இடம்

இடம்

சின்னப்பாண்டி மெல்ல நடந்தான்.வேட்டியை அவிழ்த்து ஒருதடவை கட்டிக் கொண்டால் சவுக்கியமாக இருக்கும்.தோதாக ஒரு இடம் வரட்டும் என்று அசூசையுடன் நடந்து தேவர் சிலையைத் தாண்டி வலது புற ப்ளாட்ஃபாரத்தில் அப்போது தான் கடைகள் திறந்து கொண்டிருந்தார்கள்.டீக்கடையுடனான சாப்பாட்டுக் கடையைப் பார்த்ததும் சின்னப் பாண்டியின் கால்கள் பின்னிக் கொண்டன.ஒரு டீயாவது சாப்பிட்டால் தான் அவனுக்குச் சரியாய் இருக்கும். யப்பாடி.மூன்று மணி நேரப் பிரயாணம்.கடையில் நுழைந்ததும் தன் கையிலிருந்த பெரிய வயர்ப்பையை கல்லாக்காரரின் காலடியில் வைத்தான்.ஒரு நாய் முதலில் அவனையும் பிற்பாடு அவனது பையையும் முகர்ந்து பார்த்தது பின் எதிர்த்திசை நோக்கி ஓடியது.கைகழுவுகிற இடத்துக்குச் சென்று முகத்தைத் தேய்த்துக் கழுவி வாயைக் கொப்பளித்தான்.”சீக்காளிக் கழுதைய எந்தலையில கட்டி…”எரிச்சல் பன்மடங்காகப் பெருகியது.

வசந்தா அழகாய்த் தான் இருந்தாள்.பெண் பார்க்கப் போன போது இவனுக்கும் பிடித்துத் தான் கட்டிக் கொண்டு வந்தான்.தோலும் அழகும் தான் தெரியுமே ஒழிய யார் உடம்புக்கு உள்ளே என்ன சீக்கிருக்கும் என்று யாருக்குத் தெரியும்..?இந்த ஏழு வருட சம்சாரத்தில் ரெண்டு பிள்ளை.இத்தோடு எத்தனை முறை ஆஸ்பத்திரிக்கு வந்தாயிற்று.?டிஸ்சார்ஜ் ஆகிப் போனாலும் ரெண்டு மாசம் தான் அதிகபட்சம் தாக்குப் பிடிப்பாள்.அவள் வயிற்றுக்குள் பெரியதொரு பேய் புகுந்துகொண்டு விட்டது.இல்லாவிட்டால் இப்படிப் படுத்தி வைக்குமா..?

சின்னப்பாண்டி களையான காளை.ஊரில் நாலு பேர் நறுக்கென்று தேர்ந்தெடுத்தால் அதில் நாலாவதாகவாவது வருவான்.கறுமை வழியும் தேகமும் கூர்மையான கண்களும் செதுக்கிய முகமுமாக அவனை யாருக்குத் தான் பிடிக்காது..?அவனைப் பெற்றவள் குமைந்து கொண்டே தான் இருக்கிறாள்.தீர்த்துட்டு கொழந்தைகளை கூட்டிட்டு வாடா மகனே..இந்த சீக்காளி கூடத் தானா உன் பாடு கழியணும்..?இந்தச் சிறுக்கி இல்லாட்டி இன்னொருத்தி என்று முகம் படவே சொல்லிவிட்டாள்.

இருந்தாலும் கட்டியவளை அப்படிப் பாதியில் விட்டுவிடவா முடியும்..?அவன் நல்லவனும் கெட்டவனும் இல்லை.இன்னும் ஒரு வருடத்துக்குள் வசந்தா செத்துப் போய்விடுவாள் என்று அவர்கள் ஊரில் லேப் நடத்துகிற சண்முகம் சொல்லி நாலு மாசம் ஆச்சு.ஆகட்டுமே..புண்ணியவதி போய்ச் சேர்ந்தால் சரி என்று தனக்குள் கணக்கு.அடுத்த கலியாணத்தைப் பற்றி இப்போது யோசிக்கக் கூடாது.அது பாவம்.தன்னால் நடக்கும் எல்லாமும் என்று தனக்குள்ளேயே சமாதானம் செய்துகொண்டிருக்கிறான்.

