கதைகளின் கதை 3

கதைகளின் கதை 3
வார்த்தைகளற்ற பாடல்


2016ஆம் வருடத்திற்கான சாகித்ய அகாதமி பரிசைப் பெற்றவர் ஆ.மாதவன்.தமிழ் இலக்கியத்தில் மிக முக்கியமானதொரு பெயர் என இவரைச் சொல்ல முடியும். ஐம்பதாண்டுகளைத் தாண்டி எழுதிக் கொண்டிருக்கும் தமிழின் முதன்மையான  படைப்பாளியான ஆ.மாதவன் நாவல்கள் கட்டுரைகள் இவற்றோடு பல சிறுகதைகளையும் எழுதி இருப்பவர்.இவரது சிறுகதைகள் இரண்டு தொகுதிகளாக 2001 ஆமாண்டு தமிழினி வெளியீடாக வந்துள்ளன.கடைத்தெருக் கதைகள் இவரது புகழ்பெற்ற சிறுகதைத் தொகுதி.கிருஷ்ணப் பருந்து உள்ளிட்டன் நாவல்கள் ஆ.மாதவனின் பெயரை அழுந்தப் பதிப்பவை.

மாதவனின் கதை மாந்தர்கள் புதிர்த் தன்மை நிரம்பியவர்கள்.அதிகம் பேசாதவர்கள்.அவர்களது செய்கைகளின் வழி வெளித்தோன்றுகிறவர்கள்.மத்யம மற்றும் மேல் மத்யம மாந்தர்களை அதிகமும் எழுதிக் கொண்டிருந்த காலத்தில் சமூகத்தின் சகல அடுக்குகளின் மனிதர்களையும் கதைப்படுத்துவதையும் வெளிச்சமும் இருளும் நிரம்பிய கருப்பொருட்களை எந்த மாச்சரியமும் இல்லாமல் கதைக்குரியவையாக்குவதிலும் மாதவன் முனைந்தார்.இவரது பல கதைகள் சொற்சிக்கனத்துக்கும் எளிமையான நேர்த் தாக்குதலுக்கும் பெயர் போனவை.

தனிமை மற்றும் குற்ற உணர்ச்சி ஆகியவற்றைத் தனது பல கதைகளில் மாதவன் கையாண்டிருக்கிறார்.இதனை இன்னும் விரித்து நோக்கினால் சம்பவங்கள் மற்றும் பாத்திரங்களின் இயல்புகள் ஆகியன வேறுபட்டுக் கொண்டே இருந்தாலும் கூட பார்க்கவியலாத மாய இழையாக இந்தக் குற்ற உணர்ச்சி சார்ந்த அகவாதையை மாதவன் தனது அனேகக் கதைகளில் பேசுபொருளாக்கி இருப்பதை உணரலாம்.மிக நெடியதொரு கோலத்தின் இணைப்புப் புள்ளிகளாகவே இவ்வுணர்வுகளின் சேகரத்தைப் பயன்படுத்தி இருக்கிறார் மாதவன் எனலாம்.

குற்ற உணர்ச்சியைத் தூண்டுகிற புற சூழல்களைக் கதையின் நேர்களமாக்குவது மாதவனின் உத்தியாக இருக்கிறது.கதையின் மையப்போக்கைத் தீர்மானிக்கிற அல்லது கதையைப் பிளக்கிற சம்பவத்தை நோக்கிய பயணத்தில் மிக மெலிதான குற்ற உணர்வின் வரைபடத்தை ஆங்காங்கே திறந்து பூர்த்தி செய்துகொண்டே செல்வது இவரது தனித்துவம்.வாசகனை மெல்ல வந்து சேர வேண்டிய எதாஸ்தானத்துக்கு நகர்த்தி வரும் வரைக்கும் மௌனமாய்த் ததும்புகிற குற்ற உணர்வெனும் நதி குறிப்பிட்ட இடத்தில் வெடித்துச் சிதறுகிறது.

