இன்றெல்லாம் கேட்கலாம் 3

இன்றெல்லாம் கேட்கலாம் 3
      கஸ்தூரி மாம்பழம்


அபி பேசும்போதெல்லாம் எதாவதொரு மலையாளப் பாடல் பற்றிய ஞாபகத்தை விதை போலவாவது முள் போலவாவது விதைத்துப் போவது இயல்பாக நடந்தேறுவது. சிலர் வேண்டுமென்றே எதையும் செய்வதில்லை என்பது இங்கே கவனிக்கத் தக்கது. அப்படித் தான் இன்றைக்கு எதோவொரு வேலைக்கு நடுவில் ‘இந்தப் பாட்டைக் கேட்டால் நேராக சொர்க்கத்தினுள் நுழைவதான வாசல்கள் திறக்கும், பார்’ என்று ஒரு பாடலை அனுப்பியிருந்தாள். அந்தப் பாடல் மிக நல்ல பாடல் என்பதில் கருத்து வேறுபாடில்லை. ஆனால் ஒரே ஒரு பாடலைத் திறந்து விட்டு ஒரு தினத்தை முழுவதுமாக மூடிவைக்க முடியவே முடியாது. அப்படியே அலசிக் கொண்டிருந்ததில் சட்டென்று ஒரு பழைய பாடலின் வரிகள் காதில் விழுந்தன.
“காச்சிக்குறுக்கிய மோஹத்தின் பாலு “
என்று அந்த வரி மொத்தப் பாடலை நோக்கி மனத்தைத் திருப்பியது. இந்தப் பாடலை 1977 ஆமாண்டில் ஹரிஹரன் இயக்கி வெளிவந்த சுஜாதா (மலையாளப்) படத்தின் நடுவே  எம்.ஜி.சோமன் உடன் வரும் நடிகர் அவர் பெயர் நினைவிலில்லை அவர் எம்.ஜி.சோமனைக் கிண்டலடித்து இதன் பல்லவியைப் பாடுவார். இசையின்றி ஒலிக்கும் அந்த வெர்ஷன் மறக்க முடியாத இந்தப் பாடலின் மறுகதவொன்றைத் திறந்தளிப்பதாக ஒலித்தது.

ராகவன் மாஷே இசையில் உருவான இந்தப் பாடலைப் பாடியவர்  மெஹ்பூப் கான்    (To View The Song Please Click The Underlined Name)

கேரளத்திற்கென்றே உண்டாகி வந்த மிதக் கிண்டலும் அதனூடே எங்கேயென்றறியாமல் பெருக்கெடுத்து வரக் கூடிய பகடி கலந்த தோல்வியுணர்ச்சியும் போராட விருப்பமின்றி சமரசம் செய்து கொள்வதான எப்போதைக்குமான விட்டளித்தலுமாகப் பெருகும் பாடல். பாதிப் பாதியில் நின்றும் நிதானித்தும் சுருண்டு திரும்பியும் ஒலிக்கும் போது கலையின் வழி சொல்லொணாச் சோகத்தைப் பாடித் தரக் கூடிய பேரெழில் கானமாக மாற்றமெடுக்கிறது. மெஹ்பூபின் மொழிகளைக் கடந்த தெம்மாங்குத் தன்மை பொங்கும் குரலின் தனித்துவப் பாடல் இது.

P. Bhaskaran.jpg

 

பி.பாஸ்கரன் இயற்றிய இந்தப் பாடல் காலத்தால் அழியாத கானங்களிலொன்று. பாஸ்கரே எழுதி இயக்கியது “நாயரு பிடிச்ச புலிவாலு” (1958) படம் தேசிய அளவில் சிறந்த படத்துக்கான சான்றிதழைப் பெற்ற படம். திருவாங்கூர் சகோதரிகளில் ஒருவரான ராகினி இப்படத்தின் நாயகி.நாயகனாகத் தோன்றியவர் சத்யன்
இந்தப் படத்தின் பாடலிசையை ராகவன் மாஷே அளித்தார். பின்னணி இசையை கேவீ மகாதேவன் கவனித்துக் கொண்டார். எளிய மனிதர்களின் உலகத்தைக் காண் அனுபவமாக்கிய திரைப்படம் இது. இந்தப் பாடல் படத்தைத் தாண்டி இன்றளவும் விரும்பிக் கேட்கப்படுகிற நேயவாஞ்சைப் பாடலாக ஒளிர்கின்றது.