ஒரு காபியைக் குடித்து விட்டு ரெண்டு ரெண்டு இட்டிலியாய் மூணு பார்சல் வாங்கிக் கொண்டு பெரியாஸ்பத்திரிக்குள் நுழைந்தான்.இந்தப் பொட்டலங்களைக் கொண்டு போய்க் கொடுத்து விட்டால் அவனது கடமை முடிந்து விடும்.அப்புறம் தன் வேலையைப் பார்க்கப் போய்விடலாம்.ஆரம்பத்தில் முதல் தடவை அவனே வந்து வசந்தா கூடவே இருந்தான்.ஏழு நாளைக்குப் பிறகு டிச்சார்ஜாகி ஊர் திரும்பிய போது அவ்வளவு தான் இனி பிரச்சினையில்லை என்று நினைத்தான்.மறுபடி ரெண்டு மாசத்தில் வசந்தாவின் பாழாய்ப் போன வயிற்று வலி தீராமல் படுத்தும் போது “நா வேலை பாக்குற மில்லை என் மாமனாரா நடத்துறான்..?சேட்டு மேனேஜர் லீவு கேட்டா வேலய விட்டு தூக்கிறுவான்.செலவ நான் தந்துர்றேன்.வெச்சிப் பார்க்குறத நீங்க பாருங்க என்று வசந்தாவின் அம்மாவை கூப்பிட்டு கறாராக சொல்லி விட்டான்.அதன் பின்னே வசந்தாவின் ஆஸ்பத்திரி விஜயங்களின் போதெல்லாம் அவன் ஒரு தடவை வந்து காசு தந்து செல்வதோடு சரி.இன்று அப்படியான ஒரு தினம்.

                   சின்னப் பாண்டி சென்ற போது கட்டிலில் ஒருக்களித்து வசந்தா படுத்திருந்தது அந்தக் காலை நேரத்தின் வெயிலற்ற வெளிச்சத்தில் ஒரு கோட்டோவியம் போலத் தோற்றமளித்தது.பக்கவாட்டில் இரும்பு ஸ்டூல்மேசை மீது இரவெல்லாம் எரிந்து அடங்கிய கொசுவர்த்தியின் சாம்பல் ஒரு பாம்பின் ப்ரேதம் போலக் கோணலாய்த் தெரிந்தது.இவன் பக்கத்தில் தரையில் வயர்க்கூடையை வைத்தான்.யாரையும் காணம் என்றதும் எழுந்த எரிச்சலை மெல்ல அடக்கிக் கொண்டான்.

பக்கத்து கட்டிலில் யாருமில்லை.அதில் உட்காரப் போனவனை “மாமா .அதுல ஒக்காராத என்று சற்றே உயர்த்திய குரலில் வந்து சேர்ந்தாள் பொன்னி.வசந்தாவின் தங்கை.எட்டு வருடத்துக்கு முன்னால் இதே பொன்னி ரெட்டைப் பின்னலோடு பாண்டி வசந்தா கலியாணத்தின் போது சொட்டாங்கல் ஆடிக் கொண்டிருந்தாள்.இத்தனை வருடங்களில் அவள் பெரிய பெண்ணாகி இப்படி ஒரு உடம்பழகோடு வருவாள் என்று அப்போது நினைத்துக் கூடப் பார்த்ததில்லை. வசந்தாவுக்கு பின் பொன்னியைக் கட்டிக்கலாம் என்றொரு எண்ணம் வலுவாகவே உண்டு சின்னப்பாண்டிக்கு.ஆனால் ஒரே ஒரு சந்தேகம்..”இவளுக்கும் அக்காவைப் போல இந்த வயித்து நோவு வந்துருச்சின்னா..?”தனக்குள் இன்னமும் ஒரு முடிவுக்கு வரவில்லை பாண்டி.

“இந்தா இட்டிலி.நீ மாத்திரம் தான் இருக்கயா..?அத்தையக் காணம்?” என்றான் சின்னப்பாண்டி..”அம்மாவைப் போயி குளிச்சிட்டு வரச்சொன்னே.அது வந்ததும் நா போவணும்”.என்றாள் பொன்னி.அவள் குரலில் எந்தச் சாட்டும் இல்லை.ஆனாலும் சின்னப்பாண்டி வேறு டாபிக்குக்கு மாற விரும்பி நைட்டெல்லாம் ரொம்பக் கொசுவோ என்றான்.

