‘இசை என்பது என் பிரார்த்தனை முறை’

ஆத்மார்த்தி நேர்காணல்

 

 இசை என்பது என் பிரார்த்தனை முறை

 

சந்திப்பு : எஸ். செந்தில்குமார்

 

 • பதிப்பளாராக சிறுகதையாளராக கவிஞராக தீவிரமான புத்தகங்களை அறிமுகப்படுத்தும் இலக்கியக்கூட்டங்களை நடத்துபவராக வெகுஜன இதழ்களில் பத்திகளும் கட்டுரைகளும் எழுதுபவராக இருக்கும் உங்களை எந்த முகமாக அடையாளம் காண்பது? எப்படி புரிந்துகொள்வது?

 

இந்த கேள்விக்கு நேரிடையாக பதில் சொல்றதைவிட இதே கேள்வியை நானே திரும்பவும் கேட்டுப்பார்த்துக்கிறேன். திரைப்படங்களிலே நடிக்கிறதையும் விரும்புறேன்னு இதிலே சேர்த்துக்கிறேன். இங்கே என்ன தேவைப்படுகிறது, இங்கே நம் முகம் என்னவாக அறியப்படுகிறது அப்படிங்கிறதிலிருந்துதான் நம்முடைய சரித்திரம் ஆரம்பிக்கிறது. நான் கவிஞன்னு என்னதான் மெனக்கிட்டாலும், என்னை நீங்க கட்டுரையாளான ஒத்துக்கிட்டீங்கன்னா அதுக்குப்பின்னாடிதான் போகவேண்டியதாக இருக்கும். எனக்கு என்னென்ன வரும்ன்னு எழுதி எழுதிப்பார்த்துட்டே வர்றேன்.    மொழியும் நானுமாக சேர்ந்து ஆடி பார்க்கிற ஆட்டத்தில் பலமுயற்சிகளை செய்றேன். இதுதான் என்னுடைய முகம்.

 

 • இலக்கியத்தின் அனைத்து வடிவத்தையும் நீங்கள் கையாண்டு வருகிறீர்கள். நாடகத்தைத்தவிர. பன்முகம் தன்மை கொண்டவர் என்று இதை எடுத்துக் கொள்வதா இல்லை எந்த வடிவத்தைத் தேர்ந்தெடுக்கத் தெரியாமல் தடுமாறுகிறார் என்று நினைப்பதா?

 

எறும்புகள் கடிக்கிற வரைக்கும் அதைக் கொல்லணும்னு நினைக்கமாட்டோம். ஒரு நூறு எறும்பு உங்க வீட்டுக்குள்ள வர்றதைப் பொறுத்துவீங்க. ஆனா யானையை நீங்க பார்க்க வாய்க்கிற இடத்திலே எவ்ளோ தூரத்துல நின்னுக்கணும்னு முடிவு செய்திருவீங்க. இங்கே எண்ணிக்கை என்பதும் அளவு என்பதும் அதன் உருவம் சார்ந்தது. நான் ஒரு கட்டுரையாளனாக மட்டும் அறியப்பட்டு பல உயரங்களைத் தொட்ட பிறகு, ஒருகவிதை எழுதிப்பார்ப்பதோ, கவிஞனாக அறியப்பட்ட பிறகு, ஒருசிறுகதை எழுதிப்பார்ப்பதோ என்னால் இயலாது. என்னை ஒருயானையாக உங்கள் முன்னால் முன்வைக்க விரும்புகிறேன் என் எழுத்தில். எனக்கு கிடைக்கக்கூடிய நேரத்தில் பல வடிவங்களில் எழுதுகிறவனாக இருந்துக் கொண்டிருக்கிறேன். இதில் எது எது எந்த அளவுக்கு வசப்படுகிறது என்பது அதற்கும் எனக்குமான பரிவர்த்தனையின் முடிவாக விட்டுவிடுகிறேன். அது உங்கள் கையில் இருக்கிறது.

 

 • நீங்கள் எழுத்தாளர் சுஜதாவின் தீவிரமான வாசகர் என்று பல இடங்களில் பதிவு செய்திருக்கிறீர்கள். அவருடைய எழுத்துக்களின் மேல் உங்களுக்கு ஈடுபாடு எப்படி வந்தது?

 

எனக்குப் பிடித்தவர்களில் சுஜாதாவுக்கு முக்கியமான இடம் இருக்கு. என்னைத் தொடங்கி வைத்த இரண்டு பேருன்னு சுஜாதாவையும் பாலகுமாரனையும் சொல்லமுடியும்.  சுஜாதா எனக்கு எப்போதும் போதுமானவராக இருந்திட்டே இருந்தார். நிறைய விஷயங்களுக்கு என்னை கொண்டுப் போய் சேர்த்தார். நான் அதை அப்படியே   பின்பற்றலை. எனக்குள்ளே சுஜாதா நிறைய விஷயங்களைத் திறந்து வெச்ச பிறகு அந்த ஜன்னல்களிலே எனக்கு உசிதமான ஜன்னல்களோட நான் நின்னுட்டேன். அப்படி நின்னதுதான் இப்போ எனக்குள்ளே இருக்கு. எந்த சித்தாந்தமாக இருக்கட்டும், அடிமைகள் ஒருபோதும் அடுத்தக்காலத்தை ஆள்வதில்லை. எனக்குள்ளே சுஜாதா வந்த இடமும், என்னை விட்டு சுஜாதா போகும்போது அவர் என்ன செய்திருந்தாருங்கிற இடமும் வெவ்வேறு. நான் ஆரம்ப கட்ட வாசிப்பில் இருந்த போது தன் எழுத்துக்களாலும் முன்வைத்தல்களாலும் என்னை ஆதர்சிக்க வைத்தார் சுஜாதா.இது இயல்பா நடந்தது.

 

 • அவருடைய எழுத்துக்களை பின்பற்றி எழுதுகிறீர்களா இல்லை பின்பற்றி எழுதுவதாக நம்புகிறீர்களா?

நான் பத்தி எழுதுவதற்கான ஆர்வம் சுஜாதாவின் எழுத்துகளிலிருந்து தொடங்கி இருக்கலாம். தமிழிலே சாரு, இந்திராபார்த்தசாரதி தொடங்கி மகரம்ன்னு 1940களிலே எழுதுனவரோட பத்திகளை நான் படிச்சிருக்கிறேன். மகரத்தின் நகைச்சுவை எழுத்துக்கு இணையான எழுத்து, ஜெயமோகனின் அபிப்ராய சிந்தாமணின்னு ஒரு புத்தகம் வந்திருக்கு அதை நான் சொல்வேன். அதைப்படிச்சிட்டு அவரோடு பேசினேன். இந்த புத்தகத்தை மகரத்தோட தொடர்ச்சியா நான் பார்க்கிறேன்னு சொன்னேன். ‘மகரத்தோட எழுத்தை நீங்க வாசிச்சிருக்கீங்களா ஆத்மார்த்தின்னு’ சந்தோஷப்பட்டாரு. இந்த பேட்டியை படிக்கிறவங்க மகரம்ங்கிறது யாருன்னு தொடர்ந்து போய் பார்த்தா நான் சொன்ன அபிப்ராயம் சரின்னுபடும். ஒருபிரதி இறக்காமலிருக்கிறது யாராவது தொடர்ந்து குறிப்பிட்டுக்கிட்டே இருக்கணும் அந்த வேலையை நாம் செய்தால் போதும்.

 

 • தமிழ்சூழலில் தீவிரமாக எழுதியவர்கள் தங்களுடைய கடைசி காலத்தில் சினிமாவுக்குச் சென்றுவிடுகின்றனர். அதற்கு மேல் அவர்கள் இலக்கியத்தில் தீவிரமாக இயங்கமாட்டார்கள். சிலர் ஒரே ஒரு புத்தகம் எழுதி அதையே தங்களது அடையாளமாகக் கொண்டு சினிமாவுக்குள் நுழைந்துவிடுகிறார்கள். சினிமாவுக்குச் செல்லவேண்டுமென்பதும் சினிமாதான் உச்சபட்ச கலையின் வெளிப்பாடு என்பதும் தமிழ் மனங்களில் பதிந்திருக்கிறது. இதற்கு என்ன காரணமென நீங்கள் நினைக்கிறீர்கள்?

