உடலெலாம் கண்கள்

உடலெலாம் கண்கள்

குட்டிரேவதியின் அகமுகம் கவிதைகளை முன்வைத்து
காஞ்சனை நூலாறு வெளியீடு
சனவரி 2018
விலை ரூ 70

சர்வ நிச்சயமாகக் காலம் தான் பெரிய கடவுள்.அதன் மாறா நிமித்தத்தின் முடிவுறா பயணத்தில் குறிப்பிட்ட தூரம் உடனிருத்தல் வாய்க்கிற உபயாத்திரை வாழ்தல்.வாழக் கிடைக்கையில் ஏதோ எல்லாமே தன்னுடையது என்று புறம் மறந்து லயிக்க வாய்ப்பது வரம். அறிதல் மலர்களை விடுத்து முட்களை மாத்திரமே கோர்த்துத் தர வல்லது.வலிகளுக்கு ஊடான நிசப்த ஞாபகம் ஞானமென்றாகிறது.சொல்லிக் கொள்வதற்குச் சொற்கள் தவிர எதுவும் விஞ்சுவதில்லை.சொல்லிச் செல்வது
தேவையாகையில் முனைதலின் உபகரணமாகக் கலை மாறுகிறது..கலையினூடாக நிகழ்த்திச் செல்கிற சாட்சியம் வாழ்வெனும் சித்திரம்.கவிதை வழிபடுதல் முறையே கடவுளாய்த் தனிக்கிற உன்னதம்.
குட்டி ரேவதி எழுதி இருக்கிற அகமுகம் கவிதைகள் தனிமையில் உடல் மனம் இரண்டையும் ஒன்றைக் கொண்டு மற்றொன்றைத் திறந்து பார்க்க விழைகிற சன்னத முயல்வுகள் .மனம் என்பதை எண்ணிக்கையினின்றும் விடுபட்டுப் பார்க்க இயலும் பட்சத்தில் மனதைக் கொண்டு உடலின் உப உடல்களைத் திறக்க முயலுகிற விழைவுகள்.வெற்றி தோல்விக்கு அப்பால் நிகழ்த்துவதன் மூலமாய்க் கண்டடைகிற எதோவொன்றுக்காய்த் தன் அகத்தை ஒப்புக் கொடுக்கிறது ஆய்வுமனம்
தமிழின் நவீன கவிதைகள் நியாயமாக வந்திருக்க வேண்டிய திருத்தலத்தைத் தான் வந்தடைந்திருக்கின்றனவா என்பது கேள்வி.ஆம் இல்லை என்பன தொடங்கிப் பற்பல பதில்கள் தீராச் சொற்களோடு அலையக் கூடும்.குட்டி ரேவதியின் அகமுகம் கவிதைகள் தமிழ்க்கவிதைகளின் நகர்தலில் அடுத்த இடத்தை நோக்கி நகர்ந்து வந்திருக்கின்றன என்பதை அவற்றையே சாட்சியமாக்கி மெய்ப்பிக்க முடிகிறது..சொலல் முறையிலும் உத்திகளிலும் காட்டுகிற ஆர்வத்தைக் கருப்பொருளில் காட்டுவதில்லை என்பது தமிழ்க்கவிஞர்கள் மீதான பொதுச்சாட்டு.அவற்றில் அடங்காத முற்றிலும் புதிய கவிதைகளும் அவ்வப்போது எழாமல் இல்லை.

தீப்பிழம்பு எனும் கவிதையில்

நாவால் நாவில் ஏற்றும் நெருப்பை
முத்தத்தின் தீவிரத்தில்
பற்றியெரியும் உயிரின் காதல் இது

என்கிறார். புகழ்போற்றிகளைத் தாண்டி நூற்றாண்டு நெருக்கத்தில் புதுக்கவிதை காதல் என்ற இடுபொருள் குறித்த பெருத்த சோர்வை ஏற்படுத்தி வைத்திருக்கிற புறமனோபாவத்தையே தன் சவாலாகக் கொண்டு காதலின் தீர்க்கத்தை எழுதிப் பார்க்கிறார் .அவரது கவிதைகள் உடலின் இருளை அதன் சலனங்களை உடலும் மனமும் சதா நிகழ்த்திக் கொண்டே இருக்கிற வெறுமையின் உரையாடல்களை தீராத தாகத்தை மழை தனிமை இருள் மரணம் வெறுமை ஊடல் எனத் தனித்த குறிச்சொற்களின் மூலமாய் வாழ்வைப் பார்க்க விழைகின்/றன