இல்லியா பின்ன..மாமோய்…அக்காவை அலேகா தூக்கிட்டு போயிரும் போல..போர்வை மாத்திரம் இல்லைன்னா என்று வெள்ளந்தியாய்ச் சிரித்தாள் பொன்னி.தேனி காலேஜில் ரெண்டாவது வருடம் படிக்கிறாள்.தன் அக்காகாரி இன்னும் பல வருடங்கள் இப்படியே சீக்கோடாவது உயிர் வாழ்ந்து விடுவாள் என்று நம்புகிறாள்.அது அவள் விருப்பம்.

இந்தா இந்த ரூவாய அத்தைட்ட குடு.நா மறுபடி சனிக்கிழமை வரேன்னு சொல்லு.என்றான் சின்னப்பாண்டி.அவன் தந்த பணத்தை எண்ணக் கூட செய்யாமல் வாங்கி வைத்துக் கொண்டாள் பொன்னி.பத்திரம் புள்ள என்று கிளம்பினவனிடம் மாமா என்றாள் என்ன என நின்றவனுக்கு மாத்திரம் கேட்கும் குரலில் சனிக்கிழமை பசங்களைக் கூட்டியா மாமா..அக்கா ரொம்ப ஏங்குது என்றாள்.எதுவும் சொல்லாமல் ஒரு கணம் பார்த்தவன் சரி..வர்ரேன் என்று கிளம்பி நீண்ட காரிடாரில் நடந்து திரும்பிக் காணாமற் போனான்.

அம்மா வருவதற்கு நேரமானது.வந்ததும் வாம்மா சாப்பிடலாம் என்று இட்டிலி பொட்டலத்தை பிரித்து வசந்தாவைக் கஷ்டப்பட்டு நிமிர்த்தி படுக்கையிலேயே சாய்ந்து அமர்த்தி ஒரு இட்டிலியை சட்னியின் வாசனை மாத்திரம் தொட்டு ஊட்டினாள்.அம்மாவும் அவளுமாய் ஐந்து இட்டிலிகளை சாப்பிட்டார்கள்.அந்தப் பெரிய வார்டில் ஒவ்வொரு கட்டிலைச் சுற்றிலும் இல்லாத தனிமையை இருப்பதாக எண்ணிக் கொண்டு அவரவர் உலகங்கள் இயங்கிக் கொண்டிருந்தன.எல்லாக் கட்டில்களுமே நோயாளிகளைக் கொண்டிருந்தன.பதினோறு மணி வரைக்கும் செல்போனில் பாட்டுக் கேட்டபடி வாசலைப் பார்த்து அமர்ந்திருந்தாள் பொன்னி. பதினோறு மணிக்கு அம்மா அவளிடம் இரு வெளில போயிட்டு வந்துர்றேன் என்று கிளம்பினாள்.’யம்மா..எனக்கு குளிக்கிற சோப்பும் சின்ன எண்ணைப் பாக்கெட்டும் பல்பொடியும் வாங்கியா..மறந்துறாத ‘என்றாள்.அம்மா காதில் வாங்கினாளா தெரியவில்லை.

நிழலாட்டம் கண்டு நிமிர்ந்தவள் அடுத்த கட்டிலை நோக்கி கொண்டு வரப்பட்ட ஸ்ட்ரெச்சரிலிருந்து இறக்குமதியாகும் மனித உடம்பை ஆர்வத்துடன் பார்த்தாள்.வயதான ஆண்.எப்படியும் எழுபது வயது இருக்கும்.கூடவே அவரது மனைவி போலும் ததும்புகிற விழிகளும் துடிக்கும் உதடுகளுமாகத் தெரிந்தாள்.

கூட ஒருவன் இருந்தான்.அவனை முதலில் ஆட்டோக்காரனாக இருப்பான் என்று தான் நினைத்தாள் பொன்னி.வெகு நேரமாகியும் அவன் அங்கேயே நிற்பதைப் பார்த்ததும் தான் இல்லை போல…இவன் ஏதோ சொந்தக்காரனா இருக்குமோ என்ற ஐயம் வந்தது.

