கதைகளின் கதை 7

கதைகளின் கதை 7
இரக்கமற்ற நிழல்கள்


என்.ஸ்ரீராம் ஈரோட்டுக் காரர்.1972ஆமாண்டு பிறந்தவர்.அத்திமரச்சாலை என்னும் நாவலையும் மீதமிருக்கும் வாழ்வு வெளிவாங்கும் காலம் மாடவீடுகளின்
தனிமை கெண்டை மீன் குளம் ஆகிய சிறுகதைத் தொகுதிகளையும் எழுதியவர்.தொலைக்காட்சி சேனல் ஒன்றில் பணிபுரியும் ஸ்ரீராம் இலக்கிய சிந்தனை பரிசு சுஜாதா விருது மற்றும் கணையாழி வாசகர் வட்டப் பரிசு ஆகியவற்றைப் பெற்றவர்.என்.ஸ்ரீராம் படைப்புக்கள் தோழமை பதிப்பகம் வெளியீடாக 2015ஆமாண்டு வரையிலான அவரது சிறுகதைகள் குறுநாவல்கள் மற்றும் ஒரு நாவல் ஆகியவற்றின் திரட்டாக வெளியாகி இருக்கிறது.(விலை 450 ரூ.)
                                             என்.ஸ்ரீராம் மிகக் காத்திரமான கொங்கு நிலக் கதைகளைத் தமிழில் எழுதி வருகிற நவீன எழுத்தாளர்களில் ஒருவர். ஸ்ரீராம் நவ வாழ்க்கையின் கலைந்து கொண்டே இருக்கக் கூடிய மதிப்பீடுகளை  நகரவாழ்க்கையின் மத்தியில் நின்றுகொண்டு இழந்து பல காலம் ஆன திரும்புவதற்கான சாலைகள் அற்ற கிராமங்களைத் தன் கதாகளனாகத் தொடர்ந்து தேர்வெடுத்து வருகிறவர்..ஸ்ரீராமின் கதைகள் காட்சிப் பூர்வமானவை.அவற்றின் மனிதர்கள் நாளும் எதையாவது சாட்சியப்படுத்திக் கொண்டும் மறுதலித்துக் கொண்டும் இரண்டு அபத்தங்களுக்கு இடையிலானவர்கள்.குற்ற உணர்வின் பின்னதான அச்சத்தின் நூல்மீது சதா ஆடிக் கொண்டே இருக்கிற மனசாட்சி பொம்மைகளாக நடுநடுங்கிக் கொண்டும் இருப்பவர்கள்.
Amazon.in: Buy N.Sriram Padaipugal என்.ஸ்ரீராமின் படைப்புகள் Book Online at Low Prices in India | N.Sriram Padaipugal என்.ஸ்ரீராமின் படைப்புகள் Reviews & Ratings

                   தமிழ்ச் சிறுகதைப் பரப்பில் கிராமம் சார்ந்த கதைகளை உருவாக்கித் தருவதன் மூலமாக செல்வாக்குப் பெற்றவர்கள் பலர்.கிராமம் சார்ந்த கதைகளின் முக்கியத்துவம் வெறும் நினைவேந்தல்களாகத் தனி மனிதர்களின் அகத்தளவு சுருங்கிவிடாமல் ஒரு காலம் சார்ந்த நில அடிப்படையிலான வாழ்வியலைக் கலைப்படைப்பாக மாற்றுவதன் மூலமாகக் கூட்டு ஞாபகத்தை உயிர்த்துவிடுகிற முயல்வுகளாகவே இக்கதைகளைக் கொள்ள முடியும்.அப்படியான கிராமம் சார் கதைகளை எழுதிக் கொண்டிருப்பவர்களில் மிக முக்கியமான ஒரு கதை சொல்லி என்.ஸ்ரீராம்.
          கிராமக் கதைகள் மொத்தமாகவும் தனியாகவும் அழிதலை முன் நிறுத்துபவை.அவலச்சுவை என்பதைத் தாண்டி  இன்னும் எஞ்சியிருப்பவற்றைப் பத்திரம் செய்து கொள்வதற்கான கடைசிக் கட்டியத்தை உரத்துச் சொல்பவை..நகரமயமாக்கலும் உலகமயமாக்கலும் கிராமங்களின் கழுத்தைப் பற்றி நெறிக்கத் தொடங்கி ஆறுவழி நான்கு வழிச் சாலைகளும் செல்ஃபோன் கோபுரங்களும் இரக்கமற்ற நிழல்களை உற்பத்தி செய்து இருண்மையின் அச்சுறுத்தலை நிரந்தரமாகத் துப்பியபடி நின்றுகொண்டிருக்கும் வானளாவிய கட்டிடங்களும் என கிராமங்களின் அழிதல் என்பது அங்கே வாழ்ந்தவர்களின் அழிதல் மாத்திரம் அல்ல.முன்பிருந்த காலத்தின் அழிதல்.நிலத்தின் அழிதல் கலைகளின் அழிதல் மற்றும் மானுடம் தன் மீதே தொடுத்துக் கொள்ளும் அர்த்தமற்ற வன்முறையின் சிதைவுகள் எனப் பல பரிமாணங்களில் விரியத் தக்கவை.
