எனக்குள் எண்ணங்கள் 3

எனக்குள் எண்ணங்கள் 3
கண்ணீர்ப் பூக்கள்


ராஜசேகர் நாராயணசாமி. இது தான் அவன் பெயர். அவன் என்று அழைக்கும் உரிமை பிற்பாடு வந்து சேர்ந்தது. தொடக்கத்தில் அது கிடையாது. அவர் என்று ஆரம்பித்து அவன் என்று மாறிக் கொள்கிறேன். அது தான் உசிதம் எனப்படுகிறது. ராஜசேகர் எப்பிறவியிலோ நான் செய்த புண்ணியமொத்தம். எனக்கு வந்து சேர்ந்த பூர்வீக சம்பத்து வேறெப்படிச் சொல்ல..?

என் அக்கா ப்ளஸ் டூவில் சுமாராக மார்க் வாங்கித் தேறினாள். ஆயிரம் என்ற எண்ணை அநாயாசமாகத் தாண்டியிருக்க வேண்டியவளுக்கு எண்ணிய மதிப்பெண் கிடைக்கவில்லை. பள்ஸ் டூவில் முதல் க்ரூப்பில் படித்தவளுக்கு எப்படியாவது இஞ்சினியரிங் கல்லூரிக்குப் போகவேண்டும் என்ற கொள்கை இருந்தது நிறைவேறவில்லை. பி.எஸ்.சி கணிதம் சேர்ந்தாள். மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி திருநகரில் இருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் மெயின் ரோட்டின் மீதே அமைந்திருப்பது. அங்கே இடம் கிடைத்தது. ஆர்வமாகப் படித்தாள். விட்டதைப் பிடித்தாள். அந்தத் துறையில் முதல்வளாகத் தேறினாள். சான்றிதழ் பதக்கம் இத்யாதிகளுடன் கல்லூரி சார்ந்த அறக்கட்டளை ஒன்றின் பணப்பரிசையும் தட்டினாள். கணக்கு என்கிற நான் பல ஜென்மங்களுக்கு வெறுப்பதற்குப் ப்ரியப்படுகிற வஸ்து அவளிடம் பழகிய நாய்க்குட்டியாய் இருந்தது ஆச்சரியம் தான். இன்னொரு ஆச்சரியம் அவள் எத்தனை சொல்லிக் கொடுத்தாலும் என் மண்டைக்குள் கணக்கெனும் ஷைத்தான் ஏறாமல் நான் பார்த்துக் கொண்டது.

அப்போதே பஞ்சுவசனமெல்லாம் பேசுவேன். கணக்கு வராதவனுக்குத் தான் கவிதை வரும் இது ஒரு ஸாம்பிள். கண் நிறையக் கனவு. அலமாரி நிறைய புஸ்தகங்கள் போதாதா. இது தான் நான். அவள் என்னென்னவோ மடக்கி மடக்கி தீட்டா-தியரம் என்றெல்லாம் விண்ணில் பறப்பாள். நான் பாட்டுக்கு வேப்ப மரக் காற்றினடியில் பாட்டுப் பாடிக் கொண்டிருப்பேன். அப்படி ஒருத்திக்கு இப்படி ஒரு தம்பி.

அக்காவுக்கு ஒரு வருடம் ஸீனியர் தான் ராஜசேகர். நோட்டு குடுக்க புஸ்தகம் வாங்க என்று வீட்டுக்கு வந்து போகத் தொடங்கிய வெகு சிலரில் சேகர் முக்கியஸ்தர். அக்காவின் மதிப்புக்குரிய ஒரே சீனியர். படிப்பில் படு பயங்கர சமர்த்து. மண்டை முழுக்க கணக்கும் மனசு முழுக்க கவிதையுமாக என்னை விட வினோதனாக சேகர் அமைந்தது தற்செயல் பெருவெடிப்பு. என் வாழ்வின் பல முக்கியக் கவிதாம்சத்தைத் திறந்து வைத்த புண்ணியாளன் சேகர் தான். எல்லாப் புகழும் சேகருக்குத் தான் சொந்தம்.