அந்த அம்மாளுக்கு அவன் தணிந்த குரலில் ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தான்.
“நீ கவலைப் படாத சித்தி.எல்லாம் சரியாகும்.சித்தப்பா சரியாய்டுவாரு..நீ பதறாம இரு”

பன்னிரெண்டு மணிக்கு பெரிய டாக்டர் பின்னாலேயே பயிற்சி டாக்டர்கள் உடன் உலா வந்தார்.ஒரு சில பேஷண்டுகளின் அருகே பதினைந்து நிமிடங்கள் வரை கூட ஆனது.அந்த வார்டின் கடைசி கட்டில் வசந்தாவுடையது.முந்தைய கட்டிலில் புதிதாக வந்திருக்கும் பேஷண்டைப் பார்க்காமல் வசந்தாவைப் பார்க்க வந்த பெரிய டாக்டர் பரீட்சை அட்டையில் இணைத்திருந்த கேஸ் ஷீட்டை உற்றுப் பார்த்து புரட்டி விட்டு கூட வந்த பாலக பாலகி டாக்டர்களிடம் இரண்டொரு கேள்விகளைக் கேட்டார்.மறுபடி டர்ன் அடித்து புதிய நோயாளியைக் கவனிக்கப் போனார்.டாக்டர் போன பிற்பாடு அந்த வார்ட் அமைதிக்குத் திரும்பியது.தினமும் இது ஒரு சம்பிரதாயம்.பொன்னிக்கு நன்றாகப் பழகி விட்டிருந்தது.அந்த அம்மாள் பொன்னியைப் பார்த்து அவஸ்தையுடன் லேசாய் புன்னகைத்தாள்.இவளும் சிரித்தாள்.

பொன்னியின் அம்மா வந்து நுழையும் போதே..”அய்யய்யோ இவளே நீ கேட்டதெல்லாம் வாங்காம வந்துட்டேன்.நீயே வாங்கிக்கப்பா “என்றாள்.அவளைத் திட்ட முடியாமல் கிளம்பி நடந்த பொன்னி பின்னாலேயே யாரோ வருவது கண்டு திரும்பிப் பார்த்தாள்.அந்த காக்கிச் சட்டைக்காரன் தொடர்ந்து வந்து கொண்டிருந்தான்.

“என்ன வழி தெரிலயா..?” என்று இயல்பாகக் கேட்டாள் பொன்னி.’ஆமாங்க’ என்று அவஸ்தையாக சிரித்த அவனது கன்னத்தில் குழி விழுந்தது.”என்ன வாங்கணும்னு சொல்லுங்க நா குளிக்கப் போறேன்.வாங்கியாரேன்” என்றாள் பொன்னி.வெகு இயல்பாக அடுத்தடுத்த கட்டில்களில் சேர்க்கப் பட்ட நோயாளிகளின் அட்டெண்டர்கள் எனும் புதிய சொந்தத்தை அவர்கள் இருவரும் பேசிக்கொண்டார்கள்.

“இல்லைங்க..எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு.” என்றான்”.என் பேரு கதிர்..” என மறுபடி சிரித்தான்.”நான் பொன்னி.எங்கக்காவுக்கு தான் நோவு”.என்றவளிடம் “எனக்கு இவங்க தூரத்து சொந்தங்க..நான் ஆட்டோ ஓட்டுறேன்.இவங்களுக்கு யாரும் இல்ல.வேற ஆஸ்பத்திரில பார்த்தம்.இனி இங்கன பாக்க முடியாது பெரியாஸ்பத்திரிக்கு போங்கன்னுட்டாங்க..அதான் வந்தம்..” என்றான்.

பொன்னிக்கு சப்பென்றிருந்தது.’அடடா…நீ என்னைப் போல நெருக்கமான சொந்தத்துக்காக இங்கே வந்தவனில்லையா..?இப்போது போய்விடுவாயா..?சரி போ..’ என்று லேசாய் முகம் மாறினாள்.பத்து நிமிடத்துக்கு முன்னால் முதன் முறை பார்த்த அந்த முகத்தை அந்த மனிதனை ஏன் தனக்கு இத்தனை பிடிக்கிறது என்று சரிவரப் புரியவில்லை பொன்னிக்கு.இருந்தாலும் காதெலாம் லேசாய் சூடாகிக் கன்னமெல்லாம் சிவந்து என்னதிது என்று தனக்குள் அதட்டிக் கொண்டாள்.கதிரும் அவளும் நடந்து செல்லும் அந்தப் பாதையே சட்டென்று நிறம் மாறிக் குளுமையாய்த் தோன்றியது அவளுக்கு.

