தேன்மழைச்சாரல் 12

தேன்மழைச்சாரல்

12 ஓவியம் சிரிக்குது


A. L. Raghavan - Profile, Biography and Life History | Veethiமல்லியம் ராஜகோபால் தனது தமிழ்நாடு டாக்கீஸ் பேனரில் எடுத்த படம் மல்லியம் மங்களம். இதற்கு இசையமைத்தவர் டி.ஏ.கல்யாணம். இசை உறுதுணை கவிஞர் ஆத்மநாதன். வீ சீத்தாராமன் குயிலன் ஆகியோருடன் ஆத்மநாதன் எழுதிய பாடல்களும் இந்தப் படத்தின் இசைப்பேழையை அலங்கரித்தன. எஸ்.சவுந்தரராஜன் இயக்கத்தில் 1961 ஆமாண்டு வெளிவந்த மல்லியம் மங்களம் எஸ்.வி.சகஸ்ரநாமம் எஸ்.வி.சுப்பையா கே.சாரங்கபாணி பண்டரிபாய் மைலாவதி எஸ்.என்.லட்சுமி ஆகியோர் நடிப்பில் மின்னியது. இந்தப் படத்தில் ஒரு காதல் பாடல். வேகமும் உற்சாகமும் பொங்கும் இதன் முதலிசைக்கு முன்னே இடம்பெறும் தொகையறாவை ஏ.எல்.ராகவன் எடுத்தாண்டிருக்கும் விதம் மனதை நீவி நெகிழ்த்திவிடுகிறது.

அல்லி விழி அசைய அழகு மலர் கை அசைய
முல்லை வரிசை தெரிய மோகன இதழ் திறந்தே
ஆ…ஆ…ஆ.
ஓவியம் சிரிக்குது

இந்த வரிகளுக்குப் பிறகு வேகமாய்த் துவக்க இசை இழுத்துச் சென்று பாடலுக்குள் அமர்த்துகிறது.

பல்லவியானது இப்படித் தொடங்குகிறது

ஓவியம் சிரிக்குது உள்ளம் தன்னை மயக்குது
ஓவியம் சிரிக்குது உள்ளம் தன்னை மயக்குது

மல்லியம் மங்களம் படத்தின் ஓவியம் சிரிக்குது பாடலின் சரணத்தில் வந்து சேர்ந்து கொள்வார் ஏ.பி.கோமளா. அவரது குரலால் இன்னும் சவுந்தர்யம் அதிகரித்து ஒலிக்கும் இந்தப் பாடல்.

காவியக் கண்கள் ரெண்டும் காதலிசை பாடுது
கானமயில் போலே வந்து தானாக ஆடுது
ஓவியம் சிரிக்குது உள்ளம் தன்னை மயக்குது
அருகினில் ஓடி வந்தே அமுத மொழி பேசுது அமுத மொழி பேசுது
ஆசையோடு இன்பம் தன்னை அள்ளி அள்ளி வீசுது
பருவமேனி வண்ணம் காட்டி உரிமையோடு அழைக்குது…

(ஓவியம் சிரிக்குது)

எம்.கே.ஆத்மநாதன் இசையறிவும் பாடல் புனையும் திறனும் ஒருங்கே அமையப் பெற்றவர். அழகு தமிழில் அழியாப் புகழ் பெற்ற பல பாடல்களை எழுதியவர். கேவிமகாதேவன் ஏவி நடராஜன் டி.ஆர்பாப்பா டி.ஏ.கல்யாணம் ஆகியோருடன் இணைந்து 3 படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். புதையல் படத்தில் இடம்பெற்ற விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே பாடல் ஆத்மநாதனின் ஆத்மகீதமாய் நிரந்தரிக்கிறது.திலகம் எனும் படத்தில் இவர் இயற்றிய சந்தேகம் என்னுமொரு சரக்கு என்று தொடங்குகிற பாடல் இன்றளவும் ஆங்காங்கே ஒலித்தபடி காற்றை வருடிக் கவிஞரின் நினைவைப் புதுப்பித்து விடுகிறது.

ஏ.எல்.ராகவனின் குரல் அலாதியான மென்மை பெருக்கெடுக்கும் இளமையான குரலாகும். அவர் பாடிய பாடல்கள் தனித்தே தெரிபவை. எண்ணிக்கையில் அதிகதிகம் பாடியிராவிட்டாலும் ராகவனின் சூப்பர் ஹிட் பாடல்கள் காலம் தாண்டியும் ஒலித்தோங்குபவை. டி.எம்.சௌந்தரராஜனுக்கும் ஏ.எல்.ராகவனுக்கும் அடிப்படையில் ஒரு ஒற்றுமை உண்டு. இருவருக்கும் தாய்மொழி சவுராஷ்ட்ரா. தமிழைத் தத்தம் குரல்களால் ஆராதித்து அலங்கரித்தவர் ராகவன்.. நடிகை எம்.என்.ராஜம் இவரது இல்லற இணையர். கண்ணில் தெரியும் கதைகள் உட்பட சில படங்களின் தயாரிப்பாளராகவும் திகழ்ந்த ராகவன் முறைப்படி சங்கீதம் பயின்றவர். சிறுவயதில் நடிகராக அறிமுகமானவர்.தனது 87 ஆம் அகவையில் இந்த வருடம் 19.06.2020 அன்று காலமானார். ராகவனின் பாடல் பாணி இருவிதமாய்ச் சிறப்பது. அதிலொன்று மெலடி எனப்படுகிற மெல்லிசை. ராகவனின் குரல் அந்த வகைமைக்குள் தனித்தொலிக்கிற பல பாடல்களைப் படைத்தது.