ஆத்மாநாம் படிச்சிருக்கியா என்று சேகர் கேட்ட போது நான் பத்தாவது. அவர் பி.எஸ்.சி ரெண்டாவது வருஷம். நான் அதாருப்பா எனக் கேட்டேன். காகிதத்தில் ஒரு கோடு தொகுப்பின் பல கவிதைகளைத் தன் சின்னஞ்சிறிய கையெழுத்தால் படியெடுத்துக் கடிதமொன்றை எழுதினார்.வாழ்வில் எனக்கு என்கிற தனிமனிதனுக்கு எழுதப்பட்ட முதல் கடிதம் அது தான். அந்தக் கடிதம் அன்பின் சொற்களைத் தாங்கி வரவில்லை. அத்தனையும் ஆயுதக் கூர்மையோடு கவிதைகளால் ததும்பி வந்தன. பேசிக் கொண்டே நடந்து ஐந்தாவது ஸ்டாப்பில் இருக்கும் சிக்கந்தர் பாய் டீக்கடைக்கு வந்து சேர்ந்தோம். அங்கே வைத்துத் தான் சேகர் அந்த எட்டாய் மடக்கிய டைப்ரைட்டிங் காகிதம் அலையஸ் கடிதத்தைத் தந்தார். இங்கயே படிக்கட்டுமா என்றேன்.

ம் படி என்றார்.

அப்படித் தான் ஆத்மாநாமின் முதல் கவிதை எனக்குள் வந்தது. எதாவது செய் என்று தொடங்கும் கவிதை. அப்புறம் என் சதுரம் என் கால்கள். ஆத்மாநாமின் நேர்பேச்சுப் பாணியிலான கட்டளைத் தனம் எனக்குள் முழுவதுமாய் இறங்கிவிட்டிருந்தது. எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் எனத் திரியத் தொடங்கினேன். பத்தாம் வகுப்பு முடித்த ஒருவனுக்கு ஆத்மாநாம் கொஞ்சம் ஓவர் டோஸ் தான் என இப்போது படுகிறது.

அடுத்து சேகரின் மகாப்ரியம் பசுவய்யா. அப்போது அவர் தான் சுந்தரராமசாமி என்று சேகருக்குத் தெரிந்திருக்கவில்லை. யாரோ ஒரு தமிழய்யா எனத் தான் தோன்றியிருக்கும் போல. வேட்டையாடத் தான் வந்தேன் எனத் தொடங்கும் கவிதை. அந்தக் கவிதையைத் தன் தனித்துவக் கையெழுத்தில் சிவப்புக் கலர் ரீஃபில் பேனா கொண்டு டைப்ரைட்டிங் காகிதத்தில் மிக அழகாக எழுதித் தந்திருந்தார் சேகர். அந்தக் காகிதத்தை எத்தனையோ ஆயிரம் முறைகள் பிரித்துப் படித்து மீண்டும் மூடி…வெல்…ஒரு காதலுக்கு நிகரானது கவிதை என்றால் கூடக் கம்மியாய்ச் சொல்வதாய்த் தான் அர்த்தம். அதை விட வேறு தளத்தில் வைத்துப் போற்றலாம். அப்படி ஒரு ஜில்ஜில் ஜிவ் கவிதை.

சேகரும் நானும் அடிக்கடி சந்தித்துக் கொள்வோம். நேர் பேச்சில் என்னென்னவோ பேசினாலும் கடிதங்கள் வேறொரு மார்க்கமாய்த் தொடர்ந்தன. எதாவது நான் கேட்பேன் அதற்கு சேகர் பதில் சொல்வார். அவர் என்னிடம் கேட்பதற்கு நான் பதிலைப் பார்த்துப் பார்த்து வடிப்பேன். அடுத்த சந்திப்பு எப்போது என்பது மெல்லிய ஏக்கமாக மனதுக்குள் நிரந்தரப் போதாமையோடு தொடர்ந்து கொண்டே இருந்தது.

சேகருக்கு இசை என்றால் இளையராஜா. பாடலென்றால் கண்ணதாசன். எனக்கு வைரமுத்து தான் அப்போது மானசீகக் காதல். சேகர் சுட்டிக் காட்டித் தான் கண்ணதாசனுக்குள் வந்தேன். அதோடு சேகருக்கு வானம்பாடிக் கவிதைகள் புதுக்கவிதைகள் மரபு சார்ந்த மயக்கம் என்று எந்தத் தனிச்சார்பும் இருந்ததில்லை. முழுக்க சாப்பிட்டு முடித்த பிறகும் வெற்றிலை பாக்கும் போடுவது போலத் தான் ஹைகூவா ஓகே….லிமரிக்கா சபாஷ் என்றெல்லாம் வடிவம் தாண்டிய கவிதைக் காதலைக் கொண்டிருந்தார். எனக்கும் அதுவே மனத்தில் வேர்கொண்டது.