“ஆனா ஒண்ணு..பெரியவர் அந்தக் காலத்துல எங்க குடும்பத்துக்கு நெறைய செய்திருக்காரு.விட்டுட்டு போக முடியாது.நாந்தான் பாக்கணும்.எதா இருந்தாலும்.என்ன சொல்றீங்க..?”என்றான் இயல்பான குரலில்,சட்டென்று திறந்து விடப்பட்ட அணைவெள்ளம் போல் நெஞ்சு குபுக்கென்றது பொன்னிக்கு.

“இப்பிடி வந்து இந்த இடத்துல லெஃப்ட் திரும்புறீங்க..திரும்ப வரும் போது ரைட்டு திரும்பணும்.இதுலே இருந்து வெளில வந்தா எல்லாமே மறுபடி லெஃப்டுத் தான்.மூணாவது திருப்பத்துல வெளில வந்துருவீங்க..” என்று சொன்னாள்.அவனுக்குப் புரிந்ததோ இல்லையோ பெரிதாய்த் தலையாட்டினான்.

பெண் எப்போதும் பூடகமானவள்.எந்தச் சந்தர்ப்பத்தின் மீதும் தனக்குப் பிடித்தமான வண்ணங்களையும் வாசனைகளையும் அவளே தான் தீர்மானிக்கிறாள்.பொன்னிக்கு கதிரை ஏன் பிடித்தது என்பதற்கு எந்தத் தனித்த காரணமும் இல்லை.கதிரையே அவள் காரணமாக்கினாள்.உன்னை எனக்கு பிடிச்சிருக்கு என்றோ என்னை உனக்கு பிடிக்குதா என்றோ அவர்கள் இருவருமே கேட்டுக் கொள்ளவே இல்லை.அது பெரியாஸ்பத்திரி.ஊரின் பெத்த பெரிய மருத்துவமனைகளில் பணம் செலவழித்து மருத்துவம் செய்துகொள்வதற்கு திக்கற்ற பலரும் ஒருங்கே வந்து குவியும் இடம்.ஏழைகளின் பெரிய கூடாரம்.அங்கே நடக்கிற எல்லாமே பலரது முன்னிலையில் தான் நடக்க முடியும்.என்றாலும் பெருங்கூட்டமே தனிமையாகவும் மாறிப் போவது எங்கனம் என்றால் நாளாக நாளாக தினமும் அங்கேயே இருந்துவிட நேர்கையில் தான்.

பொன்னி வந்து இருபது நாட்களாயிற்று.அவளது அக்கா வசந்தா வந்து பத்தாவது நாள் கதிர் வந்து சேர்ந்தான்.இந்தப் பத்து நாட்களில் தினமும் மூன்று வேளைகள் உணவும் சில தடவைகள் இயற்கைக்கு ஒதுங்குவதும் காலை வேளைகளில் குளிப்பதுவும் என ஒருவரை ஒருவர் சார்ந்தும் ஒருவருக்காக ஒருவர் அலைந்தும்  எப்போதும் அருகாமையில் இருந்துவிட நேர்ந்தது.அவர்களிடையே ப்ரஸ்பரம் ஒரு அன்பு பூத்திருந்தது.பெரியாஸ்பத்திரியிலிருந்து வெளியே ரோட்டுக்கு வந்து கடைக்குப் போய் உடனே திரும்புவதென்றாலே சரியாகப் பன்னிரெண்டு நிமிடங்கள் ஆகும்.அது ஒரு கல்லாலான கடல்.அங்கே மனிதம் தேவைக்கதிகமாகத் தேவையாயிருந்தது. இவனுக்காக அவளும் அவளுக்காக இவனும் இருந்தார்கள்.பலரும் அங்கே அப்படியான பரஸ்பரத்தில் இருப்பதையும் பார்க்க முடிந்தது.