 

சினிமா என்பது கனசதுர பிளாட்பாஃம். அது ஒரே நேரத்தில் படர்க்கையிலும் நேர்கோட்டிலும் போகக்கூடியது. இன்னும் தெளிவாக சொல்லவேண்டுமென்றால், சினிமாங்கிறது பல கலைகளோட ஒட்டுமொத்த கலவை. கட்டிடம் கட்டுவதுமாதிரி. அங்கே பலபேருக்கு வேலை இருக்குமில்லையா. எலெக்ட்ரிஸியன் தனக்கொரு வாய்ப்பாகப் பார்ப்பான். தச்சர் அவருக்கு ஒருவாய்ப்பாகப் பார்ப்பார். கொத்தனாரும் மேஸ்திரியும் அவங்களுக்கு ஒருவாய்ப்பாகப் பார்ப்பாங்க. சுமைத்தூக்குறவங்க ஆரம்பிச்சு பூசை செய்யுற பூசாரி வரைக்கும், எலுமிச்சம்பழம் விக்கிறவன் வரைக்கும், ஒருவீடு கட்டி முடிக்கும்போது தனக்குண்டானவற்றை அவரவர்களுக்குப் பிரிச்சு தர்றதுமாதிரி. ஒருவீடே இப்படின்னா ஒரு பெரிய அரண்மனை, அதைச் சுற்றிய வீதிகள்னு யோசிச்சா.. அந்த அளவுக்கு சினிமாங்கிறது பலபேருக்கான தொழில் வாய்ப்பாகயிருக்கிறது. கலை வாய்ப்பாகயிருக்கு. வேலை வாய்ப்பாகயிருக்கு. சினிமாவுக்குப் போவதற்கான வழிகள் சுலபமாயில்லை. நிறைய பேருக்கான தேவை உள்ள இடம். சினிமாவைப் பார்க்கிறவங்க எண்ணிக்கையை விட சினிமாவுக்குப் போகமுன்னு நினைக்கிறவங்களோட எண்ணிக்கை பெரியதாக இல்லை. தமிழ்நாட்டு மக்கள் தொகை 12கோடி. சினிமாவுக்காக முயற்சி செய்யுறவங்களோட எண்ணிக்கை 24லட்சம். இரண்டு சதவீதம்தான். மருத்துவக்கல்லூரிக்கும், பொறியியல் கல்லூரிக்கும் போக நினைக்கிறவங்களோடு எண்ணிக்கைக்கு இது சாதரணமான விஷயம். இதற்கு காரணம் சினிமாவில் புழங்கக்கூடிய பணமும் புகழும்தான். புகழை பரிசோதனை செய்யுற இடத்திலே சினிமா இருக்கு.

 

இது மக்களுக்கு பக்கத்திலே போறது சினிமாங்கிற கலை. பல முரண்பட்ட கலைஞர்களோட களமாக இருக்குது. ஜெயமோகனும் யோகிபாபுவும் இளையராஜாவும் ஆத்மார்த்தியும் சினிமாவிலே ஒருங்கிணைய முடியும். வேறெ எந்த இடத்திலேயேயும் ஒருங்கிணைய மாட்டோம். இதில் எழுதுறவங்களுக்கு சினிமாவின் மேலிருக்கிற ஆவல் இருக்கில்லையா, எழுத்திலும் ஜெயிச்சு, பார்க்கிற அனுபவத்திலும் ஜெயிச்சு மீஉருவாக்கம் செய்யவே முடியாதுங்கிற அளவுக்கு இருவேறு கலை வெற்றி அதற்கு இருக்கு. இதுதான் சினிமாவின் உச்சபட்ச சாத்தியமுன்னு நெனைக்கிறேன். இந்த சாத்தியத்தைத்தான் தன்னுடைய படைப்பும் செய்திடாதாங்கிற ஆசை எழுதிப்பார்க்கிற எல்லாருக்கும் இருக்கு. மிக உன்னதமான படைப்பை சினிமா நிராகரிக்கும். சினிமாவில் கொண்டாடப்படுகிற படைப்பு இலக்கியத்தில் கண்டுகொள்ளப்படாது.இதை நான் தனித்தனியாக பிரிச்சுப்பார்க்கிறேன். எழுத்தாளன் எப்படி விருதுகள் மேலே எனக்கு ஆவல் இல்லை ஆசை இல்லைன்னு சொல்லிட்டு மனசுக்குள்ளேயே விருது தனக்கு கிடைக்காதன்னு ஏங்குவான்னில்லையா அதுபோலத்தான் சினிமாங்கிறது. வாழும் காலத்திலே வாய்ப்பாக கிடைக்கும்போது அதை விருது. அதனால்தான் அவங்க முயற்சி செய்றாங்கன்னு சொல்வேன்.

 

 • எழுத்தாளனின் பெயர் முகநூல் வழியாக அறியப்படுகிறது இன்று சாத்தியமானதா? வாசகர்கள் வேறு வேறு இல்லையா?

 

இந்த கேள்வியிலே இருக்கிற இருள் மூலையிலெல்லாம் நான் டார்ச்சுலைட் அடிச்சுத்தான் பதில் சொல்வேன் பரவாயில்லையா.

 

 • தராளமாக சொல்லுங்க. கேள்வியை இன்னும் தெளிவாக கேட்கிறேன். பத்திரிகை வாயிலாக எழுத்தாளன் வாசகர்களிடம் செல்வதற்கும் முகநூல் மூலமாக வாசகர்களிடம் தன் படைப்பைக் கொண்டு செல்வதற்கு வித்தியாசம் இருக்கு.

 

வித்தியாசம் இருக்கா. என்ன அந்த வித்தியாசம் நீங்களே சொல்லுங்க

 

 • முகநூலில் நீங்கள் எழுதுகிற கவிதைகளை உண்மையிலே ஒருவர் படிச்சிட்டுத்தான் Like போடுறாருன்னு எப்படி முடிவுசெய்றீங்க? முகப்பு நூல் வாசகனும் பத்திரிகை வாசகனும் வேறுவேறு ஆட்கள். அவர்கள் உங்களது கவிதையை வாசிக்கிறார்களா?

 

இதற்கு இல்லையென்றுதான் பதில் சொல்வேன். பாரதியின் கவிதை அவர் வாழ்ந்த காலத்தில் முழுவாசிப்பை அடைஞ்சதா? இன்று பாரதிக்கு கிடைத்த பரவலாக்கம் கொண்டாட்டம், நிராகரிப்பு எல்லாம் அவர் வாழ்ந்த காலத்திலே நிகழ்ந்ததா? வள்ளுவரையும் பாரதியையும் ஒரே தட்டிலேதானே வெச்சுப்பார்க்கிறோம். அவங்களுக்கு கால வித்தியாசம் 2000 வருஷமில்லையா?

 

 • பாரதியின் கவிதையும் வள்ளுவரின் குறளும் எந்த இடத்தில் எந்த சூழலில் பாடப்பட்டது என்பதும் எதற்காகப் பாடப்பட்டது என்பது முக்கியமில்லையா?

 

இன்றைக்கு பாரதிக்கு கிடைத்த பரவலாக்கம் ஏன் அன்றைக்கே கிடைக்கவில்லை. பொறுத்திருந்தோமில்லையா? மேனோலிசாங்கிற ஓவியம் அதன் சுற்று இன்னமும் முடியவில்லை. அதன் சுற்று முடிகிற போதுதான் அதன் கணக்கீட்டை நாம் நேர் செய்ய முடியும். இப்போதைக்கு அது நடந்திட்டு இருக்கு. நாமும் அதோட சேர்ந்து நடந்துட்டு இருக்கோம். ஒரு பிரதி அதோட வாசகர்களை அதுதான் தேடும். பாரதி பாடல்கள் எழுதிய காலம் கடுமையைப் போன்றதுதான் நீங்களும் நானும் வாழ்ந்துட்டு இருக்கிற காலம், குறைஞ்சதல்ல. பிரச்சனைகள் வேறுவேறாக இருக்கலாம். வாழ்க்கையிலிருந்து வெளியே போறதும் வாழ்க்கைப்பாடுகளும்தான் முக்கியமுன்னு ேதாணுது. நாம் தப்பிட்டோமா, பிழைச்சிட்டு இருக்கோமான்னு இப்போது ெதரியாது. இதுதான் வழின்னு தேர்ந்தெடுத்துட்டோம். எழுத்தை தன் வழின்னு தேர்ந்தெடுத்துக்கிட்டவன் ஒரு படைப்பின் வெற்றி தோல்வி சார்ந்து கவலைப்படாமல் அதை தன் மனதுக்குள் ஏற்றாமல் அதிலிருந்து விடுப்பட்டு வாழ நினைக்க வேண்டும். என்னுடைய படைப்புகள் எப்படி கொண்டாடப்பட்டது, யாருக்குப் பிடிச்சது, யாருக்குப் பிடிக்கலைங்கிறதை எல்லாம் மனசுக்குள்ளே வாங்கிக்கிறேன். என் புத்தியிலே ஏத்திக்கிறதில்லை. என்னை இகழ்வதையும் புகழ்வதையும் விட என்னை புறக்கணிப்பதை எளிதாக கையாள்கிறேன். என்னை புறக்கணிப்பதுதான் இந்த காலம் சார்ந்தவர்கள் செய்கிற முக்கியமான விஷயமாக நினைக்கிறேன்.