              தொன்மங்களிலிருந்து ஒரு மொழி எப்போது விலக்கம் கொள்கிறதோ அப்போது அந்த மொழியைப் பேசுகிறவர்களின் அழிதல் தொடங்குகிறது.ஒரு மலையேற்றம் போல் இதனைச் சொல்லலாம்.தொன்மங்களிலிருந்து விடுபடுதல் என்பது முதல் நிலை.அடுத்த நிலை அவற்றுக்குச் சற்றும் சம்மந்தமே இல்லாத சொற்களுக்கு ஒப்புக் கொடுத்தபடி மொழி மீதான சிதைவுகளை அனுமதித்தும் நிகழ்த்தியும் ஊக்கியும் நகர்தல் அடுத்த நிலை.மொழி தன்னைத் தானே இலகுவாக்கியபடியே அடுத்த காலத்தினுள் புகும் வல்லமை கொண்டது.அந்த வகையில் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாகத் தமிழ் மொழியில் உலகமயமாக்கல் நிர்ப்பந்திக்கும் எல்லைச் சுவர்களற்ற பொது உலகம் சார்ந்த கதைகளின் வருகை அதிகரிப்பும் அவற்றுக்கு எதிர்ப்பட்டியலாக தொன்மம் சார்ந்த கதைகளின் பட்டியலையும் நம்மால் தயாரிக்க முடிகிறது.
         தொன்மங்கள் வாய்வழிக்கதைகளாகத் தப்பி வந்த காலகட்டத்தை விட எழுத்தும் மொழியும் இத்தனை அறிவியல் உபகரணங்களின் வருகை மற்றும் பயன்பாடுகள் அதிகரித்து விட்ட உத்தமக் காலத்தில் தங்களைத் தப்புவித்துக் கொள்வது கடினமாக மாறியிருக்கிறது.அதற்கான காரணமெய்மை எதையும் போற்றிக் கொள்கிற மனங்கள் இப்போது எல்லாவற்றையும் மறுதலித்து அயர்கிற மனங்களாகச் சிதைந்து விட்டதைச் சொல்லலாம்.அந்த வகையில் வட்டாரம் சார்ந்த தொன்மங்கள் நம்பிக்கைகள் சடங்குகள் விழாக்கள் ஆகம விதிகள் என்பனவற்றையெல்லாம் குறிப்புகளாக முன்வைப்பதைத் தாண்டித் தத்தமது கதைகளின் ஊடுபாவுகளாய் அவற்றை ஆக்குகிற கதைசொல்லிகள் தொன்மங்களை அழிதலினின்றும் ஒத்திப் போட்டுக் காத்து இரட்சிக்கிற காவலர்களாகவும் செயலாற்றுகிறார்கள்.அந்த வகையில் என்.ஸ்ரீராமின் ஆக அனேக எல்லாக் கதைகளுமே கொங்கு வட்டார கிராமங்களை அவற்றின் மனிதர்களை அவர்சார்ந்த நம்பிக்கைகளை அவர்தம் வாழ்வியல் தொகுப்புக்களாக நம்முன் காணக் கிடைக்கின்றன.எழுத்தென்பது மௌனத்தின் உரத்த சாட்சியங்கள் என்கிற அளவில் ஸ்ரீராமின் கதைகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
           என்.ஸ்ரீராமின் சிறுகதைகளில் என்னை மிகவும் கவர்ந்த ஆதாயவாதிகள் என்னும் கதையை இங்கே பார்க்கலாம்.