“உனக்கெப்ப கலியாணம்..” என்றான் கதிர்.”ம்ப்ச்..எங்கக்கா இப்பிடி இருக்குதுல்ல.கொஞ்சம் தேறிட்டுதுன்னா எனக்கு கல்யாணம் செய்து வச்சிடணும்னு எங்கம்மா ஒத்தக் கால்ல நிக்கிது.எங்க..அக்காவுக்கு சரியாகி ஆறு மாசம் தொடர்ந்து ஆஸ்பத்திரிக்கு வராம இருந்தா நா செட்டில் ஆய்டுவேன்.விட மாட்டேங்குது விதி..” என்றாள்.

கொஞ்ச நேரம் கழித்து ‘உனக்கு’ என்றாள் கதிரிடம் லேசாய் பொன்னியைப் பார்த்து சிரித்த கதிர் “எப்ப வேணா பண்ணிக்கலாம்..” என்றான்.இதை அடுத்து அவள் எதையும் கேட்கவில்லை.தனக்குச் சொன்னாற் போல எடுத்துக் கொள்ளாமல் இயல்பாக அதனைக் கடந்து போனாள்.அவன் அப்படிச் சொன்னது அவளுக்கு ரொம்பப் பிடித்திருந்தது.

கதிரின் சித்தப்பாவைக் காப்பாற்ற முடியாது என்று டாக்டர்கள் கை விரித்து விட்டார்கள் என்றான பின் தான் இங்கே வந்ததே.வசந்தாவின் கதையோ நித்யப்பாடு..திடீர்னு உங்க சித்தப்பாருக்கு எதாச்சும் ஆயிப் போயிடுச்சின்னா நாம எப்டி பார்த்துக்கிறது..?என்று ஒரு நாள் கேட்டாள்.

“ஏ லூஸூ…நா வருவேன்ல இங்கே..நம்பர் தான் இருக்குல்ல?” என்றான் கதிர்.அவ்வளவு தான்.இரண்டு பேருக்கும் இன்னார் எந்த ஊர் எங்கே வீடு என்ற தகவல்கள் எல்லாம் தேவைப்பட்டாலும் கூடக் கேட்டுக் கொள்ளவில்லை.அது தான் செல் நம்பர் இருக்கிறதே..?

நாளைக்கு தாங்காது என்று சொல்லப் பட்ட அன்றைக்கு சித்தி எனப்படுகிற அம்மாளை ஒருவழியாகத் தேற்றி விட்டான் கதிர்.அவளும் இனி என்ன செய்வது என்று தனக்குள்ளாகவே இறுகி கதிரிடம் தன் நெருக்கமான சொந்தக்கார்களுக்கெல்லாம் தகவல் சொல்லி இறுதிச் சடங்குகள் குறித்தெல்லாம் பேசி வைத்துக் கொண்டாள்.அத்தனையையும் பார்த்துக் கொண்டிருந்த பொன்னிக்கு ஒரு மாதிரி இருந்தது.மரணத்தை விடக் கொடியது ஒன்றே ஒன்று தான்.அது சொல்லி வைத்துக் கொண்டு வருவது.

“நாளைக்கு கெளம்பிடுவேல்ல?” என்றாள் கதிரிடம்.”எங்கனா போய்ட்டு வர்லாமா..?” என்றான் கதிர்.அப்போது மணி பத்து அடிக்க ஐந்து நிமிடம் இருக்கும்.அத்தனை நாட்களாக அவன் அப்படிக் கேட்டதேயில்லை.பொன்னிக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை.சரி என்று தலையாட்டியவள் அம்மா தூங்கி விட்டாளா என்று பார்த்தாள்.கட்டிலின் கால்மாட்டிலேயே தன் முந்தானையைக் கொண்டு தலையை மூடித் தூங்கி இருந்தாள்.அடுத்தாற் போல் கதிரின் சித்தியும் அப்படியே உறங்க முயற்சித்துக் கொண்டிருந்தாள்.

இரண்டு பேரும் மெல்ல நடந்து பெரியாஸ்பத்திரியின் வாகனங்கள் நிறுத்துமிடத்துக்கு வந்தார்கள்.கதிர் தனது ஆட்டோவை இழுத்து முன்னால் கொணர்ந்து உட்கார் என்றான்.சாவி முடுக்குகையில் பழுதான பொம்மை போல மெதுவாக அதிலேறி அமர்ந்தாள் பொன்னி.