வாசகனைக் கொஞ்சமும் குழப்பமடையச் செய்யாத கதைகள் இவருடையது.பல்லவி,பூனை,காளை,அந்தரங்கம் பாச்சி மீசைப்பூனை மீன்முட்டி வளாகம் அனந்தபாஸ்கர் எனது நண்பர் புறாமுட்டை பாவத்தின் சம்பளம் வேஷம் ஆகிய இவரது கதைகள் தமிழின் மிக முக்கியமானவை.மனதின் சொற்களை வெளிப்படுத்துகிற மாதவனின் மொழி அனாயாசமானது.வாழ நேர்ந்த நிலத்தின் தனித்துவமாய்ச் சில அபூர்வமான சொல்லாடல்கள் தன்னளவில் எழுவது இன்னுமோர் ரசம்.சில சிக்கன வாக்கியங்களை அடுத்தடுத்து நாலைந்து முறைகள் தன் கதையெங்கும் ஒலிக்கச் செய்வது இன்னுமோர் சிறப்பும்.அற்புதமான கதானுபவத்தை வாசகனுக்கு நிகழ்த்திக் காட்டும் ஆ.மாதவனின் ஒரு சிறுகதை “”சினிமா””

காலை எழுந்ததில் இருந்தே அவனுக்கு மனது ஒரு நிலையில் இல்லை.அலைபாய்ந்தது.காரணம் சொல்ல முடியாத ஒரு வித மூட்டமான கலவரத்தில் ஆழ்ந்திருந்தது.அன்றைய தினம் ஒரு விடுமுறை நாள் என்பதை நினைவுபடுத்தும் அவன் மனைவி எல்லாவற்றுக்கும் மனசு தான் காரணம்.நீ ஒன்றும் இல்லாததற்கெல்லாம் குழப்பிக் கொள்கிறாய்.இயல்பாகவும் மகிழ்ச்சியாகவும் இரு என்றவாறே காஃபி தருகிறாள்.பின்னரும் குளிக்கும் போதும் காலை உணவின் போதும் அப்புறமும் அடிக்கடி மனசு சரியில்லை என்று சொன்னவண்ணம் இருக்கிறான்.மதிய உணவைத் தட்டில் வைத்து அவனை உபசரிக்கிற மனைவி அவனிடம் இன்றைக்கு ஞாயிறு.விடுமுறை எங்கேயாவது வெளியே போய்வரலாம் என்கிறாள்.அலுத்துக் கொள்பவனிடம் அருகாமை புதிய தியேட்டரில் நல்ல ஸினிமா ஒன்று வெளியாகி இருப்பதாகவும் எதிர் வீட்டு அக்கா அவரது வீட்டுக்காரரோடு போய்விட்டு வந்ததாகவும் ரொம்ப நல்ல கதை என்று சொன்னதாகவும் சொல்கிறாள்.மேலதிகமாக இதனைப் பார்த்தால் தம்பதியாகப் பார்க்க வேண்டும் என்றும் குறிப்பாகச் சொல்கிறாள்.

அந்த நேரத்தில் வாசற்படியருகில் மெலிசாகக் கத்திக் கொண்டே இவனருகே வரும் பூனை அவனருகே வந்து வாலை உரசியவாறு கொஞ்சத் தலைப்படுகிறது.ஆத்திரம் மேலிட அந்தப் பூனையின் செல்ல மியாவை பொறுக்க மாட்டாமல் அதனருகே சென்று வாலைப் பிடித்து வாசற் கதவில் அறைந்து எறிகிறான்.திக்கித்து நிற்பது பூனை மாத்திரமல்ல மனையாளும் தான்.அதன் பின் அவனது மன இறுக்கத்தை அதிகரிக்கும் வண்ணம் ஒரு சொல்லைக் கூட சப்தமாகப் பேசாமல் தனக்குள்ளேயே ஒலிக்கும் குரலில் முனகுகிறாள் மனைவி.”உங்களுக்கு இன்னிக்கு என்ன வந்திட்டது.?” என.அவனது கண்கள் சிவந்திருக்கிறது.எதுவும் பேசாமல் உள்ளறைக்குச் செல்கிறான்.