எங்கிருந்தாலும் வாழ்க என்று தொடங்கும் நெஞ்சில் ஓர் ஆலயம் படப் பாடலை எப்படி மறப்பது?அன்று ஊமைப் பெண்ணல்லோ இன்று பேசும் பெண்ணல்லோ என்கிற பார்த்தால் பசி தீரும் படப் பாடல் போதாதா ராகவனின் குரலைப் போற்றிச் சொல்ல..? வேகமும் உற்சாகமுமான இன்னொரு வகையிலும் தனக்கே உரிய தனித்துவத்தால் பல பாடல்களைப் பாடினார் ராகவன். என்ன வேகம் சொல்லு பாமா என்று தொடங்குமே குழந்தையும் தெய்வமும் படப் பாட்டு அது ராகவன் பாடியது தான். கானவானில் என்றும் நிலைத்திருக்கும் நற்பெயர் ராகவன்.

தென்னக மொழிகளில் எல்லாம் தன் பாடல்களுக்காகப் போற்றப்படுகிற பாடகி ஏ.பி.கோமளா. 1935 ஆமாண்டு பிறந்தவரான கோமளா முறையான சங்கீத ஞானம் கொண்டவர். சற்றே சன்னமும் ஆழமுமாய் விரிகிற இவரது குரல் அன்பும் தனிமையுமாய்க் கரைவது. சோகம் சிருங்காரம் ஆனந்தம் எனப் பலவிதப் பாடல்களைத் தனக்கே உரிய தனித்துவக் குரலால் அழகளித்துப் பாடியவர் கோமளா. எந்த மொழியில் பாடினாலும் கோமளா ஒவ்வொரு சொல்லையும் உன்னிப்பாய் அதற்கேயுரிய ஒலியழகு கெடாமல் பாடியவகையில் தனித்துத் தோன்றுபவர். சொற்களை அவர் எடுத்தாள்வதே அத்தனை அழகாக இருக்கும். ராஜராஜன் படத்தில் சீர்காழியோடு சேர்ந்து அவர் பாடிய நிலவோடு வான்முகில் விளையாடுதே என்ற பாடல் என்றும் நின்றொலிப்பது. அவர் பாடிய பல பாடல்கள் 60கள் வரை பெரும்ப்ரிய கானங்களாய்க் காற்றை ஆண்டன.

இன்பம் கொஞ்சும் வெண்ணிலா வந்து வம்பும் செய்யுதே
இந்தச் சிங்காரத் தென்றல் என்னைக் கேலி பண்ணுதே

1960 ஆமாண்டு வெளியான விஜயபுரி வீரன் படத்திற்காக டி.ஆர்.பாப்பா இசையில் கோமளா பாடிய இந்தப் பாடல் அவரது குரல் எவ்வண்ணம் ஆனந்தமும் ஆழமுமாய்த் தனிக்கிறது என்பதற்கான சாட்சியம் சொல்லி ஒலிக்கிறது.

கே.ராமசாமி நாயகனாக நடித்து டி.ஆர்.பாப்பா இசையளித்த படம் ஆத்மசாந்தி. இதில் இடம்பெறுகிற “வீணாசை ஏன் மனமே” என்ற பாடலை எழுதியவர் டி.என்.ராஜப்பா. 1952 ஆமாண்டு வெளிவந்த படம் இது. அந்தக் காலத்தின் திரைத் தமிழால் தன் பாடல்களை செதுக்கித் தந்தார் ராஜப்பா. இந்தப் பாடலின் எளிமையும் கருத்துறுதியும் மெச்சத் தக்கவை. இதனை கோமளா பாடியிருப்பது தனித்தமிழின்பம். இந்தப் பாட்டைக் கேட்பவர் கரைந்து பாடலுக்குள் வெகுதூரம் அலைந்து திரும்பியாக வேண்டும். இசை தரும் இன்பவலி அத்தகையது.

வீணாசை ஏன் மனமே வேதனையே ஜீவிதமே
வையத்தில் காதல் வானவில்லே
வாஞ்சையெல்லாம் வெறும் கானல் நீரே

தமிழில் ,விஜயகுமாரி,கலாவதி, நிரபராதி,என் தங்கை அந்தமான் கைதி காதல் ஜெனோவா அன்பு அழகி மருமகள் ரத்தக்கண்ணீர் ரத்தபாசம் உள்ளிட்ட பல படங்களில் கோமளாவின் குரலில் பாடல்கள் சிறந்தன. போலி செய்ய முடியாத தனிப்பெருங்குரல் கோமளாவினுடையது. அவரது கானங்கள் அழிவற்றவை.