தேன்மழைச்சாரல் 16

தேன்மழைச்சாரல் 16
நீலப் பட்டாடை கட்டி


வீரத்திருமகன் படம் இருக்கிறதே எப்போது நினைத்தாலும் மனசின் ஒரு கரையைத் திறந்து வெள்ளக்காடாய் மாற்றித் தரும். பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள் என்ற பாடலை யாரால் மறக்க முடியும்..? சி.எல்.ஆனந்தன் பெரிதாக ஒளிராமற் போனாலும் இந்தப் படம் உள்ளளவு இதன் பாடல்கள் உள்ளளவு அவர் பெயரும் ஒலித்தபடியே மிளிரும். ஏவி.எம் தயாரித்த வீரத்திருமகன் மே மூன்றாம் தேதி 1962 ஆமாண்டு வெளிவந்தது. பிற்காலத்தில் பல பெரிய நட்சத்திர வனங்களை வேட்டையாடிய இயக்குநர் ஏ.சி.திருலோக் சந்தரின் முதல் படம் இது.

ஏவி.எம்மின் செல்லப்பிள்ளை திருலோக். தெய்வமகனைப் பின்னிருந்து இயக்கியவர் திருலோக் சந்தர். இந்தியாவிலிருந்து ஆஸ்கர் அகதமி விருதுகளுக்கான பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற்ற முதல் தமிழ்ப் படம் தெய்வமகன். சிவாஜியின் வேடகாலவாழ்வில் அவருக்கு அமைந்த நற்திரு இயக்குனர்களில் திருலோக்சந்தர் முக்கியமானவர்.

சிவாஜியுடன் 20 படங்களில் இணைந்தார் திருலோக்.

ஒரு சுவையான விபரம் என்னவெனில் சிவாஜியை வைத்து முதல் படத்தை இயக்கும் முன் திருலோக் எம்ஜி.ஆர் நடித்த மாபெரும் ஹிட் படமான அன்பேவா படத்தை இயக்கியிருந்தார். அதே கண்கள் படம் சக்கைப் போடு போட்டது. தெலுங்கு சூப்பர் நடிகரான என்.டி.ராமராவ் நடித்த நாடி ஆடா ஜன்மே படமும் தர்மேந்திரா நடித்த மே பி லட்கி ஹூன் படமும் அவர் இயக்கி வெளியாகி இருந்தன. அதன் பிறகுதான் திருலோக் சிவாஜி இருவரின் கூட்டணியில் முதல் படமான தங்கை வெளியானது.

(குடும்பம் ஒரு கோவில்,வசந்தத்தில் ஒரு நாள்,லாரி ட்ரைவர் ராஜாக்கண்ணு,விஸ்வரூபம்,பைலட் ப்ரேம்நாத்,டாக்டர் சிவா, அன்பே ஆருயிரே,அவன் தான் மனிதன், பாரதவிலாஸ்,தர்மம் எங்கே,பாபு,எங்கிருந்தோ வந்தாள்,எங்க மாமா, திருடன், தெய்வமகன்,அன்பளிப்பு,என் தம்பி, இருமலர்கள், தங்கை)
.தமிழில் அவர் இயக்கிய கடைசிப் படமும் ஏ.வி.எம் நிறுவனம் தயாரித்தது தான் என்பது தற்செயல் அற்புதம். அது ஒரு சிவாஜி படம் என்பது கூடுதல் சிறப்பு. அன்புள்ள அப்பா சிவாஜி நதியா தந்தையும் மகளுமாய்த் தோன்றிய படம் 1987 ஆமாண்டு மே மாதம் 27 ஆம் நாள் வெளிவந்தது.


A.C. Trilogchander - IMDb

வீரத்திருமகன் படத்தில் சச்சு நாயகியாக அறிமுகமானார். சச்சு திருத்தமான முகமும் தனித்துவமான குரலும் நல்ல நடனத் திறனும் கொண்டவர். நாயகிக்குத் தேவையான அனைத்து குணாம்சங்களும் நிரம்பியிருந்தாலும் அதன் பிறகு சச்சு நெடுங்காலம் நாயகியாக நடிக்க இயலவில்லை. காதலிக்க நேரமில்லை போன்ற படங்களில் சச்சு நகைச்சுவை நடிப்பில் மின்னிப் பொன்னாய் மிளிர்ந்தார்.

விஸ்வநாதன்-ராமமூர்த்தி இணைந்து இசையமைத்த வீரத்திருமகன் படத்தில் மொத்தம் 9 பாடல்கள் இடம்பெற்றன. கண்ணதாசன் மொத்தமாய் ஒரு படத்தின் அனைத்துப் பாடல்களையும் எழுதத் தொடங்கி அந்த ஏற்பாடு வெகுவாக சிலாகிக்கப் பட்டது அறுபதுகளின் துவக்கத்திலிருந்து கண்ணதாசனின் பாட்டுக்கொடி அப்படிப் பட்டொளி வீசிப் பறந்து சிறந்தது. வீரத்திருமகனில் எந்தக் காலத்திலும் அழியாத பாடலாக பாடாத பாடெல்லாம் பாட வந்தாள் பாட்டு அமைந்தது.

பாட்டெல்லாம் பாட வந்தாள்
காணாத கண்களைக் காண வந்தாள்
பேசாத மொழியெல்லாம் பேச வந்தாள்
பெண்பாவை நெஞ்சிலே ஆடவந்தாள்

என்ற பாடலை ஜானகியும் பிபீ.ஸ்ரீனிவாசும் பாடியிருந்தார்கள். அந்தப் பாடல் காற்றெல்லாம் அலைந்து திரிந்து வீடறியாப் பறவைபோல் இன்றளவும் ஒலித்துக்
கொண்டிருக்கிறது. சுசீலாவோடு ஸ்ரீனிவாஸ் இணைந்து பாடிய இன்னொரு டூயட் பாட்டு ரோஜாமலரே ராஜகுமாரி பாடல். அது மட்டும் சாதாரணமா என்ன..? நூறு காதல் லாலிகளை வகைப்படுத்தினால் நிச்சயமாக இடம்பிடிக்கிற வல்லமை கொண்டது ரோஜாமலரே பாடல் என்பது என் கணிப்பு.