 

 • முகநூலில் நாலு கவிதைதான் போடமுடியும் முழு நாவலை எப்படி பிரசுரம் செய்யமுடியும்? அதற்கு பத்திரிகை வாசகர்களைத் தேடித்தானே வரவேண்டும்?

 

அப்படின்னு நீங்க நினைக்கிறீங்க. இதை மறுக்குறேன். இன்னைக்கு ஆட்டோபிக்‌ஷன் நாவல் என்னான்னா நாவலுன்னு நான் அறிவிச்சு மொத்தமாக தொகுத்தால் தான்
உங்களுக்கு நாவலுன்னு தெரியும். நீங்களும் நானும் பேசிட்டு இருக்கிறது நாவலுடைய  பகுதின்னு யோசிக்கிறதும் ஒரு உத்திதான் இல்லையா.? உங்க பத்திரிகை பேட்டிங்கிறதை மீறி உங்களை அஷோக்னு பெயரை மாற்றி நாவலில் கொண்டு வரமுடியும்ல… முக நூலை என்னுடைய சுதந்திரமாகப் பார்க்கிறேன். அது நான் நடத்துகிற என்னுடைய சிறுபத்திரிகை. அதை வாசிப்பதும் வாசிக்காமலிருப்பதும் உங்களது சுதந்திரம்.

 

 • வணிக எழுத்து பத்திரிகையில் எழுதுகிற எழுத்தாளனுக்கும் சிறுபத்திரிகை எழுத்தாளனுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கில்லையா?

 

இதெல்லாம் ஒருவித மனோபாவம்தான்.

 

 • சிறுபத்திரிகை என்கிற மனோபாவம்தானே தீவிர இலக்கியத்தை வளர்த்துட்டு வருது.

 

இந்த மனோபாவம் இலக்கியத்தை வளர்க்கலைன்னு நான் சொல்வேன்.

 

 • எந்த அடிப்படையில் சொல்றீங்க ஆத்மார்த்தி?

 

மக்களுக்கு அருகாமையில் ஒரு விஷயத்தைக் கொண்டு போகாமலிருப்பது பிழை. மக்களுக்காகத்தான் நான் எழுதுறேன், எங்கு அவங்களை புறக்கணிக்கக்கூடாதோ அங்க புறக்கணிக்கவேக்கூடாது. எங்கு அவங்க இல்லாமல் செயல்படமுடியுமே அங்கு அவங்க இல்லாமல்தான் செயல்படணும். இந்த இரண்டுமே சூழலின் நியதி. இலக்கியங்கிறது நீங்க மக்களுக்காக செய்றீங்கன்னு மக்கள்கிட்டே இருந்து அந்நியப்பட்டு இருப்பது எந்த விதத்திலே நியாயம். சிறுபத்திரிகைக்குன்னு ஏதாவது பரிட்சை இருக்கா? ஏதாவது கோர்ஸ் இருக்கா? யாரை ஏத்துக்கணும், யாரை நிராகரிக்கணுமின்னு சொல்றதுக்கு நீங்க ஒரு காரணின்னா அது நியாயம். மக்கள் இன்னொரு காரணிங்கிறதையும் மறுக்கமுடியாது. நாங்க மட்டுந்தான் காரணின்னு சொன்ன எப்படி ஒத்துக்க முடியும்.

 

 • ரவிசங்கரஆத்மார்த்தியாக மாறியதை சொல்லுங்கள்

 

7 வயதிலிருந்து தீவிரமான வாசிப்பில் இருந்த ஆள்தான் நான். என் வீட்டில் எனது பால்யத்தில் பிறப்பொருட்களுக்கு மறுப்பும் ஏற்பும் கிடைத்திருக்கிறது. ஆனால் புத்தகம் தொடர்ந்து கிடைத்த ஒரு பண்டம். புத்தகங்களின் மூலகமாகத்தான் இந்த உலகத்தைப் பார்த்தேன். பள்ளிக்கூடத்திற்கு சரியாக சென்றது கிடையாது. பாதிநாட்கள் கட் அடித்துவிட்டு வெளியே சென்றுவிடுவேன். அப்போது இந்த உலகத்தை காண்பதற்கு பெரிய வாசலாக இருந்தது இரண்டு விஷயங்கள். ஒன்று சினிமா. இரண்டாவது புத்தகங்கள். சுஜாதாவின் கணையாழியின் கடைசி பக்கங்கள் மூலமாகத்தான் பல விஷயங்கள் நடந்தேறியது. சிறிய அளவில் வந்த கணையாழியில் வந்த டார்த்தீனியம் என்கிற குறுநாவல்தான் நான் வாசித்த முதல் தீவிரஇலக்கியம் என்று சொல்வேன். அந்த கதை ஜெயமோகன் தனது ஆரம்ப காலத்தில் எழுதிய கதைகளில் ஒன்று. அது என்னை ரொம்ப பாதித்தது. இப்படியெல்லாம எழுத முடியுமான்னு என்னை யோசிக்க வைத்தது. பிறகு ஜெயமோகன் கதைகளைத் தொடர்ந்து வாசித்தேன். அதற்கு முன்பாகவே கோணங்கியின் எழுத்துக்கள் எனக்கு அறிமுகமாகியிருந்தன. பிரேம் ரமேஷ் எனக்கு பிடித்த எழுத்தாளர்கள். பிரேதபிரேதன் என்கிற பெயரில் அவங்க எழுதினதை எல்லாம் வாசிச்சுருக்கிறேன். சாருநிவேதிதா ஆரம்பத்திலே ஏற்படுத்திய அதிர்வுகள், கவிதைகளிலே கல்யாண்ஜி, ரவிசுப்ரமணியன், மனுஷ்யபுத்திரன் எனக்கு பிடிச்ச எழுத்தாளர்களை நானே தேர்வு செய்து மாலை கோர்க்கிற மாதிரி எனக்குள்ளே வெச்சுக்கிட்டேன். அந்த காலத்திலே பிரேம்ரமேஷின் அதிதனின் இதிகாசம், சொல் என்றொரு சொல் என்ற இருநூலிலேயேயும் ஆத்மார்த்தன், ஆத்மார்த்தின்னு இரண்டு கதாபாத்திரங்களுக்கான பெயர்கள் வரும். அந்த ஆத்மார்த்திங்கிற பெயரை எனக்கான பெயராக மனதுக்குள்ளே வெச்சுக்கிட்டேன். எழுத ஆரம்பித்தது 2011 ஜனவரி 20ஆம்தேதி  கீற்று இணையதளத்தில் தான் கவிதை எழுதி கவிஞனாக அறிமுகமானேன். நிசப்தங்களின் காகிதப் பிரதிகள் இதுதான் கவிதையோட தலைப்பு.

 

 • புத்தகங்கள் தொடர்ந்து வாசிச்சுட்டே இருக்கிங்கே. எந்த மனநெருக்கடியில் எழுத ஆரம்பிச்சீங்க?

 

ஒரு எழுத்தாளன் எழுத வர்றதுக்கு ஒருவிதமான கசகசப்பு தேவைன்னு நினைக்கிறேன். புற வெளியிலே நடக்கிறது அவனுக்குள்ளே ஏதாவது  தொந்தரவு செய்யணும். மனசுக்குள்ளே உருவாகிற கசகசப்புத்தான் அவனை எழுதத்தூண்டும். கல்லூரிகாலத்தில் கிடைக்காமற் போன அன்புகள் என் அப்பா இறந்தது. எதிர்காலம் குறித்த பயம் இதெல்லாம் தான் என்னை எழுதத் தூண்டிச்சு.

 

 • ஒரு கவிதையை எப்படி உருவாக்குறீங்க?

 

ஆனந்தி ரயிலில் பயணிக்கிறாள் என்கிற கவிதை எனக்குப் பிடித்த கவிதைகளில் ஒன்று. புதுக்கவிதைங்கிறது நாளும் தன்னுடைய வடிவத்தை ஏதாவது ஒருவிதத்திலே சோதனைக்கு உட்படுத்திக்கிட்டே இருக்கணும் நினைக்கிறேன். கவிதை மரபிலிருந்து வெளியே வந்துவிட்ட பிறகு அதை வேறொரு மரபாக திரிப்பதற்கு மாற்றிவிடுவதற்கு நிறுவனப்படுத்துவதற்கு முயற்சிக்கும் அத்தனை நபர்களையும் வெறுக்கிறேன். புதுக்கவிதை எப்படி இருக்கணும் என்று பேச ஆரம்பிச்ச அத்தனை அபவாதங்களையும் நிராகரிக்கிறேன். அதுக்காக எல்லாவற்றையும் கவிதைன்னு நிறுவுவதற்கு நான் முயற்சிக்கவுமில்லை. ஆனால் புதுக்கவிதை என்பது நவீன கவிதை என்பது அதை எழுதுகிறவனுக்கு வேறெந்த கலை வடிவத்தை விடவும் உச்சப்பட்ச சுதந்திரத்தைக் கொடுக்கும். கொடுக்கணும், கொடுக்கிறதை வேறு யாரும் தொந்தரவு செய்யக்கூடாதுன்னு நான் முன் வைக்கிறேன். ஒருகவிதையை நான் வெறும் கவிதையாக பார்க்கலை. கவிதையின் மூலமாக கதை சொல்லிப் பார்க்கிறேன். ஒரு கவிதையை கதை போல எழுதிப்பார்க்கிறேன். கதை போல எழுதுறதை உறுதியாகச் சோதிச்சுட்டேதான் இருக்கேன். ஊரைத்தாண்டி ஒரு பெண்ணும் ஆணும் காதல் மேற்கொண்டுச் செல்லும் போது அது சாதிக்காக கொல்லப்படுறதுங்கிறது செய்தி. அது நிகழ்வு. பிறகு அது ஒரு வரலாறு. இதையெல்லாம் தாண்டி அது ஒரு பிழை. அதை ஒரு கவிஞனால் ஒருமுறை அழுத்தம் திருத்தமாக எழுதுவதன் மூலமாக அதுக்காக நியாயம் கேட்கமுடியும். நான் பழிவாங்குபவன் கிடையாது. மாறாக நான் நியாயம் கேட்கிறவன். இதை கதையாக எழுதும் போது மற்ற கதைகளுடன் சேர்ந்துக்கிறது. கவிதையாக எழுதும் போது தனிச்சு நிக்குது. இந்த விசயம் எத்தனை முறை கவிதையாக எழுதப்பட்டிருக்கு. சில கவிதைகளை நான் அடித்து திருத்துவதில்லை. சில கவிதைகளை மிகவும் அடித்து திருத்துகிறேன். இது மிக அதிகமாக அடித்து திருத்தப்பட்ட கவிதைகளில் ஒன்று.

 

 • ஒருகதாபாத்திரம் அல்லது முக்கியமான சம்பவம் ஒன்று உங்களது கவிதைகளில் வருகிறது. இதை நீங்கள் திட்டமிட்டுத்தான் செயல்படுத்துகிறீர்களா?

 

ஆமாம் திட்டமிட்டுத்தான். எழுதாத கதைகளை எழுத வந்தேன். எழுதாத கவிதைகளை எழுதிப்பார்க்கிறேன். இது முழுக்க எழுதாத கதையா எழுதாத கவிதையான்னு சொல்ல முடியாது. என்னை மாதிரி யாரும் எழுதலைன்னு வேணா சொல்லிக்கலாம்.  ஏற்கனவே இருக்கிறதுக்குள்ளே ஏதாவது செய்வது தான் புதுசா விரியுது. சில கதாபாத்திரங்கள் கவிதைகளை தீர்மானிப்பது உண்டு. குழந்தைக்கிட்டே தன்னுடைய பழைய காதலை சொல்கிற கவிதை ஒன்று உண்டு. ‘ங்ஙே’ என்று மட்டும் சொல்லத் தெரிந்த குழந்தை. அதிலே அவ்வளவுதான் கவிதை. ஒரு கவிதை உங்களுக்கு எதுவும் தராமல் போகலாம். நான் அதற்கு பொறுப்பேற்றுக்கொள்ள முடியாது. கவிதை எதையும் பயிற்றுவிக்காமல் போகலாம். நான் அதற்காக கையொப்பமிடமுடியாது. கவிதைக்கு கீழே என் பெயரை எழுதத் தான் நான் கையொப்பமிடுகிறேன். அதன் அனுபவத்திற்கு கீழே அல்ல. அந்த அனுபவம் நீங்களும் கவிதையும் நிகழ்த்திப் பார்த்துக் கொள்ள வேண்டியது.

 

 • ஒருகவிதையிலிருக்கிற கதாபாத்திரத்தை ஒருசம்பவத்தை ஏன் கதையாக்கம் செய்ய நீங்கள் முயற்சிப்பதில்லை?

 

கவிதையையும் சிறுகதையையும் இரண்டையும் எழுதிப்பார்க்கிறவன்தான். கவிதையிலிருந்து கதைக்குப் போகவில்லை என்று சொல்லமுடியாது. பிடிபடவில்லை. கவிதையை இன்னொரு கவிதையாகவும் என்னால் எழுதமுடியும். ஆனந்தியை வேறுறொரு பெண்ணாக மாற்றி என்னால் தொடர் கவிதையாக எழுத முடியும். இங்கே விஷயம் என்னான்னா நோட்ஸ் தேவைப்படுது.

 

 • என்ன நோட்ஸ்?

 

எப்படி புரிந்து கொள்ளப்படவேண்டும். இங்கே முன்னும் பின்னுமான எழுத்துச் சார்ந்த வணிகம் எதுவும் ஒழுங்காக நடைபெறுவதில்லை. என்னுடைய கவிதை குறித்து யார் என்ன பேசியிருக்காங்க. மிகவும் சொற்பம். சகஎழுத்தாளன் மேல் அபிப்ராயம் சொல்வதையே அவனுக்கு அளிக்கக்கூடிய விருதாக அடையாளமாக அல்லது சன்னிதானம் இளைய மடாதிபதிகளை தேர்ந்தெடுக்கிற பாவனைப் போல நினைக்கிறாங்க. அப்படி எதுவும் கிடையவே கிடையாது. சமகால எழுத்துக் குறித்தும் எழுத்தாளர்கள் குறித்தும் அபிப்ராயங்கள் இருக்கின்றன. என்னால் முடிந்தளவு அதை பதிவு செய்து வருகிறேன். தீராக்கடல் என்கிற பத்தியில் அதைப் பற்றி எழுதியிருக்கிறேன். 53 கவிஞர்களை வரிசைப்படுத்தியிருக்கிறேன். சிறுகதை குறித்து ஒரு தொடரே எழுதினேன். கதைகளின் கதை என்ற அந்தத் தொடரில் உங்களது கதை உள்பட பலகதைகளைப் பதிவு செய்திருக்கிறேன். எனக்கு கிடைக்கக்கூடிய வாய்ப்புகளில் சரியாக என் காலத்தின் என் வாசிப்பின் படைப்புகளைப் பற்றிப் பேசிக்கொண்டே இருக்கிறேன். எனக்குத் தெரிந்த பாடலை அதனுடைய மொழியில் பாடிக்கொண்டிருக்கிறேன். அந்த மொழிக்கென்று ஆட்கள் வருவார்கள்.

 

 • தமிழில் விமர்சனம் என்னவாக இருக்கிறது என்பதை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்கள்?

 

இங்கே விமர்சகர்கள் மிகச்சரியாகத்தான் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். என்னுடைய நோய்மை வேறு. என்னுடைய குற்றச்சாட்டு வேறு. வெறும் விமர்சகர் மாத்திரம் குறைவாகத்தான் உள்ளனர். எழுதுபவனே விமர்சகனாக மாறும் போது சிக்கல் வருகிறது. தமிழில் விமர்சகர் போதவில்லை.

 

 • உங்கள் அளவில் விமர்சனம் எப்படி இருக்கணும்னு சொல்ல வர்றீங்க?

 

வார இதழில், தினசரி இதழில், இலவச இதழில், கடைசி பக்கத்தில் வரக்கூடிய படைப்பை தனது கவிதை என்று அவன் மகிழ்ந்து கொள்கிறான் என்றால் அதை பகடி செய்வதோ நிராகரிப்பதோ விமர்சனம் செய்வதோ திருத்துவதோ என்னுடைய வேலை இல்லை. இன்று எழுத வருகிறவர்களின் பிரச்சனையை பேசுங்கள். தண்ணிக்குள்ளே அவன் இருக்கான். உங்களுக்கு நீச்சல் நன்றாகத் தெரியும். ஆனால் நீங்க கரையிலே இருக்கீங்க. கைகொடுத்து மேலே தூக்கிவிடுங்க. இல்லைன்னா தண்ணிக்குள்ளே குதிச்சு சொல்லிக்கொடுங்க. இது ரெண்டையும் செய்யுறதில்லை. தப்பா நிக்கிறேன்னா இது என்ன விமர்சனம்? அப்படி இரண்டையும் செய்யுறவங்க எல்லாரையும் நான் மதிக்கிறேன்.

 

 • ஒருபடைப்பின் ற்றி என்பது எதன் அடிப்படையில் இருக்குமென நீங்கள் நம்புகிறீர்கள்?

 

படைப்பின் வெற்றி என்பது அதன் பிரபலம். அதனுடைய ஆணித்தரம். மக்கள் எப்படி எடுத்துக்கிறாங்க. படைப்பு ஏற்படுத்தக்கூடிய சலனம். மாற்றம் வாசகனிடம் ஏதாவது ஒன்று  நடக்கணும். அந்த ஏதாவது ஒன்றுதான் வெற்றின்னு சொல்வேன்.

 

 • அந்த மாதிரி வெற்றியடைஞ்ச உங்களுடைய எழுத்தைப் பற்றிச் சொல்லுங்கள்?

 

புத்தகமுன்னு பார்க்கிறதை விட, கவிதைகள்லே கதைகள்லே என்னால் பார்க்கமுடியும். அப்பாவின் பாஸ்வோர்டுன்னு ஒரு கதை. இடம் என்கிற கதை. நீலயானி, ஒயிலா, பீஹாரி என்கிற கதைகளை யாரென்று தெரியாத புதியவர்கள் உட்பட பலருடைய விமர்சனங்களுக்கு இட்டுச் சென்றது. தென்னம்பாளை என்கிற கதை, சாம்பல்மரங்கள் என்கிற கதையை வாசித்துவிட்டு இது ஒரு சர்வதேசத்தரத்திலான கதை என்று சாருநிவேதிதா பேசியது எனக்கு மிக உற்சாகமாக இருந்தது. யாருமே யாரைப்பற்றி பேசுவதில்லை என்கிற குறைபாடெல்லாம் இல்லை. இன்னும் பேசினால் நன்றாக இருக்குமே என்பதுதான் என்கிற குரல் என்னுடையது. ‘இந்த நகரத்தில் நகுலன் என்கிற பெயரில் யாருமில்லை’ என்ற கதை மலைகள் இணையதளத்தில் வெளியாகி என்னுடைய நிறைய நண்பர்கள் தங்களுக்குப் பிடித்திருக்கிறதாகச் சொன்னார்கள். அதேபோலத்தான் கவிதைகளும். காதல் கவிதைகள், நட்புக்குறித்த கவிதைகள், மழைக்குறித்த கவிதைகள் எழுதித்திட்டு இருக்கேன். இதைத்தாண்டி காட்சி படிமம் மீது எனக்கு பெரிய பிடிமானம் இருந்துக்கொண்டே இருக்கிறது. நான் இப்போது பார்க்கிறேன் ஒரு பைக் நம்மை தாண்டிப்போகுது. இந்த ஒரு காட்சி இருக்கில்லையா அவன் யாருன்னே தெரியாது. ஹெல்மெட் ஒரு தலை நீல சட்டை போட்டிருக்கிறான். அங்கே போயிட்டு இருக்கிறது நமக்குத்தெரியாத வாழ்க்கை வரலாறு போயிட்டிருக்கிறது. இது நமக்கு தெரிஞ்சதாகவும் இருக்கலாம். இன்னொன்னு எனக்கு ஏன் தெரியணும். இந்த இடத்திலே இருந்து என்னுடைய கவிதையை எழுதுறேன். கவிதையிலே மட்டும் தோற்றுக்கொண்டே இருக்க விரும்புகிறேன் ஏனென்றால் ஒருநாள் ஜெயித்து நிற்பேன். என்னுடைய கவிதை எதையாவது ஒன்றை நிகழ்த்தாமல் போகாது. என்னுடைய கவிதை பேசும் போது நான் பவ்யமாக கேட்டுட்டு இருக்கேன். அது என்னுடைய குரல்தான். இது ஒரு ஆட்டம். என் குரல் எனக்கு நல்லாயிருக்கிறது. டப்பிங் குரல் தேவையில்லை.

 

 • பெண் கதாபாத்திரங்கள் உங்களது கவிதையிலும் சரி கதையிலும் சரி தனித்துவங்கொண்டதாக அமைந்துள்ளது. இதற்கு தனிப்பட்ட காரணங்கள் இருக்கிறதா?

 

மண்ணும் தண்ணியுமானவனாக  ஆணும் பெண்ணுமானவனாகத்தான் ஒருவன் இருக்கமுடியுமென்று நம்புகிறேன். நான் காண்கிற உலகம் ஆண்கள் பெண்கள் என்று கலந்துதான் இருக்கிறது. என்  உலகம் பெண்களால் நிரம்பியது. என்னுடைய கதாபாத்திரங்களை ஆண் பெண் என்று பிரித்துப் பார்த்துக் கொள்கிறேன். நான் ஒரு பெண்ணை எழுதுகிறேன் என்றால் அது என் வாழ்வில் வந்த ஒரு அல்லது சில அல்லது பல பெண்களின் கூட்டுப்பிரதிதான். என்னுடைய உலகமெல்லாம் பெண்கள் இருக்கிறார்கள்.

 

 • ஏற்கனவே பெண்களின் பிரச்சனைகளை, பாடுகளை எழுதிக் கொண்டிருக்கிறவர்களுக்கு நீட்சியாக நீங்களும் பெண்களை உருவாக்குவது அவர்களை பின்தொடர்வது போலில்லையா?

 

எண்பதுகளின் வாழ்க்கை முறை இன்றைக்கு மாறி இருக்கு. காதல் என்பதன் அர்த்தமும் எதிர்பார்ப்பும் மாற்றம் அடைஞ்சு இருக்கு. திருமணம் அப்டின்ற முறைமை பலவிதங்கள்ல வேறா ஆகி இருக்கு. முன்பிருந்த எதுவும் இப்போது அப்படியே இல்லை எனும் பட்சத்தில் இன்றைய பெண்களை அவர்களது பாடுகளை பிரச்சினைகளை இன்றைக்கு எழுதுபவன் எழுதித் தானே ஆகணும்..? இதுல சாய்ஸ் இருக்குன்னு நான் நினைக்கலை.முந்தைய காலத்தின் நீட்சி தான் நமக்குக் கிடைப்பது.பின் தொடர்வதன் பேர் தான் வாழ்தல்.

 

 • நடிகர் ரஞ்சன என்ற பாத்திரத்தைக் கொண்டு ஒயிலா என்றொரு கதை எழுதியிருக்கிறீர்கள். ஒர ஆண் மீது நகர்ந்தோடக் கூடிய இந்தக் கதையின் மையம் பெண் பாத்திரமாக இருக்க வாய்ப்பிருக்கா அப்படி ஏன் எழுதலைன்னு கேட்கலாமா?

 

இந்த கதையைப் பொறுத்தவரைக்கும், நேசத்துக்கும் பாசத்துக்குரிய இறந்து போனவர்கள் மேல் வைக்கக்கூடிய ஒரு சார்ஜ் உண்டு. என்னை நீ ஏமாற்றிவிட்டுப் போய்விட்டாய் என்று மனுஷன் சொல்றான். இது ஏன்னா இவன் இருக்கவேண்டிய நாட்களில் அவங்களும் கூட இருக்கணுங்கிறதான் அது. தன் இழப்பை தன் காதல் இணை கொடுத்த, அல்லது நட்பு இணை கொடுத்த ஏமாற்றமாக அதை மாத்துறான். ஒயிலா கதாபாத்திரம் சீக்கிரம் செத்துப்போயிருச்சு. அது அவனை ஏமாத்திருச்சு. உங்களுக்கு ஆணோடு கண்ணோட்டத்திலே தெரியுறது. ஆனால் நான் பெண்ணோட கண்ணோட்டத்திலேதான் எழுதியிருக்கேன். ஒரு பெண்ணின் கண் பார்வையில் ஆணின் குரலில் எழுதுகிற மணந்தான் என்னுடய மணம். என் விழிகள் பெண்களின் விழிகளாக மாறும் போதெல்லாம் பெண்களுக்காகச் சேர்த்துப் பார்க்கிறேன்.

 

 • உங்களது கதைகளை வாசித்த பெண் வாசர்களின் விமர்சனம் என்ன?