பயமிரட்சி தணிந்த பூனை உடம்பை நாக்கால் நக்கியவாறு திண்ணையோரத்தில் மலங்க விழித்துக் கொண்டிருந்ததைப் பார்த்த போது அவளுக்கு வருத்தம் வருத்தமாக வந்தது.

ஸினிமாவில் பக்கத்தில் அமர்ந்திருந்த அவனை கலகலப்பாக்க அவள் என்னென்னவோ பேச்சுக் கொடுத்தும் அவன் சகஜமாகிற வழியே தெரியவில்லை.இறுக்கமாக அமர்ந்திருக்கிறான்.புது தியேட்டர்.அதிலும் மாடி பாக்ஸ் உயரமாகவும் அழகாகவும் அமைப்பு விசித்திரமாகவும் இருக்கிறது.இவளது உற்சாகமூட்டல்களுக்கு அவன் அசருவதாக இல்லை.

அப்போது பின்னாடி ஸீட்டில் யாரோ செருமுகிறாற் போல் இருக்கிறது.அவள் திரும்பிப் பார்க்கையில் கொடுக்கு மீசையும் கழுத்து வரை வளர்த்த சுருள் க்ராப்பும் சைட் பர்ணுமாக ஒரு இளைஞன் அமர்ந்திருக்கிறான்.

அதுவரைக்கும் கணவனை உற்சாகமூட்ட எதையும் யோசிக்காமல் சிறிது சப்தமாகத் தான் பேசியது அவளுக்கு வெட்கமாகப் போகிறது.
அது ஒரு காதல் திரைப்படம்.இளம் வயதினரைக் குறிவைத்து எடுக்கப் பட்ட அதன் ஒவ்வொரு காட்சியுமே காதல் ரசம் சொட்டும் வண்ணம் அமைந்திருக்கிறது.பாடல்களும் அப்படித் தான்.அவளுக்கு பரவசமும் அவனுக்கு திரைப்படத்தின் அதீதமும் ஒருங்கே மன ஓட்டங்களாகின்றன.

இடைவேளை ஆகிறது.

பின்னால் இருப்பவன் எழுந்து செல்லும் போது இயல்பாக கையை ஊன்றுவதைப் போல இவள் ஸீட்டின் மேல் கையை ஊன்றி லேசாக அவள் கழுத்து மயிரில் விரல் பட்டு விட்டுப் போனான்.அவள் சட்டென்று கணவனை உசுப்புகிறாள்.இருவருக்கும் லேசாய் உரையாடல் வலுக்கிறது.
பின் ஸீட்டுக்காரன் வந்தமரும் போது வேண்டுமென்றே சேகரம் செய்து வந்திருந்த சிகரட்டின் பாக்கிப் புகையை இவள் பக்கம் ஊதிவிட்டு எதுவும் தெரியாதவனைப் போல் அமர்ந்து கொள்கிறான்.படம் ஆரம்பிக்கிறது.இப்போது தான் பின்சீட்டுக்காரனை கவனிக்கிற அவளது கணவன் வேண்டுமென்றே தன்னை சகஜமாக்கிக் கொள்கிறான்.மனைவியின் தோளை வளைத்து கையைப் போட்டுக் கொண்டு உற்சாகமான குரலில் மிகை சப்தமாக சினிமாவைப் பற்றி கமெண்ட் பண்ணிக் கொண்டே படம் பார்க்கிறான்.சற்று நேரத்தில் பின் ஆசாமி தன்னை காலை நெருடுவதாக அவள் கணவனிடம் கிசுகிசுக்கிறாள் இப்போது காலையில் உணவின் போது வாலை உயர்த்தி உடம்பை வளைத்து மியாவ் கத்தி எரிச்சல் வளர்த்திய பூனையின் வட்டக் கண்கள் அவன் மனதில் பெரிது பெரிதாக வட்டமிடுகின்றன.குரோதம் ஆக்ரோஷம் வஞ்சம் வெறி அத்தனையுமே நெஞ்சுள் சிறிது சிறிதாகப் பற்றிப் படர்ந்து பெரு நெருப்பாக மூண்டே விட்டது.
வாங்க போயிடலாம் என்று மெல்ல சொல்பவளிடம் தன் இடத்தில் வந்து அவளை மாறி அமர்விக்கிறான்.சற்றே தடுமாறி அமரும் அவளை தாங்க நீளும் பின் சீட்டுக்காரனின் கையை கணவனானவன் வெடுக்கென்று ஓங்கி ஒரு அறை கன்னத்துக்குப் பதிலாக கையில் விடுகிறான்.அந்த அடி பட்ட பிறகு பின் சீட்டுக்காரன் அமைதியாக படத்தையே கவனிக்கிறான்.எதையும் அறியாத மன்றம் திரைக் காட்சி ரசத்தில் அமிழ்ந்தே கிடக்கிறது.