ஆட்டோவை எங்கே செலுத்துவதென்று அவனுக்குத் தெரியவில்லை.ரியர்வ்யூ கண்ணாடியில் பொன்னியின் முகம் கீற்றைப் போல் அலைந்தது.லேசான குலுக்கல்களுடன் வந்து கோரிப்பாளையம் பாலத்தின் இடதுபுறம் கீழ்ப்பாலம் நோக்கிச் சென்றான்.கல்பாலத்தின் அடியே சென்றவன் இடதுபுற ஓரம் ஆட்டோவை நிறுத்தி யாரும் பார்க்காத ஒரு கணம் சட்டென்று பின் சீட்டில் ஏறி பொன்னியை அப்படியே இறுக அணைத்து அவள் மார்பில் முகம் புதைத்துக் கொண்டான்.பொன்னிக்கு அவன் தலையிலிருந்து எழும் மணம் வயற்காட்டின் புழுதி பறக்கிற மதிய நேரத்தை நினைவுறுத்தியது.

பொன்னிக்கு எதிர்க்கத் தோன்றவில்லை.அப்படியே இருந்தாள்.ஏன் பிடிக்கலியா என்னை என்று முகத்தை நிமிர்த்திக் கேட்டவன் கண்களையே ஒருகணம் உற்றுப் பார்த்தாள்.சட்டென்று தன் கையால் அவன் கழுத்தை இறுக்கி அணைத்துக் கொண்டாள்,தூரத்தில் வெளிச்சப் பொட்டு தோன்ற ஏதோ லாரி குலுங்கியபடி வருவது தெரிந்து டக்கென்று விலகிய கதிர் மறுபடி ஸ்டார்ட் செய்து வண்டியை செலுத்தலானான்.

“எங்க போற..?” என்றாள் பொன்னி.

“இல்ல ஏதாச்சும் நல்ல இடத்துக்கு..” என்றான்.அதற்குப் பிறகு பொன்னி அவனிடம் பேசவேயில்லை.இடையில் நாகமலைக்கு முன்னால் டீசல் போட்டுக் கொண்டான்.பார்வையில் படுகிற யார்க்கும் அந்த நேரத்தில் சவாரி செல்கிற ஆட்டோக்களில் ஒன்றெனவே தோன்றும்.இப்போது ஆட்டோ நாகமலைக்கு முன் புதுக்குளம் பிட்டில் திரும்பி விளாச்சேரி செல்லும் வழியில் செல்லத் தொடங்கியது.அந்த இருட்டில் எதிரே ஒரு வாகனமும் வராத அனாதித் தனம் ஒரு மாதிரி இருந்தது.பொன்னிக்கு உடம்பெல்லாம் நடுங்கிக் கொண்டிருந்தது.ஒருவேளை எல்லாமும் ஒரே வேகத்தில் நடந்து முடிந்திருந்தால் கூட இத்தனை வெம்மையை இத்தனை தகிப்பை அவள் உணர்ந்திருக்க வேண்டியிருந்திருக்காது.பாதியில் நிறுத்துவதா காமம்..?

காது மடல்கள் தொடங்கிப் பாதம் வரைக்கும் அவளால் வெம்மையை உணர முடிந்தது.இடதுபுறம் பம்பு செட்டுடனான வயலோரத்தில் இருந்த கொன்றை மரமும் அதனடியே யாரோ அன்றைக்கு மாலை அமர்ந்து தின்று போன பாக்கு இலைத் தட்டுக்களும் வா இறங்கு என்றான் கதிர்.மந்திரம் போட்டாற் போல் இறங்கினாள் பொன்னி.

தன் செருப்பணிந்த கால்களால் சரக்கு சரக்கென்று தரையைச் சுத்தம் செய்தான் கதிர்.

“யாருமே வரமாட்டாங்க..வா” என்றான்.சட்டென்று திரும்பி ஆட்டோவின் கம்பியை இறுகப் பற்றிக் கொண்ட பொன்னி “இல்ல கதிரு…இந்த இடம் வேணாம் கதிரு..வேணாம்..ப்ளீஸ் கதிரு.” என்று ஆட்டோவில் ஏறி அமர்ந்துகொண்டாள் பொன்னி.அரை வினாடி யோசித்தவன் “சரிடா…இன்னொரு நா பார்த்துக்கலாம்.எங்க போய்டப்போறம்.” என்றான்.