 

குலேபகாவலின்னு ஒரு கதையை நிழலாட்டம் விளையாட்டில் சைகை மூலம் சினிமா படத்தின் பெயரைச் சொல்லி விளையாட்டில் பாதியைச் சொல்லி மீதியை வலி என்றுதான் சொல்லவேண்டும். அந்த விளையாட்டை விளையாடுகிற காலக்கட்டத்திலிருந்து தொடங்கக்கூடிய கதை. அது காதல் கதை. ஒருத்தன் அமெரிக்காவுக்கு போயிட்டு வந்துருவான். வந்த பிறகு எதிர்வீட்டுக்குப் போவான். எதிர் வீட்டு அமுதா அக்காவுடைய உறவுக்கார பெண்ணு ஒன்னு, இவனும் அவளும் லவ் செய்திருப்பாங்க. அந்த லவ் கூடியிருக்காது. அந்த பெண்ணு இதயதாமரை படத்திலே வர்ற ரேவதி மாதிரி இருப்பா. இவனை கார்த்திக்குன்னுதான் கூப்பிடுவா. அந்த பெண்ணுடைய வாழ்க்கைத் திருப்பமாக கல்யாணம் முடிஞ்சு கணவன் இறந்து வீட்டுக்கு திரும்பியிருப்பா. இந்த சூழலில் அவர்கள் இருவரும் சந்திப்பாங்க. அவங்க ரெண்டு பேரும் பேசுறாங்க. அந்த பெண்ணோட செல் எண்ணை வாங்குறான். அவளும் வாங்குறா. இருவரும் மேஜேஜிலே பேசுறாங்க. உனக்கு டம்செரஸ் ஞாபகம் இருக்கான்னு அவள் கேட்கிறாள். அவன் ஞாபகமிருக்குன்னு சொல்றான். இப்படியே பேசிட்டு இருப்பாங்க. அப்போ அவள் என்னை உன்னோட கூட்டிட்டு போயிருறீயா கார்த்திக்குன்னு கேட்குற. அதுக்குப் பிறகு ஒருவரிதான். உங்களுக்கே தெரியும் என் பெயர் கார்த்திக் கிடையாது. இது இதயதாமரை கார்த்திக். ரேவதியோட கார்த்திக். சீரியஸ்ஸா அவளுக்கு என்ன பதில் ெசால்லுறதுன்னு யோசிச்சேன்னு கதை முடிஞ்சிருக்கும். இந்த கதைக்காக நிறைய பெண்கள் பரவசமாய்க் கடிந்து கொண்டார்கள். இது எங்களுக்கு நடந்தாப்லயே இருக்குன்னு சொன்னாங்க. நான்தான் ரேவதி அப்படின்னாங்க. என் வாழ்வில் இனிய வசந்தம் அந்த கதை. கல்லூரி பேராசிரியை ஒருவர் அவர்களுடைய வகுப்பில் பட்ட மேற்ப்படிப்பு மாணவர்கள் 50 பேர்களிடம் வாசித்துக் காட்டி இந்த கதையைப் பற்றி ஆய்வெல்லாம் செய்திருக்காங்க. கல்லூரியில் மலையேற்ற பயிற்சியின் போது பொதுவாசிப்புக்கு இக்கதையைப் பயன்படுத்தியிருக்காங்க. ஆண்கள் பொறாமைப்படக்கூடியக் கதை என்றும் சொல்லலாம்.

 

 • உங்களது கதைக்கான மொழியை எவ்வாறு தேர்வு செய்கிறீர்கள்?

 

அப்படியொன்றை நான் வைத்துக்கொள்வதில்லை. இந்த கதைக்கு இது என்றுதான் முடிவாகிறது. சேராக்காதலில் சேர வந்தவன் தொகுப்பு முழுக்க அதிபுனைவு கதைகள். 2500ஆம் ஆண்டு நடக்கிற கதைகள். அந்த கதைகள் சித்திரவிசித்திர மொழியில் இருக்கிறது. அதிலும் ஒரே மொழியாக இல்லை. குலேபகாவலி கதையில் அந்த காலக்கட்டத்தில் எது இயல்பு பொதுமொழியாக அங்கீகரிக்குதோ அதுதான் அதன் மொழியாக நிற்கும். நீலயாளி கதையில் பாஸ்கர்ஷயாம் என்கிற எழுத்தாளனின் வாழ்வில் நடக்கிற கதை. ஒருவர் வக்கீல் இன்னொருவர் எழுத்தாளர். வக்கீல் பேசுவது பெண் குரலாகவே ஒலிக்கும். எழுத்தாளன் பேசுவது மேதமையுடன் இருக்கும். எழுத்தாளன் பேசுவதற்கு பயப்படவே மாட்டான். பேசித்தான் சில விஷயங்களை உருவாக்குவான். அந்தந்த கதாபாத்திரங்கள் அவர்களது அறிதல் அறியாமையிலிருந்துதான் உருவாக்கிறேன். என்னுடைய உன்னதமான விஷயமாக வசன பலத்தைச் சொல்ல விரும்புகிறேன். கதாபாத்திரங்களை கையாள்வது, கதைகளை முழுமையுமாக உருவாக்குவதை விடவும், திறனுள்ள விஷயமாக கருதுகிறேன்.

 

 • கதை எழுதிக்கொண்டிருக்கும் போது இந்த இடத்தில் சுஜாதாவைப் போல எழுதிப்பார்க்கலாமே என்று எந்த கதையில் எந்த இடத்தில் தோன்றியிருக்கிறது?

 

சுஜாதாவின் கதைகள் முழுக்க மனப்பாடம் செய்தவன். இந்த இந்த இடத்திலெல்லாம் சுஜாதா வந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பேன். என்னுடைய ஆரம்பகால கதைகளில் சுஜாதா மாதிரி என்கிற விஷயம் இருந்தது. வியாழன் என்கிற என்னுடைய சிறுகதை. அதில் வருகிற கிறிஸ்டோபர் வியாழன், பெயர் மை நேம் இஸ் பாண்ட் ஜேம்ஸ் பாண்ட் என்கிற இடத்திலிருந்து எனக்கு வந்தது. உடனே கதையை பிடித்துவிட்டேன். கௌபாய் ஷேஸிங் கதை. அந்த கதையை அந்த அனுபவத்தை தமிழ் வாசகப்பரப்புக்குக் கொண்டுபோனேன். சுஜாதாவின் கதைகள்ல ஆதவன், ஆ.மாதவன் உள்ளிட்ட அவரோட முன் கால சகாக்களோட ஊடுபாவுகளை என்னால் உணரமுடியுது. இதைத் தவிர்க்கவே முடியாது. குற்றச்சாட்டுக்கும் பாராட்டுக்கும் நூலளவு தான் வித்யாசம். இந்த ரெண்டுக்கும் நடுவிலான அந்த வித்யாசம் தான் உண்மை என்று கூட அர்த்தம் கொள்ளலாம். ஆக சுஜாதாவை உணர்ந்து தவிர்க்கிற இடங்கள் தான் என் எழுத்துகளில் அதிகம்.

 

 • பல புத்தகங்களை அறிமுகப்படுத்தி மதுரையில் கொண்டாட்டமான மனநிலையை வதனம் இலக்கிய அமைப்பு உருவாக்கியது. இலக்கிய அமைப்பை உருவாக்க காரணம் என்ன?

 

வதனம் கூட்டங்களுக்கு நான் மட்டும் பொறுப்பு கிடையாது. அருணாச்சலம், கடங்கநேரியான், தீபாநாகராணி, அதீதன்சுரேன், எர்னட்ஸ்டோ, பழனிக்குமார், மதுரை சரவணன், அமர்நாத் பிச்சைமணி இன்னும் நிறைய நண்பர்கள் வதனம் நடத்த உதவினார்கள். இன்னும் நிறைய பேர் இருக்கிறார்கள். உதவி செய்திருக்கிறார்கள். இலக்கியத்திற்கு அர்ப்பணிப்புணர்வுடன் ஆட்கள் வருவார்கள். ஒரு புத்தகத்திற்கு கூட்டம் நடத்துவது என்பது மிகப்பெரிய சவால். அதேநேரம் புத்தகத்திற்கு அதை எழுதியவனுக்கு ஆகச்சிறந்த மரியாதை கூட்டங்கள்தான். என்னதான் நீங்கள் எழுதிக்கொண்டேயிருந்தாலும் கூட்டங்கிறது புத்தகம் சார்ந்தவங்களை சந்திக்க வைக்கிறது. அந்த காலத்தில் பேனா நட்பு இந்த காலத்தில் முக நூல். சிறுபத்திரிகை, பெரும்பத்திரிகை, பிரதி, எழுத்தாளன் இவர்களையெல்லாம் ஒருங்கினைப்பது கூட்டம் மட்டுந்தான். கூட்டம் என்பது பெயரளவில் இல்லாமல் வதனம் இலக்கிய கூட்டங்களில் நீங்கள் பார்க்கலாம். பிரதி மீதான கவனஈர்ப்பு கொண்டுவரவே கூட்டங்கள் நடத்தினோம். அது வெற்றியடைந்தது. புத்தகங்கள் குறித்து பேசுவது நம்மை சார்ந்த எழுத்தாளர்கள் பேசுவது 50ஆவது பிறந்த நாளையொட்டி எஸ்.ராமகிருஷணனுக்கு ஒரு கூட்டம் நடத்தினோம். மனுஷ்யபுத்திரன் எழுத வந்த 30ஆவது ஆண்டை கொண்டாடும் வகையில் அவருடைய மூன்று நூல்களுக்கு கூட்டம் நடத்தினோம். இறையன்பு நூலுக்கான கூட்டம் நடத்தினோம். என் மூத்த எழுத்தாளர்களுக்கும் என்னுடன் ஓடிக்கொண்டிருக்கும் சமகால எழுத்தாளர்களுக்கும் எனக்குப்பின்னால் எழுத வந்தவர்களுக்கும் பெரிய பரவசத்தை ஏற்படுத்தி தர்றோம். முதன்முதலாக ேமடை ஏறி பேசுபவர்களின் கூச்சத்தைப் போக்குறோம். புதிய பேச்சாளர்களை புதிய எழுத்தாளர்களை உருவாக்குறோம். அனைவருக்குமான சந்திப்பு களனை உருவாக்குகிறோம்.