                    கதை தொடங்கும் போது கதை சொல்லியும் கந்தசாமியும் ஊர் அடங்கிய ஒரு இருளிரவின் மத்தியில் மெல்லப் புறப்படுகிறார்கள்.அவர்களது பேச்சிலிருந்து ரெண்டு பேரும் சென்றுகொண்டிருப்பது ஊர்க்கவுண்டரின் தோப்பை நோக்கி என்பது புரிபடுகிறது.தங்களுக்குள் எச்சரித்துக் கொண்டும் கிசுகிசுத்துக் கொண்டும் செல்லும் அவர்களில் இன்னும் எத்தனை தூரம் என்று வினவுகிறான் கதைசொல்லி.இரண்டு காட்டைத் தாண்டினால் தோப்பும் ஆறும் தெரியும் என்கிறான்.
          பிடிக்கும்போது சத்தம் போடாதா என்று கேட்கிறான் அதெல்லாம் போடாது.அதுக்குத் தான் ஈரத்துணி வெச்சிருக்கம்ல என்று சமாதானம் சொல்கிறான் கந்தசாமி.காவலுக்கு யாராவது இருந்துவிட்டால் என்ன செய்வது என்று கேட்டதற்கு அலட்சியமாக அதெல்லாம் வேற யாரும் இருக்கமாட்டானுவ.கருமுட்டியும் அழகிரியும் தான் குடிச்சிட்டு கெடப்பானுங்க என்று சொல்கிறான்.மெல்ல ஊர்க்கவுண்டரின் தோப்பை அடைகிறார்கள்.அடைந்த பின்னும் சுவரேறிக் குதிக்க நேரம் பார்க்கிறான் கந்தசாமி.அப்பறம் எல்லா சேவலும் தூங்கி எழுந்து கூவிரும் என்று எச்சரிக்கிறான் கதைசொல்லி.அவனை சமாதானப் படுத்தி ஒருவர் பின் ஒருவராகச் சுவரேறி தோப்பினுள் குதிக்கிறார்கள்.காத்திருக்கிறார்கள்.
     அந்த ஊரே சேவல் திருட்டால் பாதிக்கப் பட்டுக் கிடக்கிறது.இன்று நேற்றல்ல.கிட்டத் தட்ட ஆறேழு மாதங்களுக்கு முன்னால் சின்னப்ப ஆசாரியுடைய வீட்டில் தான் முதன்முதலாகக் கோழிகள் திருட்டுப் போயின.இத்தனைக்கும் சின்னப்ப ஆசாரியின் வீடு பிள்ளையார் கோயிலுக்கு ஒட்டினாற்போல் இருப்பது.ரெண்டு சேவலும் ஒரு வெடையும் காணாமற் போனது கண்டு ஆசாரி அக்கம்பக்கத்தில் சொன்னார்.அப்போது அதை லகுவாக எடுத்துக் கொண்ட ஊரார் அடுத்தடுத்து கோழியும் சேவலுமாய்க் காணாமற் போனது கண்டு கொதித்தார்கள்.முன்பு காடழிந்த காலத்தில் எதாவது நாய்நரி தூக்கிச் சென்றிருக்கும் என்று எண்ணிய ஊரார் இது மனுஷ கைக்கார்யம் என்று முடிவான போது கொதிக்கத் தானே செய்வார்கள்..?
         குப்புசாமிக் கவுண்டரின் தோட்டத்துக் கோழிகள் காணம் என்றதும் ஊர்க்கவுண்டரிடம் முறையிடச் சென்றார்கள்.
  நீங்க எல்லாரும் வேய்க்கானமாயிருந்து திருடுறவன் யாருன்னு பார்த்துச் சொல்லுங்க.நா அவனே விசாரிச்சு போலீஸ்ல பிடிச்சி கொடுக்கறே என்று சொன்னதும் கூட்டம் மெல்லக் கலைந்தது,.மற்ற வகையறா திருட்டுப் பயல்களை எல்லாம் எண்ணி ஆளாளுக்கு ஒருவனைக் குற்றம் சாட்டினார்கள்.எவன் வீட்டில் கவுச்சி வாசம் வருகிறது என்று விசாரித்தார்கள்.ஊரே குழப்பத்தில் அலைந்தது.ஒரு துப்பும் கிட்டவில்லை.ரெண்டு நாள் கழித்து மேற்கே கோயில்பாளையத்தில் கோழி திருட்டுப் போயிருந்தது.ஊர்க்கவுண்டர் சமாதானம் படுத்திக் கொண்டிருந்தார்.கடைசியில் ஒரு வயதானவன் அவர் காலில் விழுந்து கதறினான் தொழிலாளி வீட்டுலயே திருடுனா நாங்க எல்லாம் இந்த ஊர்ல குடியிருக்கிறதா வேணாமா சொல்லுங்க சாமி..”
