குறுங்கதை
நகை


கிறிஸ்டோ சினிமாவைக் காதலித்தவர். ஒரு வகை தவம் மாதிரி சினிமாவை எண்ணியவர். திரைப்படத்தை எப்படிப் பார்க்க வேண்டும் என்பதில் அழுத்தமும் திருத்தமுமான பல கோட்பாடுகளைக் கொண்டிருந்தார். இண்டர்வல்லில் அவருக்கு வாய் பேச வராது. அதே போல் காதுகளும் கேட்காது. எங்காவது தூரமாய் ஒரு மரத்தடி அல்லது சைக்கிள் ஸ்டாண்டில் சென்று நின்றுகொள்வார். ” எல்லாருக்குள்ளேயும் ஒரு விநியோகஸ்தர் இருக்காங்க. ரெண்டு மூணு படமாச்சும் ஹிட் குடுத்த டைரக்டர்ஸாவே மாறித் தான் ஒவ்வொரு ரசிகனும் கருத்து சொல்ல நினைக்கிறான். இதில இடைவேளைல படத்தோட மிச்சத்தைப் பற்றிப் பேசுறேன்னு அவனவன் சொல்றதெல்லாம் வன்முறை. மனம் குழம்பிவன் சவரம் செய்தாற் போல ரத்தக்களறியா மாறிடும் மனசு. அதான் தனியாப் போயி நின்னுக்கிறது நல்லது. மேற்கில இண்டர்வல் கிடையாது. இங்க கடலைமிட்டாய் விக்கிற வெறி மெல்ல மெல்ல பிக் பாக்கெட்டா மாறி இப்ப வழிப்பறியாவே ஆய்டிச்சி. இண்டர்வல் இல்லாம படம் காட்டுறதா சொல்லி டபுள் டிக்கட் கூட வசூலிக்கலாம். ரசிகன் தருவான். அல்லது இயற்கை உபாதைகளுக்கு போய் வர்றதுக்குப் பத்து நிமிஷம் படத்தை நிறுத்தியே தீரணும்னு முடிவெடுத்தா தின்பண்டங்களை விக்கக் கூடாது. வாயை மூடிட்டு பார்த்தாத் தான் மனசைத் திறக்கவே முடியும். பாப்கார்னாவது பான்பராக்காவது எல்லாமே சினிமாவுக்கு எதிரிதான்” என்பார். ஜான் புண்ணியாளன் தொடங்கி அமுதமொழி வரை வேணு கலாநிதி தொடங்கிப் ஸ்ரீ சம்ஸ்கிருதன் வரை பலரும் கிறிஸ்டோவின் ஆதர்சம். அவருக்குள் பல்வேறு கனவுகள் இருந்தன. எல்லாமே திரைப்படுத்துவதற்கான கனவுகள். துறவறம் போவதாயிருந்தாலும் சினிமாவைத் துறவேன் என்று திரிந்தவர். ஒரு படத்தை எப்படியெல்லாம் புரிந்துகொள்ளலாம் என்பதைப் பற்றி எங்களில் பலருக்கும் வகுப்பற்ற வகுப்புகளை எடுத்திருக்கிறார். அவரிடம் பெற்றது நிறைய.

அவர் என்னிடம் அதிகம் பேசியதற்குக் காரணக்கூடுதல் ஒன்று இருந்தது. அவரது சைகைகள் எனக்குத் தான் புரியும் என்பது.