 

 

 • வதனம் என்கிற ெபயரில் புத்தகங்களைப் பதிப்பித்து வருகிறீர்கள். உங்களது புத்தகம் தவிர வேறு யாருடைய புத்தகம் வெளியிட்டிருக்கிறீர்கள்?

 

ஒரே ஒரு புத்தகம் வெளியிட்டிருக்கிறேன். செல்வகீதாவின் மனசெல்லாம் நீயே என்கிற கவிதைத்தொகுப்பு. அவர்கள் மதுரை பண்பலை வானொலியில் டைரி செல்வா என்கிற பெயரில் அறியப்பட்ட தொகுப்பாளினி.

 

 • வதனம் பதிப்பகம் ஆரம்பிக்க என்ன காரணம்?

 

108 காதல் கவிதைத் தொகுப்பை நானே கொண்டு வரவேண்டுமென விரும்பினேன். அப்புத்தகத்திற்கான பதிப்பகத்தை கண்டுப்பிடிப்பதற்கு அப்போது எனக்கு சிரமமாக இருந்தது. தீராக்கடல் என்கிற கவிதை இயல் சார்ந்த கட்டுரை தொகுப்பாக கொண்டு வந்தேன். பின்னாட்களில் பெரிய பதிப்பகமாக மாறவேண்டுமென்கிற ஐடியா எதுவும் இல்லை. எழுத்தாளன் என்பதைத்தாண்டி ஒரு புத்தகத்தைக் கொண்டு வருவதன் மூலமாக பதிப்பு சார்ந்த நுட்பங்களை கற்றுக்கொள்ள இப்புத்தகங்கள் உதவியது. பதிப்பகத்தைத் தொழிலாக பார்க்க எனக்கு விருப்பமில்லை.

 

 • நீங்கள் மட்டுமல்ல தமிழ்நாட்டில் பல எழுத்தாளர்களும் ஒன்றுக்கு மேற்ப்பட்ட பல பதிப்பகங்களில் தங்களுடைய புத்தகங்களை கொண்டுவருகிறார்கள். என்ன காரணமாக இருக்குமென நினைக்கிறீர்கள்?

 

பதிப்பாளாரை பார்க்காமலும் பேசாமலும் பழகாமலும் இருந்தாலே எந்த சிக்கலுமில்லை. எந்த பிரச்சனையுமில்லை. புத்தகம் சார்ந்த முதலீடு திரும்ப வரவேண்டுமென்கிற வியாபாரத்தை நான் மறுக்கலை.

 

 • உங்களது பதிப்பகத்தில் நீங்கள் பதிப்பிக்க வேண்டுமென நினைத்த புத்தகங்கள் எது?

 

குட்டிரேவதியின் கவிதைகளைத் தொகுப்பாக கொண்டு வர வேண்டுமென்பது நீண்ட நாட்களாக ஆசை. இலக்கியம் சார்ந்த ஆவல்களில் ஒன்று.

 

 • இப்போது நீங்கள் நாவல் எழுதிக்கொண்டிருக்கிறீர்கள் அதைப் பற்றிச் சொல்லுங்கள்?

 

என்னுடைய முதல் நாவல் சதுரம் என்கிற பெயரில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டையொன்டி வெளியிட விரும்பி 2017இல் அப்படியே நின்றுபோய்விட்டது. அந்த புத்தகம் சார்ந்த என்னுடைய எதிர்ப்பார்ப்பினால் தாமதம் ஆனது. எம்.ஜி.ஆர் எனக்கு பிடித்த ஆளுமை. அவரை வைத்து அவருடைய கடைசி சில வருடங்களை அடிப்படையாகக் கொண்டு, வாழ்க்கையை ஊடுபாவாக்கிப் பார்க்கக்கூடிய தன்னலைதல் நாவலாக எழுதி முடித்துவிட்டேன். இந்த வருடம் ஜனவரி மாதம் சின்ன பொறி போல ஏந்திழை என்கிற பெயரில் ஜனவரி மாதம் எழுத்தொடங்கி மே மாதத்தில் முடித்தேன். வெள்ளையர்களின் ஆட்சியில் நிகழ்ந்த ஒருசில சம்பவங்களை அடித்தளமாகக் கொண்டு சில மனிதர்களின் வாழ்வை புனைவாக செய்த முயற்சிதான் ஏந்திழை.

 

 • தமிழ் நாவல்களை நீங்கள் தீவிரமாக வாசித்து வருகிறீர்கள். நாவல்களைப் பற்றிய உங்களது அபிப்ராயம் என்ன?

 

தமிழ் நாவல்களில் பல புதுமைகள் நிகழ்ந்து கொண்டிருப்பதாக கருதுகிறேன்.  தமிழ் நாவலுக்கென பெரிய வாசகப்பரப்பு இருக்கிறது. எண்ணிக்கையின் அடிப்படையில் கூடுதலாகவும் குறைவாகவுமிருக்கலாம். மற்றொருபுறம் இப்போதிருக்கும் அளவு போதாது என்பது உண்மை. மூன்றாவதாக இது ஆரோக்கியமான விஷயந்தான். ஒருநாவலை ஆயிரம் நபர்கள் வாசித்தால் நல்லது. லட்சம் நபர்கள் வாசித்தால் மிகவும் நல்லது. கோடிப் பேர் வாசிப்பதற்குத்தானே நாவல் எழுதப்படுகிறது. அதுவரை நாம் தீர்ந்து போகாமலிருக்கவேண்டும்.

 

 • ஏன் தமிழ்நாவல்கள் கடந்த காலத்தை மட்டும் அதிகமாக முன்வைக்கிறது என்று யோசித்ததுண்டா?

 

நிச்சயமாக. இங்கு எல்லோருக்கும் கதை பிரியம் உண்டு. ஒரு நிகழ்ச்சியை தனக்காக்கிக் கொள்வது. அங்கே நான் பார்க்கலை கேள்விப்பட்டேன் அப்படிங்கிற விஷயத்தைப் பகிர்ந்துக்கமாட்டாங்க. நான் பார்த்தேன் அப்படின்னுதான் ஆரம்பிப்பான். எல்லோரும் கதைச் ெசால்லியாகத்தான் இருக்கிறார்கள். ஒருவன் எந்தளவுக்கு ஊரை சுமந்துதிரிகிறானே அந்தளவுக்கு கதைகளையும் சுமந்து திரிவான். ஊரிலிருந்து விடுபடலை என்றால் கதைகளிலிருந்து விடபட முடியாது. கதைகளையும் ஊர்களையும் சுமக்கிறவன் காலத்துக்கிட்டே போய் தன்னை பிடிபட வைக்கிறான். ஒருவனை காதலிலிருந்து வெளியறே்றிடலாம். ஜாதிமதத்திலிருந்து வெளியேற்றிடலாம். அவனுடைய கதையிலிருந்து வெளியேற்றிட முடியாது.

 

 • உங்களுக்கு பிடித்த கதைகள் பற்றி சொல்லுங்களேன்

 

எனக்குப் பிரியமான கதைச்சொல்லிகள் சிறுகதைகளில் யுவன்சந்திரசேகர், சுரேஷ்குமாரஇந்திரஜித் இந்த ரெண்டுபேருடைய கதைகள் பிடிக்கும். என்னுடைய பிரியமான நாவல்கள் என்று பார்த்தால், ஜெயமோகனின் ஏழாம்உலகம் என்னை உறங்கவிடாமல் செய்தது. கோணங்கியின் எல்லா எழுத்துக்கும் நான் வாசகனாக இருக்கேன். ரமேஷ்பிரேம்மின் நூல்கள்,  தமிழ்நதி எழுதிய பார்த்தீனியம், எஸ்.ராவின் துயில், விநாயகமுருகனின் சென்னைக்கு மிக அருகில், பா.வெங்கடேசனின் பாகீரதியின் மதியம், சுகுமாரனின் வெலிங்க்டன், அரவிந்தனின் பொன்னகரம், சைலபதியின் பெயல், இமையத்தின் நாவல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.

