செல்வாவும் எஸ்.ஜானகியும் பின்னே கங்கை அமரனும்

90களின் தொடக்கத்தில் டாக்டர் ராஜசேகரின் தம்பி என்று முகவரியின் முதல்வரியோடு நடிக்க வந்தவர் செல்வா. திருத்தமான முகமும் தெக்கத்திக் குரலும் அமைந்தவர். இயல்பான நடிகரும் கூட. கஸ்தூரி ராஜா இயக்கிய ஆத்தா உன் கோயிலிலே படத்தில் அறிமுகம். மணிவாசகத்தின் ராக்காயி கோயில் , கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய ஏவி.எம்மின் சக்திவேல், கஸ்தூரி ராஜாவின் சூப்பர் ஹிட் படமான நாட்டுப்புறப் பாட்டு என நடித்தார். நாயகனாக நிலைக்கப் போராடியவர் தானே இயக்குனராகி எடுத்த கோல்மால் படம் ஓரளவுக்கு நற்பெயர் ஈட்டியது என்றாலும் காலப்புயலில் காணாது போனார்.

செல்வாவின் குரல் அவருடைய பலமும் பலவீனமும் எனலாம். லேசாக நோய்மை பிரதிபலிக்கும். எஞ்சியிருக்கும் சலிப்பை வெளிப்படுத்தியபடி படரக் கூடிய குரல். குணச்சித்திர வேடங்களுக்குப் பொருந்தி வரக் கூடிய உடல்மொழியும் முகமும் அவரிடமிருந்த போதிலும் நாயக நட்சத்திர கம்பீரத்துக்கான வார்ப்பு செல்வாவின் அண்ணன் ராஜசேகருக்கு வாய்த்த அளவுக்கு அவருக்குக் கைகூடவில்லை என்பது துரதிருஷ்டமே .All about Kollywood film actor Selva bio data and filmography

சேரன் நாயகனாக நடித்த மிஷ்கினின் யுத்தம் செய் படத்தில் முதன்மை வில்ல பாத்திரமாக திரிசங்கு எனும் அசிஸ்டெண்ட் கமிஷனராக மறு தோன்றல் கிடைத்தது செல்வாவுக்கு. அந்தப் படத்தின் கதை அவரோடு தான் நிறையும். முக்கியமான கதாபாத்திரத்தின் நான்கு மால்களை மீறாத நல் நடிப்பை வழங்கினார். அடுத்து மிஷ்கின் இயக்கிய முகமூடி படத்தில் மார்ஷியல் கலை வல்லுனராக பாத்திரம் தாங்கினார்.
சமீபத்தில் வெளியான அஜித்குமார் படமான வலிமையில் புரமோஷன் கிடைத்து கமிஷனர் விஜய்குமார் ஐபி.எஸ் ஆனார்.

சீக்கிரமேவ ஐஜி,டி.ஜிபி ப்ரமோஷன்ஸ் ப்ராப்தி ரஸ்து.

ள்ளி அள்ளி வீசுதம்மா அன்பை மட்டும் அந்த நெலா நெலா.. என்று தொடங்கும் பாடல் அத்த மக ரத்தினமே(1994) என்றொரு படத்துக்காக எஸ்.ஜானகி பாடியது. எழுதி இசையமைத்தவர் கங்கை அமரன். இது அவர் இயக்கத்தில் உருவான படமும் கூட. நாயகனாக செல்வா அவருக்கு இணையராக ரஞ்சிதா நடித்த படம்.

ஜானகி எத்தனையோ உற்சாகமான பாடல்களைப் பாடியிருக்கிறார். இந்தப் பாடலின் பயணப் பரவல் நுட்பமானது எனக் கருதுகிறேன். ஒரு மாதிரி ஆனந்த ஆரம்பத்தில் பெருகும் குரல் அதே இடத்தில் அச்சிட்டு வார்த்தாற் போல் நிறையும் வரை நிலைத்து ஒலிப்பது தனியோரழகு.

கவிப் பெருக்கெடுக்கும் வரிகள் இல்லை என்றாலும் மனதை வருடும் இசையும் அறியாமைப் பேரழகு மிளிரும் காட்சியாக்கமும் எல்லாவற்றுக்கும் மேலாக ஜானகியின் பூந்துருவல் குரலும் இந்தப் பாடலை மறக்க முடியாத அனுபவமாக மாற்றித் தருகின்றன.

இன்றெல்லாம் கேட்கலாம்