அவர் குடியிருந்த ரூம் மஞ்ச வீடு மூன்றாவது மாடி தனியறை ஜன்னலிலிருந்து பார்த்தால் எதிரே சூடாமணி டீஸ்டால். அங்கே அவருக்கு நிரந்தரக் கணக்கு இருந்தது. மாடி ஜன்னலைத் திறந்ததும் நாலு முறை கைதட்டுவார். அந்தக் கடைக்கு நான் வந்து விட்டேன் என்பதைத் தெரிந்ததும் அப்படித் தட்டுவார். நிமிர்ந்து பார்த்தால் முதலில் மூணு விரல் காட்டுவார். அது அவருக்கு வில்ஸ் சிகரட். அடுத்தது இரு விரல்களை நீட்டி கிளிப் போலாக்கினால் அது அரை டீ வேண்டும் என்பது. மூன்றாவதாக முயல் போல் விரல்களால் அபிநயித்தால் அது வடை என்று அர்த்தம். ஒன்று என்றால் அதோடு சைகை முடியும். இரண்டு விரலைக் காட்டினால் ரெண்டு வடை. இத்தனையும் சொன்னதும் நான் சிரமேற்கொண்டு கடைக்காரரிடம் எனக்கும் முனீசுக்கும் தேவையானவற்றை சேர்த்து சொல்லிவிட்டு சிகரட்டை மட்டும் கைப்பற்றிக் கொண்டு மாடி ஏறிப் போய் விடலாம். கடைப்பய்யன் வந்து டீ வடை இத்யாதிகளைத் தருவான். அந்தக் கடைக்காரர் ரோஷப்பட்டு டெலிபோன் வாங்கும் வரை நான் தான் இருவருக்கும் இடையே டெலிகம்யூனிகேட்டிக் கொண்டிருந்தேன். செலவைப் பற்றிக் கவலைப்படாதவர். ஊரில் ஓரளவு வசதி போல. பணத்தோடு வந்தால் எல்லா ஊருமே வசந்தாஸ்ரமம் தான் இல்லையா?

டைரக்டர் நம்பிவாசனின் படங்கள் வெளியாகும் போதெல்லாம் திருவிழா தான். அதென்னவோ கிறிஸ்டோவுக்கு நம்பியைப் பிடிக்காது. இந்தப் பரந்த உலகத்தில் எல்லோருமே வேண்டியவர்கள் என்று வாழத் தெரிந்த யோகியென்றாலும் அவர் மனமுவந்து வெறுத்துக் கொண்டிருந்தது நம்பிவாசன் படங்களைத் தான். நம்பி ஸார் படம் வருது பார்ப்பமா என்பார். அந்தப் படங்களுக்குச் செல்லும் போது கிறிஸ்டோ வேறொருவராக மாற்றமுறுவதைப் பல தடவை கண்ணுற்றிருக்கிறேன். டைடில்ஸில் நம்பிவாசன் என்று படரும் போது ஆரம்பிக்கும் அவரது அலப்பறை. விஸில் தான் சப்தம் தான் வார்த்தைக்கு வார்த்தை நக்கலும் கிண்டலும் எள்ளலும் எகத்தாளமுமாக என்னென்னவோ சொல்வார். படம் சிறப்பாக இருக்கும் பட்சத்தில் முடிந்த மட்டிலும் கீறிப்பார்ப்பார். படம் கொஞ்சம் அப்படி இப்படி சுமாராய் இருந்து விட்டால் அவ்வளவு தான். மனுஷனுக்குப் பேய் பிடிக்கிறது அம்மாதிரியான தருணத்தில் தான். இதோட அவுட்டு என்று கங்கணம் கட்டிக் கொண்டு ரொம்பவே மலினமாய்த் தரையினும் கீழாய்ச் சென்றெல்லாம் பேசுவார். முனீஸ் நான் பகவதி அருண்திலகன் சர்வேஷ் என ஏரியா பசங்கள் எல்லாருக்குமே அந்தக் கணங்களின் புதிர்மை வியப்பாக இருக்கும். சில சமயம் எனக்கு வேதனையாகவும் இருக்கும்.