படம் முடிகிறது.

Contemporary Fiction – A Madhavan – Kalachuvadu Publications | A Leader and a Trendsetter in Tamil Publishing(இனி சினிமா எனும் கதையின் முற்றுப் பகுதி அப்படியே தரப்படுகிறது.)
படம் முடிந்து வெளிச்சம் வரும்போது — பின்னால் அடிபட்ட அந்த ஆசாமியின் முகத்தைப் பார்த்து:பிடித்துக் கொள் என்று மூஞ்சியில் ஒரு குத்து விட்டு- ‘ராஸ்கல் இனிமேல் சினிமாவில் பக்கத்து அன்னியப் பெண்களை நோண்டாதே’ என்று காறி உமிழ வேண்டும்.…சே. அதெல்லாம் ரசாபாசமான அவலக்கேடாக முடிந்தால்….அவளும் உடனிருக்கிறாள்.முகம் தெரியாத எத்தனை பேர்கள்! இப்போது மூவருக்கு மட்டுமே தெரிந்த சங்கதி- கும்பல் அத்தனைக்கும் அம்பலமாகும் போது….சே என்ன செய்வது..’ மனத்தினுள் வஞ்சம் காலையின் அந்தப் பூனை போல வாலை உயர்த்தி முதுகை வளைத்து — வளைய வளைய வந்தது.
டக்கென்று விளக்குகள் பிரகாசித்தன.மனைவியை முன்னே நடக்க இவனும் பின்னே வருகிறான்.விளக்கு ஒருகணம் அணைந்து மினுக்கிடும் போதும் பின் சீட்டுக்காரனின் முகத்தில் அதே குரூரமான வஞ்சச்சிரிப்பு.இவன் திரும்பிப் பார்க்கும் போது அவன் ஒரு கணம் மாடிச்சுவரருகில் கீழே கலைந்து போகும் கூட்டத்தைப் பார்ப்பது போல ஒரு கணம் நிற்கிறான்.
இங்கே மாடியின் கும்பல் அனைத்தும் வெளியே போய்க்கொண்டிருக்கிறது.
ஒரு கணம் விளக்கு மறுபடியும் இருட்டாகிறது.அவனுக்கு என்ன தோன்றியதோ மாடிச்சுவரருகே பராக்கு பார்த்துக் கொண்டிருந்த அவனை- பட்டென்று குனிந்து-கால்களை வாரி கீழே தள்ளி விட்டு பரபரவென்று முன்னால் போய்க்கொண்டிருக்கிற மனைவியின் தோளைத் தொட்டுக் கொண்டு நடக்கிறான்.குழல் விளக்கு மறுபடி ஒளிவிட்ட போது மாடி அரங்கத்துக் கும்பல் அனேகமாக வாசலைத் தாண்டியிருந்தது.
படிகளை விட்டு இறங்கும் போது “வேகமாக வாருங்கள் பின்னால் அவன் வந்தால் தொந்தரவு கையை வேறு நீட்டி விட்டீர்கள்”
“அவனா? வர மாட்டான்..” அவன் சொல்லும் போதே கும்பல் எல்லாம் அவசர அவசரமாக ஓடிக்கொண்டிருந்தது.”யாரோ விழுந்திட்டாங்களாமே” என்ற மனைவியிடம் “யாராய் இருந்தால் நமக்கென்ன?நட சீக்கிரமா!” என்ற கணவனின் நிர்த்தாட்சண்யம் அவளுக்குப் புரியவே இல்லை.