 

 

 • மொழிபெயர்பு நாவல்கள் குறித்து சொல்லுங்கள்?

 

ரஷ்யபித்து பிடித்து அலைந்தவன் நான். மொழிபெயர்பின் பொற்காலம் ரஷ்யஇலக்கியம் தமிழில் வந்தது. மேற்கு நாடுகளிலிருந்து அத்தனை நூல்களும் மொழிபெயர்பு வழியாக வர்றதுக்கு இணையம் ஒரு சுவரற்ற வெளி. அதற்குள் நீங்கள் எங்கே வேண்டுமென்றாலும் போயிட்டு வரலாம். ஆனால் கட்டுப்பாட்டோடு இருந்த முன் காலத்தில் செய்யப்பட்ட பணிகளின் சிறப்பு அதன் தரம் அளவு, அதன் வீரியம், வீச்சு இவற்றோடு ஒப்பீட்டால் இப்போ அப்படி நடக்கலை. காரணமென்னவென்றால், மொழியின் பால் நிகழ்த்திக்கொண்டிருக்கிற கட்டற்ற வன்முறை, அந்த மொழியை அவமானப்படுத்துவது, அந்த மொழியை சிதைப்பதெல்லாம் இல்லை. இந்த மாதிரியான தரக்குறைவான மொழிப்பெயர்புகள்தான். என்னத்தையாவது மொழிபெயர்புன்னு கொண்டுவர்றது வன்முறைக்கு கீேழதான் வரும். பிறமொழியிலிருந்து வரவேண்டிய எழுத்தாளனின் படைப்பு எதுவும் வரலை. தேவையில்லாதவர்களின் படைப்புகள் வருதுன்னா அதைக்கண்டிக்கணும்.

 

 • திரைஇசையைப் பற்றித் தொடர்ந்து எழுதிவருகிறீர்கள். திரைஇசை மேல் உள்ள ஆர்வத்தைச் சொல்லுங்கள்?

 

நான் கற்றுக்கொண்ட இரண்டு தளங்களில் ஒன்று சினிமா. மற்றொன்று இலக்கியம். சினிமாவிலிருந்து ஞாபகம் இசை என்கிற இரண்டையும் வெளியே எடுத்துக்கிட்டேன். இந்த இரண்டு எனது மனதில் பதிஞ்சுருச்சு. ஞாபகத்தை எப்போதாவது எடுத்துக்கிடுவேன். ஆனால் இசையை தொடர்ந்து எடுத்துக்கிருவேன். இசைக்கும் உங்களுக்குமான தொடர்பை எப்படி வேண்டுமென்றாலும் எடுத்துக்கொள்ள அது உங்களுக்கு சுதந்திரம் தருகிறது. எனது பதின்ம வயதில் அத்தனை சந்தோஷத்தையும் எனக்குப்பாட்டு வந்து கொடுத்துச்சு. பாட்டு வந்து அமைதி ஏற்படுத்திச்சு. என்னுடைய போதாமைகளை கோபங்களை நிராகரிச்சுச்சு. போதாமைகளை மாற்றி அமைச்சுச்சு. உற்ற நண்பனாகவும் காதலித்தராத இன்பத்தை நான் பெறாத இன்பத்தை இசை தந்தது. சாதாரண மனிதனுக்கு இசையின் மூலம் கிடைக்கக்கூடியது பல மடங்கு அதிகம் தான். என் வாழ்வில் பதினைந்து வயது முதல் 16 மொழிகளில் பாடல்களை கேட்டுட்டு இருக்கேன். புதியப்புதிய பாடல்களை நான் தினமும் தேடிட்டுப்போகிறவனாக இருக்கேன். இசை என்பது என் பிரார்த்தனை முறை அல்லது இசை நான் வணங்க விரும்பும் கடவுள்.

 

 • மதுரையைச் சார்ந்த பல எழுத்தாளர்கள் வெவ்வேறு விதமாக தங்களது கதைகளின் வழியாக மதுரையை சித்தரித்திருக்கிறார்கள். நீங்கள் மதுரையை எவ்வாறு காட்சிப்படுத்த விரும்புகிறீர்கள்?

 

2500 வருஷமா தாளாம முங்காம புதையாமே ஒருநிலம் இருக்க முடியுமா? மற்ற நிலங்களுடனும் எழுத்தாளர்களுடனும் ஒப்பிடும் போது மதுரையைச் சார்ந்த எழுத்தாளர்களின் எண்ணிகையே போதுமானதாக இல்லை. எழுத்தின் மீதான மாபெரும் இயக்கமாக மதுரையை மாத்தணுங்கிற வரைக்கும் பல கணவுகள் உண்டு. புனைவின் வழியாகவும் நிதர்சனத்தின் வழியாகவும் இருவேறு மதுரையை அங்காங்கே காட்டிட்டுப் போற வேலையை எல்லா காலக்கட்டத்தைச் சார்ந்த எழுத்தாளர்களும் செய்துட்டு இருந்தாலும் கூட மதுரையை எனது பெருவாரியான படைப்புகளில் நான் கொண்டுவந்துட்டுதான் இருக்கேன். இனிமேலும் எழுதுவேன். திருவிளையாற்புராணம், நாயக்கர்களின் ஆட்சி, வெள்ளையர்களின் காலம், எம்.ஜி.ஆர். ஆட்சி இதையெல்லாத்தைத் தனித்தனியாகவும் இதையெல்லாத்தையும் சேர்த்தும் ஒருபுனைவை எழுதிப்பார்க்கணுமின்னு என்னுடைய நெடுங்காலம் ஆசை.  முதலில் இந்த ஆசையை நெடுங்காலம் அனுபவிச்சிட்டு அப்புறம் எழுதுவேன். கொஞ்சகொஞ்சமா மதுரைக்கிட்டே இருந்து எடுத்துட்டு இருக்கேன். மதுரை என்பது வெறும் நகரமல்ல. அது ஒரு வாழ்க்கைமுறை என்று சொல்வேன்.

 

 • உங்க டாப் 10 எழுத்தாளர்கள் பட்டியல் சொல்ல முடியுமா..?

 

ஏன் முடியாம..? தமிழ் இலக்கியமே அந்தந்த எழுத்தாளர்கள் வெளியிடுகிற பட்டியலுக்கு முன்பின்னா ரெண்டா பிளக்குறதை அப்பப்ப பார்த்திட்டு தானே இருக்கம்..? என் பட்டியல் முக நூல்ல மட்டும் எழுதி இன்னும் புத்தகம் போடாத அல்லது முதல் புத்தகம் பதிப்பிச்ச புதியவர்கள் ஷாலின் மரிய லாரன்ஸ், ராஜசங்கீதன் ஜான், வனிதா ரெஜி, சரஸ்வதி காயத்ரி, ஜெகா ஜெகதீஸன், இளங்கோவன் முத்தையா, தென்றல் சிவக்குமார், தேன்மொழி சதாசிவம், வெண்பா கீதாயன், லதா அருணாச்சலம் இவங்க எழுத்தை எல்லாம் தொடர்ந்து வாசிக்கிறேன். ரசிக்கிறேன். எல்லோருக்கும் சிபாரிசு செய்யவும் விரும்புறேன்.

 • உங்களுக்கு எழுத்துக்கு குடும்பத்தில் வரவேற்பு எப்படி உள்ளது? எப்படி எதிர்கொள்கிறார்கள்.

 

பெரிதாக எதிர்ப்பு எதுவுமில்லை. அதையே நான் பெரிய சுதந்திரமாகத்தான் கருதுகிறேன். முழு நேர எழுத்தாளன்னு இந்த பேட்டியிலே எட்டு ஒன்பது தடவை சொல்லிட்டேன். என்னைப் பொறுத்துக்கொள்கிறார்கள். ஏதாவது செய்வேன்னு நம்புறாங்க. கொஞ்சம் ஆதரிக்கிறாங்க. எனது குடும்பம் ரொம்ப பெரிசு. எனது நண்பர்கள் சேர்ந்ததுதான் அது. ஒரு எழுத்தாளன் பலருடைய ெபாறுமையில் தான் உருவாகமுடியும். அப்படித்தான் நானும் வந்துட்டு இருக்கேன். ஊக்கம் கொடுக்கிறாங்கிறன்னா ஊக்கம் என்கிற வார்த்தையே செயற்கையானது. நான் சந்தோஷமாக இருந்தா அவங்களுக்கு பிடிக்கும். எழுதுன சந்தோஷமாக இருப்பேன்னு அவங்க தெரியுது. என்னை சந்தோஷமாகத்தான் இருக்க வெச்சிருக்காங்க. அந்த அடிப்படையில் enough.