ஒரு நாள் கேட்டேன். என்ன கிறிஸ்டோ ரெண்டு மனுஷனாவே தெரியுறீங்க என்று விஷயத்தை விளக்கிச் சொன்னதும் ஆமாங்க நீங்க சொல்றது சரிதான். நான் முதன்முதல்ல சினிமாவுக்குள்ற வந்தப்ப நம்பிவாசன் இண்டிபெண்டண்ட் சினிமா மேக்கரா அலைஞ்சிட்டிருந்தாப்டி. ரெண்டொரு தடவை பார்த்துப் பேசிருக்கேன். சட்டுன்னு ஒரு படம் அமைஞ்சது அதும் தமிழ்ல இல்ல மராத்தில. அந்தப் படம் சுமாரான ஹிட் தான். ம்யூசிக் கொஞ்சம் தூக்கி விட்றுச்சின்னு வைங்களேன். அப்பறம் மலையாளத்ல ஒண்ணு தெலுங்குல ஒண்ணு கன்னடத்துல ரெண்டுன்னு எல்லாமே நல்ல படம்னானுங்களே தவிர அவரு செட்டில் ஆவலை. அப்ப தமிழ்ல ஒரு படம் பாதி நிலவுன்னு கிடைச்சது. அது நம்பிவாசன் மனசுல நினைச்சிட்டிருந்ததுக்கு நேர் மாறான சினிமா. பேய் ஓட்டம் ஓடிச்சி. தமிழ்ல வரிசையா படம். திடீர்னு ஒரு நா பார்த்தா பான் இண்டியா டைரக்டரா எங்கயோ போயிட்டாப்ல. எனக்கும் அவருக்கும் எந்தப் பகையும் இல்லை. நான் பார்க்க சாதாரணமா டூவீலர்ல வருவாப்ல. அதிராமப் பேசுவாப்ல. சின்னதா ஒரு ஸ்மைல். ஜோக் சொன்னாலும் அதே ஸ்மைல் தான். உன்னையக் கொன்றுவேன் நம்பின்னு சொன்னாலும் அதே ஸ்மைல் தான். அந்த அமைதியும் ஸ்மைலும் தான் அந்தாளோட பெரிய பலம். எங்கயோ (வானைக் காட்டி) போயிட்டாப்ல. நம்ம பார்க்க ஒருத்தன் ரொம்ப வளர்ந்திட்டான்னு வைங்களேன். அது ஒரு தேவையற்ற வலியாக் கூடவே வரும். நமக்குத் தெரியாதவன் பெரிய பணக்காரனா ஆனா நமக்கு வருத்தம் வராது. நம்ம ஊர்ல சாதாரணமா இருந்தவன் கார்ல போனா நமக்கு எரியுது. இது மனுஷனோட பலவீனம். என்னால நம்பியோட போட்டி போட முடியலை அந்த வயித்தெறிச்சலைத் தான் இப்பிடி காமிச்சுக்கிறேன் என்றார்.

நான் அப்படியே அமர்ந்திருந்தேன். என்ன சொல்வது எனத் தெரியவில்லை. சொல்வதற்கு எதுவும் இல்லை எனத் தோன்றியது.

கொஞ்ச நேரம் கையில் கிடைத்த புத்தகத்தை புரட்டிக் கொண்டிருந்துவிட்டு ஸ்னேகபாவத்தோடு எழுந்து கொண்டேன். தோள்களைக் குலுக்கியபடி ஓகே கிறிஸ்டோ ரொம்ப நாளா கேட்கணும்னு நினைச்சேன். கேட்டுட்டேன். எனிவே உங்க நேர்மையான பதிலுக்கு தேங்க்ஸ் என்றேன்.

வாசலைத் தாண்டும் போது கிறிஸ்டோ என் முதுகில் சொன்னார்

” நண்பா…நம்பிவாசன் படம் ரிலீசப்ப நான் நடந்துக்கிறேன் இல்லியா…அது தான் என்னோட நிஜம். மத்த எல்லாப் படங்கள் வரும்போதெல்லாம் தான் நான் நடிக்கிறேன். என் நிஜம் நம்பிவாசனுக்கு மட்டும்னு அலகேட் செய்திட்டேன். அதான் நிஜத்தோட முடிவு” என்றார்.

திரும்பி லேசாய்ப் புன்னகைத்தேன். நம்பிவாசனின் புகைப்படங்கள் தோறும் நான் பார்த்த அதே போன்ற புன்னகை. நான் ஒன்றும் வேண்டுமென்றே அப்படி நகைக்கவில்லை.


 

Tags: