சமீபத்துப்ரியக்காரி
10 நனவிலி


தனிமையென்றவொன்று
எப்படியிருக்குமென்று
ருசித்துப் பார்க்கமட்டுமேனும்
ஒரேயொரு கணம்
அதனொரு துளி
அதன் துளியினொரு துகள்
அந்தத் துகளினொரு அணுவளவேனும்
என்னுள்ளிலிருந்து
வெளியேறிப் போய்வாயேன்
என்று இறைஞ்சியிறைஞ்சிக்
கேட்டனன்.
“அப்படியே”
எனச்சொல்லிச் சென்றவள்
திரும்பி வருமட்டிலும்
தன்னகத்தின் வாயிலில்
முழங்கால்களைக் கட்டினபடி
அமர்ந்திருந்தவனைப் பார்த்து
“என்னவாயிற்று உன் உலாவல்?”
என்றவளிடம்
பொய்க்கோபம் காட்டி முறைத்தபடி
இவ்வாறு பகிர்ந்தனன்
“நீயற்றவென் தனிமையின் பேர் நனவிலி”