குளிர்

உன் நினைவின் குளிரில்
உடல் உதறுகிறது
மழைக்குப் பின்
தன்னை யாரும்
உதறிவிட மாட்டார்களா என்பதாய்
நீர் சொட்டிக் கொண்டிருக்கும் கூந்தல் போல்
உன் வடிவை நோக்கியே சுழல்கின்றன
எல்லாப் பார்வைகளும்
காலத்திற்கு லட்சியம் இல்லாமற் போகிறது
உடலுக்கும்
யாருமில்லா வெளியில்
மழையில் நனைந்த மரம் போல்
கொஞ்சம் வான் நோக்கி
மண்டியிட்டுக் கிடந்தால்
ஆறுதலாய் இருக்கும்
இந்த உதறல் அடங்காததாய் நீண்டிருந்தாலும்
அடங்காக்குளிரின் நெருக்கடிக்கு இடையில்
உன் வடிவழகே
மழையையும்
மழையின் பின் தோன்றும்
நினைவுக்குளிரையும்
கிளறும் பருவப்புதிர்

ஊடுபாவு ஒன்றை எந்த வித உறுத்தலுமற்று கவனமையமாக்குவதையும் கவனமையங்கள் எனப் பலகாலம் தொடர்ந்து வருகிற எல்லாவற்றையும் தன்னால் ஆனமட்டும் மறுதலித்து விடுவதையும் குட்டிரேவதி இயல்பாகச் செய்கிறார். குளிர் என்ற மேற்காணும் கவிதையில் நீர் சொட்டுகிற கூந்தல் வாசகனுக்குள் அடுத்த மழையைத் தோற்றுவிக்கின்றன.காதல் உணர்தலின் வழி உடலைத் திறந்து கொள்கிற எல்லாச் சாவிகளையும் சதா முயன்று கொண்டே இருக்கிறது.காத்திரமான அதே நேரம் பின் வாங்குதலின் சோர்தல் கொஞ்சமும் அற்ற காதல் கவிதைகள் தமிழிலக்கிய வெளியில் எப்போதும் குறைவாகவே எழுதப்பட்டுக் கொண்டிருப்பவை.அல்லது காதலின் மலினப் பிரதிகள் அதிகதிகம் முயலப் படுவதால் அசலான பொழிவுகளின் போதாமை எப்போதும் தொடர்ந்து வருவதாகவும் இதனைப் புரிந்து கொள்ள முடியும்.குட்டி ரேவதி இயல்பாகவே காதலை மானுட வாழ்வின் மாபெரும் நிகழ்வாக அனுசரிக்கிற மனோபாவத்தை நம்புகிறவராக இருக்கிறார்.அவருடைய கவிதைகள் அந்த நம்பகத்துக்கான வலு சேர்க்கிற சாட்சிகளாகவே நிகழ்வதை எந்தக் குழப்பமுமின்றி ஏற்றுக் கொண்டிருக்கிறார்.தனிமையும் இருளும் பொங்குகிற ப்ரவசனங்கள் அற்றுப் போன மௌனம் பேரொலியாய் மாத்திரமன்றிச் செய்வதற்கறியாத திகைப்பாக உடல்கள் ஒன்றைஒன்று மனவழி நாடுவதைக் காதலின் தனித்த தருணங்களைத் தன் கவிதைகளில் சித்தரிக்க முனைகிறார்.அவரது முனைவுகள் கவிதைகளாவதில் எந்தச் சிக்கலும் இருப்பதில்லை.

என்னைப் பொறுத்த மட்டில் இந்தக் கவிதை முடிவடைகிற கிளறும் பருவப்புதிர் என்ற வரி இல்லாமலே இந்தக் கவிதை நிறைவடைகிறதோ என்று தோன்றுகிறது.என் ஒவ்வாமை கூட இந்தக் கவிதை சக்கரச்சுழற்சி முடிவடைந்து ஓய்கிற தேர் நிலை கொள்கிற சிறுபுள்ளி போல் முன்பின்னாய் நிகழக் கூடும்.கவிதா சுதந்திரத்தை புறத்தே நிர்ப்பந்திக்கிற எதுவும் ஏற்புடையதில்லை என்பதால் கவிஞரின் தேர்வுச் சொற்களுடனே இந்தக் கவிதை பூர்த்தி அடைவதை ஒப்புக்கொள்ள முடிகிறது.

