சமீபத்துப்ரியக்காரி 5
ந்யூமரிக்


“என்னிடம் பேசேன்.

உன்னைப் பற்றிச்சொல்லேன்.

ஏதாவது கேளேன்.

சின்னச்சின்ன மௌனங்களை மட்டுமாவது பெயர்ப்பதற்கு
அர்த்தமற்ற உரையாடல் உதவட்டுமே..

என்னை வம்புக்கிழேன்.

என்னிடம் குறும்பாய்ப் பேசேன்.

என் சந்தேகத்தை துவக்கேன்.

வேறு யார் பற்றியேனும் பொய்யாய் புகழ்ந்து எதையாவது சொல்லேன்.

என்னை கேலிசெய்கிற தொனி கொஞ்சமும் இல்லாமல்
நிசம் போலவே என்னைக் குறை சொல்லேன்.

அதிரும் என் அதீத பதிலொன்றைப் பாதியில் வெட்டி
என்ன பாடலெனக்கு அத்யந்தம் என்று வினவேன்.

சொன்னதும் உனக்கும் அதே பாடல் ஏன் பிடித்தது என்று
குறிப்பொன்றை விவரியேன்.

சாப்பிட்டேனா என்று அக்கறை தொனியில் மொழியேன்.

இன்னும் சாப்பிடவில்லை என்று நான் சொன்னதும்
இதென்ன பழக்கம் என்று அதட்டேன்.

எனக்குப் பிடித்தவைகளின் பட்டியலை நீயாய் யூகித்து
உனக்குப் பிடித்தவைகளாக வரிசைப்படுத்தேன்.

என் ஊருக்கு ஏற்கனவே வந்திருக்கிறதாகவும் உன் ஊரை விட
என் ஊரைப் பிடிக்கும் என்று பொய் பகிரேன்.

என்ன பேசுவதென்று தெரியாமல் என்னென்னவோ
பேசிக்கொண்டே இருந்துவிட்டு
“இவ்வளவு நேரமா பேசிக்கொண்டிருக்கிறோம்?”என்று
ஆச்சரியம் காட்டேன்.

இது போல இதுவரைக்கும் யாரிடமும் உணர்ந்ததில்லை
என்று நிசம் கூறேன்.

பெருஞ்சந்திப்பு இரயில் போல பன்மையிலிருந்து
ஒருமை விளித்தலுக்கு இயல்பாக
அனுமதி ஏதும் கேளாமல் மாறிக்கொள்ளேன்.

அதை நான் ரசிக்கிறேன் என்று
மனதில் குறித்துக்கொண்டு சிலவாக்கிய
தூரங்கழித்து நான் மட்டும் பன்மையில் விளிக்கிறதை
குறிப்பிட்டு தவிர்க்கச் செய்யேன்.

இடையில் இருக்கிற கிலோமீட்டர்கள் தந்த தைரியத்தில்
உன் ஊரில் பொய்மழையைப் பொழியச்செய்யேன்.

காகிதக் கப்பல் விடுகிற குழந்தைகளனைத்தையும்
எனக்கும் பிடிக்கும் என்று நான் சொல்கையில் என்னை வாழ்த்தேன்.

வைத்துவிடட்டுமா என்று அடிக்கடி கேட்டபடி
துண்டிக்காமல் பேசிக்கொண்டே இரேன்.

இத்தனைக்கும் அப்புறமாய் ஏன் பேசுகிறோம்
எனத் தெரியவே இல்லை எனப்
பிரம்மாண்டமான பொய் புனையேன்.

என் எண்ணை வாங்கி
எத்தனை நொடிகள் ஆகின்றன.

எத்தனை நேரம் தான் என் கைரேகைகளையே
உற்றுப் பார்த்தபடி காத்திருப்பது.

சீக்கிரம் துவங்கேன்
சரித்திர
முதல் சம்பாஷணையை…..!