சமீபத்துப் ப்ரியக்காரி

6 பழைய


அன்பே
உன்னால்  
உன்னை வெளிப் படுத்த முடியாத போது
நானிந்தப்ரபஞ்சத்தை
இரண்டாகக் கிழித்தெறிவேன்.
அதன் பின் எல்லாமும் இரண்டாய் மாறும்.
நீ யாருடைய கண்களுக்குத்
தென்பட விரும்பவில்லையோ
அவர்கள் ஒரு உலகத்தில் தள்ளப்படுவார்கள்.
அதன் பெயர் நரகம் என்றாகும்.
இன்னொரு உலகம் நீ தெரிவதற்கானது.
யாருடைய கண்களுக்கெல்லாம் தென்படலாமோ
அவர்கள் மட்டுமே இருப்பார்கள்.
உன் செய்கைகள் அங்கு மட்டுமே அறியப்படும்.
நீ அளிக்கும் பரிசுகளை அவர்களால் மட்டுமே
காணவும் பெறவும் முடியும்.
கிடைத்துக் கொண்டிருந்த உன் அன்பெனும் விஷம்
வரத்தின்றிப் போனதால் ஏங்கியேங்கி
பழைய நரகத்தில்
ஆழ்த்தப்படுகிற யாவரும் தத்தளிக்கையில்
நீயே உன் கரங்களால்
அன்பின் புதியதுளிகளை ருசிக்கத் தருவாய்.
அருகமர்ந்து கரங்களைப் பற்றிக் கொள்வாய்.
வேறேதும் வேண்டியதில்லை
ஒவ்வோர் அழிதலிலும் ஒராயிரம் நிம்மதி
போல அது சாலச்சுகம்