இதே படத்தில் இன்னொரு பாடல். அது தான் தேன்மழைச்சாரல்.

இருகுரல் பாடலாக சுசீலாவும் எல்.ஆர்.ஈஸ்வரியும் சேர்ந்து பாடியது. பொதுவாகவே பி.சுசீலாவின் குரல் தண்மையும் ஆழமுமாகப் பரவக் கூடியது. ஈஸ்வரியின் குரலோ தீர்க்கமாய் ஓங்கி ஒலிக்கப் பார்ப்பது. இந்த இரண்டையும் கலந்து வெவ்வேறு நகரும் படிக்கட்டுக்களில் இறங்கிச் செல்லும் ஒருவரும் ஏறிச்செல்லும் மற்றவரும் ஒரு புள்ளியில் சந்திக்க நேருமல்லவா..? அப்படியான புள்ளியில் நகர்தலை நிறுத்தினாற் போல் அங்கேயே அவ்வண்ணமே பாடச்செய்தாற் போல் அமைந்தது நீலப்பட்டாடை கட்டி எனத் தொடங்கும் இருகுரல் பாடல்.

 

நீலப் பட்டாடை கட்டி நிலவென்னும் பொட்டும் வைத்து
பால் போலச் சிரிக்கும் பெண்ணே
பருவப் பெண்ணே பெண்ணே
பந்தாடும் காதல் பெண்ணே கன்னிப் பெண்ணே
கண்ணுறங்க மனமில்லையோ காதலனார் வரவில்லையோ
கரையேறி ஆடுகிறாய் பருவப் பெண்ணே -அங்கே
யார் வரவை தேடுகிறாய் கன்னிப் பெண்ணே

(நீலப்பட்டாடை)

ஏதேதோ பேசுகிறார் என்னை எண்ணிப் பாடுகிறார்
நானொன்றும் கண்டதில்லை பருவப் பெண்ணே
அதைத் தோழியர்க்கு சொல்லி விடு கன்னிப் பெண்ணே
புன்னை மரச் சோலையிலே பூத்தமலர் வாசத்திலே
தன்னை மறந்தோடுகிறாய் பருவப் பெண்ணே
தாயில்லையா தடையில்லையா கன்னிப் பெண்ணே
தடையிருந்தும் மீறி விடும் தாவி எழுந்தோடி விடும்
படையெடுக்கும் ஆசையடி பருவப் பெண்ணே
காதலையும் விடுவதில்லை கன்னிப் பெண்ணே

(நீலப்பட்டாடை)

குழுக்குரல் தன்மையும் சமரசமான ஒன்றிணைதலும் மிகுந்து ஒலிப்பது இப்பாடலின் சிறப்பு. ஆரம்ப இசை சோகச்சார்போடு தொடங்குவது சிறப்பு. இந்தப் பாட்டின் மைய இசையாக மேள இசையைப் பரவச்செய்தது பாடலுக்குப் பேரழகு. சுசீலாவும் ஈஸ்வரியும் பாடல் வரிகளைப் பிரித்துப் பாடிய விதம் அதிரூபம். சின்னச்சின்ன நுட்பங்களை எத்தனை முறை கேட்டாலும் தீராப் பூக்களாகவே தன்னோடு கொண்டிருக்கிறது இந்தப் பாடல்.

தடாகப் பெருக்கில் தாமரை மலரொன்று விரிந்து வசீகரிக்க அந்த மலர் மீது சச்சு ஆடுவார். கூடவே இருபதுக்கும் மேற்பட்ட தோழிகள் சேர்ந்து ஆடுவதாகப் படமாக்கினார் திருலோக். பாடலைப் படமாக்குவதில் பெரும்ப்ரியம் கொண்டவர். ரோஜாமலரே பாடல் தொடக்கமும் இந்த நீலப்பட்டாடை பாட்டின் முடிவடைதலும் ஒரு புள்ளியில் சங்கமிப்பது பேரழகு. நீர்ப்பரப்பிலிருந்து வெளியேறிக் கரை நோக்கி நடந்து வருவார் சச்சு. வெட்கத்தோடு உறைவார். கரையில் பார்க்கும் தூரத்தில் சி.எல்.ஆனந்தன் அவரைத் தேடிக் காதலேக்கத்தோடு வந்து சேர்வார். இது அந்தப் பாடலின் உறைகணக் காட்சி. ரோஜா மலரே பாடல் தொடங்குவது வேறொரு மணற்பரப்பில் தன்னிடமிருந்து விலகி ஓடும் சச்சுவைப் பார்த்துக் கைகளை வீசிக் காதல் சரணம் பாடும் கண்களிலிருந்து பாடலைத் திறந்து பாடுவார் ஆனந்தன்.

ரோஜா மலரே பாடலின் இடையிசைத் தூவல்கள் எல்லாமே அன்றைய காலத்தில் வேறோர் பாடலில் காணவியலாப் புத்தம் புதுமை கொண்டு ஒலித்தவை தான்.

கண்ணதாசன்-மெல்லிசை மன்னர்கள்- திருலோக்சந்தர் மூவருடைய கூட்டணியில் விளைந்த நன்மழை விளைதல் என்றே வீரத் திருமகன் பாடலைப் போற்றலாம்.