ஒரு நாள் சேகர் மேத்தா படிச்சிருக்கியா என்றார். நான் மேத்தான்னா என்றேன். மு.மேத்தா டா படிச்சதில்லை என்றார். இப்போது நான் பன்னிரெண்டாம் வகுப்பை முடித்திருந்தேன். அந்த விடுமுறைக் காலம் முழுவதும் பல நூறு கவிதைகளால் செறிவுற்றிருந்தது. எல்லாவற்றுக்கும் காரணன் வேறு யார் சேகரனே!

மேத்தா படித்ததில்லை என்றதும் தன் மனத்தைத் திறந்து கண்ணீர்ப் பூக்கள் தொகுதியின் ஆகச்சிறந்த கவிதை ஒன்றினை அப்படியே வாசிக்கத் தொடங்கினார் சேகர். ஒரு சின்னப் பிசிறு கூட இல்லை. எங்கேயும் பிசகவில்லை. தடங்கலேதுமற்ற தண்மழையாய்ப் பெருகிற்று அந்தக் குரல். அந்தரங்கமும் உறுதியும் நிரம்பிய குரலினைக் கொண்டு அந்தக் கவிதையின் ஆன்மாவைத் தொட்டெடுத்தார். முடித்த பிறகும் நெடு நேரம் எதுவுமே பேசத் தோன்றவில்லை. சேகரின் கண்கள் லேசாய் மிக லேசாய்க் கலங்கி இருந்தன. மாபெரும் துக்கத்தை அல்ல மிக மிக லேசான சருகொன்றின் மென்மையோடு கூடிய கலக்கத்தைப் பிறப்பிப்பது தான் இலக்கியத்தின் மகா அம்சம். அந்தக் கவிதை அபாரமான ஒன்று. இன்றைக்கு எழுதப்பட்டு ஐம்பதாண்டுகளைத் தொட்டுக் கொண்டிருந்தாலும் குளிர்பதனப் பெட்டியில் உறைபனிக்கு நடுவாந்திரம் வெண்மை சூழக் கிடக்கிற சில்லிட்ட பதார்த்தம் ஒன்றினைப் போலல்லாமல் அன்றலர்ந்த மெய்ப்பனித் துகள்களோடு மலைப்ரதேசத்துக் காற்று முகத்தில் அறைவது போல் வாசிப்பை வருடலாக்கித் தருவது அந்தக் கவிதையின் நிகரற்ற நிகர்.

Buy Kanneer Pookkal - கண்ணீர் பூக்கள் Book Online at Low Prices in India | Kanneer Pookkal - கண்ணீர் பூக்கள் Reviews & Ratings - Amazon.in

என் வாழ்க்கை நாடகத்தில் எத்தனையோ காட்சிகள்

கண்ணீர்ப் பூக்கள்

*
எந்த தேவதையாலும் அவன்
ஆசிர்வதிக்கப்படவில்லை
ஆனால்
எல்லாச் சாத்தான்களாலும்
இஷ்டம் போலச் சபிக்கப்பட்டிருக்கிறான்!

எந்தப் பூங்காற்றும் அவனை வருடியதில்லை
ஆனால்
எல்லாப் புயல்களோடும் அவன்
போராடியிருக்கிறான்!

மகிழ்ச்சி மலர்களை அவனால்
பறிக்க முடியவில்லை
அவன் தோட்டத்தில் மலர்வதெல்லாம்
கண்ணீர்ப் பூக்களாகவே காட்சியளிக்கின்றன.

என்றாலும் அவன் பயணம் பழுதுபடவில்லை

சோகச் சிலுவைகளை நெஞ்சில்
சுமந்து கொண்டு
அவன் நடக்கிறான்
அழுகைக்குப் பிறகும் ஓர்
அணிவகுப்பு நடத்துகிறான்!

சோதர மானுட வேதனைகளுக்காக – அவனது
கவிப்பயணம் காலசைக்கிறது
துயரச் சுவடுகள் நெஞ்சில் குவிகின்றன!
பாதச் சுவடுகள் பூமியில் பதிகின்றன !

