ஆர்.எஸ். சிவாஜி

இன்று ஆர்.எஸ். சிவாஜி அவர்களின் பிறந்த நாள். முகப்புத்தகத்தில் அபூர்வ சகோதரர்களில் ஆர்.எஸ்.சிவாஜியும் ஜனகராஜூம் பங்குபெறக் கூடிய வரலாற்றுச் சிரிப்பு மிக்க காட்சியை எடுத்து எழுதி சிவாஜி அவர்களது பரிணாமத் திறனைக் குறித்த பதிவொன்றை எழுதியிருந்தேன் சென்ற வருடத்தின் ஆரம்பத்தில். அதைப் படித்து விட்டு அகம் மகிழப் பேசினார் சிவாஜி. அப்படித் தான் தொடங்கியது பரிச்சயம். மதுரைக்கு வரும் போது சந்திப்போம் என்றார். சொன்னாற் போலவே ஒரு தினம் வந்து சேர்ந்தார். அன்றைய தினம் அழகர் கோவிலுக்குச் சென்று வந்தோம்.

ஆழ்ந்த புரிதலும் தேர்ந்த வாசிப்பும் கொண்டவர் சிவாஜி. உலக இலக்கியம் பன்னாட்டு சினிமா இவற்றில் தேடல் மிகுந்தவர். எதிர்பாராத நேரத்தில் விக்கெட்டை சாய்த்து விடக் கூடிய கபடநிறை பந்து வீச்சாளனைப் போல் சிவாஜி அடிக்கும் நகைச்சுவைச் சரவெடிகளும் புதிரானவை. மனம் விட்டுப் பேசுவதும் நிறைந்து சிரிப்பதும் மனிதன் கைக்கொள்ள வேண்டிய மகத்துவங்கள். திரையுலக முன்னோடிகள் மீது அவர் கொண்டிருக்கும் பக்தி அசலானது. காலம் அள்ளித் தரும் செல்வந்தங்களில் தலையாயது சினேகிதம்.

நல்ல நண்பர் அருமையான சகோதரர் நடிகரும் இயக்குனருமான ஆர்.எஸ்.சிவாஜி அவர்களது பிறந்த நாள் இன்று. பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்துகிறேன்.

வாழ்தல் இனிது