மார்னிங் ஷோ

மார்னிங் ஷோ


அவர்கள் நான்கு பேர். கலைந்த கேசமும் நாலு நாள் தாடியுமாக ஒருவன். முகத்தில் வழியும் சிகையும் சிறிய ஃப்ரேமிட்ட கண்ணாடியோடு அடுத்தவன். ஒரு வருடத்திற்கு மேல் வளர்ந்த தாடியோடு மூன்றாமவன். தலையில் தொப்பியோடு வாயில் சுயிங்கத்தை மென்று கொண்டிருந்த நாலாமவனோடு கால் டாக்ஸியில் வந்து இறங்கிக் கொண்டார்கள். எதிரே பார்க்கும் போது மாபெரும் ஃப்ளக்ஸ் பதாகையில் அந்தப் படத்தின் பெயர் தங்க எழுத்துக்களில் மின்னிக் கொண்டிருந்தது. பெரிதாய்க் கூட்டமில்லை. நிழலைப் பருகியபடி தியேட்டர் வாசலின் மாபெரும் நெடிய படிகளில் ஆங்காங்கே இரண்டொருவர் அமர்ந்திருந்தார்கள். ஒரு குழந்தை யாருமற்ற திசையை வியந்துகொண்டு தன் கைகளைத் தானே தட்டியபடி குஹ்வாஸ் என்று அர்த்தமற்ற சொல்லைப் பிறப்பித்தபடியே தன் சிறிய பாதங்களால் ஓடியது. பதறிப் போய் அதன் தாய் பின்னாலேயே ஓடினாள்.

கண்ணாடி அணிந்தவன் தொப்பிக்காரனின் கழுத்தில் தன் விரலைப் பதித்து தட்டியபடியே சுள்ளி எறும்பு கடித்ததென்றால் இரண்டு நாட்களுக்கு வலி பின்னியெடுக்கும் என்றான். அவனது செய்கையை சற்றைக்கெல்லாம் அவனே வெறுக்கத் தொடங்கியது முகத்தில் தெரிந்தது. நால்வரும் எதுவுமே பேசிக்கொள்ளவில்லை. நெடிய தாடி வைத்திருந்தவன் தன் பேண்ட்டின் பின் பாக்கெட்டிலிருந்து சின்னஞ்சிறிய சீப்பை எடுத்து தலைமுடியை சீவிக்கொண்டான். சுயிங்கத்தை துப்புவதற்கு இடம் தேடி பூந்தொட்டி ஒன்றின் மீது சப்தமெழாமல் துப்பி விட்டு வந்தவனை தொப்பிக்காரன் முறைத்தான். அவன் லட்சியம் செய்யாமல் தன் கையிலிருந்த வாரப் பத்திரிக்கையைப் பிரித்து அதனுள் ஆழ்ந்தான்.

No description available.

எங்கிருந்தோ மனிதர்கள் வந்த வண்ணம் இருந்தனர். தியேட்டரில் காலைக் காட்சியும் கிரிக்கெட் ஆட்டமும் ஒன்று. எந்தப் பந்தில் என்ன நடக்கும் என யாராலும் முன் கூட்டிச் சொல்லவே முடியாது அல்லவா, அப்படித் தான் காலைக் காட்சிக்கு எத்தனை பேர் வருவார்கள் என்பதையும் கணிக்க முடியாது. தொப்பிக் காரனும் கலைந்த கேசத்தோடிருந்தவனும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள். அனேக தினங்கள் காலைக் காட்சிக்குச் சென்று விடுவார்கள். ஒரு தடவை நல்ல மழை தினத்தில் காலைக் காட்சிக்குக் கோரம் சேரவில்லை என்று படம் ஓட்ட மறுத்துவிட்டார்கள். தொப்பிக் காரன் இருபத்தைந்து டிக்கட்டுக்களை வாங்கினான். அவர்கள் இருவருக்காகவும் படம் ஓடிற்று.அதென்ன படம் என்று யோசித்தான். ஹாங்க்…கால்வாய் மீன்கள் என்கிற படம். அதிரூபா இரண்டு வேடங்களில் நடித்திருந்தாள். அந்தப் படம் அவளது புன்னகைக்காகவே நூறு நாட்களுக்கு மேல் ஓடிற்று. எல்லாம் ஒரு காலம்.