*
என் வாழ்க்கை நாடகத்தில்
எத்தனையோ காட்சிகள்
எத்தனையோ காட்சிகளில்
எழமுடியா வீழ்ச்சிகள்!

மண் வாழ்க்கை மேடையில் நான்
மாபெரிய காவியம்
மாபெரிய காவியத்தின்
மனம் சிதைந்த ஓவியம்!

*
ஆடுகின்ற பேய்மனதில்
ஆயிரமாம் ஆசைகள்
ஆயிரமாம் ஆசைகட்கு
அனுதினமும் பூசைகள் !

சூடுகின்ற மாலைகளோ
தோள்வலிக்கும் தோல்விகள்
தோள்வலிக்கும் தோல்விகள் நான்
தொடங்கிவைத்த வேள்விகள்!

*
காலமெனும் தாளிலொரு
கதையெழுத வந்தவன்
கதையெழுத வந்ததனால்
கனவுகளில் வெந்தவன்!

ஓலமிடும் சிந்தனையால்
உறங்குவதை விட்டவன்
உறங்குவதை விட்டதனால்
உடல் சிதைந்து கெட்டவன்!

*
மன்னவரின் சபைகள்தமை
மயங்க வைத்த பாவலன்
மயங்கவைத்த வேளையிலும்
மயங்கிவைத்த கோவலன்!

மின்னும் விழிப் பொற்குளத்தில்
மீன்பிடிக்கப் போனவன்
மீன்பிடிக்கப் போனதனால்
வேதனைக்குள் ளானவன் !

*
ஈரவிழிக் காவியங்கள்
எழுதி வெளி யிட்டவன்
எழுதி வெளி யிட்டதனால்
இதயங்களைத் தொட்டவன்!

ஓரவிழிப் பார்வைகளின்
ஊர்வலத்தில் சென்றவன்
ஊர்வலங்கள் சென்றபோது
ஒதுங்கிவந்து நின்றவன்!

*
பாயும் நதி மீதிலொரு
படகினை நான் ஓட்டினேன்
படகை நன்கு ஓட்டியதால்
பரிசுகளை ஈட்டினேன்!

ஆய பல சுமைப் பரிசை
அப்படகில் ஏற்றினேன்
அப்படகு கவிழ்ந்ததனால்
அலைநடுவே மாட்டினேன்!

*
வரங்கொடுக்கும் தேவதைகள்
வந்தபோது தூங்கினேன்
வந்தபோது தூங்கிவிட்டு
வாழ்க்கையெல்லாம் ஏங்கினேன்!

கரங் கொடுக்கும் வாய்ப்புகளைக்
கைகழுவி வீசினேன்
கைகழுவி வீசிவிட்டுக்
காலமெல்லாம் பேசினேன்!

*
புல்லர்களின் மனக்குகையில்
புனித விதை விதைத்தவன்
புனித விதை விதைத்தபோது
புதை மணலை மிதித்தவன்!

செல்லரித்த மானுடத்தைச்
சீர்திருத்தப் பாடினேன்
சீர்திருத்தப் பாடியதால்
பேரெதிர்ப்பைத் தேடினேன்!

*
அற்பர்களின் சந்தையிலே
அன்பு மலர் விற்றவன்
அன்பு மலர் விற்றதற்குத்
துன்ப விலை பெற்றவன்!

முட்புதரில் நட்பு மலர்
முளைக்குமென்று நம்பினேன்
முளைத்து வந்த பாம்புகளே
வளைத்த போது வெம்பினேன்!

நெஞ்சுவக்கும் மலர் பறிக்க
நெருப்பினில் கை விட்டவன்
நெருப்பினில் கை விட்டதனால்
நினைவுகளைச் சுட்டவன்!

வஞ்சி மலர் ஊமை மன
மாளிகையின் அதிபதி!
மாளிகையின் அதிபதிக்கு
மனதில் இல்லை நிம்மதி!

*
சோலைவழி வீதிகளில்
சுகமளிக்கும் பார்வைகள்
சுகமளிக்கும் பார்வைகள் என்
சுதந்திரத்தின் போர்வைகள்!

