சமோசா

குறுங்கதை
சமோசா


திடீரென்று அவனுக்குத் தோன்றியது. ஆகச்சிறந்த சமோசா எது..?

உலகின் உத்தமமான சமோசாவைத் தேடத் தொடங்கினான். சமோசா கிடைக்கும் அத்தனை நாடுகள் நகரங்கள் என எல்லாவற்றையும் அலசித் தீர்த்து விட்டான். சமீப வருடங்களில் அவனுடைய பேருணவாக பெருந்துயரமாக தீராக்கனவாக நில்லாச்சொல்லாக எப்போதும் கேட்கின்ற கட்டளை ஒன்றினைப் போல் அந்த உன்னதமான சமோசா மீதான தேடுதல் வேட்கை மாறிப் போயிருந்தது. எங்கும் சமோசா எதிலும் சமோசா என்று அலைந்து கொண்டே இருந்தான். ஒரு நாள் அவனது காதலி அவனிடம் கத்தினாள். நீ தேடுவது இல்லாத ஒன்றை மேலும் அப்படி இருக்கவே முடியாத ஒன்றினைத் தேடுகிறாய். அது உனக்குக் கிடைக்கப் போவதில்லை என்பதல்ல. நீ உன்னை ஒரு மாபெரும் சமோசா செய்து அதனுள் உன்னை மறைத்துக் கொண்டபடி கொதிக்கும் கொப்பரையில் குதிக்கவும் தயங்க மாட்டாய்.ஒன்று மட்டும் நினைவில் கொள். வெந்து முடித்த பின்னும் உன் ஆன்மாவின் ஏதோவொரு துகள் அந்த சமோசா என்னவாக இருக்கிறது என்று பார்த்தபடி தான் இருப்பாய். இந்த ஜென்மத்திலிருந்து விடுபட்டு அடுத்த ஜென்மத்துக்குள் நுழையும் தருவாயில் கூட உன் எண்ணமெல்லாம் சமோசா பற்றித் தான் இருக்கப் போகிறது பார் என்று மூச்சிரைக்கப் பேசினாள்.

அவனுக்கு சுய இரக்கத்தைத் தாண்டிய இரக்கம் அவள் மீது வந்தது. நான் என்ன செய்தாவது இதிலிருந்து வெளியேறுவேன். கொஞ்சம் எனக்கு நேரம் கொடேன் நீ என் டார்லிங் அல்லவா எனக் கொஞ்சினான். இது பொய். ஆனால் எனக்குத் தேவை இதன் உண்மை என மூக்கை உறிஞ்சிக் கொண்டாள். அழகை விட அதிகமான அன்பைக் கொண்டு அவன் மேல் மழையாகிறவள். அவளுக்காக எப்படியாவது மீண்டும் சாதாரணமாக மாறியே தீர்வேன் என சூளுரைத்துக் கொண்டான்.

அதற்கு மறுதினம் அதிகாலை என்னவோ சப்தம் கேட்கிறதே என விழித்துப் பார்த்தவள் என்ன மேன் எங்கே கெளம்பிட்டே என்றாள்.முந்தைய தினம் இரைந்ததற்கு அப்பால் எதோவொரு நிம்மதி அவளுக்குள் படர்ந்திருந்தது. தனக்குத் தேவையான ஒளியைக் கடும் இருளின் ஆழத்திலிருந்தே உண்டாக்கிக் கொள்ளக் கூடிய தேர்ந்த கண்களைப் போல் வாழ்வின் குழப்பச்சுழலிலிருந்தே சந்தோஷத்தின் முதல் வாசனையை உருத்தர முனைந்தாள். டியர் எனக்கு ஒன் மந்த் டைம் கொடு. நான் வெளிய போறதே திரும்ப உங்கிட்ட வர்றதுக்காகத் தான். எங்காச்சும் போறேன்.என்னமாச்சும் பண்றேன். வேற விஷயம் எதுலயாச்சும் மூழ்கி இந்த சமோசாவுலேருந்து வெளிய வர்றேன். அப்பறமா உன்னைத் தேடி வருவேன் என் செல்லமே என்று ரொமாண்டிக் கொஞ்சலொன்றை உதிர்த்தான். வேறு யாரையாவது காதலிக்க நேர்ந்தால் கம்மியாகக் காதலி என்றாள். உதடுகளால் உதடுகளை அழிக்க முயன்று தோற்றார்கள். அவன் கிளம்பும் போது அவள் கண்கள் லேசாய்க் கலங்கின.

ஒரு மாதத்துக்கு இரண்டு தினங்கள் முன்னமே வந்து சேர்ந்து விட்டான். அவளுக்குப் பல பரிசுகளை அள்ளி வந்திருந்தான்.
“நிசமாவே உன்னை ரொம்ப மிஸ் பண்ணேன் தெரியுமா?” என்றாள். உடனே எல்லா சன்னல்களையும் சார்த்தி விட்டு விளக்குகளை எல்லாம் புறக்கணித்து விட்டு வழங்கப்பட்ட இருளில் தத்தமது ஆழங்களை மீண்டும் சில முறை தேடிவிட்டுப் பிறகு ச்சீ..நீ ரொம்ப மோசம் நீயும் தான் என்றவாறே பகலுணவைத் தயாரிக்கப் போனார்கள்.

பாதி சமையலில் இருக்கும் போது இயல்பாகக் கேட்டாள். எப்டிடா உன் சோமாஸ் வெறிலேருந்து தப்பிச்சே என்றாள். அவன் கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளவில்லை. யூ சீ பேபி…நாம இல்லாத ஒண்ணை அதோட சிறப்பைத் தேடணும்னா நமக்குள்ளே தான் தேடணும்னு ஒரு ஃபாரீன் சாமியார் ஆடிட்டே குறி சொல்றப்ப கேட்டேன். தென் ஐ ஸ்டாப் செர்ச்சிங் இட் என்றான்

அப்பறம் என்றாள்.

என்ன அப்பறம்.. பதிலுக்குக் கேட்டான்

“நீ ஊர்ல இல்லாதப்ப மிட்-டவுன்ல ஒரு கேடரிங் இன்ஸ்ட்யூட்ல ஏழே நாள் சமோசா மேகிங்க்ல ஒரு க்ராஷ் கோர்ஸ் முடிச்சிட்டு வந்திருக்கேன். இப்ப எனக்கு நாப்பது வகையான சமோசா செய்யத் தெரியும். ஒவ்வொண்ணா பண்றேன். நீ சாப்ட்டுப் பார்த்துட்டு எது சூப்பர்னு சொல்லு. தட்ஸிட்” என்றாள்.

“ம்ப்ச் வேணாம்”  முகம் வாடினவளாய் “ஏண்டா?”

“டார்லிங்,நானும் இதே மாதிரி ஒரு கோர்ஸ்ல சேர்ந்தேன். பாதிலயே வந்துட்டேன். சமோசாவைப் பார்த்தாலே வெறுப்பாய்டிச்சி” என்றான்.