நான்கு கண்கள்

தண்ணீர்க்குளத்தில் குதித்தவள்
தன் இருக்கைகளால்
நீர் விலக்குகையில் போல்
சிற்றிலைகளாய் ஒதுங்கிச் செல்கிறது காலம்
நீயும் நானும் காபி அருந்தச் சென்றபோது
என் முகத்தில் பதிந்தன உன் இருகண்கள்
உன் கோப்பையில் என் இரு கண்கள்
கதவைத் திறந்து நம் வீட்டிற்குள் நுழைகையில்
கதவின் மதகில் பதிந்துகொண்ட
நான்கு கண்களை
கவனத்தில் கொள்ளாது
நாம் புழங்கமுடிந்தது
ஏனெனில் இது நம் வீடு
கோப்பையின் காபியைப் போல
பகுதிகளாய்ப் பிரிந்துகிடக்கவில்லை வீடு
நம் வீட்டிற்குள் நுழைகையில்
எதற்கு நமக்கு கண்கள்
விதானத்தில் நட்சத்திரங்களைப் போல்
கண்கள் ஒட்டிக்கிடந்த இரவுகளையும்
கடலின் கரையில் கால்களைப் போல
காத்துக்கிடந்த தனிமையின் கணங்களையும்
நம் கண்களைத் தவிர
வேறு எவர் நினைவில் கொண்டுவிட முடியும்
கண்கள் நடைவழியிலேயே திரியட்டும்
எங்கேயும் இடறுதல் இல்லை