 

காத்து சூக்ஷிக்கொரு கஸ்தூரி மாம்பழம்
காக்கா கொத்திப் போகும்
ஐயோ காகாச்சி கொத்திப் போகும்
நோக்கி வெச்சொரு காராகால பழம்
நோட்டம் தெட்டியால் போகும் நிண்டே
நோட்டம் தெட்டியால் போகும்

(காத்து சூஷிக்கொரு)

நட்டு நனச்சி வளர்த்திய பூச்செடி ஆ…
நட்டு நனச்சி வளர்த்திய பூச்செடி
முட்டனாடத்தி தின்னும்
ஐயோ முட்டனாடத்தி தின்னும்
கூட்டினுள்ளிலே கோழி குஞ்சின்னே
காட்டு குறுக்கன் கத்தும் ஒரு காட்டு குறுக்கன் கத்தும்

(காத்து சூஷிக்கொரு)

காச்சிக் குறுக்கிய மோகத்தின் பாலு…மோகத்தின் பாலு….
காச்சி குறுக்கிய மோகத்தின் பாலு
பூச்ச குடிச்சி போகும் கரிம்பூச்ச குடிச்சி போகும்
பத்திரி சுட்டு பரத்திமறிச்சது
கட்டொறும்பும் கக்கும்
ஒரு கட்டொறும்பும் கக்கும்

(காத்து சூஷிக்கொரு)

கிராமிய கீதங்கள் பலவற்றைப் பாடிக் காலத்தால் அழியாத குரலாகத் தனதை ஆக்கிக் காட்டியவர் மெஹ்பூப். இவரும் பாஸ்கரனும் சேர்ந்தளித்த பல பாடல்கள் இந்த வகைமையில் மெச்சத் தக்க மல்லிகைகள். இந்தப் பாடலின் எளிமையும் அறியாமையும் பூடகமும் ஒருங்கிணைகிற புள்ளி நுட்பமானது. இன்னும் விரிந்திருக்க வேண்டிய இதன் போதாமை இன்றளவும் இந்தப் பாடலைக் கொள்ளையழகுடன் நிரந்தரித்துத் தருகிறது. இன்றெல்லாம் கேட்கலாம்.

கப்பா டீவியில் 2015இல் ம்யூசிக் மோஜோவின் மூன்றாம் சீஸனில் மசாலா கஃபே இசைக்குழு {To View The Song Click The Underlined Name} இதை ரீப்ரஸண்ட் செய்திருந்தார்கள்.

ஒன்று வேறொன்றாதல் என்பது காலத்தின் விதி. அது காலத்துக்கும் பொருத்தமானதே. தன்னை மீவுருச்செய்யாத எதுவும் நிரந்தரித்தல் கடினம். மெஹ்பூபின் மூலப்ரதியினின்றும் பலகாத தூரம் பயணித்து வந்த பின்னான வேறொரு மலர்தலாகவே இந்தப் புதிய குரல்களில் அந்தப் பழைய பாடலின் புத்தம்பிரதியைக் கேட்பனுபவம் கொள்ள முடிகிறது. இடையில் 57 வருடங்கள் இருப்பது தெரியாமல் இல்லாமற் போவது கலை செய்கிற மாயவேலை. மூலத்தை முற்றிலும் அழிக்காமல் வேறொன்றாக மலர்த்துவது மிகக் கடினம். மசாலா கஃபே குழுவினர் வேறு சில பாடலுதிரிகளின் சேர்மானக் கொத்தெனவே இந்தப் புதிய மீவுருவை சாத்தியம் செய்திருந்தது நிச்சயம் கசக்கவில்லை. இன்னும் சொல்வதானால் முழுவதுமாய் பாஸ்கரன் எழுதி ராகவன் மாஷே இசைத்து மெஹ்பூப் பாடிய அந்த மூலப் பிரதியின் முற்றிலும் வேறான மீவுருப்ரதி ஒன்றுக்கான இடம் எஞ்சுவதாகவே கருதமுடிகிறது.

காலம் வாய்த்தால் கானமும் வாய்க்கும்.