மாதவனின் இந்தச்சிறுகதை தமிழில் எழுதப்பட்ட MOB பொதுவில் கூட்டத்தில் ஒருவனாகப் பெயரற்றுத் திரியும் மனதின் விஸ்வரூபத்தை வெளிக்காட்டிய முதல் சிறுகதை என்பேன்.சினிமா அரங்கத்துக்கான தனித்த குணாம்சங்களில் ஒன்று தான் அடையாளங்கள் அனைத்தையும் அழிக்கும் இருட்டில் ஒவ்வொருவரும் அமர நேர்வது.அங்கே யாருக்கும் பெயரில்லை.ஒவ்வொருவருமே கண்களாகவும் மொனித்த உதடுகளாகவும் எப்போதாவது ஒலி எழுப்பும் கரங்களாகவும் மெல்லிய அல்லது சப்தமான குரலில் வார்த்தையாடும் உதடுகளாகவும் சில்மிஷம் செய்யும் தைரியக் கை கால்களாகவும் இன்னும் பலவாகவும் மாறுகின்ற இடம் சினிமா அரங்கம்.ஒரே அரங்கத்தில் மாறி மாறி திரையிடப்படுகிற சினிமாக்கள் போலவே ஒவ்வொரு காட்சிக்கும் இடையிலான வேறுபாடுகளை அங்கே வந்து செல்பவர்கள் நேர்ப்பிக்கிறார்கள்.இங்கே சினிமா என்னும் இந்தக் கதையில் மாதவன் நமக்குப் படைத்தளிக்கும் கதாவுலகம் விசித்திரமானது.

இந்தக் கதை ஒரு சினிமாவைப் போலவே தொடங்குகிறது.நடக்கிறது முடிகிறது.பெயரற்ற அந்தத் தம்பதியும் பின் சீட்டுக்காரனுமாக மூன்று மனிதர்கள் மற்றும் ஒரு பூனை என நாலே பாத்திரங்கள்.இந்தக் கதையில் பூனையின் கண்கள் அந்தக் கணவனின் மன உளைச்சலைப் பிரதிபலிக்கத் தொடங்குகிறது.அவனது மனதில் பொங்கும் வெறுமையின் அழுத்தம் பூனையின் மீதான வெறுப்பாக வெளித்தோன்றுகிறது.அதுவே பின்னர் பின் சீட்டுக்காரனின் நுழைதலை பூனையின் விருப்பமற்ற வருகையாக உணர்த்துகிறது.பூனைக்கு வழங்கப்பட்ட தண்டனையின் பெரிதுபடுத்தப் பட்ட சித்திரத்தில் இந்தக் கதையின் முடிவு உறைகிறது.இந்தக் கதையின் ஒவ்வொரு பாத்திரமாகவும் நம்மைப் பொறுத்திக் கொள்ள முடிகிறது. பாத்திரங்களுக்கு எந்தப் பெயரையும் சூட்டாமல் விடுவதில் தொடங்குகிறது மாதவனின் சூட்சுமம்.

இது வெறும் கதையல்ல.வார்த்தைகளற்ற பாடல் ஒன்று எழுதப் பட்டு நாற்பதாண்டுகள் ஆன பின்னரும் அதன் மாந்தர்களாக நாமும் அந்தப் பூனையாக நம் மனதும் இன்னமும் அப்படியே மேலழுதப்பட்ட வண்ணம் வந்துகொண்டிருக்கின்றன.எல்லாவற்றையும் தீர்மானிப்பது பூனை மனசுக்கு வாய்க்கிறதும் வாய்க்காமற் போவதுமான ஷண நேர விளக்கணைந்த இருட்டுத் தான் எனும் இடத்தில் பல கதைகள் வெடித்துச் சிதறுகின்றன.

தமிழின் ஆகச்சிறந்த கதைகளில் ஒன்று ஆ.மாதவனின் “சினிமா.”