ரேவதியின் நான்கு கண்கள் என்ற மேற்காணும் கவிதை சமீபத்தில் தமிழில் எழுதப்பட்ட உத்தமமான கவிதைகளில் ஒன்று.நார்த்தைப் பழத்தைச் சுருள் சுருளாய்க் கூர்பிரித்தாற் போல் இந்தக் கவிதை தனக்குள் சுருண்டு அடுத்தடுத்த நகர்வுகளை முன்வைத்தபடி செல்கிறது.அடுத்தடுத்த கதவுகளைத் திறக்கிற இக்கவிதை முடிகிற இடத்தில் முடிவதில்லை அதன் பின்னதான மௌனமும் அழகான மற்றொரு திறப்புத் தான் என்பது நம்ப முடியாத சிலிர்ப்பாக மனதுள் விரிகிறது.கவிதையின் உச்சபட்சம் என்பது அசாத்தியங்களை சாத்தியம் செய்வது.நம்ப முடியாதவற்றை மீவருகை அற்ற ஓர்மைகளை நிகழ்த்தியவண்ணம் கலைந்து தனிப்பது.இந்தக் கவிதையின் காபி கண்கள் கோப்பை வீடு கால்கள் இரவுகள் நினைவு ஆகிய எல்லாச் சொற்களுமே அவற்றின் யதார்த்த வழமையிலிருந்து பிறழ்ந்து அர்த்தம் தருவது அலாதியான அழகு.இந்தக் கவிதையின் நம்ப முடியாத ஆச்சர்யமாக ஒரு சொல்லைச் சொல்ல முடிகிறது அது “கதவின் மதகில்” இந்த மதகெனும் சொல்லின் வருகை கவிதையை தொடர்ந்து சலனித்துக் கொண்டிருக்கக் கூடிய மாபெரிய வேறொன்றாக்கித் தருகிறது சன்னதத்தில் நில்லாது ஒலித்துக் கொண்டிருக்கக் கூடிய மந்திரச்சொல்லாகிறது மதகென்ற சொல்.
தமிழில் கவிதைகளைத் திறப்பதும் மூடுவதுமாய் நிகழ்கிற உப அனுபவம் அலாதியானது.மொழி சற்றே தன் இருப்பைப் பரிசோதிக்கிற இடமும் அதுவாகிறது.கவிதைகளின் துவக்க வரிகளும் அவை நிறைவடைகிற இடமும் கடற்கரை மணலில் கால்பாவுகையில் நிரடுகிற கடல்சார் பொருளாகக் காத்திருந்து கிளர்த்துகின்றன.கவிதைகளின் இடையே கவிதைக்குள் கவிதையை உண்டுபண்ணி விடுகிற முன் முடிவோடு எழுதப்படுகிற கவிதைகள் ஆரம்பத்திலாவது முடிவிலாவது ஒரு கவன ஈர்த்தலை ஒரு அதிர்ச்சிமதிப்பீட்டை முன்வைத்து விடுவதை முகாந்திரம் பண்ணிக் கொண்டு தயாரிக்கப்படுகிற கவிதைகளின் ரெஸிப்பி செய்முறை அயர்வூட்டுகிறது.
இந்த இடத்தில் குட்டி ரேவதி என்ற கவிஞரின் கவிதைகள் அவற்றின் துவக்கங்களுக்காகவும் கவியிடைக் கவிதைகளுக்காகவும் அவற்றின் மௌனத்திற்கெனவும் கவிதை பூர்த்தியாகிற இருள் அல்லது ஒளி அல்லது வேறொன்று எல்லாவற்றுக்கான உதாரணங்களாகத் திரள்வது தமிழ்க் கவிதை வெளியில் அவருடைய இடத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.எண்ணிக்கையில் குறைவான ரேவதியின் கவிதைகள் அவற்றின் அனாயாச யதார்த்தங்களுக்காக தவிர்க்க முடியாத தனியிடத்தைக் கோருகின்றன.அவற்றுக்கு மட்டுமேயான இடம் அது.
மூழ்கினாலும் ஆழம் தொட இயலாத /எத்தனையோ ஆண்டுகளின் ஆழக்கிணறு உன் மனம்/ என்று ஆரம்பிக்கிறது இருள் எனும் கவிதை. முன்னூறு ஆண்டுகள் ஆழக்கிணறு உன் மனம் என்கிறார் ஆழ்கிணறு கவிதையில் துணிந்து விட்டேன்/இனியும் இதயத்தைப் பரிசோதிக்க முடியாது
என்பது பரிசோதனை கவிதையின் தொடக்க வரி இரவில் உலவும் மனிதர்கள் / கண்ணுக்குப் புலனாகாததைப் போல் / கனவில் வாழ் மனிதர்கள் வந்து செல்கின்றனர்./
எனத் துவங்குகிறது கனவு மனிதர்கள் கவிதை ஒரு நூற்றாண்டு எதையும் தொடாமல் வாழப்பழகினால் என்ன என்று தன்னை துவக்குகிறது தொடுகை என்ற கவிதை.
தாகித்து தாகித்து என ஓரிடத்திலும் சப்தித்து என இன்னொரு இடத்திலும் தாபச்சுனை என மற்றோர் இடத்திலும் வருகிற சொற்கூட்டுகள் மறுபரிசீலனைக்குரியவையாக இருந்திருக்கலாம்.ஒருவேளை அதன் பின்னரும் அவற்றின் தேவை நிமித்தம் இடம்பெற்றிருக்கக் கூடும்.வேகவோட்டத்தைத் தடுக்கின்றன என்ற அளவில் சொல்லத் தோன்றுகிறது.
குட்டி ரேவதியின் அகமுகம் கவிதைகள் மானுட உடலின் கண் அறியாத் திறப்புகள் அத்தனையையும் ஒருங்கே திறந்து பார்க்க விழைகின்றன.கோயில் பிரகாரக் கதவின் அசைவுக்கேற்ப பல நூறு மணிகள் ஒருங்கே சப்தமிட்டுத் தருகிற கூட்டோசை போன்ற அனுபவப் பெருக்காக அவை நிகழ முயல்கின்றன.அறிந்த சொற்களை அவற்றின் வாழ்பிரயோகம் குறித்த கவனம் ஏதுமின்றிக் கவிதைகளின் நிமித்தம் கோருகையிலெல்லாம் சொற்களைச் சேர்த்தும் கலைத்தும் ஆட முயலுகிற வேறோர் ஆட்டமாகின்றது. பரவசத்தினூடான அயர்தலை வாசிப்பவனுக்குத் தர முயல்கிறது.அதன் இயல்பான வருகை உன்னதமாகிறது.