தன. அம்மா படப் பாடல் அவற்றில் முக்கியமான மற்றொன்று.

பிரதாப்பும் சரிதாவும் இயல்பான நடிப்புக்குப் பேர் பெற்றவர்கள். இந்தப் படத்தின் அடுத்தடுத்த பிம்ப நகர்வுகள் அத்தனையுமே பாந்தமாகக் கண்குளிர எடுத்திருப்பார் ராஜசேகர். அதிலும் பாடல் முடிவதற்கு முந்தைய கனவு கலையும் ஃப்ரேம் ஒரு சின்ன வளைவுக்கு அருகாமையில் புற்தரையில் அமர்ந்திருப்பார்கள் சரிதாவும் பிரதாப்பும். அந்த இடம் பாடலின் சூழலுக்கென்றே பிறந்து வந்தாற் போல் தோற்றம் தரும். என் கனவுகளில் கூடப் பல முறை அந்தப் புற்பரப்பும் அந்த வளைவிடமும் வந்து சென்றிருக்கிறது.

{இன்னும் சுழலும்}