பாலைவன மணல் வெளியில்
பாடகனின் யாத்திரை
பாடகனின் யாத்திரையே
பசித்தவர்க்கு மாத்திரை!

*
என் வாழ்க்கை நாடகத்தில்
எத்தனையோ காட்சிகள்
எத்தனையோ காட்சிகளில்
எழ முடியா வீழ்ச்சிகள்!

மண் வாழ்க்கை மேடையில் நான்
மாபெரிய காவியம்
மாபெரிய காவியத்தின்
மனம் சிதைந்த ஓவியம்!

 

மேத்தாவின் நேர்தன்மைக் கவிமொழி யாதொரு வேலியும் இல்லாமல் நேராக மனத்தில் அறைவது. இலகுவான மொழியை உளிபோலாக்கிக் கவி செய்யும் கலையில் தேர்ந்தவர். சினிமாவிலும் பாடல்கள் பலவற்றை எழுதிய மேத்தா எழுபதுகளில் உண்டாகி வந்தவர்களில் மறுக்க முடியாத மனவியல் மேதை. அவருடைய கவிதைகள் பெரும்பாலும் சொல்லற்றவர்களின் வழக்காடல்களாக அமைந்தன.

ராஜசேகர் அடையாளம் காட்டித் தான் பல கவிதைகள் எனக்கு அறிமுகமாகின. இந்தப்பக்கம் ஆத்மாநாம் அந்தப் பக்கம் மேத்தா என்று இரண்டு திசைகளில் எண்ணற்ற சாலைகளைத் திறந்து தந்தவன் சேகர் தான். வயது ஒரு தடையாக ஒருபோதும் இருந்திடவில்லை. நானும் அவனும் வாடா போடா என்றானது என் கல்லூரி ப்ரவேசத்தின் போது நிகழ்ந்தது. அக்காவுக்கு ஷாக் என்றால் நிசமாகவே ஷாக் தான். அதென்ன அண்ணனை நீ அவன் இவன்னு ஏகத்துக்குப் பேசுற என்று நிசமாகவே சண்டைக்கு வந்தாள். சேகர் எதையும் பொருட்படுத்தவில்லை. அவனது வயதுச்சமனில் ஆயிரம் நண்பர்கள் இருந்தாலும் இசை கவிதை ரசனை என்கிற புள்ளிகளில் என்னைத் தேடி வந்த தேவதை சேகர். மென்மையான அதே நேரம் விடாப்பிடியான குரலும் கொள்கைகளும் கொண்டவன்.

மூத்த சகோதரன் என்பதெல்லாம் கட்டுச்சுவர் கொண்ட வார்த்தைகள். எங்களுக்குள் மிகச்சமமான சினேகம் இருந்தது. மொட்டை மாடி ராஜாஜி பார்க் பெரியார் பஸ் ஸ்டாண்டின் காம்ப்ளக்ஸ் படிக்கட்டு மதுரையின் எண்ணற்ற தியேட்டர்கள் திருநகரின் அண்ணா பூங்கா தொடங்கி அழகர் கோயில் தேனி என நினைவுகளெல்லாம் எத்தனையோ சந்திப்புகள் கடிதங்கள் கவிதைகள் சண்டையிட்டாலும் தேடி வருவான். பேசாமலே சினிமாவுக்கெல்லாம் சென்று திரும்பி இருக்கிறோம், வந்ததும் அம்மாவிடம் படத்துக்குப் போலாம்னு வந்தேன்மா என்பான். நான் அம்மாவிடம் என்ன படம்மா என்பேன். சொல்லப்பட்டதும் ரெண்டு பேருமே கிளம்பிச் செல்வோம். நடுவில் டீக்கடையில் ஒன்றாக தேனீர் அருந்துவதெல்லாம் கூட நடக்கும். ஒரே வண்டியில் திரும்பி வந்ததும் அம்மாவிடம் அம்மா கெளம்புறென்மா என்று பொறுப்பாக விடைபெற்றுக் கிளம்புவான். இரண்டு கரப்பான் பூச்சிகளாகவே எங்கள் கோபத்தைப் பார்த்து வியப்பாள் அம்மா.