திரும்பச் செல்லும் போது விக்கலெடுத்தது பொன்னிக்கு.திருநகர் தாண்டியதும் ஒரு இரவு நேர டீக்கடையில் வண்டியை நிறுத்தி அவளுக்கு பன்னும் சூடான டீயும் வாங்கித் தந்தான் கதிர்.அவன் சிகரட் பிடித்தான்.தூரத்தில் கதிரின் கரங்கள் நடுங்குவதைப் பார்த்தபடி டீயை உறிஞ்சினாள் பொன்னி.அவள்  நீட்டிய கண்ணாடி க்ளாசை வாங்கிக் கொள்கையில் எதாச்சும் வேணுமா என்றான்.அவள் தலையை மாத்திரம் அசைத்தாள்.

மறு நாள் அதிகாலை சித்தப்பா செத்துப் போனார்.கதிர் தான் காரியக்காரன். ஆஸ்பத்திரி வாசல் வரைக்கும் பொன்னியும் சென்று வேன் முன்பக்கம் அமர்ந்திருந்த கதிரை வழியனுப்புகிறாற் போல் கையை லேசாக ஆட்டினாள்.

அவன் ‘ரெண்டு நா களிச்சு ஃபோன் செய்றேன்’ என்று சைகை காட்டினான்.

சரியாக அந்தக் காட்சி நிறைவுற்றதிலிருந்து இருபத்தி ரெண்டாவது நாள் பொன்னியின் நம்பருக்கு வழக்கம் போல் முயற்சித்துப் பார்த்தான் கதிர்.ரிங் சென்றது.

எடுத்ததுமே “என்னா பொன்னி ஃபோனை ஏன் அணைச்சே வச்சிருந்த..நா மூணாவது நாள் பெரியாஸ்பத்திரிக்கு வந்தேன்.உங்கக்கா பேரை சொல்லி அட்ரஸ் எடுத்தேன்.அது ஏதோ சிம்மக்கல் அட்ரஸூ.அங்க யாருமே இல்லை…உன்னைய எப்பிடி நாந்தேட..?”

இரு இரு என்றவள் குரல் வெகுவாகக் கம்மியிருந்தது.

ரகசியத்தைக் காதோடு கிசுகிசுக்கும் குரலில் பேசினாள் பொன்னி.

“கதிரு…நீ என்னையத் தேடுவேன்னு தெரியும்.அதான் இத்தினி நாள் விட்டுட்டு இன்னைக்கு பண்றேன்.இன்னைக்குத் தான் தோதாச்சி.நீ கெளம்புன அடுத்த நாளே எங்கக்கா செத்துரிச்சி.ஊரு திரும்ப வேண்டியதால உனக்கு பேசமுடியலை.” என்றாள்.

பொன்னி எதையும் யோசிக்காத.நீ எங்க இருக்கன்னு மாத்திரம் சொல்லு..நான் வந்து என்று தொடங்கியவனை மறித்து “இல்ல கதிரு…வர்ற பத்தாம் தேதி எனக்கும் எம்மாமனுக்கும் கல்யாணம்.எங்கக்கா பசங்க ரெண்டும் அனாமத்தா ஆயிடக் கூடாதுன்னு வீட்ல கெஞ்சுனாக.முன்னமே இருந்த பேச்சுத் தான்.எனக்கு எதுத்துப் பேசுறதுக்கு இடம் இல்லாம போச்சு”என்றாள்.

கதிர் அமைதியாக இருந்தான்.”கதிரு..இருக்கியா..?” என்றாள் பொன்னி.”ம்ம்” என்றவனிடம் “ஸாரி கதிரு..” என்றவள் “இந்த நம்பர் இனிமே இருக்காது.என்னைய மன்னிச்சிரு.வச்சிர்றேன்.”என்று துண்டிக்கப் போனவளிடம் “பொன்னி பொன்னி வச்சிராத,…என்றவன் பொன்னி என் நம்பரை நா மாத்தவே மாட்டேன்.எத்தினி வருசங்கழிச்சின்னாலும் கூப்பிடலாம்.என்ன..?
கூப்பிடுவேல்ல..” என்றான்.

எதுவும் பேசாமல் கட் ஆனது எதிர்முனை.