வட்டமடித்து இவர்களுக்கு வெகு அருகே நின்ற ஆட்டோவிலிருந்து வெள்ளை நிறத்தில் ஒரே மாதிரி புடவை அணிந்த நாலு பேர் இறங்கிக் கொண்டார்கள். தலை நிறைய மல்லிகைச் சரங்களுடன் அந்த இடத்தின் வண்ணமயம் சற்றே மாறினாற் போல் தோன்றியது. இன்னும் எத்தனை நேரம் என்று கேட்டான் தாடிக்காரன். தொப்பி அணிந்தவன் இன்னும் பத்து நிமிடங்களில் டிக்கட் கொடுக்கத் தொடங்குவார்கள் இரு என்றான். சரியாக எட்டாவது நிமிடத்தில் கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்று மணி அடித்தது. கூட்டம் டிக்கட் வழங்குமிடத்தை நோக்கிக் குவியத் தொடங்கிற்று.

உள்ளே சென்று அமர்ந்தார்கள். நாலு பாட்டுக்கள் ஒலித்து முடிக்கும் வரை அரங்கின் உள்ளே விளக்குகள் எரிந்துகொண்டிருந்தன. சட்டென்று விளக்கை அணைத்து விட்டுத் திரை ஒளிரத் தொடங்கியது. டொடடொடடொடடொய்ங் என்ற சப்தத்தோடு பட நிறுவனத்தின் லோகோ சுழலலாயிற்று. தொப்பிக்காரன் வாய்விட்டுக் கத்தினான். நான் தான் அப்போதே சொன்னேனே. இதெல்லாம் பம்மாத்து என்று நீங்கள் தான் கேட்கவில்லை என்றான். அவனை சமாதானப் படுத்தும் குரலில் தாடிக்காரன் நான் என்னடா செய்வேன். அவன் தான் சொன்னான். அதை நம்பித் தான் வந்தோம்

இப்போது என்ன செய்வது..? எனக் கேட்டான் கண்ணாடி அணிந்தவன். அவர்கள் நால்வரும் வெளியேறி மேனேஜர் அறையை நோக்கிச் சென்றனர். தொப்பிக்காரனின் உதடுகள் துடித்துக் கொண்டிருந்தன. நான் கேட்கிறேன் என்று கண்ணாடி அணிந்தவன் மேனேஜரின் முன் நின்றான்.

அவர் எஸ் என்றார்

“நேற்று மாலை ஒளிபரப்பிய ந்யூஸ் ரீலை இன்று ஏன் ஒளிபரப்பவில்லை?” எனக் கேட்டான்.
அவர் “காலைக் காட்சிகளில் பொதுவாக ந்யூஸ் ரீல்களை ஒளிபரப்புவதில்லை ஏன் கேட்கிறீர்கள்” என்றார்.
தொப்பிக்காரனைக் காண்பித்து “இவன் அந்தப் படத்தில் ஒரு காட்சியில் தோன்றுவான். அதைப் பார்க்கத் தான் நெடுந்தொலைவிலிருந்து வந்திருக்கிறோம். மதியக் காட்சியில் நிச்சயமாக அது காண்பிக்கப் படுமா?” எனக் கேட்டான்.
அவர் லேசான தயக்கத்தோடு “இல்லை. சாயந்திரமும் இரவும் மட்டும் தான் ந்யூஸ் ரீல் போடுவோம் அது தான் வழக்கம்.” என்றார்.

உதடுகளைப் பிதுக்கிக் கொண்டு எதுவுமே சொல்லாமல் அவர்கள் நால்வரும் வெளியே வந்தார்கள்.

“இப்போது என்ன செய்வது?” என்று கேட்டான் தொப்பிக்காரன்

“சாயந்திரம் வரைக்கும் எங்காவது சுற்றிக் கொண்டிருப்போம். இருந்து பார்த்து விட்டே போவோம்” என்றான் தாடிக்காரன்.

நால்வரும் சாலையின் எதோ ஒரு புறம் நடக்கத் தொடங்கினார்கள்.