அக்காவின் வகுப்புத் தோழி ஒருவரை ஒருதலையாய்க் காதலித்தான் சேகர். அந்த இரண்டு பேர் வாழ்க்கையில் சேர்ந்திருந்தால் கலைடாஸ்கோப்பின் முன் பின் சித்திரங்களில் ஏதோ ஒன்று மையப்பட்டிருக்கும். நடவாததால் வேறொன்று வாழ்க்கையானது. சில்லு சில்லாய்த் தான் நொறுங்கியதைக் கூட ரசனையாய் ஒரு நிகர் இன்பமாய் மாற்றிக் காட்டியவன் சேகர். அவனைக் காதலிக்கவில்லை என்ற ஒரே காரணத்துக்காகவே அந்தப் பெண்ணை என்னால் ஆன அளவு மனமுழுக்க வெறுத்திருக்கிறேன் நான். ஒரு தலையாய்க் காதலிப்பது தானாய் வாய்த்தாலொழிய எல்லோர்க்கும் நிகழாத பேரின்பமாகவே படுகிறது. தான் நிகழ வேண்டிய மனிதர்களை நிகழ்த்த வேண்டிய வதங்கல்களைக் குறித்த முழுத் திட்டமும் கொண்டது. சென்ற நூற்றாண்டின் விழுமியங்களில் முதன்மையானது. இப்போதெல்லாம் முற்றிலும் இல்லாமர் போயிருப்பது ஒரு தலைக் காதல் சார்ந்த பெருவாதை.

எதையும் ரசிப்பதற்கான அளவற்ற மனமும் அந்தரங்கமான குரலும் சேகரின் தனித்துவங்கள். சுஜாதா கமல் பாலகுமாரன் ஆத்மாநாம் கல்யாண்ஜி பசுவய்யா ஞானக்கூத்தன் ஜெயமோகன் சாரு பிரான்சிஸ் கிருபா இளையராஜா ஸ்ரீதேவி ஷோபா நந்திதா தாஸ் எனப் பலரையும் சேகர் பாராட்டத் தொடங்குவது ஒரு சொல்லைக் கொண்டு தான். கலக்கல்….என்பான். அது தான் அவன் மனஸ்தானின் ஞானபீட சாகித்ய அகாதமி விருதுகளெல்லாமும். கலக்கல் என்ற சொல் அவன் எனக்குள்ளும் விதைத்தது. இன்றைக்கும் எனையறியாமல் கலக்கிட்டாண்டா என்கிறென். யாரையாவது. கூடவே சேகரின் ஞாபகமும் ஒரு நாய்க்குட்டி போல் மன்சைப் பிறாண்டுகிறது. எந்தப் பிரச்சினைக்கும் அவனிடம் ஒரு தீர்வு இருக்கும். அறிவும் உணர்வும் கலந்து விலகும் ஒரு நேர்த்தியான புள்ளியிலிருந்து சிந்திக்கத் தொடங்குவது சேகரின் ஸ்டைல். ரசனைகள் விருப்பங்கள் என்பனவற்றையெல்லாம் தாண்டி சேகர் தன் ஆளுமையாலும் எனக்குள் பல கலயங்களில் நிரம்பியிருப்பவன்.

சேகர்,கணிதம் படித்து விட்டு ஸி.ஏ எனப்படுகிற பட்டயக் கணக்காளருக்கான படிப்பில் சேர்ந்த முரணை வியப்பேன். வருடங்களைத் தின்று செரித்து இன்றைக்கு சேகர் சென்னைமாநகரத்திலே ஒரு ஆடிட்டராக ஒளிர்கிறான். காலம் யார்க்கெல்லாம் எந்தெந்தக் கரைகளை வைத்திருக்கிறதோ அவை தப்பால் கால் நனைக்கும் தானே? இன்றைக்கும் எங்காவது எப்போதாவது பிறழ் குறுஞ்செய்தி ஒன்றென சேகரின் அட்டெண்டன்ஸ் நிகழும். என்ன பண்றே என விட்ட இடத்திலிருந்து குரல் ஒலிக்கும். சீக்கிரமே வந்துர்றேன் என்பான். ஒரு வசந்தகாலத்தின் ஞாபக ஒற்றை சேகர். என் மனதை வரைந்து பார்த்தால் அதில் சேகரின் சாயல் நிறையத் தெரியும்.

இந்த அத்தியாயத்தைப் பற்றியும் அவனுக்குக் குறுஞ்செய்தி அனுப்புவேன்.

“ரவீ…சீக்கிரமே வந்துர்றேன்” என்பான்.