        அன்று இரவு ஊர்க்கூட்டம்.பக்கத்து ஊர்களிலிருந்தும் சனங்கள் கூடினர்.ஒரு முடிவும் எடுக்க முடியவில்லை.தினமும் கோழி காணாமற் போன சேதி வந்த வண்ணம் இருந்தது.அக்கம் பக்கத்த்து ஊர்களிலும் அரசல் புரசலாகக் கோழிகள் களவுபோயின.ஆளாளுக்குக் கோழிகளைக் காப்பாற்ற பீதி கொண்டு அலைந்தனர்.காவல் காத்தனர்.ஊர் ரோந்து போகத் தொடங்கின இளவட்டக் கூட்டம் ராவெல்லாம் சுற்றிப் பகலெல்லாம் தூங்கித் திரிந்தது.அவர்கள் ரோந்துக்கு எதிர்ப்பக்கம் எங்காவது களவு போகத் தான் செய்தன கோழிகள்.
            ஒரு தடவை சிக்காமல் தப்பித்த களவாளியை தப்ப விட்டதற்காகத் தங்களையே நொந்து கொண்டது ஊர்க்கூட்டம்.அவன் சாராயம் காய்ச்சுபவனாக இருப்பான் என்று சோசியம் வேறு.திருடன் கருமுட்டி மாதிரி தெரிஞ்சுது என்று கந்தசாமி இவனிடம் சொன்னான்.ரெண்டு பேரும் கருமுட்டி வீட்டில் இருக்கானா என்று போய்ப் பார்க்க அவன் இல்லை எனத் தெரிகிறது.ஒரு நாள் அழகிரி மூப்பன் தான் ஒரு கோணி நிறையக் கோழிகளோடு ஊர்க்கவுண்டர் வீட்டின் பின்வாசல் வழியாகப் புகுவதைப் பார்த்ததாக கந்தசாமியிடம் சொல்கிறார் குப்புசாமிக் கவுண்டர்.
 திருடச் சொல்வது ஊர்க்கவுண்டர்.அவருக்கும் இதில் பங்கிருக்கு.திருடித் தருவது அழகிரி மூப்பனும் கருமுட்டியும் என்று முடிவுக்கு வரும் இவனும் கந்தசாமியும் ஊர்க்கவுண்டர் வீட்டுக்கு ராப்போதில் செல்ல இவர்களை எதிர்பாராத கவுண்டர் வரவேற்று சகஜமாகப் பேசுகிறார்.அவர் தண்ணி அடித்துக் கொண்டிருந்ததால் கண்கள் சிவப்பேறிக் கிடக்கின்றன.இவர்களையும் கோழி வறுவல் தின்னச் சொல்கிறார்.ஏது மாமா கோழி எனக் கதைசொல்லி கேட்க நம்ம சகலையோட கோழிப்பண்ணையில பிராய்லர் கோழி நெறைய செத்துருச்சாம்.தந்தனுப்பிட்டாரு.இன்னிக்கு வேற சனிக்கிழமையா உங்கக்கா காரி தின்ன விடமாட்டா.அதான் பொறத்தால வச்சு வறுக்குறோம் என்று காரணம் சொல்கிறார்.
                இவர்கள் கோழி வேணாம் என்று மறுத்தும் விடாமல் உங்களை விட்டுட்டு நாமட்டும் தின்னா வயிறு வலிக்கும் என்று வற்புறுத்துகிறார்.இவர்களும் சாராயத்தைக் குடித்து விட்டு கோழியைத் தின்னுகின்றனர்.இது ப்ராய்லர் கோழி அல்ல நாட்டுக்கோழிக்கே உண்டான தனி ருசி என்பது தெரிந்தும் எதும் பேசாமல் சமாளித்து விட்டுக் கிளம்புகின்றனர்.
  ஊர் மந்தையில் கருமுட்டியைப் பார்த்துச் சாடையாகக் கேட்க முற்படுகிறான் இவன்.கருமுட்டி திமிராக ஆமாடா நானும் மூப்பனும் தான் திருடுறோம்.உன்னால என்ன செய்ய முடியுமோ செஞ்சுக்க என்று வீறாப்பாகப் பேசிச் செல்கிறான்.
       அப்புறம் தான் இந்தக் கதை துவங்குகிறது.
      இப்போது தங்கள் திட்டப்படி அழகிரி மூப்பனும் கருமுட்டியும் அசந்து போதையில் கிடக்கும் நேரம் ஊர்க்கவுண்டரின் தோப்புக்குள் நுழைந்த கந்தசாமியும் இவனும் வெற்றிகரமாகக் கோழிகளையும் சேவல்களையும் ஈரத்துணியால் பொத்தி சாக்கிலிட்டுக் கொண்டு போய் கருமுட்டியின் வீட்டுப் பின்பக்கம் சென்று படலைத் திறந்து உள்ளே சாக்கை வைத்து விட்டு வெளியே வீதியில் வந்து வடக்கு வளைவில் நின்று கொண்டு சப்தம் போட்டான்.திருடே திருடே கோழி திருடே என்று ஊரே கூடிவிட்டது.
       திருடன் யார்னு தெரிஞ்சுதா என்று கேட்க இருட்ல சரியா மொகம் பாக்கல.கருமுட்டியண்ண தோட்டத்துப் பக்கம் போனதைப் பார்த்தேன் என்று சொல்கிறான்.
இனி ஆதாயவாதிகள் கதை என்.ஸ்ரீராமின் வரிகளில்

      விடிந்ததும் போலீஸ் வந்தது.கருமுட்டியையும் அழகிரி மூப்பனையும் பிடித்துப் போயிற்று.அவர்களை ஜாமீனில் எடுக்க ஊருக்குள் யாரும் போகவில்லை.மீறிப் போனவர்களையும் ஊர்க்கவுண்டர் மிரட்டினார்.தண்டனை முடிந்து வெளியில் வந்த அழகிரி மூப்பன் வேறு ஊருக்குக் குடிபோய் விட்டான்.கருமுட்டி கிணற்று வெட்டுக்குப் போய்வந்து கொண்டிருந்தான்.
      இது நடந்த நாளிலிருந்து கோழிகள் எங்கும் திருட்டுப் போகவேயில்லை.கோழிகள் ஊரெங்கும் பெருத்துவிட்டன.ஊரடித் தோட்டத்தில் வெள்ளாமையை சேதாரமாக்கும் ஊர்க்கோழிகளுக்கு இப்போது கந்தசாமி மருந்து வைத்துக் கொண்டிருந்தான்.இவனுக்கு மட்டும் நிலா இறங்கிய நாளில் தோப்பில் கோழி பிடித்தது ஞாபகத்தில் வந்து கொண்டே இருந்தது.

             ஒரு பருவம் அழியும் காலத்தில் இந்தக் கதை தொடங்குகிறது.நீர் பொய்க்கையில் நிலம் சண்டித் தனம் செய்யும்.பணவரத்து குன்றும்.மனிதனுக்குள் இருக்கக் கூடிய மிருகமனசு விழிக்கும்.அடுத்தவனை அடித்தாவது பிழைக்கலாம் என்ற வெறி முன்நகரும்.அப்படியானவனைக் களவோ கொலையோ இன்னபிறவோ செய்யத் தூண்டும்.இங்கே ஊர்க்கவுண்டரின் பின் புலத்தில் கருமுட்டியும் அழகிரி மூப்பனும் கோழி திருடுவதையும் அவற்றைக் கந்தசாமியும் உடனாளியும் கண்டுபிடித்து திருட்டை நிறுத்துவதையும் நேர்கதையாக விரித்துக் கொண்டே வருகிற ஸ்ரீராம் ஒரு பருவம் தப்பி அடுத்த பருவம் தொடங்கி வேரூன்றுவதை இரண்டே வரிகளில் கடந்து செல்வதன் மூலம் கதைக்குள் கதையாக மாயம் செய்கிறார்.

         இந்தக் கதையின் ஈற்றில் வருகிற வரியைக் கவனிக்கலாம்.எந்தக் கோழிகள் களவாகக் கூடாது என்று அல்லும் பகலும் அலைந்து துப்பறிந்தானோ அவையே தன் வெள்ளாமையைக் கெடுக்க வருகையில் மருந்து வைத்துக் கொண்டிருக்கும் ஒரே கந்தசாமியின் இருவேறு வருகைகளை அத்தனை எளிதாகக் கடந்துவிட முடியுமா என்ன..?நிலம் சார்ந்த தொழிலில் இருக்கும் மனிதனின் ஞாபகத்திலும் மண்வாசனையே வீசும் தொன்ம வெளியின் சம்பவத் தோன்றல்களாய்ப் பெருகும் வெள்ளந்தி மனிதர்களின் வாழ்க்கையின் ஒரு விள்ளலைப் படர்க்கைச் சித்திரமாக்கித் தந்துகொண்டிருக்கும் என்.ஸ்ரீராம் தமிழின் சிறுகதை சொல்லிகளில் ஆகச்சிறந்த ஒருவர் என்பதை வெளிக்காட்டுகிறது ஆதாயவாதிகள் சிறுகதை.